புத்தகங்களோடு நான்

Posted: நவம்பர் 9, 2010 in வழியெங்கும் புத்தகங்கள்

சில புத்தகங்கள் மீதான நெருக்கம் நண்பர்களின் மீதான நெருக்கத்தை விடவும் வலியது. அதை சொல்லி விளங்க வைக்க முடியாது. ஏன் மனது அப்படி புத்தகங்களின் மீது ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்று இன்றுவரே புரிந்துகொள்ளவே முடியவில்லை.
-எஸ்.ராமகிருஷ்ணன் (காற்றில் யாரோ நடக்கிறார்கள்)

எனது சிறுவயதில் கதைகளை அதிகம் கேட்டு வளர்ந்ததால் புத்தகங்களின் மீதான காதல் இன்னும் குறையவில்லை. வாசிக்கப் பழகும் முன் படம் பார்ப்பதற்காகவே புத்தகத்தை விரும்பினேன்.
பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர் இவைகளைத்தான் நானும் முதலில் வாசிக்கப் பழகினேன். இராணி காமிக்ஸ் புத்தகங்கள் அடுத்தகட்ட வாசிப்பிற்கு வந்தது. கபீஸ் குரங்கு, விக்ரமாதித்தன்-வேதாளம், இரும்புக்கை மாயாவி எல்லோரும் இன்று வரை நினைவில் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.

விகடன், குமுதம், இந்தியாடுடே எல்லாம் நாலாம் வகுப்பு படிக்கையிலேயே வாசிக்கத் தொடங்கி இன்று வரை சினிமா செய்திகளையும் வண்ணத்திரையில் பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.
கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் வாசித்துக்கொண்டிருந்த வேளையில் பஞ்சதந்திரக்கதைகள், திராவிடநாட்டுப்புறக்கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், வால்காவிலிருந்து கங்கைவரை (அப்ப புரியல), துணைப்பாட புத்தகங்களில் இருந்த கதைகள் எல்லாம் வாசித்தேன்.

எங்க ஊரில் நூலகம் இல்லை. எட்டாப்பு வரை எங்க ஊர் பள்ளியில் படித்ததால் நூலகம் மட்டும் எட்டாக்கனியாகவே இருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது நூலகத்தில் சேர்ந்தேன். சிறுவர் கதைகள், யோகா-தியான புத்தகங்கள், பொதுஅறிவு, ரெய்கி-ஹிப்னாட்டிசம் போன்ற புத்தகங்களாக எடுத்து படித்தேன். இதெல்லாம் கடந்து வருவதற்குள் வெகு நாட்களாகி விட்டது.

பதினொன்றாம் வகுப்பு விடுமுறையில் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தேன். அந்த சரித்திரநாவல் பிடித்து போக பொன்னியின் செல்வன் ஐந்து பாகத்தை ஆறு நாளில் முடித்தேன். அடுத்து சாண்டில்யனின் கன்னி மாடம் படித்துப் பிடித்து போய் எங்கள் நூலகத்தில் இருந்த சாண்டில்யன் புத்தகங்கள் எல்லாத்தையும் படிச்சுட்டேன். நல்ல வேளை இதையும் தாண்டி வாசிக்க தொடங்கி விட்டேன்.

1001 அராபிய இரவுகள், கண்ணதாசன்-ஓஷோ புத்தகங்கள், தீபாவளி மலர்கள், வாழ்க்கை வரலாறுகள், மங்கையர் மலர், சுயமுன்னேற்ற புத்தகங்கள் எல்லாம் படித்தேன். பத்தாம் வகுப்பிலிருந்து கல்லூரி சேரும் வரை பக்தி ஸ்பெஷல் வாசகன் வேறு.

விகடனில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதாவிலாசம், துணையெழுத்து, தேசாந்திரி எல்லாம் எனக்கு உயிர். பின் ஜெயகாந்தன், அப்துல் ரகுமான், தொ.பரமசிவன், கி.ரா, நாஞ்சில்நாடன், சுந்தர ராமசாமி, சாருநிவேதிதா, பெருமாள்முருகன், ஜெயமோகன் என நல்ல இலக்கிய வட்டத்துக்குள் வந்தேன். உயிர்மை, காலச்சுவடு, அம்ருதா போன்ற இலக்கிய இதழ்களும் என் வாசிப்பை விரிவு செய்ய உதவின.

கண்டது கடியது எல்லாம் வாசித்தேன். ஆனால் எதையும் குப்பை என்று சொல்ல முடியாது. ஏனென்றால் என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள் தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி,மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

பின்னூட்டங்கள்
  1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் மதுரை வாசகன் – புத்தக்ம் வாசிப்பதில் உள்ள ஆர்வமும் ஈடுபாடும் பிரமிக்க வைக்கிறது. தொடர்க வாசிப்பினை – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s