யானை மனம் மனித மனதைவிட நூறுமடங்கு பெரியது. அந்த கரும்பாறைக்குள் பத்துமனங்கள் இணைந்து செயல்படுகின்றன. ஆனால்  அது பேசுவதில்லை. புலம்புவதும் அழுவதும் இல்லை.

-ஜெயமோகன்

கேசவன் தன் துதிக்கையால் என்னை இழுத்து படைப்புக்குள் தள்ளிவிட்டான். ஆவல் தாங்காமல் அடுத்த அத்தியாயத்திற்குள்ளும் நுழைந்தேன். மூன்று… நான்கு… ஐந்து…. ஒரே மூச்சில் முழுவதையும் படித்து முடித்தவுடன்தான் சூழலே புலனாயிற்று. வாசித்துக் கொண்டிருக்கும்போதே உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து வாசிக்காதே.. போதும்.. என்று எச்சரித்துக் கொண்டேயிருந்தது. உடம்பெங்கும் குளிர் படர்ந்து அடங்கியது. படைப்பு முழுவதையும் தியானத்திற்கான மனநிலையுடன் வாசித்திருக்கிறேன் என்று தோன்றியது. வாசிப்பு நிறைந்தவுடன்தான் சுயநினைவிற்கு வந்து நாற்காலியின் பின்னால் ஒய்வாக சாய்ந்தேன். இறுகப்பற்றிக் கொண்டிருந்த கைகள் தளர்வடைந்தன.                                               

-சுரேஷ்கண்ணன்

சுரேஷ்கண்ணனின் வலைத்தளம் வாசித்துக்கொண்டிருந்த போது ஜெயமோகனின் ‘மத்தகம்’ என்னும் குறுநாவல் குறித்து எழுதியிருந்தார். மேலும் ஜெயமோகன் தளத்திலிருந்து நாவலை வாசிப்பதற்கான இணைப்பையும் கொடுத்திருந்தார். தரவிறக்கி ஞாயிறன்று வாசிக்க ஒரே சுத்தில் கேசவன் என்னையும் வளைத்து விட்டான். அற்புதமான அறிமுகம் தந்த சுரேஷ்கண்ணனுக்கு நன்றி. வாசித்ததும் யானை குறித்த நினைவுகள் கிளைவிடத்தொடங்கின.

இளம் வயதில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போவதென்றால் எனக்குப் பயங்கர கொண்டாட்டமாகயிருக்கும். ஏனென்றால் அம்மன் சன்னதியில் நுழைந்ததும் யானையை பார்க்கலாம், தெற்காடி வீதியில் உள்ள கல்யானையில் ஏறி அமர்ந்து விளையாடலாம் என்பதுதான் விசயம். (படத்தில் உள்ளது மேற்கு சித்திரைவீதியில் கோபுரத்தடியில் உள்ள கல்யானை) எங்க தாத்தா கொல்லத்தில் இருந்து வாங்கி வந்த சின்ன மரயானையை தான் எப்ப பார்த்தாலும் தூக்கிட்டு திரிவேன். இன்றும் அதைப் பார்த்ததுமே என்னை பால்யத்திற்குள் அழைத்துச் சென்றுவிடும் ஆற்றலுடையது. அண்ணாநகரில் குடியிருந்தப்ப அந்த மரயானையோடு மரக்குதிரையையும் அலங்கரித்து சித்திரை திருவிழா நடத்தி விளையாடுவோம். பக்கத்து வீட்லயிருந்த பூக்கட்ற பாட்டி யானையை அலங்கரிக்க பூவெல்லாம் தருவாங்க. இன்றும் யானை எதிரில் வந்தால் ஒரே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. இளம் வயதிலிருந்தே அடிக்கடி யானையைத்தான் வரைந்து கொண்டேயிருப்பேன். யானையைப் பிடிக்காதவர்கள் யாராவது இருப்பார்களா என்ன? தன் தாத்தாவையும், தந்தையும் யானைதான் கொன்றது என்றாலும் அடுத்து யானைப் பாகனாயிருப்பவனை இக்கதையே காட்டுகிறது. யானையை வெறுக்க யாருக்கும் மனம் வராது.

இந்நாவலின் நாயகனான கேசவன் என்ற யானையின் பெயரைக் கேட்டதுமே அய்யப்பன் கோயிலுக்குப் போனபோது குருவாயூர் கோயிலில் முன்னால் பார்த்த கேசவன் என்னும் யானையின் சிலைதான் ஞாபகம் வந்தது. இந்நாவலில் வரும் கேசவனும் சிறப்பான யானைதான். கேரளா யானைகள் நம்மூர் கோயில் யானைகள் போலிருக்காது. அதன் தந்தமும், முகபடாமும் பார்க்கவே தனி கம்பீரமாயிருக்கும். மற்றொருமுறை குருவாயூர் சென்றபோது கோயிலுக்கு வெளியே கட்டியிருந்த யானைகளையே வெகு நேரம் பார்த்து நின்று கொண்டிருந்தேன்.

சின்ன வயசுல யானையின் நினைவாற்றல் குறித்து கேட்ட கதை. (இக்கதையை நீங்களும் கேட்டிருப்பீர்கள்) யானை கடைவீதி வழியாக வலம் வரும்போது எல்லா கடைக்காரர்களும் தேங்காய், பழம், கரும்பு எனக் கொடுப்பார்கள். ஒரு தையல்கடைக்காரன் மட்டும் தேங்காய்க்குள் சுண்ணாம்பை (அல்லது ஊசியை) வைத்துக் கொடுப்பான். யானை வாங்கித் தின்றதும் அதற்கு தெரிந்துவிடும். இச்சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு தீபாவளி சமயம் சேற்றை துதிக்கையில் முகர்ந்து வந்து தையல் கடையில் உள்ள புதுத்துணிகள் மீது துப்பிவிடும். அந்த யானை போல இந்நாவலில் வரும் கேசவனும் அதிக ஞாபகசக்தி, தன்னை பழிப்பவர்களை கண்டு சீறுவது, பாகனை திட்டியவனை தூக்கி அறைவது என்று இருக்கிறது. யானைப்பாகன் வாழ்வையும் இந்நாவலோடு நாம் காண முடிகிறது. யானைப்பாகர்களுக்குள் உள்ள உறவுகள், அவர்கள் யானையோடு கொண்டிருக்கும் உறவு குறித்தெல்லாம் நுட்பமாக எழுதியிருக்கிறார். இக்கதையை வாசித்ததும் சிங்கிஸ் ஜத்மதேவ் எழுதிய (Farewell,Gulsary!) நினைவின் நிழல் என்ற ரஷ்யநாவல் தான் நினைவிற்கு வந்தது. இறக்கும் நிலையில் உள்ள குல்சாரி என்ற குதிரைக்கும் அதை வளர்த்த தானாபாய் என்ற மனிதனுக்கும் இடையேயான ஸ்டெப்பி புல்வெளி பயணத்தோடு கிர்கிஸ்தானிய நிலப்பரப்பு, அக்டோபர் புரட்சியின் விளைவுகள், கம்யூனிசம் மற்றும் அம்மக்களின் வாழ்க்கைமுறையை அழகாகக் காட்டிய அருமையான நாவல். மத்தகமும் சுதந்திரத்திற்கு முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் காலத்தை காட்டும் நாவல். அப்படியே கேரளத்தின் காட்சிகளும் நாவலூடாக வருகிறது. இக்குறுநாவலை ஜெயமோகன் 2008லேயே அவரது தளத்தில் பதிவிட்டிருக்கிறார். சுரேஷ்கண்ணனும் அம்மாதமே அதைக்குறித்து எழுதிவிட்டார். (நான் ஒரளவு இணைய வாசிப்பு தளத்திற்குள் வந்ததே 2009 இறுதியில் தான்). பாஸ்கர்சக்தியின் அழகர்சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாகப் பார்த்ததும் இது போன்ற நல்ல கதைகளையும் திரைப்படமாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது.

ஜெயமோகனின் ‘கொற்றவை’ வாசித்த அனுபவத்தை எழுத்தில் பதிவதுகூட சிரமமென நினைக்கிறேன். சிலப்பதிகாரக் கதையினூடாக சங்க காலத்திலிருந்து இன்றைய காலம் வரையிலான அற்புத பயணமாக கொற்றவையை படைத்திருக்கிறார்.  அடுத்து விஷ்ணுபுரம். இவருக்கு இவையெல்லாம் எழுத எங்கிருந்து சொற்கள் வந்து விழுகின்றன எனத்தெரியவில்லை. அனுபவம், வாசிப்பு, பயணம் இவைகளோடு தமிழ் தந்த கொடை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும், தமிழ் இவர்கள் எழுதத் தொடங்கியதும் ஆறாகப் பாயத்தொடங்கிவிடுகிறது என நினைக்கிறேன். கீழே இணைப்பில் உள்ள சுரேஷ்கண்ணனின் தளத்திலிருந்து அல்லது ஜெயமோகன் தளத்திலிருந்து மத்தகம் என்னும் குறுநாவலை வாசிங்க. இப்பவே கேசவன் துதிக்கையை உங்களை நோக்கி நீட்டி கொண்டுதானிருக்கிறான்!

http://pitchaipathiram.blogspot.com/2008/12/blog-post_17.html

http://www.jeyamohan.in/?p=7209              

 அழகர்சாமியின் குதிரை கதைக்கான இணைப்பு

https://thoguppukal.wordpress.com/2011/02/24/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be/

பின்னூட்டங்கள்
 1. மதுரை சரவணன் சொல்கிறார்:

  நல்ல விமர்சனம்… வாழ்த்துக்கள்

 2. radhakrishnan சொல்கிறார்:

  nalla padivu.ippothe maththakaththirkkuppokiren.

 3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  மிக மிக இரசித்துப் படித்தேன் – வாசிப்பனுபவமும் எழுத்தும் பிரமிக்க வைக்கிறது. மத்தகம் முதலிரண்டு அத்தியாயங்களின் சுட்டிகள் – அத்தியாயங்க்ளைத் தரவில்லை – ஆவலைத் தூண்டும் மத்தகம் படிக்க இயல்வில்லை. சரியான சுட்டி இருப்பின் தரவும். அல்லது தரவிரக்கம் செய்ததை எனக்கு அனுப்பவும் – நான் படிக்க வேண்டும். அல்லது புத்த்கமாக இருப்பின் மிக நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s