திருவிழாக்களின் தலைநகரம்

வலைப்பூ எழுதத் தொடங்கியபோது ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஆறேழு கட்டுரைகளை 2010 அக்டோபர் – நவம்பரில் பதிவேற்றினோம். அதில் அழகர்கோயில் ஆடித்தேரோட்டம் பற்றிய கட்டுரையும் ஒன்று. அதன்பிறகு பல திருவிழாக்களுக்குப் பயணித்து அதைக்குறித்து வலைப்பூவில் எழுதியுள்ளேன். மதுரை திருவிழாக்கள் குறித்த கட்டுரைகளைத் தொகுத்து 2019-இல் திருவிழாக்களின் தலைநகரம் மதுரை என்ற நூல் உருவானது.

பசுமைநடையின் 100வது நடை தொல்லியல் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. அதில் நான் எழுதிய திருவிழாக்களின் தலைநகரம் மதுரை நூல் வெளியிடப்பட்டது. புத்தகத்தை சமணமலையில் வைத்து ஓவியர் ட்ராஸ்ட்கி மருது வெளியிட, சூழலியல் அறிஞர் தியோடர் பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். நூலை வெளியிடும் முன்பாக பசுமை நடையில் என்னுடைய பங்களிப்பைக் குறித்தும், திருவிழாக்களில் நான் கொண்டுள்ள ஈடுபாட்டைக் குறித்தும் பசுமைநடை அமைப்பாளர் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் பேசினார். நூலை பெற்றுக்கொண்ட தியோடர் பாஸ்கரன் அவர்கள் என்னிடம் அதில் கையொப்பம் கேட்ட கணத்தில் சித்திரவீதிக்காரன் என கை நடுங்கியபடி எழுதினேன்.

என் வாழ்வில் மறக்க முடியாத தருணமாக சமணமலையில் அந்நூல் வெளியீடு அமைந்தது. 2010ல் நவம்பரில் இரண்டாவது பசுமை நடையில் நானும், தமிழ்ச்செல்வ அண்ணனும் அந்த இடத்திலிருந்துதான் எங்கள் பசுமை நடை பயணத்தைத் தொடங்கினோம். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்களும் இந்நூல் வெளியீட்டின் போது உடனிருந்தது பெருமகிழ்ச்சி. ஓவியர் மனோகர் தேவதாஸ், பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பசுமைநடை ஒருங்கிணைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மற்றும் சக நண்பர்கள் அனைவருக்கும் நா தழுதழுக்க நன்றி கூறினேன்.

தொல்லியல் திருவிழாவில் முதற்கட்டமாக காலை அமர்வில் சமணமலையில் நூல்வெளியிடப்பட்டதைப் போல, மாலை உலகத் தமிழ்ச்சங்கத்திலும் மறுமுறை வெளியிடப்பட்டது. நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் வெளியிட, டோக் பெருமாட்டி கல்லூரியின் முதல்வர் முனைவர் கிறிஸ்டியானா சிங் பெற்றுக் கொண்டார். வெளியான முதல்நாளே இருநூறுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. அன்றிரவு நான் தூங்கவே இல்லை. மனம் முழுக்க இனம்புரியாத மகிழ்ச்சி. மறுநாள் ஓரிடத்தில் பசுமை நடை நண்பர்கள் எல்லோரும் குடும்பத்தோடு தொல்லியல் திருவிழாவின் வெற்றியைக் குறித்து உரையாடினோம். அ.முத்துக்கிருஷ்ணன் இந்த நூல் வெளியிட்ட தருணத்தில் ஏற்பட்ட உணர்வுகளைக் குறித்தும், என்னிடம் மற்ற நண்பர்கள் திருவிழாக்கள் குறித்த கேள்விகளையும் கேட்கும் ஒரு அமர்வை ஏற்படுத்திக் கொடுத்தார். மறக்கமுடியாத தருணமது.

டோக் பெருமாட்டி கல்லூரியின் பல்வேறு கல்லூரிகளுக்கிடையிலான இயற்பியல் துறை மாணவர்கள் பங்கேற்கும் பிக்ஸ்பிளோசன் நிகழ்ச்சியில் முதல் நிகழ்வாக எங்கள் துறையிலிருந்து திருவிழாக்களின் தலைநகரம் நூல் வெளியானதைப் பாராட்டி எனக்கு நினைவுப் பரிசு வழங்கினார்கள். அதை, எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனை வழங்க இயற்பியல் துறைத் தலைவர் முனைவர் ம.பிரிஜெட் மேரி உடனிருந்தார். திருவிழாக்களின் தலைநகரம் நூலை எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

டோக் பெருமாட்டி கல்லூரி பவளவிழா நிறைவிலும் 5000 மாணவிகள் நிறைந்த அரங்கில் திருவிழாக்களின் தலைநகரம் நூல் எழுதியதைப் பாராட்டி நினைவுப்பரிசும், ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் கிறிஸ்டியானா சிங் இப்பரிசை வழங்கினார். விழாவில் சிறப்பு விருந்தினராக வந்திருந்த திரு.பழனிவேல் தியாகராஜனும் அந்த சமயத்தில் உடனிருந்தார். பணிபுரியும் இடத்திலிருந்து கிடைத்த பாராட்டு பெரிய விருது பெற்றது போன்ற மகிழ்ச்சியைத் தந்தது. தெரிந்த நண்பர்கள் பலரும் தங்களுக்குத் தெரிய இதுபோல் யாருக்கும் வழங்கப்பட்டதில்லை எனக்கே முதல்முறை எனக்கூறியது பெருமகிழ்ச்சியளித்தது.

விகடன் இணைய தளத்தில் இந்நூல் குறித்த அறிமுகத்தை முத்துக்குமரன் எழுதியிருந்தார். திருவிழாக்களின் தலைநகரம் நூல் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளதழில் வந்தது. தி இந்து மெட்ரோ பிளஸில் அரைப்பக்கம் மேலாக இந்த நூல் குறித்து படங்களோடு வந்த பதிவு பலரையும் சென்றடைந்தது. இதை வாசித்து என்னைத் தேடிப் பாராட்டினார் எழுத்தாளர் எட்டயபுரம் ராஜன். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அவரது தளத்தில் மதுரை திருவிழாக்கள் குறித்து எழுதிய கட்டுரை எனக்கு பொக்கிஷம். காவல்துறையில் ஆணையாளராகப் பணியாற்றும் செந்தில்குமார் அவர்கள் இந்நூலை வாசித்து என்னை அழைத்துப் பாராட்டியது இன்ப அதிர்ச்சி அல்லது அதிர்வுடன்கூடிய இன்பம். முகநூலிலும் இந்நூல் குறித்து பல நண்பர்கள் சிறப்பாகப் பதிவு செய்துள்ளனர். ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பதிவு செய்யலாம் என்று இருக்கிறேன். மதுரை புத்தகத் திருவிழாவின்போது காமதேனு இதழில் இந்நூல் குறித்த அறிமுகத்தை கணேசகுமாரன் எழுதியிருந்தார்.

2019ல் சித்திரைத் திருவிழாவின்போது ஹலோ பண்பலையின் சிறப்பு வணக்கம் தமிழா நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் அச்சமயத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

மதுரை புத்தகத்திருவிழாவின் போது ஷ்ருதி டிவியில் திருவிழாக்களின் தலைநகரம் குறித்து ஒரு சிறுநேர்காணல் வந்தது. ஷ்ருதி டி.வி.க்கும் உடன் உரையாடிய கார்த்திக் புகழேந்திக்கும் வணக்கம்.

கொரோனா கால ஊரடங்கில் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு ஜூம் செயலி வாயிலாக நடந்த தளிர்திறன் பயிற்சியிலும், சுப்புலட்சுமி லட்சுமிபதி கல்லூரி மாணவர்களிடமும் மதுரை திருவிழாக்கள் குறித்துப் பேச வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர் சிவகுருநாதன் அவர்களுக்கும், நண்பர் ஹக்கீமுக்கும் நன்றிகள் பல.

திருவிழாக்களின் தலைநகரம் நூலை எங்கள் பள்ளி மேனாள் ஆசிரியர் செல்லமணி டீச்சரிடம் கொடுத்ததும், ஆடித்திருவிழாவில் வெள்ளியங்குன்றம் ஜமீன் அவர்களிடம் கொடுத்ததும், வண்ணதாசன் அவர்களிடம் இந்நூலை வழங்கியதும் மறக்க முடியாத அனுபவங்கள்.

இந்நூலை பரிசாக பலருக்கும் வழங்கும் பொதும்பு பள்ளி ஆசிரியர் சுரேஷ் அவர்களுக்கும், மண்ணின் மைந்தர்கள் அமைப்பிற்கும், ஶ்ரீவில்லிபுத்தூரில் வாழும் ரத்னவேல் அய்யாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இன்னும் பல கொண்டாட்டங்களை இந்நூல் வழங்கிக்கொண்டேயிருக்கிறது. முதல்பதிப்பு நிறைவுற்று அடுத்த பதிப்பை நோக்கி ‘திருவிழாக்களின் தலைநகரம் மதுரை’ எனும் தேரை கொண்டாட்டமாக நகர்த்திச் சென்ற ஒவ்வொருவரையும் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன். நன்றி.


மதுரையின் திருவிழா – எஸ்.ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் வலைத்தள வாசிப்பிலிருந்து நாமும் வலைப்பூ தொடங்கி எழுத வேண்டுமென 2010ல் இந்த வலைப்பூ ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் மதுரை, திருவிழாக்கள், பசுமைநடை, நாட்டுப்புறவியல், புத்தக வாசிப்பனுபவங்கள் குறித்து இந்த வலைப்பூவில் எழுதிவருகிறேன். மதுரையில் நடைபெறும் திருவிழாக்களைத் தொகுத்து நான் எழுதிய திருவிழாக்களின் தலைநகரம் நூல் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் அவரது வலைத்தள பதிவு எனக்கு செப்புப்பட்டயம்போல. அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அந்தப் பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் என்ற திரைப்படப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் மதுரையின் திருவிழா நினைவுகள் வந்து போகும். மாட்டுவண்டி கட்டி சித்திரைத் திருவிழாவிற்கு போய் வந்த பால்ய வயதின் நினைவுகள் பசுமையாகயிருக்கிறது.

மதுரையைப் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் இத்தனை அழகான புகைப்படங்களுடன் திருவிழா குறித்த தகவல்களுடன் மதுரையின் பண்பாட்டுச் சிறப்புகளை விவரிக்கும் ஒரு புத்தகம் இதுவரை வந்ததில்லை. அப்படி ஒரு நூலை சித்திரவீதிக்காரன் எழுதியிருக்கிறார்.

நண்பர் முத்துகிருஷ்ணன் நடத்தும் பசுமை நடையில் அவரைச் சந்தித்திருக்கிறேன். சிறந்த வாசிப்பாளர். புகைப்படக்கலைஞர். இணையத்தில் தொடர்ந்து மதுரை குறித்து எழுதக்கூடியவர். பசுமை நடையில் உருவான அனுபவங்கள் அவருக்குப் புதிய வாசலைத் திறந்துவிட்டிருக்கிறது. பசுமை நடை குறித்து ஐம்பதுக்கும் மேலான கட்டுரைகள் இணையத்தில் எழுதியிருக்கிறார்

மதுரை திருவிழாக்களின் தலைநகரம். இங்கே ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் தான். எத்தனை விதமான திருவிழாக்கள். அதிலும் சித்திரைத்திருவிழாவைக் காண்பது என்பது எப்போதும் மகிழ்ச்சியூட்டும் அனுபவமே. மதுரையில் நடைபெறும் விழாக்களின் சிறப்புகளை நுட்பமான தனது எழுத்தால் அழகாகப் பதிவு செய்திருக்கிறார். கூடவே வியக்கவைக்கும் புகைப்படங்கள்.

திருவிழாவில் நாமே சுற்றியலைந்து திரும்பியது போல எழுதப்பட்டுள்ள இந்நூலை பசுமை நடை சிறப்பான வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது. சித்திரவீதிக்காரனுக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

பசுமை நடையின் மூலம் மகத்தான பண்பாட்டுச் சூழலியல் இயக்கத்தை முன்னெடுத்து வரும் நண்பர் முத்துகிருஷ்ணனுக்கும் அன்பான வாழ்த்துகள்.

எஸ். ராமகிருஷ்ணன்

https://www.sramakrishnan.com/?p=8434


விகடன் வலைதளத்தில் திருவிழாக்களின் தலைநகரம்

“சித்திரைத் திருவிழா தெரியும்… வல்லாளப்பட்டி புரவி எடுப்பு தெரியுமா?’’ –

`அடியேய், பிள்ளைய எங்கடீ?’’  

“அழகரு பின்னுக்குப் போயிருப்பான்கோவ்.’’

இந்தப் பதிலைக் கேட்காத `மதுரைக்காரவுக’ இருந்திருக்கவே முடியாது. அழகருடைய பல்லக்கில் `லிப்ட்’ கேட்டு அவருடனேயே திரிவார்கள், மதுரைப் பொடிசுகள். மண்ணோடு பிறந்த திருவிழாக்கள் மண்ணுக்குரியோரை ஈர்க்கும்தானே!

வயது வேறுபாடின்றி அனைவர் நெஞ்சிலும் நெருங்கியவை மதுரைத் திருவிழாக்கள். தன்னை அறியாமல் தப்பாட்டத்துக்குக் கால்கள் துடிக்குமே, அதே போன்ற நெருக்கம்தான். அப்படி, பிள்ளை வயதில் அத்தகைய நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு தெருவில் மக்களோடு கரைந்து களித்து, தற்போது அந்த அனுபவத்தை எழுதி, முக்கிய ஆவணப் புத்தகமாக அச்சேற்றியிருக்கிறார்  சித்திரவீதிக்காரன். 

மதுரையின் திருவிழா வரலாறுகளை ஏந்தி உயிர்ப்பான நூலாக வெளிவந்திருக்கிறது, சித்திரவீதிக்காரனின்  `திருவிழாக்களின் தலைநகரம் மதுரை.’ தகவல்களைத் தொகுத்து தன் எழுத்துகளால் வடித்திருக்கிறார். பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வல்லாளப்பட்டி புரவிஎடுப்பு, படையலிடும் கல் எது என்பதை கோயில் மாடு அடையாளங்காட்டும் கோவில்பாப்பாக்குடி சாமிகும்பிடு, நேர்ந்துகொண்டதன்படி பக்தர்கள்கூடி நாடகங்கள் போடும் வலையங்குளம் இசைநாடகத் திருவிழா என மதுரையில் நடைபெறுகிற பல ஆச்சர்யமான விழாக் குறிப்புகள்  இதில்  இடம்பெற்றுள்ளன.

அந்த ஆச்சர்யங்களை மட்டுமன்றி விமர்சனங்களையும் இட்டிருக்கிறார். கல்பாலம் அருகே வைகையாற்று உள்மண்டபத்தின் அவலநிலையும்  சுயநலங்களாலும் அலட்சியங்களாலும் மதுரையின் கிருதுமால் நதித்தடம் அழிந்தே போய்விட்டதும்… எனப் பல வரலாற்றுப் பேரிழப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. வரலாற்றை அதன் தற்போதைய நிகழ்வுகளோடு  பொருத்திக்காட்டிப் புரிய வைக்கிறார்  சித்திரவீதிக்காரன். 

எல்லோரும் அறிந்திருக்கும் சித்திரைப் பெருந்திருவிழா, அழகர்மலை மற்றும் திருப்பரங்குன்றத் தேரோட்டங்கள், தெப்பத்திருவிழாக்கள், கீழவாசல் மரியன்னை தேர்பவனி, கோரிப்பாளையம் தர்கா சந்தனக்கூடு போன்றவற்றில் கிடைக்கும் பலவித அரிய தகவல்கள் ஆவணமாக்கக்கப்பட்டுள்ளன. நம் கைப்பிடித்துக் கூட்டிப்போய், தெப்பத்திருவிழாவின் குச்சி ஐஸ்களையும், அழகர் திருவிழாவின்  நீர்மோர், பானகம் ஐட்டங்களையும் வாங்கித் தந்து தாகம் தீர்த்து வைக்கிறார்.

எந்தெந்த திருவிழாவில் என்னென்ன சாப்பிடக் கிடைக்கும் என்பதையும் பதிந்திருப்பதால் ஒருவகையில், `பாய்ஸ்’ செந்தில் டைரியாகவும் இதைக் கொள்ளலாம். சித்திரவீதிக்காரன் இந்நூலின் முன்னுரையில், `உங்களுடன் மீண்டும் மதுரை நகருக்குள் பயணிக்க ஆவலாகக் காத்திருக்கிறேன்’ என்று எழுதியிருப்பதில், துளியும் பொய்யில்லை! மதுரை விழாச் சூழல்களும் வரலாறுகளும் எழுத்துகளினூடாகப் பிசிறுகளற்றுத் தெரிகின்றன. புத்தக வடிவமைப்புதான் வாசகனைக் காதலாய் ஈர்க்கும். அட்டைப் பக்கங்களும் தாள்களும் அத்தனை கச்சிதம். `சமூக இளைப்பாறுதலே திருவிழாக்கள்’ என்கிற பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனது  கூற்றின்  அடிநாதமாகப் புத்தகம் கனிந்து  கனக்கிறது. 

நூல் ஆசிரியர்  சித்திரவீதிக்காரனை  சந்தித்தோம். மிகவும் இலகுவான உடை, கூட்டத்துக்குள் அவ்வளவு  சீக்கிரத்தில் அகப்பட்டுவிடாத  அசல் மதுரை முகம். `எப்போது வேண்டுமானாலும் வீதிகளில் இறங்கி, விழாக்களில் கலந்துவிடத் தயாராயிருக்கிறார்’ எனக் கணிக்க முடிந்தது. “புத்தகத்தையும் திருவிழாவையும் புத்தகத் திருவிழாவையும் கொண்டாடும் மதுரை மண்ணின் இந்தப் புத்தகம் முழுக்க மதுரை மாவட்டத்தின் திருவிழாக்கள்தான்’’ என்றார். மதுரைக்கு டூர் போக விரும்புகிறவர்கள், `செத்த… இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுப் புறப்படுங்கள்’ எனத்  தைரியமாய்ச்  சொல்லலாம். `இம்புட்டு நாளா இங்கதான் கெடந்தேன். இது தெரியாம போச்சேப்பா’  என மதுரைக்காரர்களையும் நெற்றி தட்டிக்கொள்ளச் செய்கிறது, இந்தத் தகவல் களஞ்சியம். 

`உதவி நூல்கள்’ பட்டியலில் ஆசிரியரின் உழைப்பும் கனவும் தேடலும் காதலும் அப்பட்டமாகத் தெரிகின்றன.

`ரசிச்சா, திருவிழாவ இப்படி ரசிக்கணும்ய்யா!’

  • முத்துக்குமரன், விகடன்

https://www.vikatan.com/news/miscellaneous/150075-book-review-of-chithiraiveedhikarans-analysis-on-festivities-in-and-around-madurai.html


Finding himself in festivals

Blogger-turned-author Chithiraveethikaran talks about his fascination for festivals and his first book Thiruvizhakkalin Thalainagaram Madurai

A. Shrikumar

It was the night before Lord Kallazhagar’s entry into the Vaigai and the blinding lights made Madurai look like the moon on earth. Men dressed in the attire of guardian deities, danced around the streets carrying swords made of cardboard and the jingle of the salangai they wore, echoed through the town. Then, the notes of the nadaswaram and the sonorous beats of the drums took over as a multitude of people thronged the temple. Among the many onlookers was a 10-year-old boy, awed by the charged atmosphere, smitten by the sheer beauty of the iconic golden horse mount and the majestic idol on it. Many decades later, the boy has come to pen his experiences of watching many such vibrant festivals in Madurai.

Meet Chithiraveethikaran (Sundar), who has come out with a book titled Thiruvizhakkalin Thalainagaram Madurai, on the various festivals that the city hosts. “I have given a detailed account of about 22 festivals in the book, including temple, church and mosque festivals. There are about 285 such events taking place in a calender year in and around Madurai,” says Chithiraveethikaran, who started out as a blogger 10 years ago. In his WordPress blog Maduraivaasagan, he has put down his observations of colourful community events in the region. “It was plain curiosity as a kid that took me to festivals. Whenever there was a mass human gathering, I would stop by and watch. The myriad colours of temple festivals, the intriguing rituals and the paraphernalia attracted me and I started going in search of festivals.”

As he discovered more and more festivals, he also stumbled upon some lesser-known and unique ones. “There’s a peculiar custom followed at the Valayankulam festival, for instance. During the annual event that starts on Maha Shivarathri, Tamil plays are staged continuously for over 80 days every year. It’s a kind of vow that people fulfil upon their prayers being answered at the local temple there. Mythological and historical dramas are performed every night and people from over 40 surrounding villages gather to watch them,” he says. “Another such unique festival is the Puravi eduppu at Vallalapatti Ayyanar Temple, in which thousands of mud horses are taken in procession over two days. It’s a resplendent sight to see so many terracotta horses of varying sizes and colours being carried in unison. Likewise, the famous Appan Thirupathi thiruvizha is a night-time festival when Lord Azhagar returns to his hill abode from the city. Over the years, the festival disintegrated as rooster fight, which was a popular element of the event, was banned.”

“Watching festivals closely, I understood how these events also support the livelihood of people involved in folk arts. Shows of karagam, oyilattam apart from therukoothu is a staple at village temple festivals. In earlier days, these were the only forms of entertainment. But it’s heartening to see the practice being continued as a tradition,” he adds.

Madurai’s festivals are unique in many ways just like the city itself, says Chithiraveethikaran. “They are secular to start with. I have seen people taking active part in festivals beyond religious boundaries. Santhanakoodu festival at Goripalayam Dargah is a classic example, where Hindus too take part. Similarly, during Azhagar’s ethir sevai festival, Churches put up pandals and offer buttermilk to welcome the deity and devotees.”

Adding that Madurai has a rich and long tradition of celebrating festivals, he cites references from Sangam literature. “Terms like ‘Kalikezhu koodal’ and ‘vizhavumali moodhoor’ are used to convey how Madurai was a place for people to gather and celebrate. The word ‘koodal’ itself means a gathering,” says Chithiraveethikaran. “Poems in Paripadal and Madurai Kanchi talk of water festivals in the Vaigai and evening time temple processions.”

Among the many aspects of festivals, one thing that attracts Chithiraveethikaran the most, is food. “I have written a separate blog post just on the food sold during festivals. Especially in the rural pockets, one can find snacks characteristic of festivals like the bheem pushti halwa, seerani mittai and javv mittai, varieties of mixtures, murukku and other deep-fried snacks that can be found only during that period. For instance, panakam is generally served only during Chithirai festival,” he says.

FOR METROPLUS, 26/02/2019. : Blogger Chithiraiveethikaran has penned a book ” Thiruvizhakkalin Thalainagaram ” a compilation of the various festivals that happen year around in Madurai.Photo : S. James / The Hindu

“I was inspired by historian Tho Paramasivan’s work on the legend of Azhagarkoil temple and Multiple Facets of My Madurai by Manohar Devadoss,” says Chithiraveethikaran. “Also, my active involvement in the monthly walks to heritage sites as part of Green Walk, which has published my book, helped me shape my observations in the form of a book.”  

https://www.thehindu.com/life-and-style/travel/blogger-turned-author-chithiraveethikaran-talks-about-his-fascination-for-festivals-and-his-first-book-thiruvizhakkalin-thalainagaram-madurai/article26408853.ece

Festival Photos – Arun, Renga