இதயங் கவர்ந்த இடைக்காட்டூர் இருதயநாதர்

Posted: ஜூலை 28, 2011 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

இடைக்காட்டூர் தேவாலயம் அதன் தோற்றத்திலே தனித்துவமானதாகயிருந்தது. பாரீஸில் உள்ள புகழ்பெற்ற நார்ட்டர்டாம் தேவாலயத்தைப் போன்று அதே வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லியபடியே இந்த தேவாலயத்தைக் கட்ட காரணமாக இருந்தவர் அருட்தந்தை பெர்டினட் சிலோ என உள்ளே அழைத்துச் சென்றார் சேவியர். சிவப்பும் நீலமுமான கண்ணாடிகள் பதிக்கப்பட்ட சுவர்கள். அந்த கண்ணாடியில் வரையப்பட்ட ஒவியங்கள். இத்தாலியில் இருந்து கொண்டு வரப்பட்ட பியானோ மற்றும் இசைக்குறிப்புகள். இசை வாசிப்பவர்களுக்கான தனியான மேடையமைப்பு. இத்தாலிய கலை வேலைப்பாடுடன் அமைந்த கோதிக் வகை கட்டிடம். 1894 ஆண்டு பிரெஞ்சு கிறிஸ்துவ மிஷனரி இந்த தேவலாயம் உருவாக்கப்பட வேண்டும் என்ற முயற்சியைத் துவக்கியது. ஆனால் போதுமான நிதி ஆதாரம் கிடைக்கவில்லை. இதனால் பெர்டினட் தனது சொந்த ஊரான பிரான்சிற்குச் சென்று அங்கே மேரி ஆன் என்ற பணக்காரச் சீமாட்டியிடம் நிதி உதவி பெற்று இந்த தேவாலயத்தை உருவாக்கியிருக்கிறார். புரவலரான மேரி ஆனின் உருவச்சிலை ஒன்றும் அங்கே காணப்படுகிறது. பிரான்சில் உள்ள தேவாலயங்களில் உள்ள கண்ணாடி வேலைப்பாடுகளுக்கு சற்றும் குறைவில்லாதது இடைக்காட்டூர் தேவாலய ஒவியங்கள். பிரார்த்தனைக்கு மட்டுமே செல்லாமல் ஒரு நாள் ஒதுக்கி ஒவ்வொரு சுவரிலும் ஒவ்வொரு கண்ணாடியிலும் தீட்டப்பட்ட ஒவியங்களை, சிற்பங்களை நுணுக்கமாக நின்று நிதானித்து காணும்போதுதான் காலம் கடந்து நிற்கும் அதன் சிறப்பும் தனித்துவமும் புரியும். விருப்பமிருந்தால் சென்று பாருங்கள். 

–    எஸ்.ராமகிருஷ்ணன்

 

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘பிரார்த்தனைக்கு அப்பால்’ http://www.sramakrishnan.com/?p=365  என்ற கட்டுரை வாசித்த பிறகு இடைக்காட்டூர் செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். எண்ணம் நிறைவேற ஒன்றரை வருடம் ஆகிவிட்டது.

சமீபத்தில் ஒருநாள் மதியம் நானும் சகோதரரும் இடைக்காட்டூர்க்கு திடீர் பயணமாகக் கிளம்பினோம். பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து இடைக்காட்டூருக்கு நேரடியாகப் பேருந்துகள் உள்ளன. நாங்கள் போகும் போது அந்த பேருந்தும் போய்விட்டது. மதுரை பேருந்துநிலையத்தின் மதியக்காட்சிகளை எழுத்தில் வடிக்க முடியாது. வெயிலும், புழுக்கமும் பேருந்து உட்பட எல்லா இடங்களிலும் அப்பிக்கிடக்கும். திருப்புவனம் போய் அங்கிருந்து மாறிச்செல்லலாம் எனத் திருப்புவனம் வழிச்செல்லும் பேருந்தில் ஏறினோம். பின்னாடி இருக்கையில் அமர்ந்தால் அடிக்கிற காத்துல தூக்கம் சொக்கியது. சில நேரம் அசந்து பின்னாடி கம்பியில் மோதி முழிச்சுப் பார்ப்பேன். ஆனாலும், தூக்கம் விட்டபாடில்லை.

திருப்புவனத்தில் இறங்கி நிறம், திடம் போன்ற நற்குணங்களடங்கிய செவப்புநிறத் தேநீர் அருந்தினோம். தேநீர் தூக்கத்தை அடித்து விரட்ட பரமக்குடி பேருந்தில் ஏறினோம். பேருந்து முத்தனேந்தலில் நிற்க, இறங்கலாம் என்றால் அருகிலிருந்தவர் இடைக்காட்டூர் அடுத்த நிறுத்தம்தான் எனச் சொல்ல நம்பிக்கையின்றி அமர்ந்தோம். முத்தனேந்தலில் இருந்து இடைக்காட்டூர் ஒரு கிலோமீட்டர்தான். நினைச்சது போல மானாமதுரையில்தான் அடுத்து பேருந்து நின்றது. இறங்கிய சமயம் இடைக்காட்டூர்க்கு காரைக்குடி கோட்ட பேருந்து வர இதுவும் இருதயநாதர் சித்தம் என மகிழ்ந்து ஏறினோம்.

இடைக்காட்டூரில் இறங்கினால் அழகிய கிராமம். இந்த ஊரில் உள்ள ஓட்டு வீடாகட்டும் அல்லது காரை வீடாகட்டும் ஒவ்வொன்றும் கலைநயத்துடன் கட்டப்பட்டதாகவே தோன்றியது. வைகை கரையோரத்தில் உள்ளதால் ஊர் காண்பதற்கே மிகவும்  பசுமையாகயிருந்தது.

தேவாலயத்தின் முன்புறத்தோற்றம் அதன் பழமையைப் பறைசாற்றுவதாக உள்ளது. இத்தேவாலயத்தின் மரச்சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது. வாயில்களில் உள்ள கதவுகள் ஒவ்வொன்றும் தனி அழகுடன் விளங்குகிறது.

இடைக்காட்டூர் தேவாலயத்திற்குள் நுழைந்ததும் மதுரை கீழவாசலிலுள்ள தூயமரியன்னை தேவாலயத்திற்குள் நுழைந்தது போலவே இருந்தது.  நாங்கள் சென்ற நேரம் பாதிரியார் போன்றவர்கள் இல்லாததால் மிகவும் ரசித்துக் காண முடிந்தது. கோயில்களுக்குச் சென்றால் பூசாரியும், தேவாலயத்திற்குச் சென்றால் பாதிரியும் இல்லாமலிருந்தால் எனக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும். இறைவனுக்கும் நமக்கும் இடையில் இவர்கள் எதற்கு என்ற எண்ணம்தான். மற்றபடி அவர்கள்மேல் வெறுப்பெல்லாம் ஒன்றுமில்லை.

மரியன்னைக்கும், சூசையப்பருக்கும் நடுவிலிருந்து இருதயநாதர் கனிவோடு நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு கீழே உள்ள மரவேலைப்பாடுகள் அவ்வளவு நுட்பமாகவும் அழகாகவும் செதுக்கப்பட்டுள்ளது. அருகிலுள்ள தூணிலிருந்து இரண்டு தேவதைகள் இருதயநாதரை நோக்கி கையில் அழகான கண்ணாடி சரவிளக்குகள் ஏந்திக்கொண்டிருக்கின்றனர். இங்குள்ள ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பம் உயிரோட்டமாக தத்ரூபமாக இருப்பது அக்காலக் கலைஞர்களின் தொழில்திறமைக்குச் சான்றாக உள்ளது. ஒவ்வொரு சாளரத்திலும் உள்ள கண்ணாடி ஓவியங்களை பார்த்துக்கொண்டேயிருக்கலாம். வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம். அதிலும் நிலைவாசலுக்கு மேலுள்ள இயேசுவை பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.அந்த ஓவியத்தைக் காணும்போது  இயேசு உயிர்த்தெழுந்து வந்தது போலவே இருந்தது.

 

நிறைய படங்களை சகோதரரின் அலைபேசியில் எடுத்துக்கொண்டோம்.

இத்தேவாலயம் பிரான்ஸில் உள்ள நார்ட்டர்டாம் தேவாலயத்தின் கோட்டோவியத்தை கொண்டு அதே மாதிரி கட்டப்பட்டதாம். அக்கால கலைஞர்கள் தங்கள் தொழிலை எவ்வளவு நேசித்து இதை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை இன்று நாம் காணும்போதும் உணர முடிகிறது. இன்றும் இது போன்ற கலைஞர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்களை யாரும் அந்தளவு பயன்படுத்துவதில்லை அல்லது மதிப்பதில்லை எனலாம். எல்லாமே கருவிகள் மூலமே பாதி செய்யப்படுகிறது. இன்று இதயங்களைக்கூட இயந்திரங்களால் இயக்கிவிடலாமென்று இருக்கிறார்கள்.

தேவாலயத்திலிருந்து நாங்கள் வந்ததும் பேருந்து நிறுத்தத்தில் வைகை ரதம் (சொகுசு பேருந்து) நின்று கொண்டிருந்தது. நிற்கத்தானே செய்கிறது என்று அருகிலிருந்த கடையில் பவண்டோ வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தோம். அது பொறுக்காமல் ஓட்டுனர் போய் வண்டியை எடுத்து விட்டார். பின் அவசர அவசரமாக பவண்டோவை குடித்துவிட்டு ஓடிப்போய் பேருந்தில் ஏறினோம். வைகையை பேருந்து கடக்கும் போது இருபுறமும் மணல்வெளி. நகர்ப்பகுதிகளில் வைகை ஆறாக ஓடாத போதும்கூட மணலாக காணும் வாய்ப்பே இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். மண்ணைத்திருடுவது, குப்பைகளை கொட்டுவது, அமிலங்கலந்த கழிவு நீரை ஆற்றில் சேர்த்து குப்பைமேடாக அல்லது சாக்கடையாகத்தான் வையையை ஆக்கிவிட்டோம்.

வைகை சாக்கடையாகவே                                       

ஓடினால் நாளை நாம்                                            

குடிக்கிற தண்ணி                                                

மூத்திரம் மாதிரித்தானிருக்கும்!

(குறிப்பு: வைகைக்கு மட்டுமல்ல, உங்க ஊரிலுள்ள ஆற்றுக்கும் இந்தக் கதிதான். கவனம்.)

வைகை ரயிலாகவே                                             

ஓடினால் நாளை நாம்                                            

குடிநீர்க்கும் முன்பதிவு                                                 

செய்ய வேண்டியிருக்கும்!.

நதிக்கு ஆதாரமான மழைக்காடுகளை நாம் நாசமாக்கிவிட்டு வைகையை தோற்றுவித்த கதைக்கு சொந்தக்காரரான சொக்கநாதரையோ, வருடா வருடம் ஆற்றில் இறங்க வரும் திருமாலிருஞ்சோலை அழகரையோ, வைகை கரையோரத்தில் ஆலயம் கொண்டுள்ள இருதயநாதரையோ நாம் குறை சொல்ல முடியாது. வைகை மீண்டும் ஆறாக ஓடணும், ஓடும்.

ஆமென் !

பின்னூட்டங்கள்
 1. தொப்புளான் சொல்கிறார்:

  வைகைக் கரையில் வந்தமர்ந்தீரே, உமக்கு ஸ்தோத்திரம்!

  இரண்டு வாரங்களுக்கு முன்பு டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த அய்யப்ப மாதவன் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பாரதி கிருஷ்ணகுமார் “மறதி என்பதே பொய்தான். நினைவுகள் பாயத் தயாராயிருக்கும் புலியைப் போல மனதின் அடுக்குகளில் பதுங்கியிருக்கின்றன” என்கிற விதமாய் லா.ச.ரா எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டார். அதுபோல, இருதயநாதர் பற்றி படித்ததும், ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த ஜெபமாலை டீச்சரின் வகுப்பறையில் தொங்கவிடப்பட்டிருந்த மாத காலண்டரின் ஒளிவீசும் இருதயம் நினைவுக்கு வந்தது. சிறுவயதில் திருப்பதி சுற்றுலா சென்று திரும்பும் வழியில், அமர்ந்து மாலைப் பலகாரம் சாப்பிட்ட, திருச்சி அருகே இருந்த சிறிய சர்ச் ஒன்று நினைவுக்கு வந்தது. அமர்வதற்கு மேசைகளற்ற இந்த ஆலயத்தைப் பார்க்கும்போது கொல்கத்தாவின் மைதானுக்கு அருகே இருக்கும் ஒரு C.W.I (புனித பவுல் என்று நினைக்கிறேன்) தேவாலயத்தின் – தேர்வுக்கூடமே போன்று தோற்றமளிக்கும் – மேசைகள் நிரம்பிய அறை நினைவுக்கு வந்தது.

  // கோயில்களுக்குச் சென்றால் பூசாரியும், தேவாலயத்திற்குச் சென்றால் பாதிரியும் இல்லாமலிருந்தால் எனக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும் //

  நல்லவேளையாக இன்னும் பூசாரிகள் பிரசங்கம் செய்வதில்லை. பாதிரிகள் சன்னதம் கொள்வதில்லை. பூதிரிகளும், பாசாரிகளும் இதுகாறும் உருவாகாமல் இருப்பதற்கு கோட்டானுகோட்டி நன்றி யேசுவே, கோட்டானுகோட்டி நன்றி!

  // வைகை மீண்டும் ஆறாக ஓடணும், ஓடும். ஆமென் ! //

  ததாஸ்து

 2. Gell Prabhakaran சொல்கிறார்:

  very useful message i realy proud of you.

 3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார ,

  அருமையான பதிவு – கண்ணில் கண்ட புத்தகக் குறிப்புகளில் இருந்து – இடைக்காட்டூர் இருதய நாதர் கோவிலுக்குச் சென்று – கலைக் கண்ணோடு கண்டு – களித்து படமெடுத்து பதிவிட்டமை நன்று. ஒவ்வொரு நிமிடமும் வீனாக்காமல் – அத்தனையையும் பொறுமையாக் இரசிக்கும் ஆர்வம் பாராட்டத் தக்கது.

  இறைவனுக்கும் நமக்கும் நடுவில் யாரையும் அனுமதிக்கப் பிடிக்காத மனம் -. இருப்பினும் இருவருக்கும் இடையில் ஒருவர் இருந்தால் நலமாக இருக்குமோ என்ற எண்ணமும் வருகிறது.

  செல்லும் போது ஏற்படும் சிறு சிறு நிகழ்வுகளைக் கூட மகிழ்வுடன் விவரிக்கும் விதம் நன்று.

  தேவாலயத்தினைக் கண்டு பொறுமையாக இரசித்து மகிழ்ந்து பதிவினில் இட்டது பாராட்டத்தக்கது.

  வைகை இரதத்தில் வரும் போது வைகையினைக் கண்டு மனம் பொறுக்காமல் எழுதிய கவிதை வரிகள் நன்று. ஆனாலும் வைகைத் தண்ணி ………….. மாதிரித்தான் இருக்கும் . இச்சொல்லினைத் தவிர்க்கலாமே – தமிழுக்கு நேர்ந்து விடப்பட்டவனின் எழுத்தில் இச்சொற்கள் தேவை இல்லை. கோபமும் ஆதஙக்மௌம் இயலாமையும் சேர்ந்து எழுதும் போது உன்னையும் அறியாமல் அச்சொற்க்ள் வந்து விழுகின்றன. தவிர்க்க முயற்சி செய்.

  பேருந்தில் தூங்கியது – பின் மண்டை கம்பியில் மோதி அடிபட்டது – இடைக்காட்டூர் செல்வதற்கு எத்தனை பேருந்துகளில் ஏறி இறங்கி பவண்டோ குடித்து சிரமத்துடன் – ஆர்வம் துணைபுரிய சென்றது நன்று.

  உனது இரசிக்கும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கிறது.

  மிக மிக மகிழ்ந்தேன் .

  நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s