உள்ளானும் சுள்ளானும்

Posted: திசெம்பர் 27, 2010 in நாட்டுப்புறவியல், பார்வைகள், பகிர்வுகள்

கதைசொல்லிகளான கி.ரா வுக்கும்,எஸ்.ரா விற்கும்  மற்றும் மரத்தடிகளில் முதுமையின் தனிமையோடு பல கதைகளை சுமந்து வாழும் முதியோர்களுக்கும் இக்கதையை சமர்ப்பித்து உங்களிடம் சொல்கிறேன். இந்தக்கதைய மூணாப்பு படிக்கிறப்ப எங்கூடப்படிச்ச முத்து தான் சொன்னான். அவனுக்கும் நன்றி.

உள்ளானும் சுள்ளானும்(எறும்பு) ரெண்டு பேரும் நண்பங்ங. (உள்ளான்றது ஒருநீர் வாழ்உயிரி) ஒருநாள் உள்ளான் செத்து போச்சு. உடனே எறும்பு துக்கந்தாங்காம மொட்ட போட்டுட்டு கடலுக்கு போச்சு. ஏன் மொட்ட போட்டுருக்கன்னு கடல் கேட்டுச்சு. உடனே எறும்பு “ஒனக்கு விசயந்தெரியாதா? உள்ளாஞ்செத்து போச்சு அதான் மொட்ட போட்டுருக்கேன்னு” சொல்லுச்சு. அதக்கேட்டு கடல் கலங்கி போச்சு.

கடலுக்கு குளிக்க வந்த யானை கடல்ட்ட ஏன் கலங்கியிருக்கன்னு கேட்டுச்சு. உடனே கடல் “ஒனக்கு விசயந்தெரியாதா? உள்ளாஞ்செத்து எறும்பண்ணே மொட்ட போட்டு நான் கலங்கிப்போய்டேன்னுச்சு”. அதக்கேட்டு யானை ஒரு கொம்ப ஒடச்சுகிருச்சு.

யானை எப்பவும் வர்ற மரத்துக்கிட்ட வந்தப்ப யானையப் பாத்த மரம் ஏன் ஒன்னோட ஒத்த கொம்பு ஒடஞ்சுருக்குன்னு கேட்டுச்சு. உடனே யானை “ஒனக்கு விசயந்தெரியாதா? உள்ளாஞ்செத்து எறும்பண்ணே மொட்ட போட்டு கடல் தண்ணி கலங்கி நான் கொம்ப ஒடச்சுகிட்டேன்னுச்சு”. மரம் பதறிப்போய் தன் இலெயெல்லாம் உதுத்துருச்சு.

அங்க வந்த கொக்கு மரத்துட்ட ஏன் இலெயெல்லாம் உதுத்துருக்கன்னு கேட்டுச்சு. உடனே மரம் “ஒனக்கு விசயந்தெரியாதா? உள்ளாஞ்செத்து எறும்பண்ணே மொட்ட போட்டு கடல் தண்ணி கலங்கி யானை கொம்ப ஒடச்சு நான் இலெயெ உதுத்துட்டேன்”. கொக்கு உடனே தன்னோட ஒரு கண்ண குத்தி கெடுத்துகிச்சு.

கொக்கு வயல்ல மேய நிக்கேல அங்கண உழுதுகிட்டுருந்த விவசாயி கொக்குட்ட ஏன் ஒன்னோட ஒத்த கண்ண காணோம்ன்னு கேட்க உடனே கொக்கு  “ஒனக்கு விசயந்தெரியாதா? உள்ளாஞ்செத்து எறும்பண்ணே மொட்ட போட்டு கடல் தண்ணி கலங்கி யானை கொம்ப ஒடச்சு மரம் இலெயெ உதுத்து நான் கண்ண கெடுத்துகிட்டேன்னுச்சு”. இதக்கேட்ட விவசாயி தாறுமாறா உழ ஆரம்பிச்சுட்டாரு.

வயக்காட்டுக்கு வந்த விவசாயியோட பொண்டாட்டி என்னைய்யா இப்படி தாறுமாறா உழுறன்னு கேட்க உடனே விவசாயி  “ஒனக்கு விசயந்தெரியாதா? உள்ளாஞ்செத்து எறும்பண்ணே மொட்ட போட்டு கடல் தண்ணி கலங்கி யானை கொம்ப ஒடச்சு மரம் இலெயெ உதுத்து கொக்கு கண்ண கெடுத்து நான் தாறுமாறா உழ ஆரம்பிச்சுட்டேன்னாரு”. இதக்கேட்ட விவசாயி பொண்டாட்டி வீட்ல இருந்த சோத்து பானை கொளம்புசட்டி எல்லாத்தையும் ஒடைச்சுட்டா.

அப்ப சாப்புட வந்த மகன் ஏன் இதெல்லாம் உடைச்சேன்னு கேட்க உடனே அவங்கம்மா  “ஒனக்கு விசயந்தெரியாதா? உள்ளாஞ்செத்து எறும்பண்ணே மொட்ட போட்டு கடல் தண்ணி கலங்கி யானை கொம்ப ஒடச்சு மரம் இலெயெ உதுத்து கொக்கு கண்ண கெடுத்து ஒங்கப்பா தாறுமாறா உழ ஆரம்பிச்சு நான் எல்லாத்தையும் உடைச்சுட்டேன்”. இதக்கேட்ட மகன் ஓடிப்போயி ஊர்ல இருந்த சாதி சங்கத்துலெயெல்லாந் தீய வச்சுட்டான். ஊர்ல இருந்த எல்லா பிரச்சனையும் தூரப் போச்சு.

      இந்தக் கதைய கேட்டதிலிருந்து நெறாயாப் பேர்ட்ட இந்த கதைய சொல்லிட்டு திரிகிறேன். இப்ப உங்கட்டயும் சொல்லிட்டேன். (குறிப்பு கதையோட இறுதி முடிவு அதான் சாதி சங்கத்துல தீ வைக்கிறது அது நான் எடுத்தது. மற்றபடி நினைவில் நின்றதை அப்படியே பகிர்ந்துகொண்டேன்.கதை சொல்லும் போது ஒனக்கு விசயந்தெரியாதா என்பதை நீட்டி சொன்னால் நல்லாயிருக்கும்)

நீங்களும் ஒரு நாலு பேருக்காவது இந்தக்கதைய சொல்லுங்க.குறிப்பா சின்னப்பிள்ளைகளுக்கு கட்டாயம் சொல்லுங்க. ஏன்னா ஒரு முறை எங்கண்ணே பொண்ணு எங்கிட்ட கட்டறும்ப காட்டி எங்க போகுதுன்னு கேட்டா? நானு அது வாத்தியார்ன்னும் மத்த சின்ன எறும்பெல்லாம் படிக்கிறபசங்கன்னும் கதை சொன்னேன். கொஞ்ச நாள் கழிச்சு வேற எங்கயோ கட்டறும்ப பாத்து அவங்கம்மாட்ட வாத்தியார்ம்மான்னு சொன்னாளாம். அந்த மனசுதான் குழந்தைகளின் வரம். இப்பவும் நாம சின்னப்பையனா மாற முடியலன்ற வருத்தம் மனசுல இருக்கு. மும்பைஎக்ஸ்ப்ரஸ்ல கமல் சொல்லுவாப்ல “அப்பல்லாம் (சின்னவயசுல) நா(ன்) ஜாலியா இருந்தேன் இப்ப என்னடான்னா எதுக்கெடுத்தாலும் வேலை பார்க்க சொல்றாங்ஙன்னு” அதான் எனக்கும் அடிக்கடி தோணும். நிறையா கதை படிங்க! அத நிறைய பேர்ட்ட சொல்லுங்க!

பி.கு: பறவைகளைப் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் தரமான கட்டுரைகளைப் பதிந்து வரும் பயனர் பரிதிமதிக்கும், மழலைகள்.காம் நடராஜன் கல்பட்டுவுக்கும், இதுவிஷயத்தில் நானறியாத இன்ன பிறருக்கும் கடன்பட்டுள்ளேன்

பின்னூட்டங்கள்
  1. antony சொல்கிறார்:

    இந்தக்கதையை இப்பத்தான் கேள்விப்படுகிறேன். நல்ல கதை.

  2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

    அன்பின் சுந்தர் – மூணாப்பில் கதை சொன்ன முத்து இன்னும் நினைவில் இருக்கிறானா – பலே பலே !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s