யானைமலைக்கு நேர்ந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து இப்போது மதுரை மேலூர் அருகிலுள்ள அரிட்டாபட்டி மலையும் “மலைமுழுங்கி மகாதேவன்”களான கிரானைட் வியாபாரிகளின் கையில் சிக்கி அறுபடத் தொடங்கியுள்ளது (நீதிமன்ற இடைக்காலத் தடை பெறப்பட்டு தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது).
அந்த மலை ஏன் காப்பாற்றப்பட வேண்டும் என, கடந்த ஞாயிறன்று (26 ஜூன் 2011) பசுமை நடையில் கலந்துகொண்ட நண்பர் உண்டுவளர்ந்தான் பட்டியலிட்ட காரணங்கள் கீழே (அவரது சொற்களிலேயே):
-
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமணர் படுக்கை, தமிழ் பிராமி கல்வெட்டு; ஏறத்தாழ ஆயிரத்து முன்னூறு ஆண்டுகள் தொன்மை வாய்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு மற்றும் பாண்டியன் குடைவரைக் கோயில் ஆகிய வரலாற்றுக் கருவூலங்கள் இம்மலையில் உள்ளன. இவை அவ்வூர் மக்களுக்கு மட்டுமானவையோ, தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமானவையோ அல்ல – மனிதகுலத்திற்கே பொதுவானவை; அவர்களால் முனைந்து பாதுகாக்கப்பட வேண்டியவை.
-
இம்மலையின் இரு குன்றுகளுக்கு இடையே தேங்கும் நீர் சிற்றருவியாக இறங்கி தெப்பத்திலும், ஏந்தலிலும் பின் கண்மாய்களிலும் நிரம்பி அழகர்கோயில் மலையில் இருந்து வரும் சிலம்பாற்றுடன் சேர்ந்து வைகையில் கலக்குமுன் வழியில் பல ஏக்கர் வயல்களை வளப்படுத்தி வேளாண் தொழிலுக்கு ஆதாரமாய் உள்ளது.
-
இம்மலை இருந்தால் மட்டுமே, ஆற்றையோ, கிணற்றையோ, கண்மாயையோ சார்ந்திராமல் அரிய வகை “ஊற்றுப் பாசனத்தால்” முப்போகம் விளையும் இவ்வூர் வயல்கள் தொடர்ந்து இருக்க முடியும்.
-
கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாயும் திகழும் இம்மலைப்பகுதி இம்மக்கள் வாழ்வின் பிரிக்கமுடியாத அங்கம்.
-
சிவன் கோயிலுக்குத் தீர்த்தமாயும், சுவையான குடிநீராயும் பயன்படும் அருமருந்தான நீர் தரும் வற்றாத சுனை ஒற்று இம்மலையின் இடுக்கொன்றில் உள்ளது.
-
‘அரவான்’ படப்பிடிப்பை இந்த மலையில் வைத்து நடத்தியாயிற்று. அடுத்து இதுபோன்ற படங்களுக்கு எங்கே செல்வது?
-
இந்த ஊர்க்காரர்கள் ஏதாவது நல்ல விலை பெற்றுக்கொண்டு விட்டுத்தருபவர்கள் அல்லர் – எந்த விலை கொடுத்தேனும் மலையைக் காப்பாற்ற நினைப்பவர்கள். அவர்களுக்கு எதுவும் இழப்பு நேர அனுமதிக்க முடியாது.
-
அந்த மலையின் ஒரு சிறுபாறை போன்ற ஒரு கல்லைக்கூட எந்தக் கொம்பனாலும் வாழ்நாள் முழுதும் வருந்தி உழைத்தாலும் உருவாக்கிவிட முடியாது.
-
குளக்கரையை விழுந்து வணங்கும் வழக்கமுடைய கிழவிகளின் குலவைச் சத்தத்தினூடே, அக்கரையின் மரத்தடியில் அமர்ந்து குறிசொல்லும் கோடாங்கியின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.
-
மதுரையைச் சுற்றி கல்லாகச் சமைந்துவிட்ட யானையையும், பாம்பையும், மாட்டையும் உசுப்பேற்றி வருகிறோம். அவை உயிர்பெற்று வெறிகொண்டு வரும் நாளில் யாரும் எதிர்நிற்க முடியாது.
மதுரையைச் சுற்றி கல்லாகச் சமைந்துவிட்ட யானையையும், பாம்பையும், மாட்டையும் உசுப்பேற்றி வருகிறோம். அவை உயிர்பெற்று வெறிகொண்டு வரும் நாளில் யாரும் எதிர்நிற்க முடியாது.” அருமையான வரிகள்.
இயற்கையை புரிந்து கொள்ளாமல் அவற்றை சிதைக்கும் மக்களை அந்த இயற்கை ஒரு நாள் வாரிச்சுருட்டி கொண்டு போகத்தான் போகிறது.
பணத்திற்கு ஆசைப்படாத அந்தகிராம்மக்களுக்கு வணக்கங்கள்.
Nature is property of God. No man can touch His property(nature). if anybody touch His property (nature) One day Nature will destroy Him.