சிவகாசி ரயில் நிலையமும் கூத்தும்

Posted: திசெம்பர் 29, 2010 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

எத்தனையோ புத்தகங்கள் வாசிக்கிறோம், எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம், எத்தனையோ இடங்களுக்கு போகிறோம், எத்தனையோ படங்களையோ பார்க்கிறோம். ஆனால் அத்தனையுமா நம் மனதில் பதிகிறது? நம்மை பாதிக்கும் சில விசயங்கள் தான் எண்ண அடுக்கில் பதிகிறது. பிறகு அது தொடர்பான சம்பவங்கள் நிகழும் போது மனதில் பதிந்த விசயம் தண்ணீரில் விழுந்த பந்து போல உடனே மேலே எழும்புகிறது. அப்படித் தான் சிவகாசி ரயில் நிலையம் மனதில் பதிந்த கதையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சிவகாசிக்கு நண்பரது திருமணத்திற்கு சென்றுவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றேன். அங்கிருந்து கிளம்பி திருத்தங்கல் ரயில்நிலையம் செல்லத்திட்டமிட்டேன். ஆனால் உறவினர் வீட்டிலிருந்து சிவகாசி ரயில் நிலையம் இரண்டரை கிலோமீட்டர் என்றதால் நடந்து செல்ல முடிவெடுத்தேன். மெல்ல தண்டவாளத்தில் ஏறி வெற்றிவிழா படத்தில் வரும் பூங்காற்று உன் பேர் சொல்ல பாடலை பாடிட்டே நடந்தேன். இந்த பயணம் உற்சாகமாக இருந்தது.

அடுத்தமுறை நானும் எங்க அண்ணனும் ராஜபாளையம் பகுதியில் உள்ள மலைகளை சுற்றிட்டு தென்காசி-மதுரை பயணிகள் ரயிலில் வந்தோம். அலைந்து திரிந்து வந்ததால் படியில் அமர்ந்து வந்தோம். சிவகாசி வர அந்த ரயில்வேகேட்ட பார்த்ததும் போன வாரம் இங்கன இருந்து தான் நடந்து வந்தேன்னு சொல்லிட்டே எழுந்தேன். செருப்பு கீழே விழுந்து விட்டது. செருப்பு வாங்கி ரெண்டு வாரந்தான் இருக்கும். இனி இருநூறு ரூபாய்க்கு வாங்க உடனே முடியாதேன்னு முடிவு பண்ணி இறங்கிட்டோம். முடிந்தால் செருப்ப எடுத்துட்டு ஓடி வந்து ரயில்ல ஏறிடலாம்ன்னு அங்கணயே அண்ணன நிக்க சொல்லிட்டு ஒத்த செருப்ப கையில புடிச்சுட்டு ஓடுறேன். முக்கால் கிலோமீட்டர் இருக்கும். நான் செருப்ப எடுக்க ரயில் கிளம்பிருச்சு. அப்புறம் நானும் அண்ணனும் பஸ்ல வந்தோம் மதுரைக்கு. சில்ரன்ஸ் ஆஃப் ஹெவன் படம் ஞாபகம் வந்தது.

இதோடு கூத்து முடியும்ன்னு பார்த்தா அடுத்த வாரம் பணி நிமித்தமாக சிவகாசி போகச்சொன்னாங்க. சரின்னு பஸ்ல போய்ட்டு வரையில ரயில்ல வருவோம்ன்னு கிளம்பிட்டேன். நான் போன இடம் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் நடுவுல.அங்க போனா வேலை முடிய மணி ரெண்டாயிருச்சு. கைல ஒரு பெரிய அட்டைபெட்டி வேற. ரயில் ரெண்டேகாலுக்கு வந்துரும். பஸ்ல போனா ரயில பிடிக்கமுடியாதுன்னு டூவீலர்ல வந்த ஒருத்தர்ட்ட உதவி கேட்டு ரயில்வேகேட்டுகிட்ட இறங்கிட்டேன். இறங்கி தண்டவாளத்துல நடக்க தொடங்குனதும் கேட்டு போடுற சத்தம் கேட்டுச்சு. ரயில் வரப்போதேன்னு பெட்டிய தலைக்கு மேல தூக்கி வச்சுட்டு ஓடுனேன். தண்டவாளத்துல யெல்லாம் வேகமா ஓட முடியுமா? ஆனாலும் வேற வழியில்லாம ஓடுனேன். மக்கள் இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கப்பா மெல்லப்போ என நம்பிக்கை கொடுத்தாங்க. நான் டிக்கெட் வேற வாங்கணும்ல அதுக்குத்தான் ஓடுறேன்னு ஓடினேன். ஒரு வழியா டிக்கெட் எடுத்துட்டு உக்காந்தேன் ரயில் வந்துருச்சு. வெற்றிவிழா கமல் மாதிரி முதல் முறை வந்தோம் இப்ப மூன்றாம் பிறை கமல் மாதிரி நம்ம ஆக்கிருச்சேன்னு நெனைச்சு சிரிச்சுகிட்டேன்.

கந்தக பூமியான சிவகாசியே மழையால் எங்கும் பசுமையாக காட்சி தந்தது. வழியில் குளம், குட்டை, கண்மாய் எல்லாம் நிறைந்து காணப்பட்டது. மக்கள் முகங்களில் அந்த மகிழ்வை காணமுடிகிறது. ஷேர்ஆட்டோல போகும் போது ஒருபாட்டி இந்த வருசம் வருணபகவான் கண்ண திறந்திட்டார்ன்னு வான் நோக்கி கையெடுத்து கும்புட்டுட்டே சொன்னாங்க. மேலும் அவசரத்திற்கு உதவிய அந்த மனிதரின் கருணை மனதில் நிறைந்துள்ளது. நவம்பர் 18 – டிசம்பர் 8 க்குள் மூன்று முறை சிவகாசி ரயில் நிலையம் என்னை வைத்து ஒரு கூத்தே நடத்திருச்சு. சூரிய நமஸ்காரம் என்ற சிறுகதையில் வண்ணதாசன் சொல்வது போல ‘’மறந்துபோக வேண்டியவை எல்லாம் மறந்துபோகும்படியும், ஞாபகத்தில் இருக்க வேண்டியவை மட்டும் ஞாபகத்தில் இருக்கும் படியாகவும் தானே எல்லாம் இருக்கின்றன. வேண்டாத இடத்தில் இதுவரை எந்த வெளிச்சமாவது விழுந்திருக்குமா? போதுமான இருட்டைப் பத்திரப்படுத்தி வைக்கப் போய்த்தானே, வெளுத்துவைத்த உருப்படிகள் மாதிரி, ஒவ்வொரு தினத்தையும் பளிச்சென்று அணிந்து கொள்ள முடிகிறது’’. ரயிலோடு பல கதைகள் இருக்கும், ஆனால் எனக்கு ரயில்நிலையத்தில் நடந்த இந்த கூத்து தான் பகிர தூண்டியது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s