யுவன் சந்திரசேகரின் கானல் நதி கலையின் எல்லையற்ற பிரகாசத்திற்கும் மனித இருப்பின் முடிவற்ற பெரும் துயருக்கும் இடையே ஒரு அக்னி நதியாக உருக்கொள்கிறது. இந்த நதி காலங்காலமாக மனித அனுபவத்தின் மீள முடியாத கனவொன்றை நம் நெஞ்சில் படரச் செய்கிறது. தனஞ்செயனைத் துரத்தும் விதியின் நிழல் எது? அது திரும்பத் திரும்ப தணியாத விம்முதல் மட்டும்தானா, அல்லது வீழ்ச்சிகளின், மன முறிவுகளின் யாரும் இனம் காண முடியாத விதியின் ரகசியங்களா? வாதையின் இடையறாது அதிரும் தந்திகளால் முடிவற்ற துயரத்தின் இசையை கசியச் செய்கிறது இந்த நாவல்
– கானல் நதி (பின்னட்டையிலிருந்து)
கானல் நதி குறித்த அறிமுகம் ஏதுமற்று யுவன் மதுரைக்காரர் என்ற ஒரு காரணத்திற்காக இந்நாவலை படித்தேன். இப்பொழுது யுவனின் மற்ற நாவல்களையும் வாசிக்க ஆர்வமாயிருக்கிறேன். தமிழில் ஜென் கவிதையெல்லாம் மொழிபெயர்த்திருக்கிறார் என்பதாலோ என்னவோ நாவலே ஒரு ஜென் கதைப்போல எனக்கு தோன்றுகிறது வாசிக்க வாசிக்க மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டிக்கொண்டே இருக்கிறது..
நாவல்களின் அற்புதமான பணியாக நான் நினைப்பது நம்மை நிகழ்காலத்திலிருந்து விடுவித்து நம்மை வேறொரு களத்திற்கு அழைத்து சென்று விடுவதுதான். கானல் நதி அப்படித் தான் என்னை வடக்கே உள்ள ஏதோ கிராமத்திற்கு அடித்து சென்று விட்டது. தனஞ்செய் முகர்ஜி என்ற அற்புதமான ஹிந்துஸ்தானி இசைப்பாடகனின் தோற்றுப்போன வாழ்க்கைதான் கதை. தனஞ்சயனை நினைக்கும்போது சலங்கைஒலி கமலும் ஞாபகத்தில் வந்து போனார்.
பின்னுரையில் யுவன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
வெற்றி பெற்ற கலைஞர்கள் ஊடகங்களின் செல்லக் குழந்தைகளாகிறார்கள். அவர்களின் குடும்பப் பின்னணி, விடாமுயற்சி, வெற்றிப்பாதையின் மைல்கற்கள் என அனைத்தும் வெகுஜனங்களிடம் சென்று சேர்கிறது. வெற்றி பெற்றவர்களுக்குச் சமானமாக உழைப்பும் பயிற்சியும் தோல்வியுற்றவர்களும் மேற்கொள்ளத்தானே செய்திருப்பார்கள். வெற்றிகளின் விம்மிதம் போலவே தோல்வியின் வலியும் பாடுவதற்குரியதுதானே.
காதல் தோல்வியும், குடியும் எப்பேர்ப்பட்ட ஒருவனையும் அழித்துவிடும் என்பதற்கு தனஞ்சயனும் ஒரு சாட்சியாகிறான்.
இந்நாவலின் கதை சொல்லலை யுவன் வித்தியாசமாக கட்டமைத்திருக்கிறார். தபலா மேதை குருசரண்தாஸ் தனது இறந்து போன நண்பன் தனஞ்சய் முகர்ஜி நினைவாக அவரது வாழ்க்கையை நாவலாக எழுதும் படி கேசவ சிங் சோலங்கி என்பவரிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறார். எனவே, “கானல் நதி” முன்னுரையின்றி கேசவ சிங் சோலங்கியின் முன்அறிமுகத்தோடு தொடங்குகிறது. அவர் எழுதிய நாவல் பிரபலமடைந்து தமிழில் சாரங்கன் என்பவர் மொழிபெயர்த்த பிரதி தான் நாம் வாசிப்பது. முதலில் குழம்பி விட்டேன் இது மொழிபெயர்ப்பு நாவலென்று. இறுதிப்பக்கங்களில் இருந்த யுவனின் பின்னுரை படித்து தான் தெளிந்தேன். பிறகு எந்த இடையூறும் இன்றி என்னை “கானல் நதி” இழுத்து சென்றது. அறிமுகம், பால்யம், வாலிபம், நாட்குறிப்பு, அழைப்பு பல கிளைகளாக “கானல் நதி” அழகாக பாய்கிறது. இந்நாவலின் நாயகன் தனஞ்சய் முகர்ஜியாகவே கூட சில நேரங்களில் என்னை நினைத்து கொண்டேன். இத்தனைக்கும் ஹிந்துஸ்தானி இசை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்கோ தப்பும், தவிலும் தான் இதயத்திற்கு நெருக்கமானது.
அறிமுகம் பகுதியில் யுவன் நம்மை வங்காளத்தில் உள்ள கிராமத்திற்கே அழைத்து சென்றுவிடுகிறார். பால்யம் தனஞ்சயனின் கிராம வாழ்க்கை, அவனது குடும்பம், ஸாஸ்த்திரியின் மாணவனாவது, ஸரயுவுடன் காதல் எல்லாவற்றையும் எடுத்துரைக்கிறது. வாலிபம் குருசரணுடன் நட்பு, மதராஸில் முதல் கச்சேரி (அவனது வாழ்விலே அந்த ஒரு கச்சேரி மட்டும்தான்), பின் குருசரணுடன் பிரிவு எல்லாவற்றையும் அழகாக படம்பிடித்து காட்டுகிறது. நாட்குறிப்பு தனஞ்சயன் குருசரண் வீட்டில் இருந்த காலத்தில் எழுதியது, இதில் எல்லோர் மீதும் தனஞ்சயனின் பார்வை விவரிக்கப்படுகிறது. அழைப்பு தனஞ்சயன் குருசரண் வீட்டிலிருந்து கிளம்பி நாடோடியாய் அலைந்து இறுதியில் மரணத்தை நோக்கிய அழைப்பாகவும் கொள்ளலாம்.
இந்நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து தனஞ்சயனின் நாட்குறிப்பிலிருந்து
ஒவ்வொரு மனித உயிரும் வேறொரு மிருக உயிரின் சாந்நித்தியம் என்று இன்று கண்டுபிடித்தேன். அம்மா, தானிய மணிகள் பொறுக்கித்திரியும் பெட்டைக்கோழி. அப்பா, தனக்கென்று உயரம் எதையும் எட்ட முடியாத இரட்டைவால் குருவி. சுப்ரதோ, குள்ளநரி. அபர்ணா, தரையில் உட்கார்ந்து கழுத்தை இடவலமாகத் திருப்பிக் கோணல் பார்வையுடன் இரைதேடும் காகம். காஞ்சனாதேவி, வேறொரு மிருகம் கொன்று தின்று மிச்சம் வைத்த இரையைக் கிழித்து உண்ணும் கழுதைப்புலி. குருசரண்தாஸ், தந்திரமான ஓட்டம் ஓடும் கீரிப்பிள்ளை. மித்தாலி அத்தை, நெருப்பில் தலைகீழாகப் பாய்ந்து உயிர் விட்ட மணிப்புறா. மைனாவதிப் பாட்டி, ஜடாயுக் கிழவி. நான்?… ஒலியையும் தனிமையையும் தின்று உயிர்வாழும் புராணிக மிருகம்
நாடோடியாய் திரியும் போது தனஞ்செய் முகர்ஜி தன் காதலி ஸரயுவை அவளது கணவன் பாலியல் தொழிலாளியாக்கி விட்டதைக் கேட்டு துடித்து போகிறார். ஒருமுறை அவளை நேரில் பாலியல் தொழிலாளியாய் பார்க்கும் போது ஸரயு தன் வாழ்க்கையை குறித்து தனஞ்செயிடம்
… கல்யாணமாகி நாலே மாதங்களில் வேலையை விட்டுவிட்டான். இங்கே காளிகாட்டில் உள்ள ஒரு பண்டாவிடம் ஏஜென்ட்டாகச் சேர்ந்தான். காலை முழுக்கக் காளிக்கு ஆள் பிடிப்பான். மத்தியானத்துக்கு மேல் பெண்டாட்டிக்கு…
என்று கூறி அழும்போது நமக்கே நெஞ்சு கனத்துப்போகிறது.
கிரிதர்பாபுவும் அவரது மனைவி ஜயா முகர்ஜியும் பிள்ளைகள் யாரும் உடன் இல்லாமல் கிராமத்தில் தனியே தனஞ்சயனின் அண்ணன் சுப்ரதோ அனுப்பும் கொஞ்ச பணத்தில் வாழ்ந்து வருகிறார்கள். தனஞ்செய் முகர்ஜியின் அண்ணன் சுப்ரதோ ஔரங்கசிப்போல, தனது தம்பி மீதே அதிக பாசம் கொண்ட பெற்றோரை வெறுப்பவன். தங்கை அபர்ணா அண்ணன் இருவரும் உருப்படியில்லாததால் கன்னியாஸ்திரியாகி விடுகிறாள். இப்படி ஒரு தனி மனிதன் தோல்வி அக்குடும்ப அமைதியைக் குலைத்து விடுகிறது.
நாவலின் இறுதியில் சற்று நேரம் வரும் அஸ்லம் கான் என்னை மிகவும் கவர்ந்த மனிதராகி விட்டார். தனஞ்சயனிடம் அவர் செய்யும் அறிமுகம் அவர் போல் நாம் வாழ முடியவில்லையே என ஏங்க வைத்து விட்டது.
என் பேர் அஸ்லம்கான். பர்தொமான் ரயில் நிலைய வாசலில் ஆறு வருஷமாகத்தொழில் நடத்தி வருகிறேன். இஷ்டமிருக்கும் வரை அங்கே செருப்புத்தைப்பேன். இஷ்டமில்லாவிட்டால், அக்கம்பக்கம் ஏதாவது கிராமத்தில் போய் விவசாய வேலை பார்ப்பேன். அதுவும் சலித்தால், கையிலிருக்கும் காசுக்கு ஏதாவது பிளாஸ்டிக் சாமான்களோ கைத்தறித் துணிகளோ வாங்கி கிராமங்களில் கொண்டுபோய் விற்பேன். இதுவரை அறுபதுக்கும் அதிகமான வேலைகள் பார்த்திருக்கிறேன். பாரதம் முழுவதும் சுற்றியிருக்கிறேன். காத்மாண்டு வரை போய்வந்திருக்கிறேன். வயது ஐம்பத்தி ஒன்று ஆகிறது. சுற்றி அலைந்தது போதும் என்று தோன்றிவிட்டது. இங்கே வந்து உட்கார்ந்துவிட்டேன்.
இதைப்படித்ததும் அஸ்லம்கான் எனக்கு ஜென் துறவி போலத்தான் தெரிந்தார்.
இந்நாவல் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களுள் ஒன்றாகிவிட்டது. இதன் தலைப்பே இக்கதையை அழகாக சொல்லிவிடுகிறது. இத்தனை நாளாய் இதை வாசிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்றஉணர்ச்சியை இந்நாவல் உருவாக்கியது. யுவனின் அற்புதமான நடை அவரது எழுத்தை நோக்கி என்னை ஈர்க்கிறது. உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் இந்நாவல் இருநூறு ரூபாய். இனி முடித்து விடுகிறேன். அதுவும் தனஞ்சய்முகர்ஜியின் நாட்குறிப்பிலிருந்து தான். எவ்வளவு பொருத்தமான வரிகள் பாருங்கள்:
இதற்கு மேல் எழுத ஓடவில்லை இன்றைக்கு. பேசும் போது இருக்கிற சுதந்திரம் எழுதுவதில் இல்லை. பள்ளிக்கூடத்தில் பல பக்கங்கள் சரளமாக எழுதியிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் மனப்பாடம் செய்து எழுதியது. சுயமாக எழுதுவது பெரும் சிரமமாக இருக்கிறது.
அன்னிக்கு துயில் புத்தக வெளியீட்டு விழாவுலதான் அண்ணனை நேர்ல பார்த்தேன்.
• “பறவை தன் சுவடுகளை அழித்துக் கொண்டே செல்வதுபோல” அப்பிடிங்கற மாதிரி ஏன் மனித இயல்புகளை மற்றவற்றின்மீது ஏற்றிச்சொல்றீங்க?
• உங்க கதைகள்ல எளிய மனிதர்கள் எல்லாம் எப்படி பெரிய பெரிய தத்துவம்லாம் பேசறாங்க?
என்பதுபோலக் கேட்டு எஸ்.ராவின் வாயைப் புடுங்கினார்.
அதற்கு அவர் தனது பாணியில் “கண்மாய் மதகு அடைத்துவைக்கப்பட்ட நீரை ஆவேசத்துடன் வெளித்தள்ளுவதுபோல” விளக்கமளித்தார். அந்த விளக்கங்கள் “மடையினின்றும் வெளிப்பட்ட நீர் வாய்க்காலின் வரம்புகளுக்குட்பட்டு தெளிவு காட்டி ஓடுமே” அதுபோல இருந்தன.
அந்த விளக்கங்கள் வேறொரு தருணத்தில்.
//ஒவ்வொரு மனித உயிரும் வேறொரு மிருக உயிரின் சாந்நித்தியம் என்று இன்று கண்டுபிடித்தேன்….//
அதுசரி, தனஞ்சயின் ஊரில் புள்ளப்பூச்சி, பச்சோந்தி, சொதப்பன்னி எல்லாம் இல்லையா?
யுவன் சந்திரசேகரின் ‘ஒளிவிலகல்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் படித்தேன். ஒரு கதை பல கதைகளை கொண்டிருக்கிறது. மிகவும் பிடித்திருந்தது. தாயம்மா பாட்டியின் 47 கதைகள், அப்பா சொன்ன கதைகள்,23 காதல் கதைகள் என ஒரு சிறுகதை ஆலமரம் போல விழுதுகளை விட்டு செல்கிறது. கட்டாயம் வாசிக்க வேண்டிய சிறுகதைத்தொகுப்பு.
[…] – கிரிதரன் ஏற்கனவே -குகன் கானல்நதி- மதுரைவாசகன் ஏற்கனவே […]
நல்ல பதிவு. யுவனை இதுவரை வாசித்ததில்லை. நான் இப்போதுதான் யுவனின் பயணக்கதை வாங்கியுள்ளேன். 2012-ல் முக்கிய நாவலாக ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். வாசித்தால்தான் தெரியும்.
[…] கானல் நதி – மதுரைவாசகன் […]