நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் புத்தகத் திருவிழா

Posted: ஜூன் 19, 2011 in நான்மாடக்கூடல், வழியெங்கும் புத்தகங்கள்

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒரு பறவை. அது ஒரு கிளையில் வந்து அமர்ந்து இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வசீகர வண்ணமும் இனிமையான குரலும் இருக்கிறது. அவை ஒன்றாகத் தங்களுக்குள் பாடியபடி இருக்கின்றன. அப்படியானால், அந்த இடம் எப்படி இருக்கும்? எவ்வளவு தூரம் நம் மனதை அது களிப்பூட்டும்? அப்படித்தான் இருக்கிறது புத்தகக் கடையின் உள்ளே இருக்கும்போது.

-எஸ்.ராமகிருஷ்ணன் (சிறிது வெளிச்சம்)

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மதுரை மேலக்கோபுர வீதியில் (மேலமாசி வீதியில் இருந்து மேற்கு கோபுரம் செல்லும் வழியில்) உள்ளது. இங்கு கலை, இலக்கியம், அறிவியல், தத்துவம், சமூகவியல், சிறுவர்களுக்கான நூல்கள் மற்றும் இலக்கிய மாத இதழ்கள் அனைத்தும் கிடைக்கும். மாதம் ஒருமுறை சென்று புதிதாக என்ன புத்தகம் வந்திருக்கிறது என பார்க்கவும், வாங்கவும்  இங்குதான் செல்வேன்.  

தற்போது நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வைரவிழா ஆண்டை ஒட்டி புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. 10% முதல் 60% வரை புத்தகங்களுக்கு தள்ளுபடி. நானும் சகோதரனும் சென்றிருந்தோம். நிறைய புத்தகங்கள் வாங்கணும்னுதான் ஆசை. ஆனால், கையில் இருக்கும் இருநூறு ரூபாய்க்குள்தானே வாங்க முடியும். உயிர்மையில் நடுப்பக்கத்தில் வரும் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் படித்துப் படித்து அவரது கவிதைகளின் தீவிர வாசகனாகிவிட்டேன். எனவே, ‘இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்’ என்ற கவிதைத்தொகுப்பு வாங்கினேன். சகோதரர் நா.மம்மது எழுதிய ‘தமிழிசை வேர்கள்’ என்ற புத்தகம் வாங்கினார்.

நியூ செஞ்சுரி புக் ஹவுசிலிருந்து நல்ல புத்தகங்களைப் பதிப்பித்தும் வருகிறார்கள். சங்க இலக்கியங்களை மொத்தமாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். நிறைய நல்ல மொழிபெயர்ப்பு நூல்களை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டிருக்கிறார்கள். NCBH வெளியீடான தொல்லியல் சுவடுகள் (வேதாச்சலம்) என்னும் நூல் இங்குதான் வாங்கினேன். நியூ செஞ்சுரி உங்கள் நூலகம் என்ற மாத இதழும் வருகிறது. இதை இணையத்தில் கீற்று தளத்திலும் (www.keetru.com) காணலாம். நான் பாலிடெக்னிக் படிக்கும்போது மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் புத்தகத் திருவிழா நடத்தினார்கள். அப்பொழுதெல்லாம் தினமும் போய் பார்த்து சில புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். புத்தகங்களைப் பற்றி தொலைக்காட்சிகள் பேசப் போவதில்லை. நகைக்கடைகள், துணிக்கடைகளுக்கு விளம்பரம் செய்வதற்கே தொலைக்காட்சிகளுக்கு நேரம் போதவில்லை. எனவே, நாம்தான் புத்தகங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும்.

ஒரு நகரின் மக்கள்தொகைக்கும் அங்கு உள்ள புத்தகக் கடைகளின் எண்ணிக்கைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் மிகப் பெரிய இடைவெளி இருப்பதைக் கண்கூடாக உணர முடிகிறது. எல்லா ஊர்களிலும் புதிது புதிதாக உணவகங்கள், ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள், நகைக்கடைகள், அலங்காரப்பொருள் அங்காடிகள் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், புத்தகக்கடைகளின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது

என எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது முற்றிலும் உண்மை.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் வருடா வருடம் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் புத்தகத்திருவிழா நடத்துகிறார்கள். மதுரைவாழ் நண்பர்களும் மற்ற ஊர் நண்பர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம். ஆகவே நண்பர்களே புத்தகங்களோடு புத்தகக்கடைகளையும் பற்றி பேச வேண்டியிருக்கிறது.

நியூ செஞ்சுரியின் புதிய வெளியீடுகள் சில: தொல்காப்பியநன்னூல், சங்க இலக்கியத்தில் வேளாண் சமுதாயம், இந்திய ஆறுகள், சங்க இலக்கியத்தில் குடும்பம், நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம், அண்ணல் அம்பேத்கரின் கலை இலக்கியப்பார்வை, சங்கச்செல்வி, பொதுவுடைமை வளர்த்த தமிழ், தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும், பண்டைத் தமிழ்ச்சமூகம், சங்க இலக்கியத்தில் மக்கட்பெயர் அடைகள், சங்க இலக்கியமும் பண்பாட்டுச் சூழலியலும், சோமநாதபுரம், தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்…..

மதுரை, சென்னை அம்பத்தூர், அசோக்நகர், திருவான்மியூர், திருச்சி, தஞ்சாவூர், பாண்டிச்சேரி, திருநெல்வேலி, திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம், ஓசூர், ஊட்டி மற்றும் வேலூரிலும் நியூசெஞ்சுரி புக்ஹவுஸிற்கு கிளைகள் உண்டு. அங்கும் புத்தகத் திருவிழா நடைபெறலாம். போய் பாருங்கள், வாங்குங்கள்.

மதுரையில் உள்ள புத்தக நிலையங்கள், பழைய புத்தகக் கடைகள் எல்லாவற்றையும் பற்றி விரைவில் பதிவு செய்ய வேண்டும். நிறைய புத்தகங்களை வாங்குங்கள்! புத்தகங்களை வாசியுங்கள்! புத்தகங்களைப் பற்றி பேசுங்கள்! புத்தகங்களைப் பரிசளியுங்கள்!   புதிய சமுதாயம் மலரட்டும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s