நகுலன் இலக்கியத்தடம்

Posted: மே 17, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

கதை, கவிதை, நாவல், கட்டுரை என்று தொட்டதையெல்லாம் தனக்கே உரிய தனி பாணியில் துலங்க வைத்தவாறு கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழிலக்கியத்தால் நிறைந்து நிற்பவர். 85 வயதின் தலைவாசலில் நிற்கும் நகுலன் (பிறப்பு 1922ல் கும்பகோணத்தில்) நிழல்களில்(1965) துவங்கி நினைவுப்பாதை(1972), நாய்கள்(1974), நவீனன் டயரி(1978), இவர்கள் (1983), சில அத்தியாயங்கள் (1983), வாக்குமூலம் என்று நாவல்கள்; மூன்று (1979), ஐந்து (1981), கோட்ஸ்டான்ட்(1981), இரு நீண்ட கவிதைகள் என்று கவிதைகள்; ஆங்கிலத்தில் Words to the listening Air (1968), Poems by Nakulan (1981), A Tamil writers journal Vol I (1984), Vol ll (1989), Selections From Bharathi – That little sparrow (1982), Non being (1986), Words for wind Novel (1983) முதலிய படைப்புகள் வழி தொடர்ந்து நகுலனின் இலக்கியப் பயணத்தின் பாதையும் பார்வையும் முற்றிலும் நவீனமானது, தன்னிகரற்றது.                                                                                                                                                                                                                                                                  -நீல.பத்மநாபன்

நகுலனைப் பற்றி நான் முதலில் அறிந்தது ஆனந்தவிகடன் மூலமாகத்தான் என நினைக்கிறேன். அதில் அவரது புகைப்படங்களோடு கூடிய ஒரு கட்டுரையை வாசித்தேன். பிறகு எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்திலிருந்தும், ஒருமுறை கோணங்கி மதுரை வடக்குமாசிவீதி மணியம்மை பள்ளியில் (நல்ல இலக்கியக் கூட்டங்கள் இங்கு அடிக்கடி நடக்கும்) நகுலனைப் பற்றி பேசியதிலிருந்தும்தான் அறிந்தேன். அன்று கோணங்கி நகுலன் குறித்து அருமையாகப் பேசினார். நகுலனது சில கவிதைகள் வாசித்திருக்கிறேன். அழியாச்சுடர்கள் http://www.azhiyasudargal.blogspot.com/ வலைத்தளத்தில் மேலும் நகுலனைப் பற்றிப் படித்தேன். காவ்யா சண்முகசுந்தரம் “நகுலன் இலக்கியத்தடம்” என்ற நூலைத் தொகுத்திருக்கிறார். (தமிழின் முக்கிய ஆளுமைகளின் இலக்கியத் தடங்களை சண்முகசுந்தரம் பதிப்பித்திருக்கிறார்) இது க.நா.சு’விலிருந்து பலர் நகுலனைக் குறித்தும் அவரது நூல்களைக் குறித்தும், அவருடனான தங்கள் நட்பைக் குறித்தும் எழுதியிருந்ததைக் கொண்ட தொகுப்பு நூல். சண்முகசுந்தரம் செய்திருப்பது நல்ல பணி. ஏனென்றால் இது போன்ற நூல்கள் தமிழின் முக்கிய ஆளுமைகளைக் குறித்து அறிந்து கொள்ள என்னைப் போன்ற புதிய வாசகனுக்கு உதவும். இந்நூலை வாசிக்கும்போது நமக்கும் நகுலன் தமிழில் தனித்தடத்தைப் பதித்துச் சென்றிருப்பது புரியும்.

நகுலனது கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எல்லாமே தனியொரு நடையில் அமைந்தவை. நகுலனது கவிதைகள் வாசிக்க எளிமையாய்த் தோன்றினாலும் உள்ளுக்குள் சில அதிர்வுகளை ஏற்படுத்திவிடுகின்றன. நகுலனைக் குறித்தும் அவரது எழுத்தைக் குறித்தும் பலர் இதில் பல கோணங்களில் கூறியிருக்கிறார்கள். இந்நூலை வாசிக்கும்போது எனக்குப் பிடித்த வரிகளை, கவிதைகளை என்னுடைய நாட்குறிப்பேட்டில் தினமும் ஒன்றாக எழுதி வைத்துள்ளேன்.

நகுலனுடைய எழுத்து நம் அகம் குறித்து அதிகம் பேசுகிறது. நகுலன் வாழ்வில் நிறைய அகநெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார். வீட்டில் இயல்பான சூழல் இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனியே வசித்திருக்கிறார். தன் எழுத்தைப் பதிப்பிக்க பதிப்பகங்கள் முன்வராததால் தானே சிலவற்றைப் பதிப்பித்துள்ளார். மேலும், எழுத்து மூலம் வருமானம் ஈட்டத் தெரியாதவராகவே வாழ்ந்து மடிந்துவிட்டார். இந்நூலை வாசித்ததும் நகுலன் மீதும் அவர் எழுத்து மீதும் எனக்குப் பித்து அதிகமாகிவிட்டது. இனி அவரது கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள் எல்லாம் வாங்கி வாசிக்க நினைத்திருக்கிறேன்.

இருப்பதற்கென்றுதான்

வருகிறோம் 

 இல்லாமல் 

 போகிறோம்.

+++

யாருமில்லாத பிரதேசத்தில்

 என்ன நடந்து கொண்டிருக்கிறது?  

 எல்லாம்.

+++

சூசிப்பெண்ணே 

ரோசாப்பூவே 

ராத்திரி வெயிலடிக்கும்

பகல்லெ பைத்தியம் பிடிக்கும்.

+++

அறையில் நாற்காலி

சுவரில் எட்டுக்காலி 

 தெருவில் விட்டவழி

அறையுள்

தட்டு முட்டுச்சாமான்கள்

பயணத்தின் முடிவில் ஒருவன்

பயண வழி நெடுக ஒருவன்

 கடலின் இக்கரையில்

 மணல் வெளி

  அக்கரையில்

 அலைகளின்

 அடங்காத வெளி

கரையிரண்டும்  

மணலென்று

கண்டால்

எல்லாம் வெட்டவெளி.

+++

 

நகுலனின் கதைகள், பேட்டிகள் ஊடாக வரும் சில வரிகள் மிக அற்புதமாக அமைந்திருந்தன. இரண்டே வரியில் எவ்வளவு பெரிய தத்துவங்களை எளிமையாக சொல்லிவிடுகிறார் என கீழே உள்ள வரிகளை வாசித்துப் பாருங்கள்.

எங்கே புத்திசாலித்தனமாக இருப்பது அபாயகரமோ அங்கே முட்டாள்தனமாக இருப்பது புத்திசாலித்தனம்.

படிக்கப் படிக்க வார்த்தைகள் அழிகின்றன. பிரக்ஞையின் நிதானமான போக்கும்.

ஒரு கலைஞனின் கெட்டிக்காரத்தனம் அவன் முட்டாளாக இருப்பதில் தான் இருக்கிறது.

எழுத எழுத எழுத்து அழிகிறது. வாசிக்க வாசிக்க வாசகன் தொலைகிறான்.

எது தீமை என்று அடியோடு வெறுக்கிறோமோ அப்போதே எது நல்லது என்று நாம் கருதியிருந்ததும் ஆட்டம் கண்டு விடுகிறது.

கல்யாணம் செய்து கொண்டோரெல்லாம் ஆடு திருடிய கள்ளன் போல முழிக்கின்றார்கள்.

நான் பேசி முடித்த பின்னரே எனக்குள் நான் என்ன பேசினேன் என்பது தெரியும்.

….சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்பது தெரியாது என்பதனால், என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க, எழுத்தை நாடுகிறேன்.

 

நகுலனது கவிதைகள் வாசிக்கும் போது சாதாரணமாகத் தெரியலாம். அதை ஏதாவது ஒரு சூழலில் அனுபவிக்கும்போதுதான் அதன் மகத்துவம் புரியும். உதாரணமாக நாம் யாருடைய தொலைபேசி எண்ணையாவது அவர் பெயரில் மட்டும் சேமித்து வைத்திருப்போம். சில மாதங்கள் கழித்து பார்க்கும் போது யாரிது என குழப்பமாக இருக்கும். அப்பத்தான் ‘இராமச்சந்திரன்’ கவிதை ஞாபகம் வரும். மேலும் ‘அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை மக்கள் இருக்கிறவரை’ என ‘கடல்’ என்ற கவிதையை மாற்றி யோசித்தால் எவ்வளவு அழகாக அன்றே சொல்லியிருக்கிறார் நகுலன் எனப்புரியும். நகுலனை குறித்து மற்றவர்கள் கட்டுரைகளோடு நகுலனது நேர்காணல்களும் இந்நூலில் உள்ளன.

நகுலன் இலக்கியத்தடம், காவ்யா பதிப்பகம், 150 ரூபாய்.

http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  நகுலன் வீட்டில் யாராவது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
  இந்த பாதிப்பில் எனக்கும்கூட எழுதத் தோன்றியது. கீழே சில:

  யார் இல்லாமலும்
  வாழ்ந்துவிடலாம்
  நான் இல்லாமல்
  வாழ முடியாது
  —————————————————————–

  இரவு
  பகல்
  மீண்டும்
  இரவு
  பகல்
  மீண்டால்
  இரவு
  பகல்
  ————————————————————————–
  முதல் நாள் நடக்கிறேன்
  புதிய மனிதர்கள்
  பரபரப்பு, சந்தடி, குழப்பம்
  தினமும் நடக்கிறேன்
  அதே மனிதர்கள்
  நிதானம், அமைதி, ஒழுங்கு
  ————————————————————————–
  பொங்கலுக்காய் அடித்துக்கொள்
  புரிந்துகொள்கிறேன்
  திருநீறை என்ன
  தின்னவா போகிறாய்?
  எவன் முதலில்
  எடுத்தால்தான் என்ன?
  —————————————————————-
  நான் பல்லி உண்பவனில்லை
  என்பதை
  என் அறைப்பல்லிகள்
  எப்படியோ அறிந்திருக்கின்றன

 2. மலையாள கவிஞர் குஞஞுண்ணி மற்றும் மறைந்த தமிழ் எழுத்தாளர் நகுலனின் கவிதைகளை படிக்க நேர்ந்தது. இருவரின் கவிதைகளும் நம்மை எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்துகிறது. இருவரின் எழுத்து நுட்பமும் மிகவும் புத்திசாலித்தனமானது. படித்தவுடன் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பதில்லை. அவர்களது கவிதைகள். வாசிப்பாளரை மிகுந்த சிந்தனைக்கு உட்படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தையும் உண்மையையும் உணர்த்துகிறது. இவர்களது கவிதைகளுக்கென்று தனி விளக்கம் எதுவும் கிடையாது. அது வாசிப்பாளரை பொறுத்து மாறுகிறது.

  நகுலன் சொன்னது : ஒரு எழுத்தாளன் என்பவன் வாசிப்பவனுக்குள் சென்று அவனையும் எழுத தூண்ட வேண்டும்.
  அதுனால நானும் சில குறுங்கவிதைகள் எழுத முயற்சி செய்தேன். அவற்றின் விளைவு கீழே,

  (1)அந்த வெளிர் மஞ்சள் நிறம்
  மெல்ல இறங்கி
  ஒரு மின்சார விளக்கின்
  அடியில் சென்று ஒளிந்துகொண்டது

  (2) சில நேரங்களில்
  என் நிழல் கூட
  என்னுடன் சேர்ந்து கொள்கிறது
  ஆனால் என் பிம்பம்
  எப்பொழுதும்
  எனக்கெதிராகவே உள்ளது.

  (3) தொலைந்ததை தேடினேன்
  தொலைத்ததெல்லாம் கிடைத்தது
  தொலைந்ததை தவிர!!!

  (4) சிட்டுக்குருவி பழத்தை
  பங்கிட்டுக் கொள்கிறது,
  பூச்சிகள் என்னை
  ஒரு பொருட்டாக
  நினைக்காமல்
  ஏறி விளையாடுகின்றன
  பெருமையாக இருக்கிறது

  (5)ஊருக்கு தெரிந்து
  புகைப்பதை நிறுத்தி
  ஐந்து நாட்களாகி விட்டது
  எல்லாமும் சரியாய்தான்
  போய் கொண்டிருந்தது
  ஆறாம் நாளில் கையரிப்பு
  யாருமில்லா ஓர் இரவில்
  ஊருக்குத் தெரியாமல்
  கிளம்பி விட்டேன்
  கையில் சிகரட்டுடன்
  பற்ற வைத்தேன்
  பார்த்து விட்டார்
  கடவுள்.

  (6) வானிலையை
  பொறுத்தே
  அமைகிறது
  பலரின் மனநிலை

 3. kandeepan.m சொல்கிறார்:

  very very nice……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s