தமிழ் இசைக்கருவிகள்
பேரிகை, பாடகம், இடக்கை, சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்திரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண்விடு, தூம்பு, நிசாளம், துடுகை, சிறுபறை, துடி, பெரும்பறை, கண்டிகை, டமருகம், தாரணி, படகம், காளம், மேளம், தட்டளி, சங்கு, தாரை, வீணை, யாழ், குழல், கொம்பு, மணி, சகடை, கெண்டை, துடி, துந்துபி, கொடுகட்டி, கொக்கரை, தத்தளகம், தண்டு, சல்லரி கின்னரம் போன்றவை தமிழ் இசைக்கருவிகள்.
-எஸ்.ராமகிருஷ்ணன் (காற்றில் யாரோ நடக்கிறார்கள்).
(குறிப்பு – சாய்வெழுத்துக்களில் உள்ளவை இரண்டு பட்டியலிலும் இருப்பவை)
தமிழர்கள் இசைத்த இசைக்கருவிகள்
நாகசுரம், திருச்சின்னம், எக்காளம், முகவீணை, கௌரிகாளம், கொம்பு, நவுரி, ஒத்துநாகசுரம், புல்லாங்குழல், சங்கு, பலிமத்தளம், கவணமத்தளம், சுத்தமத்தளம், தவில், பேரிகை, சந்திரப்பிறை, செண்டை, டக்க, டமாரம், டமவாத்தியம், டவண்டை, இடக்கை, கனகத்தபட்டை, மிருதங்கம், முட்டு, நாகர், பெரிய உடல், சின்ன உடல், சன்ன உடல், தப்பு, திமிலை, வீரகண்டி, கேசண்டி, வான்கா, தக்கை, தாளம், பிரம்மதாளம், குழித்தாளம், மணி, கைமணி, கொத்துமணி, சேமக்கலம், கிடிகிட்டி, வீணை, கெத்து, உடுக்கை, பம்பை, கைச்சிலம்பு.
(மொழித்திறன் வளர்பயிற்சி, மேல்நிலை இரண்டாம்ஆண்டு, தமிழ் புத்தகம்)
[இது போன்ற நல்ல விசயங்களை தமிழ் புத்தகத்தில் இணைத்த பாடக்குழுவினருக்கு நன்றி]
மேலே உள்ளதெல்லாம் என்னன்னு பாக்குறீங்களா? அதெல்லாம் எங்க பேரு. ஒரு காலத்துல நாங்க எல்லாம் மக்களுக்கு நல்லிசையை வழங்கிய கருவிகள். எங்க பெயர்கூட இன்று எங்களுக்கே மறந்து போச்சு. பிறகு, எங்க ஒலி மற்றும் வடிவம் எப்படியிருக்கும்ன்னு எங்களுக்கே தெரியாத கால கட்டமாகிவிட்டது. காலமாற்றத்தில் நாட்டுப்புறக்கலைகள் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நாட்டுப்புறக்கலைஞர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் கல்லுடைக்க, பலூன் விற்க, கூலித் தொழிலாளியாக போனபின் நாங்கள் மெல்ல, மெல்ல மரித்து வருகிறோம். ஆனால், எங்களில் சிலர் இன்றும் பரவலாக இசைக்கப்பட்டு வருகின்றனர் என்பதுதான் ஆறுதலான விசயம். முன்பு கலைகளை வளர்த்த கோயில்கள் எல்லாம் இன்று சிறப்பு தரிசனத்தை வளர்க்கவே விரும்புகின்றன. சரி, தமிழன் இசையை மறந்து விட்டானா என்று பார்த்தால் காதில் ரெண்டு வயர மாட்டி எப்பப் பாத்தாலும் இசை வெள்ளம் பாஞ்சுகிட்டுத்தான் இருக்கு. மேலே உள்ள பெயர் பட்டியல் நம்ம எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் ‘காற்றில் யாரோ நடக்கிறார்கள்’ கட்டுரைத்தொகுப்பு புத்தகத்தில் பார்த்தோம். நம்ம அழிவையும் குறித்து வருந்த ஒருத்தர் இருக்கிறார் என்ற ஆறுதல் தோன்றியது. அடுத்த பட்டியல் நம்ம மேல்நிலை இரண்டாம் ஆண்டு தமிழ்ப் புத்தகத்தில் பார்த்தோம். ஆச்சரியமா இருக்கு. மாணவர்கள் கட்டாயம் படிக்க மாட்டார்கள். ஏன்னா மொழிவளர்திறன் பயிற்சியில இருக்கு. பாடத்துல இருந்தாலும் அஞ்சுமார்க்குக்காக மனப்பாடம் பண்ணுவாங்க. தமிழையே ஓட்டி விட்டுடலாம்னு நினைக்கிற காலத்தில் எங்களப்பத்தி அவங்க எப்படி நினைப்பாங்க?
எங்கள இனி காப்பாற்ற நாட்டுப்புறக்கலைகளை மீண்டும் செழிக்கச் செய்யுங்க. உங்க இல்ல விழா, அலுவலக விழா, பள்ளி கல்லூரிவிழா, ஊர்த்திருவிழா என எல்லா இடங்களிலும் நாட்டுப்புறக்கலைகளை நிகழ்த்துங்க. எங்களில் பலர் சுதந்திரமாக மூச்சு விட்டு கொள்வோம். (நாட்டுப்புறக்கலைன்னா வேட்டியும், சேலையும் கட்டிட்டு தெம்மாங்கு பாட்டுக்கு ஆடுறது மட்டுமில்ல. அதை தாண்டியும் நிறைய கலைகள் இருக்கு) “வளர்ந்தால் தேயும் கலை, தேய்ந்தால் வளரும் கலை” என கோணங்கி இருள்வ மௌத்திகத்தில் எழுதிய வரிதான் நம்பிக்கையூட்டுகிறது. தப்பை மறந்தால் பெருந்தப்பு! நினைவில் கொள்ளுங்கள்.
//தப்பை மறந்தால் பெருந்தப்பு!//
தப்புகூடத் தப்பித்துவிடும்போல் இருக்கிறது. மலையாளிகள் கைக்கொண்டவையும் அவர்கள் மத்தியில் மட்டுமாவது பிழைத்திருக்கும். மற்றவை?
இசைக்கருவிகளே, கவலை கொள்ளற்க! நீங்கள் யாராவது ஒரு நா.மம்மதுவின் ஆராய்ச்சி நூல்களில் மட்டுமாவது இடம்பெற்று உயிர்த்திருப்பீர்கள். அல்லது ஆங்கிலத்தில் பச்சைத்தமிழர்களால் எழுதப்படும் வரலாற்று நூல்களில் சமஸ்கிருதப் பெயர்களுடன், வேதத்தில் தோற்றம் கொண்டதாய் குறிக்கப்பட்டிருப்பீர்கள்!
பள்ளி, கல்லூரிகளில் நாட்டுப்புறக்கலைகள் மீதான ஆர்வத்தை வளர்த்தால் தமிழிசைக்கருவிகளைக் காக்கலாம். ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது?