உயரப்பறத்தல் –வண்ணதாசன்

Posted: திசெம்பர் 9, 2010 in வழியெங்கும் புத்தகங்கள்

பரண்களில் ஏற்றி வைத்த சாமான்களை இறக்கி, மீண்டும் பரணுக்கு ஏற்றுகிற இடைவெளியில் எங்கெங்கோ சென்று திரும்புகிறோம் நாம். அனுபவித்த போது இருந்த மனத்தை விட மீள் பார்க்கிற மனம் சற்றுக்கனிந்து கிடப்பதால், அனுபவங்களைப் புதிய வெளிச்சங்களில் அல்லது புதிய வெளிச்சக் குறைவுகளில் பார்க்கத் தோன்றுகிறது இப்போது.

 -வண்ணதாசன்

‘’ஒரு விதையாகவும் ஒரு தாவரமாகவுமே என்னையும் என் வாழ்க்கையையும் நினைத்துக் கொள்கிற எனக்கு என்னுடைய எழுத்துக்கள் மழைக்காலத்தில் எழுதப்படுவதும் வெளியாகிறதும் பொருத்தமானதென்றே படுகிறது’’ என முன்னுரையில் வண்ணதாசன் கூறுகிறார். அவருடைய உயரப்பறத்தல் என்ற சிறுகதைப்புத்தகம் மழைக்காலத்தில் வாசிக்க கிடைத்தது எனது வரம் என்றே நான் நினைக்கிறேன்.

மழையின் பெரிய புத்தகத்தை

யார் பிரித்துப் படித்துக்கொண்டிருக்கிறார்கள் 

படிக்கட்டில் நீர் வழிந்து

கொண்டிருக்கிறது.

என்ற தேவதச்சனின் கவிதையும் ஞாபகம் வந்தது. இத்தொகுப்பில் மொத்தம் பதினேழு கதைகள் உள்ளன. ஒரு பாதியை ஊருக்கு வெளியே உள்ள ஆலமரத்தடியிலும் மீதி பாதியை வெளியே மழை தொணத்தொணவென பெய்து கொண்டிருந்த வேளையில் வீட்டிலும் வாசித்தேன். அப்பொழுதெல்லாம் மென்மையான குரலில் வண்ணதாசன் என்னோடு பேசப்பேச நான் கேட்டுக்கொண்டிருந்ததாக நினைத்துக்கொண்டேன். எல்லா கதைகளையும் அவர் சொல்லும் விதமே அவ்வளவு அழகு.

 இந்த கதைகளைப் படிக்கும் பொழுது லோகு மதினி, கோமதி அக்கா, தெய்வு, தினகரி, தங்கம்மை அத்தை, சித்திரை, பானு, அலர்மேலு, முருகேசு, ராமையா, நாகலிங்கம், சைலப்பன், திருவாரியமுத்து, அருணாச்சலம் மற்றும் சுந்தரம் போன்ற கதாமாந்தர்கள் எல்லோரும் ‘நைட் அட் த மியூசியம்’ படத்தில் இரவில் மியூசியத்தில் உள்ள எல்லாம் உயிர்பெற்று நடமாடியது போல வாசிக்கும் போதே மெல்ல நம் மனதுக்குள் வந்து நடமாடத்தொடங்கிவிடுகிறார்கள்.

இவருடைய கதைகள் நம் வாழ்வில் நடந்த சில சம்பவங்கள் போலவே இருக்கிறது. அதை அவர் விவரிருக்கும் போது நாமும் இப்படி இருந்திருக்கலாம் எனத்தோன்றும்படி செய்துவிடுகிறார்.

விடுமுறைக்கு வந்து போன பேரன் நினைவாக இருக்கும் தாத்தா பாட்டியை “கிணற்றுத் தண்ணீரும் ஆற்று மீனும்’’ என்ற கதையில் எடுத்துக்காட்டுகிறார். ‘’இங்கே இருக்கும் புறாக்கள்’’ கதையில் கடனால் ஊரை விட்டு போன நண்பனது குடும்பத்தின் காட்சிகளை விவரிக்கிறார். “சைகைகள் மூலம் செய்திகள்’’ முன்னாள் இயக்குனரை சமூகம் புறக்கணித்த கதை. அதில் ஓரிடத்தில் இயக்குனர் சொல்வார்: ‘’ஒரு படம் ஊத்திக்கிட்டுதுன்னாலே உடனடியாக மறந்து போயிருவான். இருபது வருஷத்துக்கு முன்னால விழுந்தவன் நானு’’. இந்த வார்த்தை என்னை கலங்க வைத்துவிட்டது.

‘’எனக்கென்னவோ ஊர் என்பது மனிதர்கள் மூலமாகவும் மனிதர்கள் என்பவர்கள் தங்களது பேச்சு மூலமாகவுமே பளிச்பளிச்சென்று அடையாளம் காட்டிக்கொள்வது போலத்தோன்றுகிறது.வனாந்திரங்களில் அடைக்கலாங் குருவிச்சத்தம் கேட்டது மாதிரி, திரும்பத்திரும்ப,இந்த பேச்சும் சொற்களுமே நகரத்தின் புழுதிகளுக்குள் புதையுண்டு போய்க் கொண்டிருக்கிற எங்களுடைய ஊர்த்தெருக்களையும், காரை வீடுகளையும் காப்பாற்றித்தருகிறது’’ என ‘’சில வாழை மரங்கள்’’ என்ற கதையில் நகரத்தில் வாழும் மனிதர்கள் எப்பொழுதும் தங்கள் ஊரையே நினைத்துக்கொண்டிருப்பதை காட்டுகிறார்.

வண்ணதாசனின் கதைகளை படிக்க படிக்க நாம் மென்மையாகவே மாறிவிடுகிறோம். மேலும், எதிர்படும் மனிதர்களை நேசிக்கவும் புரிந்து கொள்ளவும் தொடங்கிவிடுவோம். வண்ணதாசன் தன் பெயருக்கு ஏற்றாற்போல் எழுத்திலே ஓவியம் படைத்து விடுகிறார்.அந்த ஓவியத்தில் நாம் கடந்த கால வாழ்க்கையை பார்க்கலாம், வருங்கால வாழ்க்கையை இன்னும் அழகாக மாற்றி கொள்ளலாம். அவருடைய வரியுடன் முடித்தால் தான் இன்னும் நெகிழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன்.

‘’வாழ்ந்ததைக் காட்டிலும் வாழவேண்டியது அதிகமிருப்பதாகவும் பெற்றதைவிட இழந்துவிட்டது அனேகம் என்றும் நான் நினைத்ததில்லை. ஆனால் எழுதி முடிக்கிற ஒவ்வொரு சமயமும் எழுதியதைக் காட்டிலும் எழுத வேண்டியது அதிகமாக இருப்பது போலச் சமீபத்தில் தோன்றுகிறது. நேற்றுப் புரிந்ததைவிட இன்று வாழ்வையும் நேற்று எழுதியதைவிட இன்று மனிதர்களையும் சரியாகப் புரியவும் எழுதவும் முடிகிறது’’-வண்ணதாசன்

உயரப்பறத்தல், கண்மணி வெளியீடு, 45 ரூபாய்

பின்னூட்டங்கள்
  1. வண்ணதாசனின் இணைய தளமுகவரி. http://www.vannathasan.wordpress.com வண்ணதாசனுக்காக அவரது வாசகர் நெல்லை ஏர்வாடியை சேர்ந்த S.i.சுல்தான் என்பவர் வண்ணதாசனின் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் மற்றும் அவரது புத்தகங்கள் குறித்து இத்தளத்தில் தொகுத்து வருகிறார். மேலும், இந்தாண்டு சுஜாதா விருது 2011 சிறுகதைக்காக வண்ணதாசனுக்கு வழங்கப்படுகிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s