மதுரை கீழ்குயில்குடியில் சமணத்தின் சுவடுகளும் அய்யனார் வழிபாடும்

Posted: ஏப்ரல் 14, 2011 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

சமணமலையையும் அறுத்துக் கூறுபோடத் தொடங்கியதை 1952ல் தொடக்கத்திலேயே தடுத்த சமணச் சான்றோர் ஜீவபந்து T.S.ஸ்ரீபால் அவர்கள் மட்டும் இல்லாவிட்டால் இங்கு சமணமலை இருந்ததாம் எனக் கேள்விதான்பட்டிருப்போம். ஜீவபந்து T.S.ஸ்ரீபால் அவர்களுக்கு நன்றி. 

மதுரையில் நாகமலைக்கு இடதுபுறம் சமணமலை இருக்கிறது. சமணம் குறித்து அறிந்து முதலில் அதன் சுவடுகளை காணச்சென்றது இங்குதான். பின்னர் தான் யானை மலை, திருப்பரங்குன்றம், கழுகுமலை, கொங்கர் புளியங்குளம் சென்றேன். மற்ற இடங்களுக்கும் விரைவில் செல்ல வேண்டும்.

மதுரை நாகமலை புதுக்கோட்டை பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாகச் செல்லும் சாலையில் சென்றால் கீழ்குயில்குடி செல்லலாம். நாகமலை புதுக்கோட்டையிலிருந்து இரண்டு மைல் இருக்கும். கீழ்குயில்குடி சமணமலை அடிவாரத்தில் உள்ளது.

கீழ்குயில்குடி அழகான கிராமம். பெரிய பெரிய ஆலமரங்கள், மலைக்கு அடிவாரத்தில் அய்யனார் கோயில், அதற்கருகில் தாமரைக் குளம். நாங்கள் செல்லும்போது அந்தக் குளத்தில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. முதன்முறை நானும் நண்பரும் செல்லும் போது எங்களோடு வெயில் வேறு துணைக்கு வந்தது. அய்யனாரை வணங்கி விட்டு மலையேறினோம். சமணர் சிற்பங்களைப் பார்த்துவிட்டு மலை மேல் ஏறிப்போய் வேடிக்கை பார்த்தோம். மலை மேல் அடிக்கிற காற்று, மேகத்திற்கு சற்று அருகிலிருப்பது போன்ற மிதப்பு என மலையேறிவிட்டாலே அது அலாதி சுகமான விசயம். பிறகு மீண்டும் ஒரு நாள் நண்பர்களாக வர வேண்டும் என நினைத்துக்கொண்டே வந்தோம். பின் செல்லும் வாய்ப்பே கிட்டவில்லை.

 மறுமுறை (நவம்பர் 14, 2010) மதுரை பசுமை நடை நண்பர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்தான் இதை சிறப்பாக எடுத்து நடத்தினார்.

அதிகாலை ஆறுமணிப்போல கீழ்குயில்குடிக்கு நானும் சகோதரரும் சென்றோம். அதிகாலையில் மலையைப் பார்க்கும் போது மிக அழகாகவும், அமைதியாகவும் இருந்தது. மிகப்பெரிய ஆலமரங்கள் சில சேர்ந்து தோப்பாகவே இருக்கிறது.

நிறைய நண்பர்கள் வர எல்லோரும் சேர்ந்து செட்டிப்புடவு எனும் இடம் நோக்கி சென்றோம்.  குறைந்தபட்சம் ஐம்பது பேராவது இருப்போம். மலையை ஒட்டி ஒரு பாதை உள்ளது. அங்கு இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் சமணச்சிற்பங்களை செதுக்கி உள்ளனர். மொத்தம் ஐந்து சிற்பங்கள் உள்ளன. குகைக்கு வெளியே சமணத்தீர்த்தங்கரரின் பெரிய சிற்பம் உள்ளது. இதற்கு கீழே சில கல்வெட்டுக்கள் காணப்படுகிறது. அங்கு சமணம் குறித்த சில தகவல்களை அதைக்குறித்த அறிஞர்கள் கூறினர். அற்புதமான வகுப்பு போல இருந்தது. நாங்கள் எல்லோரும் பாறைகளிலும் அங்கிருந்த திண்டுகளிலும் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது இப்படி படிக்க நம் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் யாரும் படிப்பை வெறுக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உதித்தது. அங்கு பேசிய தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவுடன்  சேர்ந்து சமணம் குறித்து பேசிக்கொண்டே சென்றோம். அவர் சமணம் குறித்த நிறைய விசயங்களை கூறினார். அவருடன் பேசிக்கொண்டே மலை மேல் ஏறினோம்.

மதுரையில் பெய்த பேய்மழையால் மலை மேலிருந்து பார்க்கும் போது ஊரே வெள்ளக்காடாக கிடந்தது. திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் கடல்போல் தண்ணி கிடந்தது. மலை மேல் பேச்சிப்பள்ளம் என்னும் இடத்தில் எட்டு சமணதீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் உள்ளன. அவற்றின் கீழ் வட்டெழுத்து கல்வெட்டுக்கள் உள்ளன. அதற்கு கீழே நீர்ச்சுனை ஒன்று உள்ளது. பேச்சிப்பள்ளத்திற்கு மேலே வெறும் தளம் மட்டும் இன்று உள்ளது. அங்கு முன்பு ஏதேனும் கட்டிடம் இருந்திருக்கலாம். அங்கிருந்த சிற்பங்கள் குறித்து அவர் பேச மீண்டும் மாதேவிப்பெரும்பள்ளிக்கு நிறைய மாணவர்கள் பலநூற்றாண்டுகள் கழித்து சேர்ந்துவிட்டதை போல இருந்தது. இங்குள்ள சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளை குரண்டி திருக்காட்டாம்பள்ளியிலிருந்து மாணவர்கள் வந்து செய்திருக்கிறார்கள். மலை மேலே ஏறிப்போய் பார்த்தால் அங்கு ஓர் தூண் உள்ளது. அதற்கடியில் ஐந்து பெயர்கள் செதுக்கப்பட்டுள்ளன. கன்னடத்தில் அக்கல்வெட்டுக்கள் உள்ளன. அங்கிருந்து காணும் போது மதுரை மிக அற்புதமாக தெரிந்தது. பிறகு எல்லோரும் இறங்கி வந்தோம்.

ஆலமரத்தடியில் மீண்டும் வகுப்பு கூடியது. சமணம் குறித்து நிறைய அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.  மதுரைக்காமராசர் பல்கலைகழகத்தில் நாட்டார்வழக்காற்றியல் துறையைச் சேர்ந்த முத்தையா அவர்கள் இவ்வூர் குறித்தும் அய்யனார் கோயில் குறித்துமான நாட்டுப்புற நம்பிக்கைகளை கூறினார். “முன்பு இக்கோயில் மலைமேலிருந்ததாம். வெள்ளைக்காரர்கள் ஆட்சிகாலத்தில் மதுரை கோட்டை மீதிருந்த காவலர்கள் மலை மீதிருந்த சாமியை பார்த்து பயந்து அச்சம் கொண்டனராம். எனவே, அவர்கள் இக்கோயிலை கீழே இறக்க நிறைய திட்டம் போட்டு கீழே கொண்டுவந்தனராம்’’. இப்படியொரு கதை இப்பகுதி மக்களிடம் வழங்கி வருவதாக முத்தையா அவர்கள் கூறினார்.

ஆலமரத்தடியில் படையல். முத்துகிருஷ்ணன் எல்லோருக்குமான உணவை ஏற்பாடு செய்திருந்தார். எல்லோரும் பெரியவட்டமாக அமர்ந்தோம். அன்று உண்ட இட்லி, வடை, சாம்பார்க்கு இணையேயில்லை எனத் தோன்றியது. கூடி உண்பது குறைந்து வரும் இந்நாளில் ஒத்த மனதுடையவர்கள் சேர்ந்து பயணித்து உண்ணும் போது கிடைக்கும் ருசியே தனி. இன்று நினைக்கும் போது அது போல ஒரு நாள் மீண்டும் அமையாதா என்று ஏக்கமாக இருக்கிறது. இப்பயணத்தை ஏற்பாடு செய்த எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

வீட்டுக்கு கிளம்பும் முன் அங்கிருந்த அய்யனார் கோயிலுக்கு நானும் சகோதரரும் சென்றோம். இரண்டு பூதங்கள் நம்மை வரவேற்க, மூன்று குதிரைகளில் கருப்புச்சாமி நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறார். உள்ளே அமைதியாய் அய்யனார் அமர்ந்திருக்கிறார். அவருக்கு முன்னால் வாகனமாக யானை உள்ளது. யானை ஆசிவகத்தின் குறியீடு என நெடுஞ்செழியன் ‘தமிழரின் அடையாளங்கள்’ என்னும் நூலில் நிறுவுகிறார்.  மலை மேல் ஏறும் இடத்தில் சின்னதாக யானை உரு ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது.

செட்டிப்புடவு குகைச்சிற்பங்களுள் ஒன்றில் சிங்கம் மேல் அமர்ந்த பெண் தெய்வம் யானை மேல் இருக்கும் ஆணுடன் போர் புரிவது போன்ற சிற்பம் ஒன்று உள்ளது. இது கொற்றக்கிரியா எனும் சமணப்பெண் தெய்வம் என்று எஸ்.ராமகிருஷ்ணன் தேசாந்திரியில் கூறுகிறார். ஆசிவகம் தான் தமிழரின் பண்டைய மதம் எனக் கூறுவோரும் உளர். ஆனால், மயிலை.சீனி.வே ஆசிவகமும் வடமாநிலத்திலிருந்து வந்தது தான் என்கிறார். ஆசிவகத்தை உருவாக்கிய மற்கலி வர்த்தமான மகாவீரருடன் ஆறு ஆண்டுகள் ஒருங்கிருந்தார். பிறகு மகாவீரருடன் மாறுபட்டு ஆசிவகம் எனும் புதிய மதத்தை உருவாக்கினார். மேலும், சீனி.வே. ‘’சமண,பௌத்த மதத்திலிருந்த சாஸ்தா எனும் தெய்வத்தை நாட்டார் தெய்வ அய்யனாராக வழிபடுகின்றனர். பௌத்த அய்யனாருக்கும், சமண அய்யனாருக்கும் உள்ள வேற்றுமை யாதெனில் பௌத்த அய்யனாருக்கு வாகனம் குதிரை, சமண அய்யனாருக்கு வாகனம் யானை’’ என்கிறார். எனவே, இங்கிருக்கும் அய்யனார் சமண அய்யனார் எனவும் எண்ணலாம். ‘தொன்மங்களை ஆராயும் போது பகுத்தறிவுக்கு வேலையில்லை’ என்ற தாந்தேயின் வரிகளுடன் முடிக்கிறேன்.

(பின்குறிப்பு;- எண்பெருங்குன்றம் எனும் நூலில் வே.வேதாசலம் திருவுருவகம் என்று அழைக்கப்பட்ட சமணமலை குறித்து தனியே ஒரு பெரும்பதிவே எழுதியுள்ளார். அதை எண்பெருங்குன்றம் குறித்த பதிவில் காண்போம். பேச்சிப்பள்ளத்தில் இருந்த சமணதீர்த்தங்கரர் படங்களுக்கு கீழே பெயர்களை இப்புத்தகத்தில் இருந்த குறிப்பிலிருந்து தான் குறித்துள்ளேன்.  முனைவர்.வே.வேதாச்சலம் அவர்களுக்கு நன்றி!

கீழ்குயில்குடிக்கு பெரியார்பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. குடும்பத்தோடு செல்ல அருமையான இடம்.  இங்கு ஒரு சின்ன டீ கடை உண்டு,  தாமரைகுளத்துக்கிட்ட அருமையான பணியாரம் கிடைக்கும்)

சமணமலை குறித்த இன்னொரு பதிவு

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  // அங்கு பேசிய அறிஞருடன் (மன்னிக்கவும் அவர் பெயரை மறந்துவிட்டேன்)…//

  அந்த அறிஞர் தொல்லியல் துறையில் பணியாற்றிய ஆய்வாளர் முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் என்றும்; ஆய்வாளரும், செயற்பாட்டாளருமான முனைவர் ஞான அலாய்சியஸ் அவர்களும் கலந்துகொண்டு பேசினார்கள் என்றும் அந்நடையில் கலந்துகொண்ட நண்பர் திரு. உண்டுவளர்ந்தான் கூறியிருந்தார்.

  இந்நடை குறித்து நண்பர்கள் ஸ்ரீயும், கார்த்திகைப்பாண்டியனும் சுடச்சுட பதிவுகள் இட்டுள்ளனர்:

  http://sridharrangaraj.blogspot.com/2010_11_01_archive.html
  http://ponniyinselvan-mkp.blogspot.com/2010/11/blog-post_22.html

  இருந்தாலும் உங்களுடைய இந்தப் பதிவும், சமணமலை குறித்த இன்னொரு பதிவும் கூடுதல் தகவல்கள் தரவே செய்கின்றன. சவ்வடி அடிக்கப்படும் அதே வசனம்: ஆயிரம் பூக்கள் மலரட்டும்.

 2. […] படங்களைப் பார்த்தாலே தெரியும். அமணமலை நாவலின் முக்கியமான மையம். கதை […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s