தமிழ்ச்சமணம் – தமிழ்ச்சமணனின் வலைப்பூ

Posted: ஜூலை 10, 2011 in பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

திங்கள்மூன்று அடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச்
செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து
கோதைதாழ் பிண்டிக் கொழுநிழல் இருந்த
ஆதியில் தோற்றத்து அறிவனை வணங்கிக்
கந்தன் பள்ளிக் கடவுளர்க்கு எல்லாம்

-சிலப்பதிகாரம்.

பூமலி அசோகின் புனைநிழல் அமர்ந்த
நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே

– நன்னூல்

மதுரையும் தமிழும் எனக்குத் தெய்வங்கள். அப்படியிருக்கையில் மதுரையின் தொன்மையைப் பறைசாற்றும் பல சான்றுகள் சமண சமயத்தைச் சார்ந்தவை என்று அறிந்ததும் சமணத்தின் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. ‘மதுரையில் சமணம்’ குறித்து பதிவிடத் தொடங்கியவுடன் சமணர்படுகைகள் நோக்கிச் செல்லவும், வாசிக்கவும் தொடங்கி விட்டேன். அப்படி இணையத்தில் தமிழ்ச்சமணம் குறித்து தேடியபோது சென்னையைச் சேர்ந்த இரா.பானுகுமார் என்பவர் தமிழ்ச்சமணம் என்றே தனிவலைப்பூ எழுதி வருவதைப் பார்த்தேன். “தமிழின் இனிமையை தனியாய் உணர்ந்தோர் வழிவந்த தமிழ்ச்சமணனின் வலைப்பூவிது” என்ற வரியைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ்ச்சமணம் தளம் பார்த்து சமணம் குறித்து நிறைய அறிந்து கொண்டேன். பல ஐயங்கள் நீங்கின. ஒவ்வொரு பதிவும் பல சான்றுகளுடன் உள்ளன. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பதிவு தான் இது.

திருக்குறள் சமணநூல் என்பதையும், திருவள்ளுவர் சமணர் என்பதையும் ஆதாரத்துடன் குறிப்பிடுகிறார். திருக்குறள் சைவம் சார்ந்தது என்பதை ஆதாரத்துடன் மறுக்கிறார். திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் வரும் ஆதிபகவன், மலர்மிசைஏகினான், வாலறிவன், அறவாழி அந்தணன், ஐந்தவித்தான், எண்குணத்தான், வேண்டுதல் வேண்டாமையினான் போன்ற வரிகள் சமணத்தீர்த்தங்கரர்களையே குறிப்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறார். மேலும், திருக்குறள் சமணநூல்தான் என்று கூறிய தமிழறிஞர்களின் பட்டியலையும் தருகிறார். பரிமேலழகர் உரை நடுவு நிலையிலிருந்து வழுவும் இடங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலப்பதிகாரம் பௌத்தகாப்பியம் என்றே இதுவரை நினைத்திருந்தேன். ஆனால், இப்பொழுது அது சமணகாப்பியம் மற்றும் இளங்கோவடிகள் சமணரென்றும் அறிந்துகொண்டேன். மேலும், சரஸ்வதி வழிபாடு, தீபாவளி, அட்சயதிருதியை போன்றவை எல்லாம் சமணத்திலிருந்து வந்தவை என்பதை இத்தளம் மூலம் அறிந்து கொண்டேன். “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்”  என்ற அடியிலிருந்து தொல்காப்பியர் சமணர் என்பதை நிறுவுகிறார்.

ஓம் என்னும் பிரணவ மந்திரம் சமணர்களின் பஞ்சமந்திரத்தின் சாரம் என்கிறார். சிவபெருமானுக்கும் ஆதிநாதருக்கும் உள்ள ஒற்றுமைகளை ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார். சமணர்கள் தமிழில் இயற்றிய நூல்களின் பட்டியலை தந்திருக்கிறார். அதைக்காணும் போது சமணர்கள் தமிழின் வளர்ச்சிக்கு எவ்வளவு உதவி இருக்கிறார்கள் என்று புரியும். காப்பியங்கள், புராணங்கள், அறநூல்கள், இலக்கணநூல்கள், இசைநூல்கள், தர்க்கநூல்கள் மற்றும் பலநூல்களை சமணர்கள் தமிழில் இயற்றியுள்ளதை சுட்டிக்காட்டுகிறார். இலங்கையில் சமணர்கள் இருந்தற்கான சான்றுகளை விவரிக்கிறார்.

சமணத்தின் சுவடுகளை ஆசிவகம் என்று பேராசிரியர் நெடுஞ்செழியன் கூறுவதை மறுக்கிறார். மற்கலிகோசர் மகாவீரருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆசிவகம் என்னும் பிரிவை உருவாக்கினார். எனவே, ஆசிவகமும் வடக்கேயிருந்து வந்த மதம்தான். மேலும், சமணம் மீதான அவதூறுகளை மறுக்கிறார். சமணம் குறித்து அறிய அற்புதமான தளம். இத்தளத்திற்கு நான் சென்றது சுவாரசியமான விசயம். ஆனந்தவிகடனில் சாருநிவேதிதா மனங்கொத்திப்பறவை என்னுந் தொடர் எழுதும்போது குமரன் அவர்களின் கூடல் தளத்தை பற்றி குறிப்பிட்டு எழுதியிருந்தார். மதுரைக்காரரின் வலைப்பூ என்றதும் அதைப் போய்ப் பார்த்தேன். அங்கிருந்துதான் தமிழ்ச்சமணம் தளத்திற்கு வந்தேன். நன்றி! தமிழுக்கு பல தொண்டுகள் செய்த சமணர்கள் குறித்து நாம் அறிந்து கொள்வது நமது கடமை.

கடவுள், சமயம் குறித்த என்னுடைய எண்ணத்தை பிரதிபலிக்குமாறு எனக்கு பிடித்த ஆளுமைகள் சொன்ன வரிகளைக் கீழே காண்க:

ஒரே தெய்வக் கோட்பாடு என்பது அரசு உருவாக்கத்திற்குத் தேவையானது. ஒன்றே குலம்; ஒருவனே தேவன் என்பதெல்லாம் மக்கள் விரோதச் சித்தாந்தம் என்றே நான் கருதுகிறேன். இந்துத்துவவாதிகளைக் கேட்டால் ‘ஒன்றே குலம்; எல்லோரும் இந்தியர்’ என்கிறார்கள். ஆனால், பன்முகத் தன்மையுள்ள கலாச்சாரத்தைப் பேணிக் காப்பவை. இந்த நாட்டார் தெய்வங்கள், இந்தப் பன்முகத் தன்மையை எதிரொலிக்கிற வரையே சமூகம் ஜனநாயத் தன்மையுடன் இயங்கும், ஒரே கடவுளை எப்போது கொண்டு வந்து நிறுத்துகிறீர்களோ, அப்போது பலதரப்பட்ட, தெய்வங்களை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம். இன்றைய தேவை எல்லோரும் நூறுநூறு தெய்வங்களைக் கும்பிடுங்கள் என்பதுதான். ஏனென்றால் நூறுவகைப் பட்ட மனிதர்களை, நூறு வகைப்பட்ட நம்பிக்கைகளை, நூறுவகைப்பட்ட வழிபாட்டு முறைகளை நாம் அங்கீகாரம் செய்தாக வேண்டும். அப்படியிருந்தால் தான் நாம் சனநாயக ரீதியாக இயங்குகிறோம் என்று பொருள்.                 – தொ.பரமசிவன்

எனக்கு ஆத்திகமும் முக்கியமில்லை. நாத்திகமும் முக்கியமில்லை. மனிதம் தான் முக்கியம். அதைத்தான் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.                                                              – கமல்ஹாசன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s