நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும்

Posted: ஜூன் 19, 2011 in நாட்டுப்புறவியல், வழியெங்கும் புத்தகங்கள்

நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் விடுகதைகள், பழமொழிகள், சொலவடைகள் எல்லாம் எளிய மக்களின் வாய்மொழி இலக்கியங்கள்.

‘பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொல் அவ்வேழ் நிலத்தும்’ – தொல்காப்பியம்.

இதில் பிசி என்பது விடுகதையையும், முதுசொல் என்பது பழமொழியையும் குறிக்கும். நா.வானமாமலை போன்ற ஆய்வாளர்களிருந்து பலர் அழிந்துவரும் நாட்டுப்புறப்பாடல்கள் போன்றவற்றைத் தொகுத்து ஓரளவு அழிவிலிருந்து காப்பாற்றியுள்ளனர். மதுரை காமராசர் பல்கலைக்கழக தொலைநிலைக்கல்வி பொதுத்தமிழ் புத்தகத்திலிருந்து கீழ் உள்ள நாட்டுப்புறப் பாடல்களை பதிவிட்டிருக்கிறேன். பாடலைத் தொகுத்தவர்களுக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திற்கும் நன்றிகள் பல.

தாலாட்டு

ஆரடித்தார் ஏனழுதாய்

அடித்தாரைச் சொல்லியழு

கண்ணே என் கண்மணியே

கடிந்தாரைச் சொல்லியழு!

விளக்கிலிட்ட வெண்ணையைப் போல்

வெந்துருகி நிற்கையிலே

கலத்திலிட்ட சோறது போல்

கண்கலக்கந் தீர்த்தாயே!

கொப்புக் கனியே

 கோது படா மாங்கனியே!

வம்புக் கழுதாயோ

வாயெல்லாம் பால்வடிய;

மாமன் அடித்தானோ

மல்லிகைப்பூச் செண்டாலே!

அத்தை அடித்தாளோ

அல்லி மலர்ச் செண்டாலே!

அடித்தாரைச் சொல்லியழு

ஆக்கினைகள் செய்துவைப்போம்

தொட்டாரைச் சொல்லியழு

தோள்விலங்கு போட்டு வைப்போம்.

வெண்ணெயால் விலங்குபண்ணி

வெய்யிலிலே போட்டுவைப்போம்

மண்ணால் விலங்கு பண்ணித்

 தண்ணீரில் போட்டு வைப்போம்.                    

தொகுப்பு. தமிழண்ணல்

 மழைப்பாடல்

இந்த மழையை நம்பி

இருங்கு சோளம் நான் விதைத்தேன்

வந்த மழை போகுதில்லோ

வருண பகவானே

வந்த மழை போகுதில்லோ

மந்தையாத்தாள் கண்பார்

அடுத்த மழை போகுதில்லோ

அய்யனாரே கண்பார்

 கண்ட மழை போகுதில்லோ

காணியாளா கண்பார்

 சொன்ன மழை போகுதில்லோ

சோணை ஐயா கண்பார்

 மந்தையிலே மாரியாயி

மலைமேலே மாயவரே

 இந்திரரே சூரியரே

இப்ப மழை பெய்ய வேணும்

மலையாள பகவதியே

மனங்குளிர்ந்த கூத்தனாச்சி

மழையை இறக்கி விடு

மானுடங்க கையெடுக்க.                      

தொகுப்பு.சண்முகசுந்தரம்

 தெம்மாங்குப்பாடல்

சம்பா வித போட்டுச்

சரியான நாத்து விட்டுப்

பம்பாயி சீலைக்காரி

பக்குவமா நட்டு வாடி

மண்வெட்டி தோளிலிட்டு

 மடைதிறக்கப் போறவரே

 மடையைத் திறந்து விடு

மங்கையர்கள் நாத்து நட

நாத்தரிச்சு நானறியேன்

நடவு நட்டுத் தானறியேன்

சேத்துக் குள்ளே நானிறங்கிச்

செல்ல முகம் வாடுறேனே

நட்ட நடுவிருக்க

நாலு பக்கம் தொளிகிடக்க

நாத்தரிக்கத் தெரியாமே

நடக்கலாமோ ரோட்டு வழி

உழுது தொளி கலக்கி

ஒண்ணு ரெண்டா நாத்தரிச்சு

பழுது படாமலிங்குப்

பக்குவமா நட்டு வாங்க!

உள்ளான் உழுது வர

ஊர்க்குருவி நாத்தரிக்க

நாரை பரம்படிக்க

நட்டுவாடி குட்டப்புள்ளே.                      

தொகுப்பு. செ.அன்னகாமு.

 

 தாய்மாமன் சீர்

என்னரசு காதுகுத்த என்ன சீர் வேணுமின்னு,

 மண்ணில்லா நல்லவெல்லம் மறுவில்லாப் பச்சரிசி

எள்ளு இருகலங் எளந்தேங்கா முந்நூறு

பாக்கு பதின்பலம் பச்சரிசி முக்குருணி

காதுகுத்த வாராக கருணரே ஒம்மாமன்

 சீலைகொண்டு வாராக சேவுகரே ஒம்மாமன்

பட்டுக்கொண்டு வாராக பாண்டியரே ஒம்மாமன்

பட்டெடுத்தா தொட்டி கட்ட – பசும்

பொன்னடுத்தா காதுகுத்த                 

தொகுப்பு. சரசுவதி வேணுகோபால்

ஒப்பாரி

ஆளக் கெணறுவெட்டி – என்னப் பெத்த அம்மா

அடி வரிசை கல்பாவி

ஆளமின்னும் பாராம – என்னெ

அமுக்கினீங்க கங்கையிலே

 நீளக் கெணறு வெட்டி – என்னப் பெத்த அப்பா

நெடுவரிசை கல்பாவி

நீளமின்னும் பாராம – என்னெ

நிறுத்தினீங்க கங்கையிலே                

தொகுப்பு. சரசுவதி வேணுகோபால்

 விடுகதைகள்

 1. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்? இளநீர்
 2. ஊரெல்லாம் ஒரே விளக்கு அதற்கு ஒரு நாள் ஓய்வு அது என்ன? நிலா
 3. நாலு காலுண்டு, வீச வாலில்லை அது என்ன? நாற்காலி
 4. சிவப்பு நிற காளை, நீரென்றால் பகுங்கும் காளை அது என்ன? நெருப்பு
 5. கடல் நீரில் வளர்ந்து மழை நீரில் மடிவது என்ன? உப்பு
 6. ஆடி ஓய்ந்த பின் அம்மணி வருவாள், அவள் யார்? ஆவணி
 7. காலடியில் கிடக்கிறானே என்று இவனை உதைக்க முடியாது, அவன் யார்? முள்
 8. நனைந்தாலும் நடுங்க மாட்டான் அவன் யார்? குடை
 9. அடித்தாலும் உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்? பந்து
 10. தலையில் ஏறும் மாடு, சுருண்டு பிடிக்கும் மாடு அது என்ன மாடு? சும்மாடு
 11. கிட்ட இருக்குது பட்டணம், எட்டித்தான் பார்க்க முடியவில்லை. அது என்ன? முதுகு
 12. ஈட்டிப் படை வென்று காட்டுப் புதர் கடந்தால் இனிப்போ இனிப்பு அது என்ன? பலாப்பழம்
 13. ஓயாது இரையும் எந்திரமுமல்ல; உருண்டோடி வரும் பந்துமல்ல. அது என்ன? கடல் அலை
 14. அவன் கழற்றிய சட்டையை அடுத்தவர் போட முடியாது. அவன் யார்? பாம்பு
 15. இரவல் கிடைக்காதது, இரவில் கிடைப்பது அது. என்ன? தூக்கம்
 16. முயல் புகாத காடு எது? முக்காடு
 17. அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன? நெல்
 18. பையில் இது இருந்தால் வேறு எதுவும் இருக்காது அது என்ன? கிழிசல்
 19. மாரி இல்லாமல் ஆமைக்கெட்டது, ஆமை இல்லாமல் சீமை கெட்டது அது என்ன? வேளாண்மை
 20. சேர்த்து வைத்துக்கொள் என்றால் கேட்காது அவ்வப்போது வேண்டுமென்று அடம் பிடிக்கும் அது என்ன? வயிறு
 21. காலில்லாத பந்தலைப் பார்க்க பார்க்க விநோதம் அது என்ன? ஆகாயம்
 22. சிலுத்த சிலுத்த தண்ணீரில் செம்மறி ஆடு மேயுது அது என்ன? குழிப்பணியாரம்
 23. தூங்கும் போது வருவான் தூக்கமெல்லாம் கலைப்பான் அவன் யார்? கனவு
 24. பகலில் தூங்கி இரவில் முழிப்பான் அவன் யார்? விண்மீன்கள்
 25. நீரில் உள்ள கல் எது? கடல்
 26. சின்ன தெங்காரம் வீடெல்லாம் சிங்காரம் அது என்ன? தீபம்
 27. காய்க்கும் பூக்கும் சலசலக்கும் காக்காய் உட்கார இடமில்லை அது என்ன? நெல்கதிர்
 28. காது இரண்டுடையான் கனத்த பாரம் தாங்குவான் அவன் யார்? பை
 29. நெடுக வளர்ந்தவனுக்கு நிழல் இல்லை அது என்ன? தார்ரோடு
 30. நல்ல பொண்ணு உத்தமிக்கு நடுக்குடலில் ஓட்டை அது என்ன? வடை
 31. எத்தனை பேர் ஏறினாலும் சலிக்காத குதிரை அது என்ன? திண்ணை
 32. வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தம்பி யார் அந்த தம்பி? மழை
 33. குழந்தைக்கு எந்தக் கை பலமான கை? அழுகை
 34. ஆயிரம் பேர் அணிவகுத்து வந்தாலும் சிறு தூசி கூட கிளம்பாது அது என்ன? எறும்புக்கூட்டம்
 35. பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன? தேங்காய்
 36. கடித்தால் துவர்ப்பு தண்ணீர் குடித்தால் இனிப்பு அது என்ன? நெல்லிக்காய்
 37. காய்த்த மரத்தில் கல்லெறிந்தால் காவல்காரர்கள் பாய்ந்து தாக்க வருவார்கள். யார்? தேன்கூடு, தேனீக்கள்
 38. வேண்டுதலுக்கு முதல் பலி இவன் தான் அவன் யார்? தலைமுடி
 39. சடக்கென்று வருவான் சத்தமிட்டுப் போவான் அவன் யார்? தும்மல்
 40. அவன் இருக்கும் இடத்தில் அடுத்த எதுவுமே இருக்காது அது என்ன? ஓட்டைப்பானை
 41. கடல் இருக்கும் தண்ணீர் இருக்காது. நாடு இருக்கும் வீடு இருக்காது. அது என்ன? உலக வரைபடம்
 42. வாரி வாரி வழங்குவான் வெளிச்சம் அதை வாங்கத்தான் ஆளில்லை அவன் யார்? மின்னல்
 43. கட்டை போலிருந்தவனை வெட்டிப்பிழிந்தால் ருசியோ ருசி அவன் யார்? கரும்பு
 44. அறுக்க உதவாத கருக்கு அரிவாள் எது? பிறைச்சந்திரன்
 45. உரசினால் போதும் ஒட்டிக்கொள்ளும்? நாயுருவி
 46. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? விரல்கள்
 47. ஒரு கிணற்றில் ஒரே தவளை அது என்ன? நாக்கு
 48. சின்ன சாத்தான் வயிறு பெருத்துச் செத்தான்? பருத்திக்கொட்டை
 49. வளைக்க முடியும் ஒடிக்க முடியாது? தலைமுடி
 50. ஊளையிடும் ஊரைச் சுமக்கும்? ரயில்

விடுகதைகள் மலிவுப்பதிப்பாக வீதியில் கிடைக்கும் புத்தகத்தில் வாங்கினேன். இதில் ஆயிரத்துக்கும் அதிகமான விடுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியர் ஆறுமுகசாமிக்கு நன்றி. மேலும், குறைந்த விலையில் இது போன்ற நல்ல புத்தகங்களை பதிப்பிக்கும் சிவகாசி பதிப்பகத்தாருக்கும் நன்றிகள் பல. இதில் ஐந்து ரூபாய்க்கு நிறைய சிறுவர் கதைகள் புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.

சொலவடைகள்

 • பேச்சப்படிச்ச நாயி வேட்டைக்கு உதவாது
 • வெளக்கமாத்த தின்ன கழுத ஈக்கி ஈக்கியாத்தான் வெளியிருக்கும்
 • உழக்கு அரிசி அன்னதானம் விடியவிடிய மேளதாளம்

மேலும், சொலவடைகள் குறித்து ச.தமிழ்ச்செல்வன் எழுதிய பதிவைப் பார்க்க சித்திரவீதியிலிருந்து தமிழ் வீதிக்கு செல்வதற்கான இணைப்பு: http://satamilselvan.blogspot.com/2009/04/blog-post_06.html

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  அடிப் பாதகத்தி! எந்தக் கிழவியோ செத்ததுக்கு ஒப்பாரி வைக்கயில புருசனைப் போட்டு இந்த தாக்கு தாக்குறாளே!

  “அந்தா போறான், இந்தா போறான், ஆளைக் காணோம். அவன் யார்?”, “வாழைக்காய் வண்டியும், தேங்காய் வண்டியும் சந்தைக்குப் போச்சு. வாழைக்காய் வண்டி உள்ளே போயிருச்சு, தேங்காய் வண்டி வெளியவே நின்னுருச்சு. அது ஏன்/ என்ன?” போன்ற விடுகதைகளையும்; “ஒருமிளகு/ சிறுமிளகு/ சாட்டைக்கா/ பூட்டைக்கா/ குச்சிக்கா/ குசிவினிக்கா”, “தட்டெடுக்க/ தகர(ம்) எடுக்க/ பீயள்ள/ கரைக்க/ குடிக்க” போன்ற குழந்தைப் பாடல்களையும் தொகுப்பதற்கு யாராவது முன்வரத்தான் வேண்டும்.

 2. babu சொல்கிறார்:

  very good articles
  thanks for sharing

  Babu
  contactbabu@yahoo.com

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s