பம்பாயில பல்டியடிக்கிறவன் வேணுமா? டில்லியில டிமிக்கியடிக்கிறவன் வேணுமா?

Posted: ஏப்ரல் 6, 2011 in பார்வைகள், பகிர்வுகள்

கூட்டணி குழப்பம், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் குழம்பிக் கிடக்கும் போது சிறுவயதில் விளையாடும் போது கையாண்ட உத்திகள் ஞாபகம் வந்தது. மற்றபடி அரசியலுக்கும் நமக்கும் வெகுதூரம். ஏனென்றால் நானே சுயேட்சைக்கு வாக்களிப்பவன்.

விளையாட்டுக்கள் இரண்டு பேர் முதல் குழுவாக பலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டு வரை பலவகையுண்டு. இதில் இரண்டு அணியாகப் பிரிந்து விளையாடினால் அணித்தலைவர்கள் இருவர் உருவானதும் மற்றவர்கள் சேர்வதற்கு ஒரு உத்தியைக் கையாள்வோம். இரண்டு இரண்டு பேராக சேர்ந்து அணித்தலைவர்களிடம் உனக்கு கமல் வேணுமா? ரஜினி வேணுமா? என இது போன்ற கேள்விகளாக கேட்போம். (கேட்பதற்கு முன்னமே நாங்கள் எங்களுக்கான பெயரைத் தீர்மானம் செய்து கொள்வோம்) இந்த கேள்விகள் எல்லாம் சுவாரசியமாக இருக்கும். பம்பாயில பல்டியடிக்கிறவன் வேணுமா? டில்லியில டிமிக்கியடிக்கிறவன் வேணுமா?; எம்.ஜி.ஆர் வேணுமா? நம்பியார் வேணுமா?; மாங்காமடையன் வேணுமா? தேங்காமடையன் வேணுமா?. இதிலும் பிராடுத்தனம் செய்வோம், யார் எந்தப் பக்கம் போக விரும்புகிறோமோ அந்தப்பக்கம் போக உடன் வருபவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். நாம் விரும்பும் அணித்தலைவர் எந்தப் பெயர் கேட்கிறானோ அந்தப் பெயர் நான் தான் எனக்கூறி அவன் பக்கம் சென்று விடுவோம். இரண்டு குழுவாக ஆடும் போது யார் முதலில் விளையாடுவது எனத் தீர்மானிக்க ஓட்டாஞ்சில்ல எடுத்து வானமா, பூமியா எனப் போட்டுத்தீர்மானிப்போம். (வானம்னா வெளிப்பக்கம், பூமின்னா அடிப்பக்கம்). இல்லைன்னா காச சுண்டிவிட்டு பூவாத்தலையா போட்டுப்பார்ப்போம்.

வரிசையாக விளையாடும் விளையாட்டுக்கு யார் ஒண்ணு, ரெண்டு எனத் தீர்மானிக்க ஒருத்தனைக் குனிய வைத்து அவன் முதுகின் மேல் விரல்களைக்காட்டி யாருக்கு எனக் கேட்போம். அவன் விரல் நீட்டும் போது யார் பெயரைச் சொல்கிறானோ அவன் அந்தப் வரிசப்படி விளையாடணும்.

அடுத்து பலர் விளையாடும் போது ஒருவன் மட்டும் பட்டு வர கையாளும் உத்தி சாட் பூட் த்ரீ. இதெல்லாம் ஓட்டுப்போட பயன்படுத்திவிடாதீர்கள். நமது வாக்குகளை சாதி, சமயம், கட்சி, சினிமா தாண்டி யோசித்து வாக்களிப்போம். இம்முறை தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக எல்லாச் சுவர்களையும் நாசம் செய்ததை, செய்வதை தடுத்தது. இதனால் பெரும்பாலான சுவர்கள் சுதந்திரமாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன. வாக்களிப்பது நமது கடமை மட்டுமல்ல, நமது உரிமை.

பள்ளியில் படிக்கும் போது தனியே கட்டுரை நோட்டு இருக்கும். அதில் எனக்கு பிடித்த தலைவர், நான் முதல்வரானால் என கட்டுரைக்கனிகளில் அல்லது முந்தைய வருட நோட்டுகளைப் பார்த்து எழுதுவோம். இப்ப அது மாதிரியில்லாம நான் முதல்வரானால் என்ன கூத்து பண்ணுவேன் என ஒரு சின்ன கற்பனை.

நியாய விலைக்கடைகளை அடைப்பேன்        

அப்ப மத்த கடையெல்லாம் அநியாய விலைக்கடைகளா? அதனால் எல்லா கடைகளிலும் ஒரே நியாய விலையை ஏற்படுத்துவேன்.

 கட்டிய வீடுகளை இடிப்பேன்

நீர் ஆதாரங்களான கண்மாய், குளம் அருகில் ஆக்கிரமிப்பில் கட்டிய வீடுகளை இடிப்பேன். இயற்கையோடு இயைந்த வீடுகளை ஐவகை நிலங்களிலும் அமைப்பேன்.

மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிப்பேன்.

மீனவர்கள் எல்லை தெரியாமல் மீன் பிடிப்பதால் அவர்களை கரையில் இருக்க வைத்து, எதிரி நாட்டு எல்லைகாவல் படையினரை மீன் பிடிக்க வைத்து மீனவர்களுக்கு வழங்குவேன்.

மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களை இழுத்து மூடுவேன்

அன்று சேவையாக இருந்த கல்வி மற்றும் மருத்துவம் இன்று வியாபாரமானதால் தனியார் மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களை மூடுவேன். அவைகளை அரசே முறையாக நடத்தவும் ஆவன செய்வேன். மேலும், பாரம்பரிய மருத்துவ அறிவையும், கல்வி முறையில் மாற்றங்களையும் புகுத்துவேன்.

சம்பளத்தைக் குறைப்பேன்.

அளவுக்கு அதிகமாக சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பேன். இன்னும் மாதம் இரண்டாயிரம், மூவாயிரம் சம்பளம் வழங்கும் முதலாளிகளைச் சிறையில் அடைப்பேன். அஞ்சு, பத்துக்கு திருடியவர்களை விடுதலை செய்வேன்.

‘ச்சும்மா’ கொடுக்கமாட்டேன். 

தேர்தல் சமயத்தில் மக்களுக்கு எல்லாவற்றையும் இலவசமாக வழங்குவதற்காக பல கோடி செலவு செய்தவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து நல்ல குடிநீர், போக்குவரத்து வசதி, கழிப்பிட வசதி செய்து தருவேன்.

தமிழ் சினிமா மற்றும் தொலைக்காட்சிகளுக்குத் தடை   விதிப்பேன்

நாட்டுப்புறக்கலைகளை அழித்து ஆக்கிரமிப்பு செய்து வரும் தரங்கெட்ட தமிழ் சினிமாப் படங்களையும், தொலைக்காட்சி தொடர்களையும் நிறுத்துவேன்.

தமிழகத்தில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கமாட்டேன்

இந்தியாவில் கிரிக்கெட் அனைவரையும் கிறுக்காக்கி வருவதாலும், பாரம்பரிய விளையாட்டுகளை அழித்து, செழித்து கோடிகளில் மிதக்கும் வியாபாரமாகி விட்டதாலும் கிரிக்கெட்டுக்கு தமிழகத்தில் நிரந்தர தடை விதிப்பேன்.

இளையசமுதாயத்தை அடித்துத் துவைப்பேன்

இன்றைய இளைய சமுதாயத்தின் மீது சாதிக்கறை பயங்கரமாக படிந்துள்ளது. எனவே, கறையை போக்க ‘கறை நல்லது’ என ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சாதிப்பற்றாளர்களை நன்கு வெளுத்து நல்ல காதல், நட்பு எனும் தொட்டிகளில் முக்கி காயப்போடுவேன்.

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  உத்தி பிரிப்பதின் உத்திகள் நன்று.

  //டில்லியில டிமிக்கி அடிக்கிறவன் வேணுமா?//

  என்ன ஒரு தீர்க்க தரிசனம்! – அண்ணன் அவர்கள் தீவிர அரசியலுக்கு வருவதற்கு பல வருடங்கள் முன்பே இதையெல்லாம் கேட்டீர்களா?

  மேலும் சில வாக்குறுதிகளையும் சேர்த்துக் கொண்டால் நன்றாகயிருக்கும்.

  பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவேன்
  இரண்டு ரூபாயில் தொடங்கும் பழைய கட்டண விகிதத்தில் ஒவ்வொரு நிலைக்கும் ஐம்பது பைசா மட்டும் உயர்த்தி, தாழ்தளம், வீழ்தளம், சொகுசு, நசுக்கிவிட்ட குசு என்று அரசே நடத்தும் பகல் கொள்ளையை நிறுத்துவேன்.

  இந்தியைத் திணிப்பேன்
  இப்பொழுது கட்டுமானம் மட்டுமில்லாமல் தேநீர்க்கடை வரை தமிழ்நாட்டுக்கு வந்து உழைப்பைத் தரும் ஜார்க்கண்ட், பிஹார் இந்தி பேசும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இந்திவழிக் கல்வி தருவதுடன் அதுபோன்றே ஆந்திர, ஒடிய, வடகிழக்கு மக்களின் குழந்தைக்களுக்கு தத்தம் தாய்மொழிவழிக் கல்விக்கு ஏற்பாடு செய்வேன்.

  வேலைவாய்ப்பு உருவாக்குவதைத் தடைசெய்வேன்
  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறோம் என்று அறிவித்துவிட்டு ஊர்வயலை எடுத்து முதலாளிகளுக்கு கொடுக்கும் வேலையைச் செய்யமாட்டேன்.

  வரிகளை உயர்த்துவேன்
  உணவு, கல்வி, மருத்துவம், வேளாண்மைக்கு மானியம் கூடாது என்று சொல்லிவிட்டு பொருளாதார மந்தம், வயிற்றுப் பொருமல், புளிச்சேப்பம் என்ற பெயரில் உற்பத்தி வரியில் சலுகை, வரிவிலக்கு போன்றவற்றை நிறுத்தி கார்ப்பரேட்டுகளிடம் உரிய வரி வசூலிப்பேன்.

  சுவரொட்டிகள் ஒட்டுவதை ஊக்குவிப்பேன்
  முக்கிய ஊடகங்கள் தரத்தயங்கும் நிகழ்வுகளையும், கருத்துக்களையும் மக்களிடையே எடுத்துச் செல்லும் சுவரொட்டிகளை ஒட்டுவதை, அழகுபடுத்துகிறோம் என்ற பெயரில் தடைசெய்து ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதை நிறுத்தி அவ்வாறு ஒட்டுவதை ஊக்குவிப்பேன்.

  நடுநிலை ஊடகங்களைத் தடை செய்வேன்
  நடுநிலை நாளேடு, the most respected English daily of the country, உண்மையின் உரைகல் என்றெல்லாம் ஊரை ஏமாற்றும் ஊடகங்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மூலம் முறைப்படுத்தி, கட்சிக்காரர்கள் கறைவேட்டி கட்டுவதுபோல அவர்களின் சார்புநிலையைக் குறிக்கும் நிறப்பட்டையை அடியில் அச்சிடச்செய்வதுடன்; வலதா, இடதா, மையமா, மையத்துக்குச் சற்றே இடதா என்பதைப் பொறுத்து உரிய இடத்தில் இலச்சினையைப் பொறிக்கச் செய்வேன்.

  இளைஞர்கள் இராணுவத்தில் சேர்வதைக் குறைப்பேன்.
  சொந்த மக்கள் மீதே வன்செயல் புரிய நம் ஊர்களில் இருந்து வசதி குறைந்த இளைஞர்கள் ராணுவத்திற்கு அனுப்பப்படுவதைக் குறைத்து, உள்துறை அமைச்சர் மகனோ, சுரங்கம் தோண்டி சம்பாதிக்கிற முதலாளி மகனோ சேர்வதை ஊக்குவிப்பேன்.

  வல்லுநர்களை மதிக்கமாட்டேன்
  அரசுக்கு இசைவான புள்ளிவிவரங்களையும், கருத்துக்களையும் அறிவுஜீவித் தளத்தில் உற்பத்தி, விநியோகம் செய்யும் வல்லுநர்குழாத்தை இணையத்தொடர்பு உள்ளிட்ட எந்தத் தொடர்பும் இல்லாத பாலைவனங்களுக்கு அனுப்புவேன்.

 2. சங்கரபாண்டி சொல்கிறார்:

  படர்தாமரைக்கு ‘இச்கார்டு’ வரை இலவசமாக தர இவர்கள்(அரசியல் கட்சிகள்) ஏன் நான், நீ என சண்டை போடுகிறார்கள் எனத் தெரியவில்லை. நம்ம பசங்கல்லாம் செல்போன்ல சீன் படம் பார்ப்பது போய் இனி லாப்டாப்பில் பார்க்கலாம் என்ன மகிழ்ச்சியில் மிதக்கிறார்கள். வாழ்க இலவச நாடு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s