துயில்- எஸ்.ராமகிருஷ்ணன் (வாதைக்கும் மீட்சிக்கும் இடையேயான பயணம்)

Posted: ஜனவரி 20, 2011 in வழியெங்கும் புத்தகங்கள்

நோய் ஒரு நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்று தந்ததையும் விட அதிகம் கற்றுத் தந்திருக்கிறது. நோய்மையுறுதல் என்பது உண்மையில் உடலை அறிந்து கொள்வதற்கான ஒரு விசாரணை.   

உடல் ஒரு பிரபஞ்சம். நாம் ஒரு போதும் கண்ணால் காணமுடியாத பேராறு நமது ரத்த ஓட்டம். உடலினுள் எண்ணிக்கையற்ற புதிர்கள், வியப்புகள், நுட்பங்கள் மிகுந்த பேரொழுங்குடன் அடங்கியிருக்கின்றன. உடலை அறிவது தான் மனிதனின் முதல் தேடல். அதை நோய்மை நினைவுபடுத்துகிறது.   

கடவுளின் இருப்பு குறித்த நம்பிக்கைகள் யாவும் மனிதன் நோய்மையடைவதால் மட்டுமே காப்பாற்றப்பட்டுவருகிறது. ஒவ்வொரு நோயிற்கும் நூற்றாண்டுகால நினைவுகளிருக்கிறது. மருத்துவத்தின் வரலாறு மகத்தானது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.  

–எஸ்.ராமகிருஷ்ணன் ( www.sramakrishnan.com )

இந்த வருடத்தின் முதல் நாளில் வெளியாகி இந்த ஆண்டின் சிறந்த நாவல்களுள் முதலாகவும் தமிழின் முக்கிய நாவல்களுள் ஒன்றாகவும் துயில் இருக்கும் என நம்புகிறேன். இந்நாவல் வெளியீட்டு விழாவிற்கு சென்று வந்த சகோதரர்களும் இதையே சொன்னார்கள். வாசித்த அனைவரும் இதைத்தான் இனி சொல்வார்கள். கரிச்சான்குஞ்சுவின் பசித்த மானுடம், ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல், கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம் போன்ற கிளாஸிக் நாவல்கள் எப்படி வாசிக்கும் போது காலம் கடந்து இன்றும் நம்மோடு நெருக்கமாக இருக்கிறதோ அப்படி இந்நாவலும் எத்தனை வருடங்கள் கழித்து படித்தாலும் நெருக்கமாகயிருக்கும். எஸ்.ராமகிருஷ்ணன் தான் ஒரு சிறந்த கதைசொல்லி மற்றும் தேசாந்திரி என்பதை இந்நாவலில் தன் எழுத்தின் மூலம் அழுத்தமாக நிறுவுகிறார்.

 தெக்கோடு என்னும் தென்தமிழகத்தில் கடைக்கோடியில் உள்ள சிறிய ஊரில் உள்ள துயில்தருமாதா தேவாலயம் மற்றும் அங்கு நடைபெறும் திருவிழாவை நோக்கி கதை பயணிக்கிறது. நாவல் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று புறப்பாடு மற்றது உற்சவம். கதை 1873, 1982 ஆகிய இரண்டு கால கட்டங்களில் பயணிக்கிறது. 1873ல் நடைபெறும் கதையும் தெக்கோட்டையே மையமாக கொண்டுள்ளது.

அழகர் திருவிழா, திருவிழாவாகச் சென்று தன் மனைவி சின்னராணியை வைத்து கடற்கன்னி ஷோ போடுகிறவன். அவர்களது ஒரே மகள் செல்வியோடு தெக்கோட்டு திருவிழாவிற்கு ஷோ போடுவதற்காக செல்கிறான்.

கொண்டலு அக்கா தெக்கோடு செல்லும் வழியில் எட்டூர்மண்டபம் என்னுமிடத்தில் வரும் ரோகிகளுக்கு உணவும், ஆறுதலும் அளிக்கும் பெண்.  தன் வாழ்வை பிறர்க்காக அர்ப்பணித்த உயர்ந்த மனுஷி.

ஏலன் பவர் என்னும் வெளிநாட்டுப் பெண் மருத்துவர் கல்கத்தா திருச்சபை மூலம் மருத்துவ சேவை செய்ய 1873ல் தெக்கோடு வருகிறாள். மூடநம்பிக்கைகளோடு வாழும் பாமர மக்கள், அதை வைத்து பிழைக்கும் திருச்சபை பாதிரி மற்றும் பூசாரிகள் இவர்களை எதிர்த்து மருத்துவம் செய்ய போராடி வென்று இறுதியில் சூழ்ச்சியால் மடிந்தும் போகிறாள்.

இந்த மூன்று பேரைச் சுற்றித்தான் கதை சுழல்கிறது. அழகர், சின்னராணி, ஏலன்பவர் மற்றும் கொண்டலுஅக்காவிடம் வரும் ரோகிகளின் கடந்த கால நினைவில் பல மனிதர்கள், பல சூழல்களை அற்புதமாக சொல்லியிருக்கிறார். கொண்டலு அக்கா ஒவ்வொரு நோயாளியின் பிரச்சனையை கேட்டு சொல்லும் தீர்வு உளவியற்பூர்வமானவை. அழகரின் மகள் செல்வியின் வழி குழந்தைகளின் உலகையும் நாம் காணலாம். சிற்றாறுகள் பல சேர்ந்து பேராறு ஆவது போல இந்நாவலில் பல கதைகள் அற்புதமாக வந்து பொருத்தமாக ஒட்டிக்கொள்கின்றன.

இந்நாவல் வெறும் கதைகளை மட்டும் கொண்டதல்ல. நோய் குறித்த மனிதமனதின் பயம் மற்றும் நம்பிக்கைகளை கதைகளின் ஊடாக பதிவுசெய்திருக்கிறார். நம் வாழ்விலேயே நோய் குறித்த பல அனுபவமிருக்கும். ஒருபுறம் மருத்துவரிடம் கேட்டு மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்வோம். மறுபுறம் குலதெய்வத்திலிருந்து பிறமத தெய்வங்கள் வரை நேர்ந்து கொள்வோம். இப்படி பல விசயங்களை இந்நாவல் ஆராய்கிறது.

இந்நாவல் முழுக்க எளிய மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளைத்தான் கதைகளின் ஊடாக நமக்கு சொல்கிறது. இந்நாவலின் ஊடாக வரும் சிறுகதாபாத்திரங்கள் முதல் நாவல் முழுக்க வரும் அழகர் வரை அனைவரின் வாழ்க்கையையும் நம்மை ஒரு விதத்தில் நிறைய யோசிக்க வைக்கிறது. “நல்லவன், கெட்டவன் என யாரும் இல்லை; வாழ்க்கை இழுக்கும் இழுப்பிற்குத்தான் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்- அவனவன் நல்லது, கெட்டதோடு” என நாவல் சொல்வதாய் தோன்றியது. 

பழனி பாதயாத்திரை, வாடிப்பட்டி மாதாகோயில், மதுரை பெரியாஸ்பத்திரி, சித்திரைத்திருவிழா போன்ற இடங்களில் நான் பார்த்த மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்தது போலத்தான் இந்நாவல் இருக்கிறது. எனவே, புனைவின் வழியான உண்மையான வாழ்க்கை குறித்த பார்வை தான் துயில்.  இதை கட்டாயம் அனைவரும் வாங்கி வாசியுங்கள். வெளியீட்டு நாளன்றே வாங்கி வந்து வாசிக்க தந்த சகோதரர்க்கும் நன்றி. இந்நாவலை இன்னும் பல முறை வாசித்துவிட்டு எனக்கு மிகவும் பிடித்த வரிகள், காட்சிகளை பதிவு செய்கிறேன். நாவலின் பின் அட்டையில் உள்ள வரிகளோடு முடிக்கிறேன். நன்றியை உயிர்மை பதிப்பகத்திற்கு உரித்தாக்குகிறேன்.

‘வாதைக்கும் மீட்சிக்கும் நடுவே மனித மனம் கொள்ளும் எண்ணற்ற விசித்திரங்கள்தான் மகத்தான தரிசனங்களை உருவாக்குகின்றன. இத்தரிசனத்தை ஒரு புனைவாக, கலையாக மாற்றுவதில் பெரும் வெற்றியடைந்திருக்கிறது எஸ்.ராமகிருஷ்ணனின் இப்புதிய நாவல்.

நம்மைக் காலகாலமாகத் தொடர்ந்துவரும் குற்ற உணர்வின் நதியிலிருந்து கரையேறாதவரை பிணியின் துயரினை ஒரு போதும் நம்மால் கடக்கவே முடியாது என்ற மகத்தான உண்மையை துயில் ஆழமாக நிறுவுகிறது. வெவ்வேறு காலங்களில் நிகழும் இந்நாவலில் அத்தியாயங்களுக்கு இடையே மனித வாழ்வு அடையும் கோலங்கள் ஏற்படுத்தும் துயரமும் பரவசமும் எல்லையற்றவை.  

மனித உடலை இந்திய மரபும் மேற்கத்திய மரபும் ஏற்கும் விதத்தில் அகவயமான, புறவயமான இரண்டு பாதைகள் இருப்பதை அடையாளம் காணும் எஸ்.ராமகிருஷ்ணன் அவற்றின் சாராம்சமான வாழ்வியல் நோக்கின் மையத்திற்கே நெருங்கிச் செல்கிறார். 

இந்த அளவிற்கு காட்சிப்பூர்வமான, தத்துவார்த்தத்தின் கவித்துவம் செறிந்த பிறிதொரு நாவல் தமிழில் எழுதப்பட்டதில்லை’.

பின்னூட்டங்கள்
 1. ramji_yahoo சொல்கிறார்:

  பகிர்விற்கு நன்றிகள்.

 2. antony சொல்கிறார்:

  துயில் குறித்த தங்கள் அறிமுகம் அருமை.

 3. Murali சொல்கிறார்:

  அருமையான பதிவு. கவித்துவமான ‌ எழுத்து நடை.

 4. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார , நினைவாற்றலுக்கு பாராட்டுகள் – அறிமுகம் அருமை. அத்தனையும் வசித்து அழகாக எடுத்துக் காட்டி எழுதியமை நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s