மதுரை வீதிகள் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன்

Posted: மே 1, 2011 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளில் ஒருவர். அவரை மதுரைப் புத்தகத் திருவிழாவில்தான் முதன்முதலாகப் பார்த்தேன். பழகுவதற்கு எளிமையானவர். அவருடன் பேசியது நெடுநாள் பழகியவருடன் பேசுவது போலயிருந்தது. மதுரை வீதிகள் குறித்து அவர் எழுதிய வரிகள் யாவும் முற்றிலும் உண்மை. அவரைச் சந்தித்தபோது நானும் நண்பரும் அவரிடமே அதைக் கூறினோம். அதை வாசித்தால் நீங்களும் அதையே கூறுவீர்கள்.

 ஆயிரத்தொரு அராபிய இரவு கதைகளில் வரும் பாக்தாத் நகரை விடவும் அதிகக் கதைகள் கொண்டது மதுரை. குறிப்பாக மதுரையின் பகல் நேரக் கதைகள் சொல்லித் தீராதவை. ஜி.நாகராஜனும் சிங்காரமும் காட்டிய மதுரைக்காட்சிகள் வெறும் கீற்றுகளே. எல்லா வீதிகளிலும் இன்றும் நுரைத்தபடியே பொங்கிக் கொண்டிருக்கின்றன கதைகள். மதுரையில் கதை இல்லாத வீதிகள் இல்லை. நகரின் ஒவ்வொரு கல்லிற்குப் பின்னேயும் ஒரு கதையிருக்கிறது. அந்தக் கதை தன் காலத்தில் வாழ்ந்த அத்தனை மனிதர்களின் நினைவுகளை அவிழ்க்கவும் பின்னவும் கூடியது. நான் மதுரையின் வீதிகளில் சுற்றியலைந்தவன். என் கல்லூரி நாட்களில் பாதி மதுரையின் வீதிகளிலும், சாவடி சந்துகளிலும், தேர் சுற்றும் தெருக்களிலும் கல்மண்டபங்களிலும், வைகையாற்றின் கரைகளிலும் கழிந்திருக்கிறது.

 மதுரை மாநகரம் குடித்துத் தீர்க்க முடியாத ஒரு சூதாட்ட பானகம். பகலிலும் இரவிலும் குரல்  அடங்காத தெருக்கள். நாயின் அடங்காத நாக்கின் துடிப்பைப் போல எப்போதும் மெல்லிய பதற்றம் தொற்றிக்கொண்டிருக்கும் மனித நடமாட்டம். புரிந்து கொள்ளமுடியாத விதியின் கைகளில் சிக்கி அலைக்கழிக்கப்பட்டது போன்ற அன்றாட வாழ்க்கை.

 

மிகைநாடும் விருப்பம் அந்த நகரின் இயல்பிலே கலந்திருக்கிறது. ஒருவேளை அழிந்த நகரம் என்பதால் தன்னை தனித்து அடையாளம் காட்டிக் கொள்வதற்காக அப்படித் துள்ளிக் கொண்டிருக்கிறதோ என்னவோ.

 எத்தனை பாதைகள், எத்தனை வளைவுகள், மதுரையின் வீதியமைப்புகளுக்குள் காலை நேரங்களில் நடந்து பாருங்கள். அது ஸ்பானிய நகரங்களை நினைவுபடுத்தக் கூடியது. கோவிலின் உயர்ந்த கோபுரங்களுக்குச் சமமான விளம்பரப்பலகைகள், கட்டடங்கள் இன்று உருவாகி விட்டிருக்கின்றன. ஆனால் மீனாட்சி கோவில் பூமிக்கும் ஆகாசத்திற்கும் இடையில் மிதந்து கொண்டிருக்கும் ஒரு மலரைப் போலவே தோன்றுகிறது.

கல்மண்டபங்களின் தூண்களில் விரல்தட்டிக் கேட்கும் சங்கீதம் நூற்றாண்டுகளின் முன்உள்ள மனிதர்களின் இதயத்துடிப்பைத்தானே வெளிப்படுத்துகிறது. மதுரையில் சுற்றியலைவதற்கு சற்றே பித்தேறிய மனநிலை தேவைப்படுகிறது. அல்லது சுற்றியலைகிறவன் அப்படியொரு மனநிலைக்குத் தானே உள்ளாகிவிடுகிறான்.

 நானும் அந்த நகரின் நாவால் தீண்டப்பட்டு பேச்சில், உடல் அசைவில், ருசியில் மதுரை என்று அடையாளப்படுத்தப்படுகின்றவனாக இருந்திருக்கிறேன். அந்த நாட்களில் எனக்கிருந்த ஒரே துணை வெறுமை மட்டுமே. அது கிழட்டு நாயைப் போல கூடவே வந்து கொண்டிருக்கும். பலநேரங்களில் நம்மை ஒரு அடி நகர விடாமல் முன்வந்து நின்றுவிடும். டவுன்ஹால் ரோடின் ஒரு புள்ளியில் நாளின் எட்டுமணி நேரம் அப்படியே கால்மாற்றிக் கொள்ளக்கூட மனதற்று நின்றிருக்கிறேன். வரும் போகும் மக்களும் எழுவதும் அடங்குவதுமான குரல்களும் சூழ்ந்திருக்க, எதற்காக இந்த வீதியில் நின்று கொண்டிருக்கிறேன் என்ற யோசனையும் கரைந்துபோய் வீசி எறியப்பட்ட வாழைப்பழத்தோல் ஒன்று இனித் தன் இருப்பிற்கு தனித்த கவனம் கிடைக்காது என்பதை அறிந்திருப்பது போன்று அந்த வீதியில் நின்றபடியே நகரைப் பார்த்துக்கொன்டிருப்பேன்.

 கல்லூரிப் படிப்பு, அது கொண்டுபோய் சேர்க்கக்கூடிய வேலை எதிலும் என் கவனமில்லை. காமாலை கண்டவனின் உடல் முழுவதும் மஞ்சளாகிவிடுவது போன்று என் மனதில், நினைவில் இலக்கியமும், எழுத்தும் மட்டுமே நிரம்பியிருந்தது. பாரம் தாளாமல் மாடுகள் நாவில் நுரை தள்ளும் அப்படியானதொரு மனநிலை என்று கூட சொல்லலாம்.

 ஓடும் ஆற்றில் நீந்துவது போன்றதுதான் மதுரையின் வாழ்க்கை. அதில் நம் முயற்சி அதற்குள் பிரவேசிக்க வேண்டியது மட்டுமே, மற்றபடி ஆற்றின் வேகமே நம்மை அடித்துக்கொண்டு போய்விடும்.

 நம்பமுடியாமல் இருந்தால் ஒருமுறை டவுன்ஹால் ரோடின் உள்ளே நடந்து பாருங்கள். உங்கள் வேலை ரீகல் தியேட்டரில் இருந்து திரும்பி ஒரு எட்டு உள்ளே நுழைவது மட்டும்தான். ஆற்றின் வேகம் போல ஜனத்திரள் தானே உங்களை அழைத்துக்கொண்டு போய் மீனாட்சி கோபுரத்தின் அருகில் சேர்த்துவிடும். அங்கும் நீங்கள் விழிப்புணர்வு கொள்ளாவிட்டால் வெயிலேறிய மீனாட்சிஅம்மன் கோவிலில் வெளிப்பிரகாரத்தில் சூடு கொதிக்கும் கல்லில் நிதானமாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்கள்.

-வாசகபர்வம்(உயிர்மை)

 

இந்த நகரில் மின்வெட்டு சர்வ சாதாரணமாகிப்போயிருந்தது. அதிலும் கோடைக்காலத்தில் ஏற்படும் மின்வெட்டுகூட அங்கிருப்பவர்களுக்குப் பழகிப்போய் விட்டது. மின்சாரமற்றுப்போன மதிய நேரங்களில் மரங்களில் இலை அசைவதே இல்லை. ஒரு வேளை இந்த நகரில் மரங்கள் எப்போதுமே இலை அசைப்பது இல்லையோ என்று கூடத்தோன்றுகிறது. இறுக்கமும் நெருக்கடியுமான பகல்நேரத்தில் உறக்கம் ஒரு மலைப்பாம்பை போல ஊரையே கவ்விக்கொண்டுவிடுகிறது. அதிலும் நூற்றுக்கணக்கில் லாட்ஜ்களிருந்த டவுன்ஹால் ரோட்டில் மதிய நேரம் தெளிவற்ற மஞ்சள் நிறத்தில் தரையெங்கும் பிசுபிசுப்பாக வழிந்து கொண்டிருக்கிறது. தலைக்கு முக்காடு இட்டபடியே தர்பூஸ் பழம் விற்கும் பெண்கள், கரும்புச் சக்கைகளைப் பிழிந்து போட்டபடியே இருக்கும் இயந்திரம், காகம் கூட பறக்காத ஆகாசம், சப்தம் எழுப்பாத தேவாலயத்து மணி, சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் சிலைகள் என எங்கும் வெயில் வரைந்த சித்திரங்கள் நீண்டு கொண்டிருக்கின்றன. சாலையோர ஓவியன் தெருவில் கரியால் வரைந்து போன கிருஷ்ணன் உருவத்தில் வீசியெறியப் பட்டிருந்த காசுகள் கூட சூடேறி நெளிகின்றன. கோடைக்காலத்தில் மதியம் அழுகிய முட்டையின் முடைநாற்றத்தைப் போல பரவிக்கொண்டிருக்கிறது.

 -ஒரு நகரம், சில பகல் கனவுகள் (நடந்து செல்லும் நீருற்று, உயிர்மை-சிறுகதைத்தொகுப்பிலிருந்து)

(உயிர்மை பதிப்பகத்திற்கு நன்றிகள் பல)

 மதுரை குறித்து துயில் நாவலில் மற்றும் இன்னும் பல கட்டுரை, கதைகளில் எழுதியிருக்கிறார். மதுரைப் புத்தகத் திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணனிடம் மதுரை குறித்து தனியாக ஒரு நூல் எழுதும்படி கேட்டபொழுது விரைவில் எழுதுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். மதுரை வீதிகளில் நடந்து திரிந்ததை சிறுநடை என்ற தலைப்பில் அவர் இணையத்தில் எழுதிய கட்டுரையையும் வாசியுங்கள். 

மேலும், எஸ்.ராமகிருஷ்ணனுக்கு ‘யாமம்’ நாவலுக்காக தாகூர் இலக்கிய விருது கிடைத்திருப்பதில் பெருமையும், பேருவகையும் அடைகிறேன். சமீபத்தில்தான் இணையத்தில் ‘தாகூரும் கலாப்ரியாவும்’ குறித்த பதிவில் தாகூரின் கவிதைகள் குறித்து எழுதியிருந்தார். கீழேயுள்ள தாகூர் இலக்கிய விருது குறித்த செய்தி எஸ்.ரா’வின் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி.

தாகூர் இலக்கிய விருது

மகாகவி தாகூரின் 150வது ஆண்டினை ஒட்டி இந்திய இலக்கியங்களைக் கௌரவிக்கும் விதமாக கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம்  சாகித்ய அகாதமியோடு இணைந்து தாகூர் இலக்கிய விருது (Tagore Literature Award) ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது,

91 ஆயிரம் ரொக்கப்பணமும் தாகூர் உருவச்சிலையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இவ்விருது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் எட்டு தேர்வு செய்யப்பட்டு அதில் உள்ள மிகச்சிறந்த இலக்கியவாதியின் ஒரு நூலிற்கு தாகூர் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது,

இதற்கானத் தேர்வுப் பணியை மேற்கொள்வது டெல்லியில் உள்ள சாகித்ய அகாதமி நிறுவனம், இந்த ஆண்டு இந்திய அளவில் எட்டு இலக்கியவாதிகள் இவ்விருதினைப் பெறுகிறார்கள்.

 2010ம் ஆண்டிற்கான தாகூர் இலக்கிய விருது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம் நாவலுக்கு வழங்கப்படுகிறது.

யாமம் நாவல் சென்னையின் முந்நூறு ஆண்டுகாலச் சரித்திரத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட நவீன நாவல், இந்த நாவல் முன்னதாக தமிழின் சிறந்த நாவலாகத் தேர்வு செய்யப்பட்டு கனடாவின் இயல்விருது பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது

பெருமைக்குரிய இந்திய விருதான தாகூர் இலக்கியவிருது தமிழுக்கு முதன்முறையாக வழங்கப்படுகிறது,  அவ்வகையில் எஸ். ராமகிருஷ்ணன் மிகுந்த பெருமையடைகிறார்.

விருதுவழங்கும் நிகழ்ச்சி மும்பையில் மேமாதம் 5ம் தேதி மாலை மேற்கு தாதரில் உள்ள ரபீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற உள்ளது. இதில் இந்தியாவின் முக்கிய இலக்கியவாதிகள் மற்றும் கொரிய அரசின் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

பின்னூட்டங்கள்
 1. muniasamy சொல்கிறார்:

  intha thoguppu meendum ennai madurai veethikalil sutriyathu pol irunthathu. madurai ethanai murai sutri parthalum meendum meendum parka thondrum veethigalai konda kutti sorgam

 2. muniasamy சொல்கிறார்:

  intha thoguppu
  meendum madurai veethikalai sutri paatha ninaipu

 3. ramji_yahoo சொல்கிறார்:

  அரவம் கக்கும் ஆல கால விடத்தைக்கூட
  அமிழ்து போலாக்கிடும் சொக்கநாதரின்
  திருக்கோயில் அமைந்துள்ள நான்மாடக்கூடல் நகரிலே
  நெற்றிக்கனைத் திறந்தாலும் குற்றமே என்றுரைத்த
  தன்மானத் தகைசால் புலவன் நக்கீரனின்
  திருக்கோவில் அமைந்துள்ள மேல மாட வீதியிலே… என்ற வைகோ வின் வரிகள் ஞாபகம் வந்து விட்டது.

  மேல மாசி வீதி, வடக்கு வெளி வீதி, வடக்கு ஆவணி மூல விதி, சித்திரை வீதி, டவுன் ஹால் ரோடு என மாநகர் மதுரை எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்கும் ஒரு நகரம்
  உங்களின் பதிவு மதுரையின் பெருமைக்கு இன்னுமொரு வைரக்கல்

 4. தொப்புளான் சொல்கிறார்:

  இந்த வீதிகளின் வசீகரம் எப்போதும் குறைவதேயில்லை.

  இன்றும் பருத்திப்பால் கிடைக்கிறது. சூடாக முள்முருங்கை ரொட்டி போடுகிறார்கள். அதில் வக்கணையான பொடி ஒன்றைத் தூவித் தருகிறார்கள்.

  கணிசமான வெளியூர்க்காரர்களுக்கும், வெளிநாட்டுக்காரர்களுக்கும் நடுவில் உங்களுக்குத் தெரிந்தவர் ஒருவர் எதிர்ப்பட்டுவிடுகிறார்.

  வந்தவர் கேட்ட பொருள் தங்கள் கடையில் இல்லை என்பதோடு நிறுத்திவிடாமல் எந்தக் கடையில் கிடைக்கும் என்று சொல்கிற கடைக்காரர்கள் இருக்கிறார்கள்.

  சுற்றுவட்டார மாணவர்கள் “கைதட்டினா குருவி கத்தும் சார்” மாதிரியான ப்ராஜக்ட்களை இங்கிருந்து வாங்கித்தான் தேர்வுபெறுகிறார்கள்.

  காதோலை, கருகமணி முதல் தண்ணீர்ப்பீய்ச்சுக்காரரின் உடுப்புவரை நூதனமான உங்கள் வழிபாட்டுப் பொருட்கள் இங்குதான் கிடைக்கின்றன.

  பேனாவுக்கென்று ஒன்று, மிக்ஸி, ஸ்டவ் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் உதிரி பாகங்களுக்கென்று ஒன்று, சந்தனத்திற்கென்று ஒன்று, இன்னும் நாட்டு மருந்துக்கென்றும், திருமணச் சீருக்கென்றும், திரைகட்டிப் படம்போடும் படவீழ்த்தி வாடகைக்குவிட என்றும் பிரத்தியேகக் கடைகள் இருக்கின்றன.

  கல்லாக்களில் மார்வாரிச் சிறுவர்கள் பொறுப்புடன் தொழில் கற்றுக்கொள்வதைக் கவனியுங்கள்.

  நினைவாற்றலையும், பேச்சாற்றலையும் முக்கிய மூலதனமாகக்கொண்டு நூற்றுக்கணக்கில் செட்டியார் நகைக்கடைகள் தங்கள் நிரந்தர வாடிக்கையாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு தங்களை பிணைத்துக்கொண்டுள்ளன.

  சிரித்த, சிடுத்த மூஞ்சிகள் கலர்லேப்புகளில் இருந்து கழுவப்பட்ட வண்ணம் உள்ளன.

  தபால்காரர்களும், கொரியர் பையன்களும் மட்டுமே அறிந்த அடையாளமுள்ள, தேன்கூட்டின் அறைகள் போன்ற எண்ணற்ற வீடுகளில் கண்ணியமாகவும், சுதந்திரமாகவும் லட்சம்பேர் வாழ்கிறார்கள்.

  புலிநகக்கொன்றை நாவலில் வருவது போன்றோ, அல்லது இன்னொரு சிறுகதை காட்டும் பாலியல் தொழிலாளியான வெளிநாட்டு இளம்பெண், சிறார்களை விழையும் அவளது கணவன், உள்ளூர் தரகன் போன்றோ நாம் அறிய நேராதது நம் அனுபவக் குறைவே!

  அதோ, தெருவோரத் திருவிழாவில் நமது இரா.ரவியோ, மாதந்திர நகைச்சுவைக் கூட்டத்தில் மனிதத்தேனீ சொக்கலிங்கமோ நம்மை வரவேற்கிறார்கள்.

  ஆடிவீதிப் பிரசங்கங்களுக்குச் செல்லும் வயதானவர்களுக்கும், ஜோதிடர்களுக்கும், திருமண அமைப்பாளர்களுக்கும் – பெண்களும் உண்டு – மீனாட்சியம்மன் கோயில் அளவுக்கான உலகம் போதுமானதாயிருக்கிறது. அல்லது உலகம் அவர்களிடம் வருகிறது.

  சிறுவர் கலா மன்றத்திலிருந்து வினாத்தாள்களையும், பிற கற்றல், கற்பித்தல் உபகரணங்களையும் வாங்கிச் செல்லும் அந்த ஆசிரியைகளைக் கவனியுங்கள். அவர்களது மாணவர்கள் மதுரையை மன்னிக்கட்டும்.

  குறைந்த செலவில் ஐந்தாறு ஸ்பீக்கர்களை வைத்துக்கொண்டு ஹோம் தியேட்டர் அனுபவம் தரும் ஒலி அமைப்பு செய்வதில் வல்லுநரான அந்த நண்பர் 5.1 குறுந்தட்டுக்களாகப் பொறுக்கி எடுப்பதைக் கண்ணுறுங்கள்.

  கல்யாணம் கோயிலில் முடிந்த கையோடு உறவினர்களுக்கு ஆள்பார்த்து ஓட்டல் வாசலில் நின்றபடி சாப்பாட்டு டோக்கன் கொடுக்கும் அக்கா மாப்பிள்ளையைக் காணுங்கள்.அதில் பத்து டோக்கன்களை எப்படியோ சுட்டு குறைந்து விலைக்கு விற்றுக் காசுபார்த்து நழுவும் சொந்தக்காரனும், சாகசக்காரனுமான டுபாக்கூரைக் காட்டித்தந்துவிடவேண்டாம்.

  தனக்கான அன்றைய புதையலைப் பழைய புத்தகங்களுக்குள் தேடும் கண்ணாடிக்காரருடன் சேர்ந்து நீங்களும் புரட்டிப் பாருங்கள். தேடுங்கள், கண்டடைவீர்கள்!

  உரிமையாகவும், மரியாதையுடனும் எங்கிருந்தோ உங்களை ஒழுங்குபடுத்தும் போக்குவரத்துக் காவலரின் ஒலிபெருக்கிக் குரலுக்குச் செவிகொடுங்கள்.

  சிலர் இந்த வீதிகளின் இடங்களை கட்டணக் கழிப்பறைகளையும், இலவச சிறுநீர்ப் பிறைகளையும் கொண்டு அடையாளங் காண்கிறார்கள்.

  அந்தப் புராதன வீட்டின் கட்டிடக் கலையை ஒருவிநாடி நிதானித்துப் பார்த்துச் செல்லும் நபரையும், அருகிலுள்ள கண்ணாடி வேய்ந்த புதிய கட்டிடத்தைப் பார்த்து “மதுரையும் முன்னேறிருச்சு” என்று பெருமிதம் கொள்ளும் நபரையும் குறித்துக்கொள்ளுங்கள்.

  வண்ணமயமான சுவரொட்டிகளை வேடிக்கை பார்ப்பதை விடமுடியாத வளர்ந்த பையனையும், மெல்லக் கடிந்துகொள்ளும் அவனது அப்பாவையும் பாருங்கள்.

  ‘ஒரு ஆளைப் பார்த்துட்டு வந்திர்றேன்’, ‘ஒரு சின்ன வேலை இருக்கு’ என்பன போன்ற முக்கிய காரணங்களை முன்னிட்டு சும்மா வெறுமனே நிற்கிற, அமர்கிற, திரிகிற திருக்கோலங்களில் தென்படும் நம்மவர்களை அவதானிக்கிறீர்கள்தானே!

  கடைகளில் வேலை பார்த்துவிட்டு கடைசிப் பேருந்துகளில் தத்தமது ஊர்திரும்ப ஓடும் இளைஞர்கள், யுவதிகளோடு சேர்ந்து விரையுங்கள். உங்கள் கிராமத்துக்கான கடைசிப் பேருந்து போய்விடப்போகிறது!

 5. radhakrishnan சொல்கிறார்:

  மதுரைத்தெருக்களில் காலைநேரங்களில் அலைந்த அநுபவங்கள் எனக்கும் உண்டு.
  இதற்கு இணை.வேறு எதுவும் இல்லை.
  மதுரையைச் சுற்றின கழுதையும் வேறு எங்கும் செல்லாது என்று கூறுவார்கள்.
  வெளியூரிலிருந்து பேருந்தில் வரும்போது மதுரையை நெருங்கும் பொழுது திடீரென்று தோன்றும் கோபுரதெரிசனம் மிகவும் பரபரப்பான மகிழ்ச்சியளிக்க்கக்கூடியது.

 6. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  மதுரை,மதுரைதான்

 7. எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் ”சென்னை நகர வாழ்வும் வரலாறும்” கூறும் அற்புதமான நாவல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s