வையைப்புனல்

Posted: திசெம்பர் 9, 2010 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

மலைவரை மாமலை அழி பெயல்- காலை 

செல வரை காணாக் கடல்தலைக் கூட

 நில வரை அல்லல் நிழத்த, விரிந்த

பலவுறு போர்வைப் பரு மணல் மூஉய்

 வரிஅரி ஆணு முகிழ் விரி சினைய

மாந்தீம் தளிரொடு வாழையிலை மயக்கி

ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ, பறை அறையப் 

போந்தது – வையைப் புனல்                                                                     

-பரிபாடல்

மலையில் முதல் நாள் பெய்த மழையின் மிகுதியால் வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வைகையை சார்ந்து வாழும் அனைத்து உயிர்களும் தம் பசி முதலான துன்பங்கள் விலகி விடும் எனக் கருதி மகிழ்ந்தன. ஆற்றின் இரு கரைகளிலும் இருந்த மலர்ச்சோலைகளால் வைகை பூக்களால் போர்த்தப்பட்டு வருவது போலக் காணப்பட்டதாம். வறட்சியின் போது பரவிக்கிடந்த மணல் மேடுகளை பாய்ந்து வந்த புது வெள்ளம் மூழ்கச் செய்ததாம்.

 இன்றும் மக்கள் வைகையில் வெள்ளத்தை பாலங்களிலும் கரையோரங்களிலும் நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்கிறார்கள். வைகையில் வெள்ளம் இருகரை தொட்டு வருகிறது. ஆனால் குப்பைகளை பிளாஸ்டிக் கவர்,பாட்டில்களை தான் இழுத்து வருகிறது. நானும் வைகையை ஆல்பர்ட் விக்டர் மேம்பாலத்திலும், யானைக்கல் பாலத்திலும், ஆரப்பாளையம் அருகிலும் பார்த்து மகிழ்ந்தேன். வெள்ளம் சின்ன பாலங்களை எல்லாம் சில நாள் மூழ்கடித்து சென்றது. ஆற்றை இரவு நேரங்களில் பார்க்கும் போது மின்விளக்குகளின் வெளிச்சம் பட்டு ஒளி வெள்ளத்திலும் மிதக்கிறது. வைகையின் பெயரில்  ரயிலும், ரதமும்(சொகுசுபேருந்து) ஓடினாலும் ஆறாக ஓடினால் தானே நமக்கு பெருமை. ‘’வைகை ரயிலாகவே ஓடினால் நாளை குடிநீர்க்கும் முன்பதிவு செய்ய வேண்டிருக்கும்’’ என வெகு நாட்களுக்கு முன் நாட்குறிப்பேட்டில் எழுதியது ஞாபகம் வந்தது. வைகை அணை நிரம்பியுள்ளதால் இம்முறையாவது அழகர் தொட்டிக்குள் இறங்காமல் ஆற்றில் இறங்குவார் என்ற எண்ணமும் சிந்தையில் பெருகி ஓடத் தொடங்கியது.

 

வைகையில் வரும் வெள்ளத்தை இன்னொரு பரிபாடல் மிக அழகாக விவரிக்கிறது. ‘’பொதியில் மலைக்குரியவனான பாண்டியனுடைய போரின்கண் அவன் பகைமன்னர் திறையாகக் கொடுத்த களிற்றுயானைகள் ஓரிடத்தே குழுமினாற்போன்று வானத்தே முகில்கள் குழுமி, அப் பாண்டியன் போர் முரசம்போன்று முழங்கி யிடித்து, அவன் பகைப்படையின்மேல் விடும் அம்புகள் போன்று துளித்து, அவன் வண்மைபோன்று நீரைப் பொழிந்தன; அதனால் வையையிற் பெருகிய நீர், அப் பாண்டியன் படை பகைநிலத்திற் புகுமாறுபோல அப் பாண்டியன் நாட்டிலுள்ள கழனிகளிலெல்லாம் புகுந்து பெருகிற்று’’. சங்ககாலப்புலவனின் கற்பனை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

ஒளிறுவாள் பொருப்பன் உடல்சமத் திறுத்த

களிறுநிரைத் தவைபோற் கொண்மூ நெரிதர

அரசுபடக் கடந்த ஆனாச் சீற்றத்தவன்

 முரசதிர் பவைபோன் முழங்கிடி பயிற்றி

ஒடுங்கார் உடன்றவன் தானை வில்விசை

விடுங்கணை யொப்பிற் கதழுறை சிதறூஉக்

கண்ணொளி எஃகிற் கடிய மின்னியவன்

வண்மைபோல் வானம் பொழிநீர் மண்மிசை

ஆனாது வந்து தொகுபீண்டி மற்றவன்

தானையி னூழி. . . . . தாவூக் கத்திற்

போன நிலமெல்லாம் போரார் வயல்புகுத

 -பரிபாடல்

மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயரும் உண்டு. ஆலம் என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள். பழம் மதுரையைச் சுற்றி அகழியும், கோட்டையின் வடபுறத்தில் அகழியை ஒட்டி வைகையும் எப்போதும் நீர் நிறைந்து ஓடியதால் ‘’நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’’ என்ற பொருள்பட இப்பெயர் வழங்கப்பெற்றது என அறிஞர் மயிலை.சீனி வேங்கடசாமி குறிப்பிடுகிறார். சமீபத்தில்  சமணமலை மீதிருந்து மதுரையை பார்த்த போதும் எல்லா இடங்களிலும் நீர் நிறைந்து காணப்பட்டது.

வைகையை பற்றியும் பரிபாடலைப் பற்றியும் தனியே ஒரு தொடரே எழுதலாம். இப்பதைக்கு வெள்ளத்தை பார்த்த மகிழ்ச்சி பெருக்கு.

குறிப்பு – நீரின்றி…(தானம் அறக்கட்டளை) புத்தகத்திலிருந்தும், தமிழ் இணையப்பல்கலைக்கழக வலைத்தளத்திலிருந்தும் பரிபாடல் மற்றும் அதற்கான விளக்கம் எடுத்தேன்.நன்றி. வைகையின் நிழற்படங்களை எடுத்து உதவிய நண்பன் சரவணனுக்கும் நன்றி. வைகையை சீரமைக்க உதவிய அழகிரி அவர்களுக்கும் (கட்சிகளுக்கு அப்பாற்பட்டு)  நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s