மழையோடு பாதயாத்திரை

Posted: பிப்ரவரி 8, 2011 in ஊர்சுத்தி, பார்வைகள், பகிர்வுகள்

ஆதிமனிதன் இரைதேடி நடந்து திரிந்தான். பின் சக்கரம் கண்டு பிடித்தான். அன்றிலிருந்து இன்றுவரை சக்கரம் போல் ஓரிடத்தில் நில்லாமல் சுழன்று கொண்டுதானிக்கிறான். (பெரிய தத்துவம்)

இரை தேடி நடந்த மனிதன் பின் இறை தேடி நடக்க தொடங்கிவிட்டான். யாத்திரையாக இறைவனைத்தேடி செல்பவர்கள் தங்களை வருத்தி நடந்து செல்லத்தொடங்கினர். பழனி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், சபரிமலை, வேளாங்கன்னி என பல இடங்களுக்கும் பாதயாத்திரையாக செல்கிறார்கள். நான் பழனிக்கு பாதயாத்திரையாக பல முறை சென்றிருக்கிறேன்.

மதுரையில் இருந்து பழனிக்கு நடந்து செல்ல மூன்று நாட்கள் ஆகும். சிலர் இரண்டு, இரண்டரை நாளில் சென்று விடுவார்கள். இந்த பாதயாத்திரை பக்தர்களிடையே விதவிதமான பழக்கவழக்கங்களை காணலாம். தனித்து வருவது, குடும்பமாக வருவது, உறவினர்களுடன் வருவது, தெருக்காரர்களுடன் வருவது, ஊரோடு வருவது என பல விதமாக வருபவர்கள் இருக்கிறார்கள். நிறைய பேராக வருபவர்கள் ஒரு வண்டி அமர்த்தி பாட்டெல்லாம் போட்டு அலப்பறையாக வருவார்கள். வண்டில இவங்க பையெல்லாம் இருக்கும். எனவே, கைய வீசிட்டு பாட்டோடு சேர்ந்து வேகமாய் கடந்து விடுவார்கள். தனியா, கொஞ்ச பேரா போறவங்க பாடுதான் சிரமம். ஏன்னா, பையே தோள அழுத்திக்கிட்டேயிருக்கும்.

மூன்று நாட்களும் மனசு எங்கடா உக்கார்வாங்ஙன்னு பார்த்துகிட்டிருப்பதால் மற்ற பிரச்சனைகள் நினைவுக்கு வராது. மேலும், குழுவாக பயணம் செய்வதால் நிறைய விசயங்களை உடன் வருபவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிகிறது. சில நேரங்களில் புதியவர்களோடு கூட நல்ல பழக்கம் ஏற்பட்டுவிடும்.

பதினொறாம் வகுப்பு படிக்கையில் சென்ற பாதயாத்திரையை மறக்க முடியாது.அந்த வருடம் ஸ்ரீராமபுரம் என்ற ஊர்கிட்டயே மழை லேசாக தூரத்தொடங்கியது. மெல்ல மழையோடு நடந்தோம். குழந்தை வேலப்பர் கோயிலில் போய் அமர்ந்தோம். அச்சமயம் ஒரு தெருவோடு குழுவாக பாதயாத்திரை வந்தவர்கள் அங்கிருந்து பேருந்தில் கிளம்ப தயாரானர்கள். ஏன்னா அவர்கள் குழுவில் வயதானவர்கள், பெண்கள் அதிகம். நாங்கள் ஒரு நாள் தானே எப்படியாவது மழையோடு நடப்போம் என நடக்க தொடங்கினோம். விருப்பாச்சி ஏத்தத்துல சரியான மழை. இரண்டு கடைல விட்டு,விட்டு சுக்கு மல்லிகாப்பி குடிச்சுட்டு ஒருவழியா சத்திரப்பட்டி போய் அங்கிருந்த பிள்ளையார் கோயில் வராண்டால படுத்தோம். காலைல பாத்தா லேசா போர்வை நனையிற மாதிரியிருக்கு. ஏற்கனவே, மழைல லேசா நனைஞ்சு தான் இருந்துச்சு. எந்திருச்சு பாத்தா அந்த ஊர் மக்கள் ஒரு செம்புல தண்ணி கொண்டு வந்து பிள்ளையார் மேல ஊத்தி குளிப்பாட்டிகிட்டுருக்காங்க. விடாமழையிலும் அவங்க பக்தி குளிர வைத்தது. பிறகு மழைக்காகிதபை வாங்கிப் போட்டுட்டு நடந்தோம். அப்பொழுது அடையாளவேல்கிட்டயிருந்து ஒரு பக்தர் எங்களோடு வந்தார். மிகவும் நல்ல மனிதர். எங்களோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார். மலைமீது படியேறும் போது மழைநீர் கணுக்கால் வரை ஓடுகிறது. மலையேறினால் ஊரே தெரியவில்லை. வானத்தில் இருப்பது போல இருந்தது. மலையை விட்டு இறங்கிவந்து மலையைப் பார்த்தால் மின்விளக்குகள் எல்லாம் நட்சத்திரம் போல தெரிந்தது. என் வாழ்வில் மழையோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திய யாத்திரையது. பிறகு நானும் மழையும் இன்று வரை நெருங்கிய நண்பர்களாகயிருக்கிறோம். இம்முறை மலையில் ஏறி சாமி பாத்துட்டு வலியெல்லாம் மறந்து ஆடினோம். இறங்கும் போதும் உற்சாகமாக ஆடிட்டே வந்தோம்.

முதல் நாள் நடக்கையில் வராமல் இழுத்தடிக்கும் வாடிப்பட்டி, மறுநாள் கொடைரோடு தாண்டி குண்டும்,குழியுமான சல்லிப்பட்டி பாதை, மூன்றாம் நாள் கடுப்படிக்கும் நீளமான ஊரான ஒட்டன்சத்திரம், அடுத்து கணக்கன்பட்டி (சத்திரப்பட்டிலிருந்து நடந்தா அவ்வளவு சீக்கிரம் வராது) எல்லாம் எல்லோர் நினைவிலும் நிற்கும் ஊர்கள். பழனி பாதயாத்திரை போகும் போது வழியெங்கும் மனிதர்களை பழகும் வாய்ப்பு நிறைய கிடைக்கும். நம் உடன் வரும் நண்பரிலிருந்து ஏதோ ஊரிலுள்ள மனிதரை கூட புரிந்து கொள்ள முடியும். மழைப்பயணத்தின் போது வந்த பக்தர் கூட மதுரை காவல்துறையில் சப்இன்ஸ்பெக்டராக பணி புரிபவர். அவரது பக்தி என்னை வியக்க வைத்தது. முருகனிடம் வேண்டுதலோடு பாதயாத்திரை வருபவர்கள் அடுத்த வருடம் பாதயாத்திரை வர வேண்டும் என வேண்டுவார்கள். ஏனென்றால், அந்த மூன்று நாட்கள் மீதமுள்ள முன்னூறுக்கும் மேற்பட்ட நாட்களுக்கு சுகமான அனுபவத்தை தரும்.

அதற்காக எல்லோரும் பழனி பாதயாத்திரை வாங்கன்னு சொல்லல. வீட்டை விட்டு கிளம்பி பயணிக்கும் போது (அன்பே சிவம், நந்தலாலா போல) அற்புதமான மனிதர்களை வழியில் சந்திக்கலாம். எனவே, உங்களுக்கு பிடித்த இடத்தை நோக்கி உங்களுக்கு நெருக்கமானவர்களுடன் பயணியுங்கள். நடந்து சென்றால் இன்னும் நன்றாகயிருக்கும். ஏனென்றால், இப்பொழுது ஒரு மைல் கூட யாரும் நடக்கவிரும்புவதில்லை. கிராமங்களில் கூட ஷேர்ஆட்டோ பூதம் புகுந்து எல்லோரும் நடப்பதை குறைத்து விட்டனர்.

நடை குறித்த இந்த பதிவுடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வலைத்தளத்தில் படித்த ‘கால்களால் சிந்திக்கிறேன்’ மற்றும் ‘நடந்து தீராத கால்கள்’ கட்டுரைக்கான இணைப்பையும் சேர்த்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி! http://www.sramakrishnan.com/

கால்களால் சிந்திக்கிறேன்

நடந்து தீராத கால்கள்

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  பஜனைப் பாட்டு பாடுனீங்களா?

  எனக்குப் பிடிச்ச பாட்டு இதுதான்:

  “அப்பளம் உளுந்தவடை தோசையப் பாரு – எங்க
  ஆறுமுக வேலனுக்குப் பூசையப் பாரு”

  அப்பளத்தை முதல்ல சொன்னான்ய்ங்க பாருங்க!
  விரதம் கடுமையா இருந்திருக்குமோ?

  வேதாகமத்துலகூட சொல்லியிருக்காம் (வேதமா, ஆகமமா? ஏதாவது ஒண்ணு சொல்லு):
  “விரதம் இருப்போர் பேறுபெற்றோர்; ஏனெனில், விருந்துச் சாப்பாடு அவர்களுடையதே”

 2. Ananthi சொல்கிறார்:

  நல்லா இருந்தது நம்ம ஊரு சகோதரா…சமீபத்தில் ஊருக்கு போகும்போது கூட தைபூசம் ஒட்டி பழனி பாதயாத்திரை பக்தர்களை வழியெங்கும் பார்த்தேன்..நீங்கள் சொன்ன புதிய கோணங்களை நானும் ஏற்று கொள்கிறேன்…

 3. விஜய் சொல்கிறார்:

  பயணங்கள் தரும் இனிமையான அனுபவங்கள்,என்றென்றும் மறக்க முடியாதவை !!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s