இரவிற்கும் பகலைப் போல பல வண்ணங்கள் உண்டு. நாம் காகத்தின் கண் கொண்டு நோக்காமல் கூகையின் கண் கொண்டு பார்க்க வேண்டும். விழித்திருப்பவனின் இரவு நீளமானது என்கிறார் புத்தர். ஒரு பெருந்திருவிழாவிற்கு முந்தைய இரவு கொண்டாட்டமானது. சென்றாண்டு பசுமைநடையின் 25வது நடையை விருட்சத் திருவிழாவாக சமணமலை அடிவாரத்திலுள்ள பெரிய ஆலமரத்தடியில் கொண்டாடினோம். நெஞ்சைவிட்டு அகலாத விருட்சத்திருவிழாவிற்கு முன்னிரவுக் காட்சிகளை குறித்த சிறுபதிவிற்குள் நுழையலாம்.

விருட்சத்திருவிழாவிற்கு முதல்நாள் மாலையே குழுவினர் எல்லோரும் கீழக்குயில்குடி சமணமலையடிவாரத்தில் கூடினோம். கருப்புகோயிலுக்கு அருகிலுள்ள தேனீர் கடையில் சூடான தேனீரோடு மறுநாள் திருவிழாவிற்கு ஆயத்தமானோம். நாடக மேடைக்கு அருகிலுள்ள புங்க மரத்தடியில் பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டுதல்படி பணிகளைப் பிரித்துக் கொண்டோம்.

நீளவானம் கருநீல வானமானது. மெல்ல சாரல் மழை பெய்யத் தொடங்கி அந்த இடத்தின் புழுதியை அடக்கியது. நாடக மேடையில் காயப்போட்டிருந்த புலுங்கலை குவித்து வைத்துவிட்டு மழைக்கு ஒதுங்கினோம். மழை விட்டதும் பணிகளைத் தொடங்கினோம். விழாவிற்கு வந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குடுவைகளை வண்டியிலிருந்து இறக்கினோம். மின்விளக்கு எடுக்காததால் இரவோடிரவாக மின்பணியாளரை அழைத்து வந்து சரிசெய்தோம். மறுநாள் உணவிற்குத் தேவையான பணிகளை சமையல் கலைஞர்கள் தொடங்கினர்.

விருட்சத்திருவிழாவிற்காக செய்து வைத்திருந்த பதாகைகளை மரங்களில் கோர்பதற்கு வாகாக சணல் கயிறுகளைக் கட்டி வைத்தோம். சமையலுக்கு வந்த விறகுகளை இறக்கிவைத்துவிட்டு சாமியானா பந்தல்காரர்களிடம் மறைப்புத் தட்டி கட்டச் சொல்லிவிட்டு நாகமலைப்புதுக்கோட்டைக்கு குட்டியானையில்(TATA ACE) பதாகைகளை எடுத்துப் போட்டு  எல்லோரும் கிளம்பினோம்.

நாகமலைப் புதுக்கோட்டையில் உள்ள ஒரு உணவகத்தில் இரவு உணவை முடித்தோம். வேல்முருகன், இளஞ்செழியன், உதயகுமார், ரகுநாத், கந்தவேல், மதுமலரன், மணி மற்றும் நானும் பதாகை கட்டும் பணிகளைத் தொடங்கினோம். நாகமலைப் புதுக்கோட்டையிலிருந்து சமணமலையடிவாரம் வரை உள்ள மின்கம்பங்களில் கைக்கு எட்டும் உயரத்தில் பதாகைகளைக் கட்டினோம். எங்களுடன் உற்சாகமாக வேல்முருகன் அண்ணனும் இணைந்து பதாகைகளைக் கட்ட உதவினார். அந்த இரவை இப்போது நினைத்தாலும் உற்சாகம் வந்து அப்பிக் கொள்கிறது. மறக்க முடியாத பசுமைநடை.

இளஞ்செழியன், ரகுநாத்துடன் வேல்முருகன் அண்ணனும் திருமங்கலத்திற்கு இரவு சென்று தங்கிவிட்டு விடிகாலையில் வருவதாகக் கூறிச் சென்றார். தரைவிரிப்பு பத்தாமல் இருந்ததால் எடுப்பதற்காக நானும், மதுமலரனும் சம்மட்டிபுரத்திற்கு சென்றோம். நேரம் நள்ளிரவை நெருங்கியது. தரைவிரிப்பில் படுத்தபடியே கதைக்கத் தொடங்கினோம். முருகராஜூம், உதயகுமாரும் பேசத் தொடங்கினர். கந்தவேலும், மதுமலரனும் கொஞ்ச நேரத்தில் கண்ணயர்ந்தனர். நான் தூங்காமல் படுத்துக் கொண்டு உதயகுமார் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

ஆலமரத்தடிக்காற்று இதமாக வீசியது. மலை இருளில் பதுங்கிக் கொண்டது. விளக்கு வெளிச்சத்தில் கருப்பு கோயிலைப் பார்த்த போது கருப்பு குதிரைகளைப் பூட்டி ஊர்வலம் கிளம்பிக் கொண்டிருந்தார். அமானுஷ்யக் கதைகள் முளைக்கும் வேளையில் அன்றாடக் கதைகளைப் பேசிக் கொண்டிருந்தோம். நேரம் மெல்ல மெல்ல நகர்ந்து ஆகஸ்ட் 25ற்கு வந்துவிட்டது.

உதயகுமார்தான் இளமைக்காலங்களில் விளையாடிய விளையாட்டுகளை பழங்காநத்ததில் தொடங்கி கிராமம் வரையான நினைவுகளையும், அவங்க அய்யாவிடம் கேட்ட ஆளண்டாப்பச்சி கதை தொடங்கி சல்லிக்கட்டுத் தொடர்பாக தான் எழுதிய கட்டுரை வரை பலவற்றையும் கூறிக்கொண்டிருந்தார். இடையிடையே என் நினைவுகளையும் கூறிவிட்டு உதயகுமார் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

மணி நாலு ஆனதும் வீட்டில் சென்று குளித்து வருவதாக உதயகுமாரும், கந்தவேலும் கிளம்பினர். நானும் மதுமலரனும் கீழக்குயில்குடி சுடுகாட்டு வாசலில் உள்ள தொட்டியில் குளிக்க அவர்களுடன் வண்டியில் சென்றோம். விடியும் முன் இருளில் சுடுகாட்டு வாசலிலிருந்த சில்லென்ற நீரில் குளித்தோம். மேலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. அப்படியே அங்கிருந்து மலை நோக்கி நடந்தோம். மலை அங்கிருந்து ஒரு மைலுக்கும் மேலிருந்தது. வழியில் எங்கள் பேச்சு சத்தம் கேட்டு நாய்கள் குரைக்கத் தொடங்கியது. பயம் இருந்தாலும் ஓடி ஒளிய இடம் இல்லை. மெல்ல பேசிக் கொண்டே கடிபடாமல் ஒருவழியாக ஆலமரத்தடியை அடைந்தோம். கிழக்கு வெளுக்கத் தொடங்கியது.

அதிகாலையில் குளிருக்கு இதமாக தேனீரை அருந்திவிட்டு அறிவிப்பு பதாகைகளை எடுத்து கட்டத் தொடங்கினோம். திருமங்கல நண்பர்கள் வந்தனர். ஆட்கள் மெல்ல வரத்தொடங்கினர். ஒரு பெருந்திருவிழா சத்தமில்லாமல் தொடங்கியது. பெரிய ஆலமரத்திற்கு கொண்டாட்டமாக இருந்தது. விருட்சத்திருவிழா என்றால் கேட்கவும் வேண்டுமா?.  குதிரைகளின் மீதிருந்து கருப்பு அதைப் பார்த்து வாய் சிவக்கச் சிரித்துக் கொண்டிருந்தார்.

Green walk 40 Invitation Front

Green walk 40 Invitation inner

மய்யம்

வாசகா – ஓ – வாசகா…
என் சமகால சகவாசி
வாசி…

புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து…

எனது கவி உனதும்தான்
ஆம்…
நாளை உன்வரியில்
நான் தெரிவேன்.  

- கமல்ஹாசன்

திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும், அலைபேசிகளும் வாசிப்பை நாசம் செய்யும் வேளையில் நம்மை ஆச்சர்யமூட்டும் விசயமாக தன்னுடைய திரைப்படப் பணிகளினூடே தமிழின் உன்னதமான படைப்புகளை வாசிக்கும் கமல்ஹாசனைப் பார்க்கும்போது பொறாமையாகயிருக்கிறது. வாசிக்க நேரமில்லை என்று சொல்ல வெட்கமாகயிருக்கிறது. புத்தகம் பேசுது  மாத இதழுக்காக கமல்ஹாசனோடு எழுத்தாளர் வெண்ணிலா மற்றும் முருகேஷ் எடுத்த நேர்காணலிலிருந்து ஒரு சிறுபகுதி:

கலையுலக இலக்கியவாதியான உங்களின் இலக்கிய அனுபவத்தைச் சொல்லுங்கள்?

கலையுலகத்திலிருந்து இலக்கியவாதியின் அனுபவத்தைப் பேசணும்னா, அது ரொம்ப சோகம்தான். ஜே.கே.வினுடைய கலை உலக அனுபவங்கள் மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும். இன்றைக்கு வாழும் ஹீரோக்களில் முதன்மையானவராக நான் நினைப்பது ஜே.கே.வைத்தான். ஆனால், நான் அவரை வாழ்நாளில் நான்கைந்து முறைகளுக்குமேல் பார்த்ததில்லை. காரணம், அதீதமான வியப்பும் பெருமிதமும். அது மட்டுமில்லாம கிட்ட பார்க்கிறதுல சின்ன தயக்கமும் இருக்கு. நரைச்ச மீசை, உயரம் இதெல்லாம் தொந்தரவு பண்ணிடுமோன்னு தள்ளியே இருக்கேன். குழம்பிடுமோன்னு தோணும். ‘வாழும் ஹீரோ’ அவர் காதுபட சொல்றதுல எனக்கு சந்தோஷம். அந்த மாதிரி நெறய பேர் இருக்காங்க.

Writers

தன்னோட ஆசிரியரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சாரு கு.ஞானசம்பந்தன். தொ.பரமசிவன். தொ.ப.வைப் பார்த்து எனக்கு ஆச்சர்யம். ஆனா, உடம்பு முடியாம ஒரு வயோதிகரா தொ.ப.வைப் பார்க்கிறதுல ஒரு சின்ன வருத்தம். இளைஞரா இருந்தப்ப எங்க அப்பாவையெல்லாம் பார்க்க வந்திருக்காரு. அப்ப தெரிஞ்சுக்காம போயிட்டமேன்னு தோணும். கோபமான தொ.ப.வைப் பார்த்திருக்கலாம். ஞானசம்பந்தனையே சொல்லலாம். அவர் வெளியே கோமாளி மாதிரி வேஷம் போட்டுக்கிட்டாலும் ரொம்ப ஆழமான, கோபமான ஆளு. கோமாளி தொப்பி ஒரு யுக்தி. ஞானக்கூத்தன், புவியரசு இவங்கள்லாம் எனக்குக் கிடைச்ச பரிசு. நட்புன்றது நானா தேடிக்கிட்டதுதான். அதனால் அது பரிசா, நான் சம்பாதித்தான்னு தெரியல. இதே இடத்தில் உட்கார்ந்து சுந்தர ராமசாமியோட ரெண்டு மணி நேரம் பேசிக்கிட்டிருந்தேன். ஞானக்கூத்தன்தான் ஏற்பாடு செஞ்சாரு. முக்கியமான ஒரு வேலையை செஞ்ச மாதிரி ஞானக்கூத்தன் அன்னைக்கு நெகிழ்ச்சியா பக்கத்தில் நின்னுக்கிட்டுருந்தார். எனக்கு ரொம்ப நெகிழ்வான அனுபவம். அதே மாதிரி சமீபத்துல படிச்சது ப.சிங்காரத்தை. அவரு செத்துப்போனப்புறம்தான் அவர படிச்சேன். அவரோட புத்தகம் இருக்கிறதால அவர் இல்லாம போனதைப் பத்தி எனக்கு வருத்தமில்ல. சமீபத்தில் தூக்கி வாரிப்போட்ட புத்தகம் கொற்றவை. மிரண்டுட்டேன். சொல்லியே ஆகணும். ஜெயமோகன் சினிமாவுக்கு வந்ததால சொல்லலை. ஒருவேளை அவர் என் சினிமாவில் வேலை செஞ்சு என் புஸ்தகம் படிங்கன்னு குடுத்திருந்தார்னா நான் படிச்சிருக்கமாட்டேன்னு நினைக்கிறேன். நானா தேடி படிச்சதால என்னை வியப்பில் ஆழ்த்தியது. நான் படிக்கிறது பத்தலன்றது மட்டும் எனக்குத் தெரிஞ்சது.

Books

‘ஆழி சூழ் உலகு’ன்னு ஒரு புஸ்தகம். நண்பர்கள் பரிந்துரை பண்ணாங்க. ஜி.நாகராஜனையே நான் அவர் இறந்து போனதுக்குப் பின்னாடிதான் படிச்சேன். ‘குறத்திமுடுக்கு’, ‘நாளை மற்றொரு நாளே’ எல்லாம் அப்புறம்தான் படிச்சேன். ஜெயகாந்தனைத் தெரிஞ்சுகிட்டது மாதிரி அவரைத் தெரிஞ்சுக்கிட்டிருந்தா அவர் கூட கைகுலுக்கியிருக்கலாமேன்னு தோணுச்சு. கு.ப.ரா.ல்லாம் காலதாமதமாக வாங்கிப் படிக்கிறேன். நான்தான் சொல்றேனே, 15 வருசமாத்தான் தெளிவு வர ஆரம்பிச்சுருக்கு.

(நன்றி – வெண்ணிலா, முருகேஷ் – புத்தகம் பேசுது, ஜனவரி 2008 இதழ்)

கமல்ஹாசன் தமிழில் சங்க இலக்கியம் தொடங்கி ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், லா.சா.ரா, கு.ப.ரா, பிரமிள், புவியரசு, ஞானக்கூத்தன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன், தொ.பரமசிவன், சுந்தர ராமசாமி, சுஜாதா, வண்ணதாசன், ஜெயமோகன், கோணங்கி என இன்னும் பல எழுத்தாளர்களின் நூல்களை தேடி வாசித்துக்கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் மிகச் சிறந்த வாசிப்பாளர் என தொ.பரமசிவன் சொல்கிறார். கமல்ஹாசன் மய்யம் என்ற இலக்கிய மாத இதழை முன்பு நடத்தியிருக்கிறார். நாமும் நல்ல நூல்களை வாங்கி வாசிப்போம்.

ஜி. நாகராஜன் பிறந்த நாள்  & மதுரை புத்தகத் திருவிழா சிறப்புப் பதிவு

1bookfair

அலைபாயும் மனதை அடக்குவது கடினம். மனதை ஒருமுகப்படுத்த தியானம் செய்வது அதைவிடக் கடினம். மனதை அடக்க முயலாமல் எண்ண ஓட்டங்களை ஒருநிலைப்படுத்த எளிய வழி வாசிப்பது. வாசிக்க வாசிக்க புத்தகத்தோடு மனம் ஒன்றிவிடுகிறது. வாசிப்பது தியானம்.

வாசிக்கத் தெரிந்த எல்லோரும் நல்ல வாசகர்களாக இல்லை என்பது வருத்தமான விசயம். வாசிப்பின் பயன், எதை வாசிப்பது, வாசிப்பை மேம்படுத்த என்ன செய்யலாம், வாசிப்பதற்கு உள்ள தடைகள் என்னவெல்லாம் என்பது குறித்து பார்ப்போம்.

Vaasippai Nesippavan

நம் நாட்டில் நடைபெறும் பெரும்பாலான குற்றங்களுக்கு மனச்சிக்கல்களே காரணம். பலவிதமான மனிதர்கள், இடங்கள், சூழல்கள் குறித்து வாசிக்கும் போது எது சரியான வாழ்க்கை என்பதை நாமே உணர்ந்து நம்மைத் திருத்திக் கொள்ள நல்லதொரு வழிகாட்டியாக புத்தகங்கள் திகழ்கின்றன. வாசிப்பது வாழ்க்கைக்காக என்ற இலக்கோடு வாசிக்கத் தொடங்கினால் புத்தகங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் உன்னதமாக்கும். நம்மை சாதி, மதங்கடந்த நல்லதொரு மனிதனாக்கும்.

முதலில் எதை வாசிப்பது என்ற தயக்கம் நம் எல்லோருக்கும் இருக்கும். நமக்கு பிடித்தமான விசயங்களைக் குறித்த தேடல் நம்மை சரியான வாசிப்புத் தளத்திற்குள் கொண்டு சேர்க்கும். மதுரையை உங்களுக்குப் மிகவும் பிடிக்குமென்றால் மதுரையை மையமாகக் கொண்டு வந்துள்ள கதைகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆய்வு நூல்களை தேடிப்படிக்கலாம். அரவிந்தன் – பூரணி என்ற அற்புதக் கதாமாந்தர்களை கொண்டு நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர், மதுரையின் 600 ஆண்டு கால வரலாற்றைச் சொல்லும் சு.வெங்கடேசனின் காவல்கோட்டம் போன்ற நாவல்களை வாசிக்கும்போது மனதுக்கு நெருக்கமாகத் தோன்றும்.

மனோகர் தேவதாஸ் மதுரையில் தன் இளமைக்கால நினைவுகளை கோட்டோவியங்களோடு வரைந்து எழுதிய எனது மதுரை நினைவுகள் உங்களையும் ஒரு புத்தகம் எழுதத்தூண்டும். தொ.பரமசிவனின் அழகர்கோயில் என்ற ஆய்வு நூல் கோயில்வரலாறு தொடங்கி சித்திரைத் திருவிழா வரையிலான பல தளங்களில் வாசிக்கச் சுவாரசியமான நூல். ஆறுமுகம் எழுதிய மதுரைக் கோயில்களும் திருவிழாக்களும், குன்றில் குமார் எழுதிய மதுரை அன்றும் இன்றும், பசுமைநடை வெளியீடான மதுர வரலாறு, தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் எழுதிய மதுரையில் சமணம், தொல்லியல் துறை வெளியீடான மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு போன்ற நூல்கள் மதுரையின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவும்.

ThUkkam vara

இயற்கையை நேசிப்பவர்கள் நம்மாழ்வாரின் உழவுக்கும் உண்டு வரலாறு, மா.கிருஷ்ணனின் பறவைகளும் வேடந்தாங்கலும், தியோடர் பாஸ்கரனின் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக போன்ற நூல்களை வாசிக்கலாம். சங்க இலக்கியங்களில் பாடாத சூழலியலையா ஆங்கிலத்தில் எழுதிவிடப் போகிறார்கள்? பயணங்களில் விருப்பமானவர்கள் எஸ்.ராமகிருஷ்ணனின் தேசாந்திரி வாசித்தால் உங்கள் பயணங்கள் இன்னும் அற்புதமாகும். திரைப்படங்கள் உங்களுக்கு பிடித்தவிசயமென்றால் தியோடர் பாஸ்கரன் தொகுத்த சித்திரம் பேசுதடி, செழியனின் உலக சினிமா போன்ற கட்டுரைத்தொகுப்புகளை வாசிக்கலாம். திரைப்படங்கள் மீதான புதிய பார்வையை இந்நூல்கள் உங்களுக்கு ஏற்படுத்தும்.

நெய்தல்நில மக்களின் வாழ்வை அறிய விரும்பினால் வண்ணநிலவனின் கடல்புரத்தில், ஜோ டி குருஸூன் ஆழி சூழ் உலகு, கொற்கை, ராஜம் கிருஷ்ணனின் அலைவாய்கரையில், ஜெயமோகனின் கொற்றவை, ஆ.சிவசுப்பிரமணியனின் உப்பிட்டவரை வாசிக்கலாம். இந்நூல்கள் கடல்சார்ந்த மக்களின் வாழ்க்கைப் பாடுகளை உங்களுக்கு கற்றுத்தரும். நம் பண்பாட்டின் வேர்களை அறிய தொ.பரமசிவனின் பண்பாட்டு அசைவுகள், பக்தவத்சலபாரதி தொகுத்த தமிழர் உணவு போன்ற நூல்கள் உதவும். வாசிப்பே எல்லாவற்றிற்கும் மையப்புள்ளியாக விளங்குகிறது.

இளையதலைமுறையிடம் வாசிப்பை பழக்கமாக்க பள்ளி, கல்லூரிகளில் வாசகர் மன்றங்களை உருவாக்கலாம். தினம் ஒரு சிறுகதை வாசித்து அதைக் குறித்த உரையாடல்கள் மூலம் வாழ்க்கையை கதைகளின் வாயிலாக புரிந்து கொள்ளலாம். விடுமுறை நாட்களில் நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் வாசிக்கலாம். இதன்மூலம் வருடத்திற்கு குறைந்த பட்சம் 200 சிறுகதைகள் வாசிக்க முடிவதுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட நல்ல புத்தகங்களையும் வாசிக்க முடியும். இப்பழக்கத்தை வீடுகளிலும் கடைபிடிக்கலாம். ஒருவருக்கொருவர் உரையாடும் போது குடும்பத்தில் இணக்கம் ஏற்பட்டு மகிழ்ச்சி உண்டாகும். புத்தகத்திருவிழாக்களுக்குச் செல்வதும், எழுத்தாளுமைகளை சந்தித்து உரையாடுவதும் வாசிப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல உதவும்.

வாசிப்பின் முதல்தடையே வாசிப்பு பழக்கத்தை மதிப்பெண்களோடு போட்டுக் குழப்பிக் கொண்டதுதான். அதனால்தான் பலர் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்ததும் புத்தகங்களைத் தொடுவதில்லை. அதற்குப் பின் வாசிப்பவர்களும் அதிக சம்பளமுள்ள பணிகளை நோக்கி போட்டித் தேர்வுகளுக்காக பல்லாயிரக்கணக்கான தகவல்களை படித்து தகவல் களஞ்சியமாக தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். இன்னொரு புறம் வாசிப்பு ஜோதிடம், சுயமுன்னேற்றம், சமையல், திரைப்படத்துணுக்குகள் என குறுகிப்போனது மற்றொரு சோகம்.

ஒருநாள் முழுவதும் இடைவிடாமல் தொலைக்காட்சி முன் தவமிருக்கும் நாம் ஒருமணிநேரங்கூட நல்ல புத்தகங்களை வாசிக்க நேரம் செலவளிப்பதில்லை. ஆயிரக்கணக்கில் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் நாம் நூறு ரூபாய் செலவளித்து நல்ல புத்தகம் வாங்கத் தயங்குகிறோம். வாரந்தவறாமல் வழிபாட்டுத் தலங்களுக்கும், பொழுதுபோக்கிடங்களுக்கும் செல்லும் நாம் நூலகங்கள், புத்தகநிலையங்களுக்குள் காலடியெடுத்து வைக்கத் தயங்குகிறோம். இந்நிலை மாற வேண்டும்.

Puthagam Virparvar

ஐந்து ரூபாயிலிருந்து நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன. நூலகங்களில் உறுப்பினர் ஆவதற்கு நூறு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாசிப்புப் பழக்கத்தை அதிகமாக்குவோம். நாம் மற்றவர்க்கு வழங்குவதற்கான அற்புதப் பரிசு புத்தகங்களே.வாசிப்பை நேசிப்போம். புத்தகங்களே நம்முடைய நல்ல தோழன் என்பதை உணர்வோம். நம் அகத்தையே வாசிப்பகமாக்குவோம். வாசிப்பது தியானம்.

George Joseph

மதுரையின் மறக்கப்பட்ட மனிதர்களுள் ரோசாப்பூ துரை என்று அறியப்படும் ஜார்ஜ் ஜோசப் முக்கியமானவர். ஆனால், பிரமலைக்கள்ளர் சமூகக் குழந்தைகளுக்கு ‘ரோசாப்பூ’, ரோசாப்பூ துரை என்று பெயரிடும் வழக்கம் இன்றும் நிலவி வருகிறது. குற்றப் பரம்பரைச் சட்டத்தை அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பலரும் எதிர்த்துக் கிளம்பாத சூழலில் அதை எதிர்த்த முன்னோடி உணர்வாளர் ஜார்ஜ் ஜோசப். அறிவுலகமோ அவரை முற்றாக மறந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

- தேவேந்திர பூபதி

ariyappatha_alumaiஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னுடன் படித்த நண்பனொருவன் அலைபேசியில் அழைத்து அவனுக்கு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கிறிஸ்துவ தியாகி குறித்து கட்டுரை வேண்டுமெனக் கேட்டான். நான் அச்சமயத்தில் எங்கண்ணனிடமிருந்து வாங்கி வாசித்த பழ.அதியமான் அவர்கள் எழுதிய ‘அறியப்படாத ஆளுமை – ஜார்ஜ் ஜோசப்’ குறித்து ஞாபகம் வர சரியென ஒத்துக்கொண்டேன். இந்நூலில் உள்ள ஜார்ஜ் ஜோசப் அவர்களின் வாழ்க்கை குறிப்பை பார்த்து எழுதியதை இப்போது வாசித்துப் பார்க்கும்போது பள்ளி மாணவர்களுக்கானது போல இருக்கிறது. அதை அப்படியே பதிவு செய்கிறேன்:

சுதந்திர போராட்டத்தில் மொழி, இனம், மதம் கடந்து போராடியவர்கள் பலர். அவர்களுள் இப்பொழுது நாம் காணப்போகும் தலைவர் “ரோசாப்பூத்துரை” என்று மக்களால் அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஜோசப் ஆவார்.   இவர் கேரள மாநிலத்தில் உள்ள செங்கண்ணூரில் 1887 ஜூன் 5ல் பிறந்தார். நல்ல வசதியான குடும்பம் இவருடையது. சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இன்டர்மீடியட் படிப்பை முடித்தார்.

 பின் அட்டை1904 ல் மேல்படிப்புக்காக பிரிட்டன் சென்றார். எடின்பரோவில் எம்.ஏ.யும் லண்டனில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார். அந்த சமயம் இந்திய விடுதலைப்போர் 50 வது ஆண்டை எட்டியிருந்தது. லண்டன் இந்தியா ஹவுசில் தங்கிருந்த இளைஞர்கள் 1908 மே 10ல் இதற்கு விழா எடுத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சி ஜார்ஜ் ஜோசப்க்கு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மனநிலையை இளமையில் ஊட்டியது. லண்டனில் இருந்து சொந்த ஊருக்கு 1909 ல் திரும்பினார். சூசன்னாவுடன் 1909 ல் இவருக்கு திருமணம் நடந்தது. பின் தனது நண்பரின் ஆலோசனைப்படி மதுரையில் வழக்கறிஞர் தொழிலை தொடங்க வந்தார். மதுரையில் கிரிமினல் வழக்கு விசாரணைகளை ஜோசப் செய்தார். இதன் மூலம் நல்ல வசதி பெருகியது. இந்த சமயத்தில் தேசிய அரசியலில் ஆர்வம் பிறந்தது. தொழிலை வருவாய்க்காக செய்திருப்பினும் நலிந்தோர்க்கு உதவுவதற்காக செயல்படுத்தினார்.

 1915ல் குற்றப் பரம்பரைச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சமூகத்தினரை காக்க கடுமையாக உழைத்தார். இதன் மூலம் அரசிற்கெதிரான அவரின் போராட்டம் தொடங்கியது.   1916ல் அன்னிபெசன்ட் அம்மையாரை மதுரையில் சந்தித்தார். இதன் மூலம் ஹோம்ரூல் இயக்கத்தில் ஈடுபட்டு தீவிரமாக உழைத்தார்.

 1918ல் மதுரையில் தொழிலாளர் சம்பள உயர்வுக்காக போராடி அவர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுத்தந்தார். இராஜாஜி மற்றும் வரதராஜூலுவுடன் அச்சமயம் ஜார்ஜ்க்கு பழக்கம் ஏற்பட்டது. 1919 ல் பிப்ரவரி மாதம் மகாத்மா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. இதன் மூலம் காந்தியுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிட்டியது. ரௌலட் சட்டத்திற்கு எதிரான மாநாட்டில் கலந்து கொண்டார். 1920ல் கிலாபத் இயக்கத்தில் பங்கு எடுத்தார். தேசபக்தன் இதழின் ஏழு இயக்குனர்களில் ஒருவராக இருந்துள்ளார். இதன் மூலம் தமிழக அளவில் பிரபலமானார். மதுரையில் காந்தி அரைஆடை உடுத்திய சமயம் இவர் வழக்கறிஞர் தொழிலை விட்டு எளிய வாழ்க்கை நடத்தினார்.

 1920ல் நேரு குடும்பத் தொடர்பால் வட இந்தியா சென்று ‘தி இன்டிபென்டென்ட்’ இதழின் ஆசிரியரானார். இவரது கூரிய எழுத்தால் பிரிட்டிஷ் அரசு விழிப்புற்று நடவடிக்கை எடுத்தது. இதனால் கைதாகி 24 மாதம் தண்டனை அனுபவித்தார். இவருடன் நேரு அவர்களும் சிறையிலிருந்தார்.       சிறையிலிருந்து வந்து தீவிரமாக காங்கிரஸில் ஈடுபட்டார். காந்தியின் ‘யங் இந்தியா’வின் பொறுப்பாசிரியர் ஆனார். அச்சமயம் இவரது மனைவியின் உடல்நிலை சரியில்லாமல் போக தென்னாடு திரும்பினார். “மரங்கள் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை” என்பது போல 1924 ல் வைக்கம் பிரச்சனை வர மனைவியைக் கவனிக்க முடியாமல் வைக்கம் சென்று கேசவ மேனனுக்குப் பிறகு தலைமை ஏற்று நடத்தினார். பின் இதனால் கைதாகி ஆறுமாத சிறை தண்டனை அடைந்தார்.

 1925ல் மீண்டும் மதுரை வந்தார். அச்சமயம் அவர் வீட்டுக்கு காந்தி விருந்தினராக வந்திருந்தார். 1927ல் சென்னையில் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். சைமன் குழுவுக்கு எதிர்ப்பு காட்டினார். பின் காங்கிரஸில் இருந்து விலகி இருந்தார். அச்சமயம் கிறிஸ்துவத்திலும், கேரள அரசியலிலும் ஈடுபாடு காட்டினார். 1936 ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்தார். 1937ல் மத்திய சட்டசபை உறுப்பினரானார். அச்சமயம் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டார். சிறுநீரக பாதிப்பும் ரத்த அழுத்தமும் அதிகமானதால் மதுரை அமெரிக்க மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையிலேயே 1938 மார்ச் 5 ஆம் தேதி காலமானார். மதுரை கீழவாசலில் அவரது உடல் கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

 பாரதியார், சுப்ரமணிய சிவா, வ.உ.சி போல சுதந்திரம் அடையும் முன்னரே இறந்து போனார். ஆனாலும் குற்றப் பரம்பரை சட்டத்தை நீக்க இவர் போராடியதால் கள்ளர், மறவர் சமூகத்தினர் ஜார்ஜ் ஜோசப் நினைவாக தங்கள் குழந்தைகளுக்கு ரோசாப்பூத்துரை என்ற பெயரை வைக்கின்றனர். இவரது பிள்ளைகள் இவரைப் பற்றி நூல் வெளியிட்டு உள்ளனர்.

 அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் – பழ.அதியமான், காலச்சுவடு பதிப்பகம்

2007 மதுரை புத்தகத்திருவிழாவில் வெளியீடுவதற்காக இந்நூலை எழுதியதாக நூலாசிரியர் பழ.அதியமான் முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஆகஸ்ட் 29ம் தேதியிலிருந்து செப்டம்பர் 7 வரை மதுரை தமுக்கம் மைதானத்தில் 9வது மதுரை புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. மதுரைக்காரர்கள் இந்நூலை வாங்கி நம்ம ஊரில் வாழ்ந்த அந்தத் தியாகியை பற்றி அறிந்து கொள்வோம். நல்ல தகவல்களை நாலு பேரிடம் பகிர்ந்து கொள்வோம்.

நாம பூம்புகாரிலிருந்து காவிரிக்கரையோரமா கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் நடந்த பாதையில் ஶ்ரீரங்கம். அங்கிருந்து மதுரை. அதுக்கப்புறம், எல்லாத்தையும் பறிகொடுத்துட்டு தன்னந்தனியா வலியும் வேதனையும், தாங்கமுடியாத கோபமுமா மலைமேல் நடந்த பாதை வரைக்கும் போறோம். வழிகேக்கறதுமாதிரி வழில நடக்கற எல்லாச் சம்பவங்களையும் சேர்த்து இயல்பான காட்சிகளோட ஒரு ட்ராவல் ஃபிலிமா எடுக்கணும். இடையிடையே சிலப்பதிகாரத்துல வர்ற காட்சிகளையும் காட்டலாம்னு நெனைக்கிறேன்.  

- முல்லை கூற்றாக மிளிர்கல் நாவலில்

மிளிர்கல்எஸ்.ராமகிருஷ்ணன் சிறுமலையில் நடத்திய ‘கதைகள் பேசுவோம்’ நாவல் முகாமில் வாசிப்பதற்காக ஐந்து நாவல்களை தேர்வு செய்திருந்தார். அதில் இரா.முருகவேளின் மிளிர்கல்லும் ஒன்று. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கண்ணகி நடந்த பாதையில் பயணித்து அதைக்குறித்து ஒரு கட்டுரை விகடன் தீபாவளி மலரில் எழுதியிருந்தார். தன் அனுபவங்களை தனியொரு நூலாக எழுதப் போகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதை எழுத முடியாமல் போன காரணங்களை மிளிர்கல்லை குறித்துப் பேசும்போது பகிர்ந்து கொண்டார்.

மிளிர்கல் நாவலை எழுதிய இரா.முருகவேள் அவர்களும் நாவல் முகாமில் கலந்து கொண்டு தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். மிளிர்கல்லை என்னிடம் வாசிக்க கொடுத்த சகோதரர் நாவலில் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவும் வருகிறார் என்று சொன்னதும் நாவலின் மீதான ஈர்ப்பு அதிகமாகிவிட்டது.

மதுரையின் அதிதீவிர இரசிகனான எனக்கு கண்ணகியைப் பிடிக்காது. ஜெயமோகனின் கொற்றவை வாசித்த பிறகு கண்ணகியின் மீதான வெறுப்பு குறைந்தது. இரா.முருகவேளின் மிளிர்கல் வாசித்ததும் கண்ணகியை இக்கதையின் தலைவியாக ஏற்கும் பக்குவம் வந்துவிட்டது. கதைமாந்தர்களான முல்லை, நவீன், பேராசிரியர் ஶ்ரீகுமார், கண்ணன் இவர்களோடு நாமும் பயணிக்கலாம்.

முருகவேள்முல்லை டெல்லியில் வாழும் தமிழ்ப்பெண். அவளுடைய அப்பா சொன்ன கதைகளினூடாக கண்ணகி முல்லையை ஆட்கொள்கிறாள். ஜர்னலிசம் படித்துவிட்டு பணிபுரியும் முல்லைக்கு கண்ணகி சென்ற பாதையை ஆவணப்படமாக எடுக்க வேண்டுமென்று ஆசை. தமிழகத்தில் வாழும் தன்னுடைய நண்பனான நவீனைத் தொடர்பு கொண்டு ஆவணப்படம் எடுக்க உதவி கேட்கிறாள். புரட்சிகர இயந்திமாக வாழும் நவீன் மக்களைப் புரிந்து கொள்ள இப்பயணம் உதவும் என்ற நோக்கில் சரியென்கிறான். இவர்களோடு தமிழகத்தில் கிடைக்கும் இரத்தினக்கற்கள் குறித்து ஆய்வு செய்து வரும் பேராசியர் ஶ்ரீகுமாரும் இணைகிறார். புகாரிலிருந்து கொடுங்களூர் வரையிலான விறுவிறுப்பான இந்தப் பயணத்தில் நம்மையும் இழுத்துச் செல்கிறது இரா.முருகவேளின் எழுத்து.

சிலப்பதிகாரம் நடந்த கதையா? புனைவா?. கண்ணகி கதையை மீனவர்களும், பழங்குடிகளும் தொடர்ந்து தங்கள் வடிவில் சொல்லிக்கொண்டே வருவதன் காரணமென்ன? கண்ணகியை போற்றி வழிபட காரணமென்ன? கண்ணகி மதுரையை எரித்தது உண்மைதானா? கோவலர் என்ற பெயர் கொங்கு பகுதியிலுள்ள பழங்குடி இடையர்களின் பெயர். மேலும், கண்ணகி சிலப்பதிகாரத்தில் கொங்கர் செல்வி என்றழைக்கப்படுகிறாள். இரத்தினக்கற்கள் காங்கேயம் பகுதியில் கிடைக்கின்றன. இதிலிருந்து கோவலன் கண்ணகியின் பூர்வீகம் கொங்குப் பகுதியாக இருக்குமோ? எனப் பலவிதமான கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது இந்நாவல். முல்லையின் கேள்விகளுக்கு பேராசிரியர் ஶ்ரீகுமாரின் பதில்கள் சிலப்பதிகாரம் மீது நமக்கும் புரிதலை ஏற்படுத்துகிறது.

மக்கள் பிரச்சனைகளுக்கு போராடும் போது நாம் ஏன் இறுதியிலேயே செல்கிறோம். முன்னரே இந்தப் பிரச்சனைகளைக் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கலாமே?, பிளாஸ்டிக் கப்களில் டீ கொடுப்பது தீண்டாமையின் புதிய முகமாயிருப்பது, பெரிய நிறுவனங்கள் சமூகப்பணிகளில் இறங்குவது தங்கள் ஆதாயத்திற்குத்தான் என்ற உண்மையை விளக்குவது, அந்தக் காலத்தில் வறுமை இல்லையா?, கொடுங்களூர் பகவதி கோயிலில் ஏன் பாலியல் கலந்த பாடல்கள் அம்மனை நோக்கி பாடப்படுகிறது? என்ற சந்தேகங்களும், கேள்விகளும் நவீன் வாயிலாக வெளிப்படுகிறது.

Area map

K.Rajan & N.Athiyaman, Indian Journal of History of Science, 39.4 (2004), 385 – 414

காங்கேயம் பகுதியில் கிடைக்கும் இரத்தினக்கற்களைத் தேடித்திரியும் கிருஷ்ணசாமி இதற்காக காசை தண்ணீராக செலவளிக்கிறார். இறுதியில் அந்தப் பகுதி அரசியல்பெரும்புள்ளியிடம் சேர்ந்துவிடுகிறார். அரசியல்வாதி அந்தப் பகுதியில் பெருநிறுவனம் வரப்போகிறது எனும் போது அதை எதிர்ப்பது, அவர்களுக்குள் ஒப்பந்தங்கள் ஏற்பட்டு அதைக் கைவிடுவது, கிருஷ்ணசாமியை வைத்து பேராசிரியர் ஶ்ரீகுமாரை கடத்தி பயம் ஏற்படுத்துவது, அங்குள்ள விவசாயிகள் கேம்ப் கூலிகளாக திருப்பூர் செல்வது என காங்கேயத்தின் மற்றொரு முகத்தையும் மிளிர்கல் பதிவு செய்கிறது.

beryl1வேர்களைத் தேடும் பயணத்தில் என்ன மாதிரியான இடர்கள் ஏற்படும் அதைத் தாண்டி நாம் எப்படி பயணிக்க வேண்டும் என்பதை நமக்கு இந்நாவல் கற்றுத் தருகிறது. மீனவர்கள் கண்ணகியைப் பாண்டியன் மகளென கதைசொல்வது மற்றும் பழங்குடிகள் மீனாட்சிதான் கண்ணகி எனக் கதைசொல்வது போன்ற விசயங்கள் மிளிர்கல் வாயிலாக அறிந்தேன். கண்ணகியின் பாதையில் பயணிக்கத் தொடங்கி இறுதியில் காங்கேயம் கற்களை நோக்கித் திரும்புகிறது முல்லையின் பார்வை. நவீனுக்கும் முல்லைக்கும் இடையில் இனி காதல் பூக்க வாய்ப்பிருப்பதை இறுதியில் மெல்ல சொல்லிச் செல்கிறார். ஶ்ரீகுமார் நேமிநாதன் என்ற பெயர் சமணர்களுடையது. எனக்கு கவுந்தியடிகளாக ஶ்ரீகுமாரும், கோவலன் கண்ணகியாக நவீனும் முல்லையும் தோன்றுகிறார்கள்.

திருச்சி, மதுரை, திருச்சூர் போன்ற ஊர்களில் வசிக்கும் பெண்கள் எல்லோரும் அடக்க ஒடுக்கமாக இருப்பது போல டெல்லியில் வாழும் முல்லைக்குத் தோன்றுகிறது. மேலும், மதுரையும்  திருச்சியும் ஒரே மாதிரியிருப்பதாக உணர்கிறாள். மதுரையில் தோழர் கண்ணன் உதவியோடு கோவலன் பொட்டல், யாதவர்கோயில் போன்ற இடங்களையும், சாந்தலிங்கம் அய்யாவையும் பார்க்கிறார்கள். மதுரையில் உள்ளவர்கள் ஓரளவு உள்ளூர் வரலாற்றை அறிந்திருப்பது போன்ற விசயங்கள் நாவலில் பதிவாகியுள்ளது.

சிலப்பதிகாரத்தை உரையோடு வாசிக்க வேண்டும். மதுரை குறித்த பகுதிகளைப் படித்து அலைய வேண்டும் என்ற புதிய ஆசையையும் இந்நாவல் ஏற்படுத்திவிட்டது. நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் இரா.முருகவேளின் உழைப்பு மிளிர்கிறது. தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா வரும் பகுதிகள் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது. அவருடைய எளிமையும், வரலாற்றுப் புலமையும் நாவலில் மிக அருமையாக பதிவாகியுள்ளது. பூம்புகார், ஶ்ரீரங்கம், திருச்சி போன்ற இடங்களுக்கு இளமையில் சென்றிருக்கிறேன். இந்நாவல் வாசித்ததும் மீண்டும் அவ்விடங்களுக்குச் செல்ல வேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது.

மாங்குளம்

மதுரை மாங்குளம் மலையிலுள்ள சமணப்படுகையில் முல்லை, நவீன் மற்றும் பேராசிரியர் ஶ்ரீகுமார் ஒருநாள் தங்குவதைப் படித்ததும் பசுமைநடை நண்பர்களுடன் இணைந்து ஒருநாள் மலையில் தங்கி உரையாட வேண்டுமென்ற எண்ணத்தை விதைத்தது.  ஶ்ரீகுமார் வாயிலாக வரலாற்றை மிக எளிமையாக நமக்கும் சொல்லி விடுகிறார். அன்பே சிவம் திரைப்படம் போல அற்புதமான பயண அனுபவத்தை தரும் இந்நாவலை அனைவரும் வாசிக்க வேண்டுகிறேன்.

மிளிர்கல் – இரா.முருகவேள், பொன்னுலகம் பதிப்பகம், விலை ரூ200.

பரந்தவெளி

நாம் இவ்வுலகில் வாழ்வது அழகைக் கண்டுபிடிக்க மட்டுமே…! மற்றவை எல்லாம் ஒரு வகையில் ‘காத்திருத்தல்’ போன்றது…!

-    கலீல் கிப்ரான்

பேருந்தில் பயணிக்கையில் வழியில் தெரியும் மலைகளைப் பார்க்கும் போதெல்லாம் அதன்மீது ஏறிப்போய் பார்க்க வேண்டுமென்ற ஆசை எனக்குத் தோன்றும். அந்த ஆசையை ஓரளவிற்கு பூர்த்தி செய்தது பசுமைநடைப்பயணங்களே! மதுரை மற்றும் அதைச்சுற்றியுள்ள பெரும்பாலான மலைகளுக்கு பசுமைநடைப்பயணக்குழுவோடு சென்றிருக்கிறேன்.

கோயில்

பேரையூர் மொட்டைமலை மீதுள்ள பழமையான சிவன் கோயிலுக்கு பசுமைநடையாக இம்முறை 29.06.2014 அன்று சென்றோம். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டமொம்மன் சிலைக்கருகில் அதிகாலை கூடினோம். அங்கிருந்து பேருந்தில் பேரையூர் சென்றோம். வெயில் கூடவே வந்தது.

மலையேற்றம்

தொலைவில் சிறிதாகத் தெரிந்த மலை அருகில் சென்றதும் மிக உயரமாகத் தெரிந்தது. மலையில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. பிடித்து நடப்பதற்கு வாகாக இரும்பு கைபிடியும் உள்ளது. மலையில் ஏறும்பாதை செங்குத்தாக இருந்ததால் கொஞ்சம் மலைப்பாக இருந்தது. வெயிலின் உக்கிரம் கொஞ்சம் தளரச் செய்தது.

மலைகள்

சிவன்மலையிருந்து பார்க்கும்போது தெரிந்த பரந்துவிரிந்த வெளியும், மலைக்கு பின்னால் தெரிந்த சதுரகிரி மகாலிங்க மலைத்தொடரும் மனதிற்கு புத்துணர்ச்சி அளித்தது.

ஒற்றைக்கருவறையும் சிறிய முன்மண்டபமும் கொண்ட பழமையான கோயில். கருவறையில் சிவலிங்கமும் முன்மண்டபத்தில் பிள்ளையாரும் இருந்தனர். கோயிலுக்கு வெளியே உள்ள நந்தி கொஞ்சம் சிதைந்திருந்தது.

நந்திக்கு அருகிலிருந்த காவல்தெய்வத்தின் சிலையின் கரங்களில் அம்பு போன்ற ஆயுதம் இருந்தது.

காவல்தெய்வம்

சுனை

மலையில் இரண்டு சுனைகள் இருந்தன. வெயில்காலத்தில் அதில் நீரும் அல்லிப்பூக்களும் இருந்தது ஆச்சர்யமளித்தது. இரண்டு சுனைகளுக்கும் படிக்கட்டுகள் சிறிதாக அமைக்கப்பட்டு மிக அழகாகயிருந்தது. சுனைக்கருகில் கன்னிமார் சிலையிருந்தது. கோயிலுக்கு பின்புறம் உள்ள பாறையில் முப்பதிற்கு மேற்பட்ட வரியில் வெட்டப்பட்ட கல்வெட்டு உள்ளது.

கன்னிமார்

கல்வெட்டு

முத்துக்கிருஷ்ணன்சூரியனுக்கு பயந்து கோயிலுக்கு பின்புறம் விழுந்த நிழலில் அமர்ந்தோம். பசுமைநடை அமைப்பாளரும், எழுத்தாளருமான அ.முத்துக்கிருஷ்ணன் மலை குறித்த வரலாற்றுத் தகவல்களையும் மற்ற தகவல்களையும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதன் சாராம்சமாவது:

எனது சொந்த ஊர் பேரையூருக்கு அருகில்தான் உள்ளது. இப்பகுதியிலுள்ள மலைகளிலெல்லாம் பலமுறை சுற்றித் திரிந்திருக்கிறேன். இந்த பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பது இந்த ஊரின் தொன்மைக்கு சான்றாகும். மலையில் உள்ள இந்த சிவன் கோயில் மல்லிகார்சுனர் கோயில் என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டு முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1280) 27ஆம் ஆட்சியாண்டைச் சேர்ந்ததாகும்.

இக்கல்வெட்டின் மூலம் இந்த ஊரின் பழைய பெயர் கடுங்கோ மங்கலம் என அறியலாம். சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்குப் பின் களப்பிரர் ஆட்சி நடைபெற்றது. அவர்களை முறியடித்து ஆட்சிக்கு வந்த பாண்டிய மன்னன் கடுங்கோன் ஆவான். அவனது பெயரால் அமைந்த ஊராக இருக்கலாம். இந்தஊர் செங்குடி நாட்டுப் பிரிவுகளுள் அடங்கியிருக்கிறது. இவ்வூர் நிலங்களையும் குளத்தையும் முத்துடையார் விக்கிரமச்சிங்கத்தேவன் என்பவர் இக்கோயிலுக்கு தானமாகக் கொடுத்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

மலையடிவாரத்தில் மேலப்பரங்கிரி சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. முன்னர் ஒருமுறை பெய்த மலையின் போது ஆலம்பட்டி நீர்நிலையைக் கடந்து திருப்பரங்குன்றம் செல்ல இயலாத நிலை ஏற்பட்ட போது முருகன் வேல் வடிவில் இங்கேயே காட்சியளித்தாக ஐதீகம். மேலே உள்ள மலையிலிருந்து பார்த்தால் திருப்பரங்குன்றம் கோயில் தெரியும்.

தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கல்வெட்டுகளைக் காண இங்கு வந்தபோது இப்போது இருப்பதைப் போன்று படிக்கட்டுகள் இல்லை. மிகவும் சிரமப்பட்டு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள். அவரைப் போன்ற அறிஞர்கள் நம்முடன் பசுமைநடையில் பயணிப்பது நமக்கு சிறப்பாகும். தொல்லியல் துறையிலிருந்து மதுரை மாவட்டத்தொல்லியல் கையேடு போன்ற புத்தகங்களில் இதுபோன்ற இடங்களைக் குறித்து விளக்கமாகக் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது கிடைக்கும் மனநிறைவே தனி.

மேலும், அதிகாலையில் இதுபோன்ற இடங்களுக்கு சீக்கிரம் வரவேண்டியதன் அவசியத்தையும், கொடைக்கானல் மலையில் அமைந்துள்ள கற்திட்டைகளைக் காணச் செல்வதற்கான ஒருநாள் பயண அறிவிப்பையும் கூறினார்.

Dargah

எல்லோரும் மலையை வெயிலோடு சுற்றிப்பார்த்தோம். மலையில் ஒரு தர்ஹாவும் இருந்தது. யாக்கோபு என்ற இஸ்லாமியப் பெரியவருக்கு எடுக்கப்பட்டது எனச் சொல்கிறார்கள். அதையும் பார்த்தோம். மெல்ல மலைமீதிருந்து கிறக்கத்தோடு இறங்கினோம். எல்லோருக்கும் எலுமிச்சைப் பழச்சாறு கொடுத்து தெம்பூட்டினர்.

மலையடிவாரம்

மேலப்பரங்கிரி முருகன் கோயிலில் கல்யாண முகூர்த்தம் என்பதால் நல்ல கூட்டம். உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. கோயிலுக்குள் இருந்த வளாகத்துக்குள் எல்லோரும் கூடி உணவருந்தினோம். அடுத்தமுறை இதைச்சுற்றியுள்ள மற்ற மலைகளுக்கும் வரவேண்டுமென்ற நினைவுடன் கிளம்பினோம்.

படங்கள் உதவி – க்ரூஸ் அந்தோணி ஹூபர்ட்