அழகர்கோயில் தேரோட்டம்

Posted: நவம்பர் 9, 2010 in நாட்டுப்புறவியல்

திருமாலிருஞ்சோலையில் தேர்திருவிழா என்ற செய்தியை நாளிதழில் பார்த்ததும் முடிவு செய்துவிட்டேன், கட்டாயம் போவதென்று அதுவும் ஞாயிறு அன்று தேர்என்றதும் கொண்டாட்டமாகிவிட்டது. ஆடி மாதம் அழகர்கோயிலில் பத்துநாள் திருவிழா நடக்கும். அதில் ஒன்பதாம் நாள் தேர்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடிப்பெளர்ணமி அன்று இவ்விழா கொண்டாடப்படும்.

நானும் என் நன்பரும் அவரது கட்டவண்டிய (டி.வி.எஸ்50) கட்டிட்டு கிளம்பினோம். ஆனாலும் கட்டவண்டி காப்பாத்தவந்த வண்டியென்பதால் சீக்கிரம் அழகர்கோயிலை சென்றடைந்தோம். அழகாபுரிக்கோட்டைக்கு வெளியே வண்டிய போட்டுட்டு மக்கள் வெள்ளத்தில் கலந்தோம். சாலை இருமருங்கிலும் விதவிதமான கடைகள். பீமபுஸ்டி அல்வா கடைகள் நிறைய இருந்தன. அருகில் உள்ள கிராம மக்கள் அதிகம் வந்திருந்தனர்.

இரணியன் கோட்டைக்கு வெளியே தேர்கம்பீரமாக கிளம்ப காத்திருந்தது. பதினெட்டாம்படியானை பார்த்து வர கிளம்பினோம். வழக்கம் போல நல்ல கூட்டம். நிறைய பேர் சாமியாடி கொண்டிருந்தனர். கருப்ப பாத்துட்டு வெளியே வந்தோம். மணி எட்டாணதால் பசிக்க தொடங்கிவிட்டது. வெளியே பூரிகள் சின்ன சின்ன உலகம் போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எல்லா கடைகளிலும் விலை தேரளவுக்கு சொன்னார்கள். இரண்டு பூரி இருபத்தைந்து ரூபாய். ஒரு தோசையும் இருபத்தைந்து ரூபாய். பூரியே சாப்பிட முடிவெடுத்தோம். திருழா கூட்டத்திற்கென்றே தயாரித்து இருந்தார்கள்.

திருமலைநாயக்கர் மண்டபத்திற்கருகில் போட்டிருந்த கொட்டகைகிட்ட தப்பு சத்தம் கேட்க காணச்சென்றோம். அங்கே வெள்ளியங்குன்றம் ஜமீந்தார்அமர்ந்திருந்தார். தலையில் நல்ல உருமா, கருப்பு கோட்டு, காதில் கடுக்கன், பட்டுவேட்டிய பஞ்சகச்சம் மாதிரி கட்டியிருந்தார். நல்ல நேரம் தொடங்கியதும் கொட்டு மரியாதையுடன் வெள்ளியங்குன்றம் ஜமீனை அழைத்து வந்தனர். அவர் வந்து மரியாதை செய்ததும் தேர்புறப்பட்டது. தேரின் நான்கு வடங்களை இழுக்கும் உரிமையை கோயிலை சுற்றிய கிராமத்தினர் பெற்றுள்ளனர். மேலும் தெளிவாக அறிய தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் புத்தகம் படியுங்கள்.

தேர்மிக அழகாக ஆடி அசைந்து நகர தொடங்கியது. அழகாபுரிக்கோட்டையை ஒட்டிய உட்பகுதியில் தான் தேர்சுற்றி வரும். வடத்தினை வேகமாக இழுத்து வர மணற்பாங்கான பாதையென்பதால் புழுதி பறந்தது. எருதுகட்டின் ஞாபகம் வந்தது. புழுதி பறக்க மாட்டினை கட்டிய வடத்தை இழுத்து வருவார்கள். அழகர் மாயக்கனை பூட்டி பக்தர்களின் கவலைகளை களைய தேரில் ஏறி போர் புரிய புழுதி பறக்க பவனி வருவதாக தோன்றியது.

நிறைய சாமியாடிகள் நம் கவனம் ஈர்த்தனர். ஒருவர் ஆடிக்கொண்டிருக்கும் போதே குதித்து குதித்து வந்து இருவர் கையிலே இருக்கும் அருவாள் மீதேறி அவர்கள் தோள்களை பற்றிக்கொண்டு கோவிந்தோ,கோவிந்தோ எனக்கூறி தவ்வி பின் மீண்டும் ஆடிச் சென்றார். மக்களில் சிலர் சாமி வந்து ஆடினர். அதில் நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்த ஒரு பாட்டிக்கும் பேரனுக்கும் சாமி வந்தது. அவர்களுக்கு வந்தது யார் என்றறிய அவர்கள் குடும்பத்தினர் சாமியாடி முன் அவர்களை நிறுத்தி கேட்டுக்கொண்டிருந்தனர். இது போன்ற சில சம்பவங்கள் நம்மை மீறிய சக்தி ஒன்று இயங்கி கொண்டிருப்பதை நமக்கு நிரூபிக்கும் விதமாக இருக்கிறது.

தேர் மரங்களுக்கிடையில் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. வர்ணிப்பாளர்கள் சிலர் ஆங்காங்கே அழகரை வர்ணித்து பாட நமக்கு மேனி சிலிர்க்கிறது. மேலும் வர்ணிப்பு பாடி பழக வேண்டும் என்ற ஆசையும் வந்தது. தேர் வரும் பாதை சற்று மோசமாக மேடும் பள்ளமுமாக இருந்தது. அதனால் தேர் சில இடங்களில் ஆடி,ஆடி மெல்ல நகர்ந்து வந்தது.

மரங்களுக்கடியில் வண்டி கட்டி வந்த கிராமமக்கள் உணவு சமைத்து கொண்டிருந்தனர். நிறைய ஆடுகள் தங்கள் இன்னுயிரை இறைவனுக்கு ஈந்து பின் மக்களுக்கு இரையாகின. நிறைய பேர் மாட்டுவண்டியில் வந்திருந்தனர். அதுவும் கூட்டுவண்டியில் வந்திருந்தனர். இப்பொழுதெல்லாம் மாட்டு வண்டியை பார்ப்பதே அரிதாகி வரும் போது கூட்டு வண்டியை பார்த்ததும் பெருமகிழ்ச்சி தோன்றியது. பிறகு டிராக்டர்,வேன்,கார்,லாரி போன்ற நவீன ஊர்திகளிலும் நிறைய பேர் வந்திருந்தனர்.

தேர்வளைவுகளில் திரும்பும் போது பெரிய கோபுரம் நடந்து வருவது போல மனதில் தோன்றியது. கொடி பறக்க தேர் ஆடி,ஆடி வருவதை பார்க்கும் போது அடுத்த ஆடிக்கும் தேர்பார்க்க வர வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டேன். இது போன்ற திருவிழாக்களுக்கு சென்று எளிய மக்களோடு ஒன்றி விடும் போது மனது பேருவகை கொள்கிறது.

சிலர் கூட்டமாக சாமியாடிக்கொண்டு வந்தனர். அதில் இருந்த ஒரு இளைஞனை கண்ட போது கருப்பணசாமி நேரில் வந்து ஆடிக்கொண்டிருப்பது போல தோன்றியது. பெண் ஒருவரும் ஆவேசமாக சாமி ஆடினார் போல தோன்றியது. மக்கள் சாமியாடுபவர்களிடம் தங்கள் குறைகளை கூற அவர்களும் ஆறுதல் தரும்படி எளிய தீர்வினை வழங்கினர்.பெரிய அருவாள் வைத்து ஒரு பெரியவர் சாமியாடிக் கொண்டு வந்தார். அவருக்கருகில் ஒருவர் வர்ணிப்பு பாட அவரும் ரசித்து கொண்டே ஏதோ கூறினார். வயதான பாட்டி அழுதுகொண்டே அவர்முன் நிற்க சாமியாடி குறையறிந்து அருள் கூறினார்.

பஜனை பாடிக்கொண்டு ஒரு கூட்டம் வந்தனர்.அதில் நடுவில் நின்று பாடியவர் தசாவதாரம் நம்பி கமல்ஹாசன் போல இருந்தார். நல்ல உயரம்,நல்ல குரல்,புன்சிரிப்பு என்றிருந்த அவரை பார்த்துக்கொண்டே நின்றேன்.அவர் பாட,பாட அவரை சுற்றி கோல் குச்சி கொண்டு அடித்து மகிழ்ச்சியாக ஆடி வந்தனர். எனக்கு ஏக்கமாக இருந்தது. தேர்நிலைக்கு திரும்பும் முன் ஒரு முறை அழகரை கண்குளிர தேருக்கருகில் போய் தரிசனம் செய்துவிட்டு தேர் நிலைக்கு வரும் இடத்தில் நின்றோம். தவில்,நாதஸ்வரம்,உருமி இணைந்து தமிழர் இசையை இசைத்து கொண்டிருந்தனர். உருமிச்சத்தம் என்னை உலுக்கி எடுத்தது. ஒருவர் தன் சிறுவயது மகனை ஆடச்சொல்லி தோளில் வைத்து உலுப்பி கொண்டிருந்தார். அந்தப்பயலும் அசைந்து அசைந்து ஆட பார்க்கவே மகிழ்ச்சியாய் இருந்தது.

தேர் இழுக்கும் இளைஞர்கள் வடத்து மேலே ஏறி ஆடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தனர். நாங்கள் கோயிலுக்குள் தோசை வாங்க சென்றோம். பயங்கரமான கூட்டத்திற்கிடையே சென்றோம். அழகர்கோயில் தோசை புகழ் பெற்றது.ஒருநாளின் முற்பகுதியை உற்சாகமாக கொண்டாடிவிட்டு வீடு திரும்பினோம்.

பின்னூட்டங்கள்
  1. maduraisaravanan சொல்கிறார்:

    ஆடி அழக்ர் கோவில் தேரோட்டம் அருமையான பதிவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

  2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் மதுரைவாச்கன் – அழகர் கோவிலின் தேரோட்டம் = நேர்முக வர்ணனை அழகு அருமை. ஒவ்வோரு சிறு செயல்களையும் கண்டு, மகிழ்ந்து, நினைவில் நிறுத்தி, எழுதியது பாராட்டத் தக்கது. ந்ல்லதொரு இடுகை. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s