தூங்காநகரில் உற்சவ விழா

Posted: பிப்ரவரி 18, 2011 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

அங்க இடிமுழங்குது கருப்பசாமி

தங்க கலசம் மின்னுது

மதுரை கூடல்நகருக்கு அருகில் கோயில்பாப்பாகுடியில் உள்ள எனது நண்பர் அவங்க ஊர் சோனைக்கருப்பணசாமி உற்சவவிழாவிற்கு என்னை அழைத்தார். நானும் உற்சாகமாக வருகிறேன் என்று சொல்லிவிட்டேன். அதே சமயம் மதுரையில் நாஞ்சில்நாடனுக்கு பாராட்டுவிழா. திருவிழாவிற்கு வருவதாக வாக்கு கொடுத்தபடி ஆரப்பாளையம் சென்றேன். ஒருபுறம் நாஞ்சில்நாடனைப் பார்க்க முடியாமல் போய் விட்டதே என்ற எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. ஆரப்பாளையத்தில் உள்ள வேளார் வீதியில் போய் சாமியை பார்த்தேன். துடியாகக் காத்திருந்தது.

திருவிழாவிற்கு சில மாதத்திற்கு முன்பே சாமி செய்ய ஊரிலிருந்து பிடிமண் கொடுத்துவிடுவார்களாம். இக்கோயில் பூசாரிகள் ஆரப்பாளையம் வேளார் பகுதியைச் சார்ந்தவர்கள் என்பதால் சாமிசிலையை அங்கே செய்து ஊருக்குத் தூக்கி வருகிறார்கள். இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை அல்லது பங்குனியில் கொண்டாடப்படுகிறது. ஊரில் உள்ள பெரும்பாலான ஆண்கள் (சிறுவர்கள் உட்பட) இங்கு வந்து விடுகிறார்கள். மண்ணுருவம் செய்யச்சொல்லி நேர்த்திக்கடன் கொடுத்த பெண்கள் மட்டும் ஆரப்பாளையம் வருகின்றனர். உடல்நிலை மனிதர்களுக்கோ, வீட்டு விலங்குகளுக்கோ சரியில்லாமல் போகும் போது சரியானால் மண்ணுருவம் செய்து வைப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். கை,கால்,முழுஉருவம் மற்றும் மாடு போன்ற உருவங்களைச் செய்து வாங்கி கோயில் வரை தூக்கி வருகிறார்கள். ஆண்களும் நேர்த்திகடன் உருவங்களைச் சுமந்து வருகின்றனர்.

சாமியைத் தண்டியலில் வைத்து அலங்கரிக்கும் வரை நையாண்டி மேளம், கரகாட்டம், மாடாட்டம் எல்லாம் நிகழ்த்துகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாமியை இங்கிருந்து தூக்கிச் செல்ல வருவதை முக்கிய கடமையாகவும், பெருமையாகவும் நினைக்கின்றனர். சிறுவனாய் இருந்த போது புரோட்டா, பஜ்ஜி வாங்கித் தின்பதற்காக முன்பு ஆரப்பாளையம் வந்ததை நண்பர் சொன்னதைக் கேட்டுச் சிரித்துக்கொண்டேன். பூசையெல்லாம் முடிந்த பின் மின்விளக்குகள் பொருத்திச் செகசோதியா சாமி கிளம்பிருச்சு. சாமியைத் தூக்கி வருவதைப் பார்க்கும் போது நேரில் கருப்பும், சோனையும் வருகிற மாதிரி இருந்தது. 

சாமி வரும்போது தீக்கதிர், புதுவிளாங்குடி, கரிசல்குளம், விளாங்குடி என வழிநெடுக ஊர்களில் உள்ள மக்கள் வந்து தேங்காய், பழம், மாலையுடன் சாமியை வழிபட்டு செல்கின்றனர். சாமியை நெடுஞ்சாலையின் ஓரமாகத் தூக்கிச் செல்வதால் வாகனங்களில் செல்வோரும் வணங்கிச் செல்கின்றனர். நையாண்டி மேளம் இரண்டு சாமிகளுக்கு முன்னாலும் அடிக்க இளைஞர்கள் உற்சாகமாகத் தவில் இசைக்கு ஆடி வருகின்றனர். ஊருக்குள் சாமி வந்ததும் மந்தையில் இரண்டு சாமிகளையும் இணையாக நிறுத்துகின்றனர். ஊரே திரண்டு மந்தையில் சாமிக்கு பலத்த வரவேற்பாக இருந்தது. நேர்ந்து கொண்டவர்கள் வாழைப்பழங்களைச் சூறை விடுகின்றனர். வாணவேடிக்கைகள், வெடி எல்லாம் கண்டு ஆர்ப்பாட்டமாக சோனைக்கருப்பணசாமி வருகிறார்.

இறக்கி வைக்கும் முன் சாமியை மூன்று முறை முன்னும் பின்னும் வேகமாகத் தூக்கி ஓடி பின் இறக்கி வைக்கின்றனர். மூன்று முறை ஓடி வரும் போது நமக்கு மேனியெல்லாம் சிலிர்த்து விடுகிறது. இறக்கி வைத்து கைதட்டி, விசிலடித்து மகிழ்ச்சியாக செல்கின்றனர். ஊரில் உள்ள எல்லோரும் குடும்பம், குடும்பமாக வந்து சாமிக்கு மாலை வாங்கி போட்டு சாமிகும்பிட்டு செல்கின்றனர். இரவு மந்தைதிடலில் கரகாட்டம், மாடாட்டம், இராஜாராணியாட்டம் எல்லாம் நையாண்டிமேளத்துடன் நிகழ்த்தினர். நானும் சற்று நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். ஊர் மந்தையை வண்ண வண்ண மின்விளக்குகளால் அலங்கரித்து வைத்திருந்தனர். நிறைய திருவிழா கடைகள் முளைத்திருந்தன. மாலை விற்பவர், பலூன் மற்றும் சின்னப்பிள்ளைகளுக்கான விளையாட்டுச்சாமான் விற்பவர், ஐஸ் விற்பவர் என பலரும் திருவிழாவால் நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டனர். ஊரில் எல்லோரும் பகல் போல நடமாடிக் கொண்டிருந்தனர். இரவு ஒரு மணியளவில் மாவிளக்கு எடுத்தனர். பின் இரண்டு மணிப்போல சாமி கோயிலுக்கு புறப்பட்டது.

“தூங்காத விழியிரண்டு துயரம் போக்கும் குணமும் உண்டு

அவரு பேரு எத்தனையோ அனைவருக்கும் கருப்பு ஒன்று”

கோயிலானது ஊருக்குப் பின்னால் கண்மாய், வயல்களுக்கு அருகில் உள்ளது. சாமியை இரவில் தூக்கி வரும்போது வெளிச்சத்திற்கு தீப்பந்தமும், பெட்ரமாக்ஸ் விளக்கும் கொண்டு வந்தனர். இருளில் கண்மாய் கரையோரம் தோப்புகளுக்கிடையே சாமி தீப்பந்த ஒளியில் வருவதைப்பார்க்கும் போது சங்ககாலத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. சாமியைக் கோயிலில் வைத்துவிட்டுப் பூசை செய்தனர். இந்த வருடம் கொண்டு வந்த சாமியை மூலவர்கருகில் வைத்துவிட்டு போன வருடம் இருந்தவரை கோயிலுக்கு பின்னால் வைத்து விடுகின்றனர்.

மூணுமணிப்போல பொங்கல் மற்றும் சாப்பாடு போட்டனர். இரவில் பசிக்காததால் பொங்கலை மட்டும் சாப்பிட்டு அருகில் உள்ள அய்யனார் கோயிலில் போய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கண்மாயிலிருந்து வீசும் குளிர்காற்றும் இருளும் அற்புதமான அனுபவத்தை தந்தது. அப்படியே லேசாக விடியத்தொடங்கியது. தூங்குவதற்காக வீட்டுக்கு கிளம்பினேன். இன்னைக்கு இராத்திரி வள்ளிதிருமணம் நாடகம் என நண்பர் சொன்னார். இப்படி இராத்திரி, இராத்திரி வீட்டுக்கு போகாமல் ஊர் சுத்திட்டு தினமும் திரிந்தால் எனக்கு விரைவில் திருமணம் செய்துவிடுவார்கள் எனக்கூறி இன்னொரு திருவிழாவிற்கு பார்ப்போம் என்று கிளம்பினேன்.

அடுத்த வருடம் மூன்று நாள் திருவிழா என்ற நண்பனிடம் கட்டாயமா வந்துவிடுகிறேன் என்றேன்.  மூன்று நாள் திருவிழாவில் முதல்நாள் அம்மச்சி அம்மன் திருவிழா, இரண்டாம் நாள் ஆரப்பாளையத்திலிருந்து சோனைக்கருப்பணசாமி உற்சவம், மூன்றாம் நாள் எருதுகட்டு. எருதுகட்டு சென்ற வருடம் தடை காரணமாக நடக்கவில்லையாம்.

கிராமதெய்வ திருவிழாவிற்கு சென்று வந்ததில் இருந்து எனக்கு சோனைக்கருப்பண சாமி மீது பற்று அதிகமாகிவிட்டது.

படங்களைக் கொடுத்து உதவிய நண்பர்களுக்கு நன்றிகள் பல!

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  ஓ, பாப்பாகுடியா?

  பொதும்பில் கிழார், பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார், பெண் கவிஞர் பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்னு சங்ககாலக் கவிஞர்கள் மூணு பேர் இருந்த பொதும்புக்குப் பக்கத்து ஊர்ல! [இப்ப பொதும்பரும் (சோலை)இருக்காது, கவிஞர்களும் இருக்க மாட்டார்கள்?!!]

  பக்கத்து ஊரு பரவைகூட ஏதோ சோழ ராணி பரவை நாச்சியாரோட தொடர்புடையதுன்னு சொல்வான்ய்ங்கள்ல..(இப்ப பரவை முனியம்மா திருவிழாலயெல்லாம் பாடுதா?)

  அது சரி, மதுரைக்கு இம்புட்டு பக்கத்துல இருந்துக்கிட்டு பழமையான வரலாறு இல்லாம இருக்குமா?

  இசைநாடகம் இன்னும் போடுறாய்ன்ங்க..காத்தவராயன் பாட்டு இருக்கா?

  நையாண்டி மேளம் யாரு பார்ட்டி? குறவன்குறத்தியாட்டம் யாரு செட்டு?

  துடியான சாமிதான்! ஆமா அது ஏன் சோணையா மலையாளம்னு சொல்றான்ய்ங்க?

  சிவப்பா இருக்கிறதுதான சோணைச்சாமி? நீலவண்ணன் கருப்புச்சாமியா? கருப்பனும், கருப்பணனும் வேறுவேறா?

 2. chellan says சொல்கிறார்:

  intha oor samy padathai parkum pothu madurai in veeram therikirathu, melum intha mathiri thiruvzhlakal irupathal thaan madurai makkalidam anbum, veeramum kurayamul irukirathu

 3. chellan says சொல்கிறார்:

  intha mathiriyana thiruvizhkal madurail innum irupathal thaan madurai makkalin anbum,madurai in sirrapum melum melum innum vazharkirathu. in tha mathiriyana unmai katturaikal innum neengal ezhutha vendum endru naan virumpikiran nanba.

 4. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  கிராமத் திருவிழாக்கள் என்றாலே நாட்டுப்புரக் கலைகள் நிறைந்த திருவிழாக்கள் தான். அனுப்வத்து எழுதி இருக்கிறாய். ஆரப்பாளையத்தில் ஆரம்பித்து பாப்பாகுடி வரை சாமி செல்வதை விவரிக்கும் விதம் இரசித்தேன். எண்டஹ் ஒரு நிகழ்வினையும் – ஆராய்ந்து – ஆதி முதல் அந்தம் வரை எழுத்தில் கொண்டு வருவது உன் தனித்திறமையினைக் காட்டுகிறது. இரவு மூன்று மணிக்கு தீப்பந்த வெளிச்சத்தில் சாமி வருவது – மக்கள் கூட்டத்தினையே வருவது – பற்றிய வர்ணனை அருமை. திருமணம் விரைவில் நடை பெற வேண்டுமென்று தானே இது மாதிரித் திருவிழாக்களுக்கெல்லாம் செல்கிறாய். விரைவில் நடை பெற நல்வாழ்த்துகள். நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s