நம்மாழ்வார் உரை – உழவுக்கும் உண்டு வரலாறு

Posted: ஜூலை 28, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

சித்திரகாலி, வாலான் நெல், சிறைமீட்டான், மணல் வாரி, செஞ்சம்பா, கருஞ்சூரை, சீரகச்சம்பா, முத்துச்சம்பா, விளங்கி நெல், மலைமுண்டன், பொற்பாளை, நெடுமூக்கன், அரிகிராவிக் மூங்கிற்சம்பா, கத்தூரிச்சம்பா, வாணன்நெல், காடைக்கழுத்தன், இரங்கல் மீட்டான், கல்லுண்டை, பூம்பாளை, கடுக்கன் சம்பா, வெள்ளைச்சம்பா, புத்த நெல், கருங்குறுவை, புனுகுச்சம்பா – நெல்ரகங்கள்

குடைக்கொம்பன், செம்மறையன், குத்துக்குளம்பன், மேழை, குடைச்செவியன், குற்றாலன், கூடுகொம்பன், கருப்பன், மஞ்சள் வாலன், படைப்புப்புடுங்கி, கொட்டைப்பாக்கன், கருமறையன் பசுக்காத்தான், அணிற்காலன், படலைக்கொம்பன், விடத்தலைப்பூ நிறத்தான், வெள்ளைக்காளை – மாடுவகைகள்

முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளுவில் காணப்படும் நெல் ரகங்கள், மாடு வகைகள் எல்லாம் நாம் அறியாத அளவுக்கு பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்ற திட்டங்கள் நம் மரபுவழி இயற்கை வேளாண்மையைச் சீரழித்து விட்டது. நம் மரபு வழி வேளாண்மை குறித்து மதுரைப்புத்தகத்திருவிழாவில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஆற்றிய உரைதான் கீழே உள்ளது.

“உள்ளத்தில் மாசு படியும்போது அதை அகற்றும் கருவியாக புத்தகங்கள் செயல்படுகிறது. திருவள்ளுவர் ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு’ என்கிறார். நமக்குள் இருக்கும் அறிவை வெளிக்கொணரும் கருவியாக புத்தகங்கள் உள்ளன.

மரம், மாடு, கன்று தனியாக இருந்தால் அதை யாராவது சேர்த்து கொள்கிறார்கள். ஆனால், மனிதனில் மட்டும் அநாதைகள் இருக்கிறார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பே மாடுகட்டிப் போரடித்தால் நேரம் ஆகுமென்று யானை கட்டிப் போரடித்த மாமதுரை. உலகில் தோன்றிய முதன்மையான சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். ஐம்பது வருடமாக நிலத்தில் விஷத்தைப் போட்டுப் பயிரிடத் தொடங்கிவிட்டோம். முன்பு அவ்வைப் பாட்டி சொன்னாள் நெல்லுக்கு இரைத்த நீர் வாய்க்கால் வழியோடிப் புல்லுக்குப் போகும்; அதைப் பசுமாடு உண்ணும். அந்தப் பாலைக் குடித்து வளர்ந்த குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தன. ஆனால், இப்பொழுது பிறக்கும் குழந்தைகளில் 50% கண்பார்வை குறைவுடனும், 75% இரத்தசோகையுடனும் 5% குறைந்த எடையுடனும் பிறக்கின்றன. இதற்கு காரணம் இயற்கை விவசாயம் அழிந்தது தான். உலகில் பாதிப்பேருக்கு உணவு பத்தவில்லை. 85 கோடி பேர் பசியோடு உணவு இன்றித் தவிக்கிறார்கள். ஐந்தில் ஒரு இந்தியன் பசியோடு இருக்கிறான். இதைப் பற்றிய எந்த கவலையும் இல்லாமல்தான் இந்த சுகபோக வாழ்வை அனுபவித்து வருகிறோம்.

நமது பண்பாட்டை மறந்து நாகரீகம் என்று நாய் போல அலைகிறோம். 1905இல் இந்தியா வந்த ஆல்பர்ட் ஒவார்ட் என்ற ஆங்கிலேயர் இந்திய விவசாயத்தைப் பார்த்து வியந்து இனி இவர்கள்தான் என் ஆசிரியர்கள் என்றார். அவர் 1941இல் இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழக புத்தகத்தில் நம் விவசாய முறையே சிறந்தது என்கிறார். ஆனால், நாம் அதைப் படிக்கவில்லை. வெளிநாடுகளில் இருந்து வாங்கிப் பொழைக்கும் பிச்சைக்காரர்களாகவே நம் வாழ்க்கை மாறி வருகிறது. உலகின் மிக முக்கிய பிரச்சனை – பூமி சூடாகிறது. இரண்டாவது உணவுப் பற்றாக்குறை.

முதலில் நமக்கு டீசலைக் கொடுத்தான். எதுக்குன்னா “டிராக்டர்ல ஊத்து; மோட்டார் போட்டு தண்ணி எடு; தானியம் பெருகும்”னு சொன்னான். இப்ப தானியத்தைக் கொடுன்னு நம்மட்ட கேட்கிறான். எதுக்குன்னா டீசல் தயார் பண்ணவாம். இதுக்கா உழைக்கிறோம்? வெளிநாட்டுப் பொருளை நம்பி மேலும் அந்த கருவிகளை கொண்டு நிலத்தையே கெட்டியாக்கிட்டோம். சோளம், கம்பு, தினை போன்ற தானியங்களை பயிர் செய்து சாப்பிட்டு நன்றாக இருந்தோம். ஆனால், இன்று விளையும் மக்காச்சோளம் பாதி கோழிக்கும், பன்னிக்கும், மாட்டுக்கும் தீவனமா போகுது. நாம கோழியத் தின்னா சத்துன்னு நினைக்கிறோம். எதை எதையோ நாம ஆசைப்பட ஆரம்பிச்சுட்டோம். அமெரிக்கா போக ஆசை, நிலாவுக்கு போக ஆசைன்னு தேவையில்லாத ஆசை அதிகமாயிடுச்சு.

ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். நாம என்ன செஞ்சோம்? நல்லா வேடிக்கை பார்க்கிறோம். அரிசி, வெண்டிக்கா, கத்திரிக்கா எல்லாமே விஷமா மாறிட்டு வருது. திராட்சை எல்லாம் உரப்பொடி கலவைல பதினைந்து தடவையாவது ஸ்பிரே பண்றாங்க. நாம அரை கிலோ பத்து ரூபான்னு வாங்கி திங்கிறோம். பேருந்து நிலையத்துல இறங்குனா ஒரு சாப்பாட்டுக் கடை, மருந்துக் கடை, வட்டிக்கடை(பேங்க்) இருக்கும். எல்லாத்தையும் அனுபவிக்கிறோம். தண்ணி முன்னூறு அடிக்கு கீழ போயிருச்சு. அதையும் விஷமாக்கிட்டோம். முன்னால அரசர், அரசி, மக்கள் இடுப்புல இருந்து முழங்கால் வரை உடை போட்டார்கள். மேலே நகைகள் அல்லது மாலைகள் அணிந்து இருந்தார்கள். ரோமாபுரி யவனர்கள் உடம்பு முழுவதும் மூடி உடை அணிந்து இருப்பார்கள். இவர்கள் இங்கு காவல் புரிந்து வந்தனர். இப்ப எல்லாமே தலைகீழ். காவல்காரன் போட்டத நாம போட்டது மட்டுமில்லாம சாயம் போட்டு போட்டு கழிவு நீரெல்லாம் ஓடி காவிரி, பவானி, நொய்யல் எல்லாம் சாக்கடையா ஓடுது. வைகையில எல்லாம் கைய வைக்க முடியாது. அப்படி நீர்நிலையையெல்லாம் சாக்கடையா ஆக்கிட்டோம்.

சூழல் அறிவு இல்லை. உயிர் சூழலியல் (ECOLOGY). இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நல்ல சூழல் இருந்தது. திணைகளை உண்ண பறவைகளும், பறவைகளை பத்த காவலும் என இயற்கையாய் இருந்தது. இன்று உணவுக்குக் கையேந்த வேண்டி வந்துவிட்டது. பருத்தி 5-10% வரை போடுறோம். நூல் போக கொட்டைகளை மாட்டுக்கு போடுறோம். உரத்த போடாம பூச்சிக்கொல்லின்னு இங்கிலீஸ் விஷமா போட்டு ஏரி, புல் என எல்லாம் விஷமா மாறிடுது. கடைசில தாய்ப்பாலும் விஷமாயிடுச்சு. தரங்கெட்ட, ஈனமான இனமாக தமிழினம் மாறி வருகிறது.

முன்னாடி தட்டான் கொசுவைத் தின்று விடும். சிலந்தி அந்தைத் தின்றுவிடும். நாம போட்ட விஷத்தால எதிரிகள் சாவதற்கு பதிலா நண்பர்கள் செத்துப் போறாங்க. நாம உடம்பு சீக்காகி டாக்டர்ட்ட போய் அவர் குடும்ப டாக்டராகிவிடுகிறார். மருந்துகடைக்காரங்க சொந்தமாகிவிடுறாங்க. ஐ.நா சபைல உணவுப்பஞ்சத்தப் போக்க வழிகேட்டா நாலு ஆண்டு ஆராய்ச்சி பண்ணி தவளை மரபணுவ தக்காளில வைக்கிறானாம். உடையாதாம். இப்படி பல வித்தைகளை சொல்றாங்க. முக்கூடற்பள்ளுல பல விதை ரகங்கள சொல்றாங்க. இதுல சாப்பிட்ட நீராகாரம் நம்மவர்களின் உடலை வலு செய்தது. இப்ப ஐ.ஆர்.8,20,60 என நம்பர் போடுறான். மூணு வருசங்கூட தாக்குப்புடிக்க முடியல அந்த விதையால. மூன்றாம் உலகப்போர் 1960லயே வந்துருச்சு. அதுக்குப் பேரு பசுமைப் புரட்சி. ஆறு அறிவு இருக்க நாம உலகத்த அழிக்கிறோம். ஒரு அறிவு உள்ள மரம் தன் பழங்களை பறவைகள் உண்ணத் தருகிறது. அதன் எச்சம் மூலம் தன் இனத்தை வளர்க்கிறது. நாம இயற்கையை விட்டு விலகி எவ்வளவோ தூரம் வந்துட்டோம். இனியாவது இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்வோம். வீட்டுக்கு அருகில் மரங்களை பாருங்கள். பறவைகளைப் பாருங்கள். நல்ல புத்தகங்களைத் தேடி படியுங்கள்.”

புத்தகத்திருவிழாவில் நம்மாழ்வார் அய்யாவின் உரையை கேட்டு அவர் எழுதிய ‘உழவுக்கும் உண்டு வரலாறு’ என்னும் புத்தகம் வாங்கினேன். பசுமை விகடனில் நம்மாழ்வார் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நல்லதொரு நூலாக விகடன் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. 45 ரூபாய்.

ஜப்பானில் உதித்த விவசாய சூரியன் மசானோபு ஃபுகோக்கா போன்ற விவசாய ஆராய்ச்சியாளர்களிலிருந்து ராச்சேல் கார்சன், பில்மொல்லிசன், பாஸ்கர்சாவோ, கிளாடு பூரிங்கன், தபோல்கார், அமெரிக்கர் ரொடேல், கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ என நாம் அறியாமல் இருக்கும் பல இயற்கை விவசாய ஆராய்ச்சியாளர்கள், தலைவர்கள் குறித்து இந்நூலில் கூறுகிறார். ‘எந்தப் பலனையும் எதிர்பராது குஞ்சுக்கு உணவூட்டும் பறவை போன்று தாயன்புடன் செயல்படும் தொண்டர்களே’ என்று கூறி வழிகாட்டியாய் வாழ்ந்த ஜே.சி.குமரப்பா, ஈரோட்டில் ஒற்றை நாற்றுச் சாகுபடியை முப்பது ஆயிரம் ஏக்கர் அளவில் ஊக்குவித்துள்ள மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் போன்றவர்களோடு வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களே வியந்து போற்றிய நம் உழவர்களைக் குறித்து எழுதியிருக்கிறார். நரம்புத்தளர்ச்சி, மூச்சுத்திணறல், சிறுநீரகத்தில் கல்அடைப்பு, புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கும் பூச்சிக்கொல்லிகளில் உள்ள நஞ்சிற்கும் பங்குண்டு என்பதையும் கூறுகிறார். இயற்கை விவசாயத்திற்கு மண்புழுக்களிலிருந்து கால்நடைகள் வரை எப்படி உதவுகின்றது என்பதையும் அதனால் நமக்குக் கிடைக்கும் பயன்களையும் பட்டியலிட்டிருக்கிறார். உலகமயமாக்கலுக்கும், உலகவெப்பமயமாவதற்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறார்.

மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தலைவர்கள் மக்களின் நலனுக்காக உலகையே இரட்சிக்க பிறந்த அமெரிக்காவிலிருந்து விவசாயம் குறித்த சிந்தனைகளையும், இயந்திரங்களையும், இரசாயனங்களையும் கடனாய்ப் பெற்று மக்களின் பசிப்பணி போக்க பசுமைப்புரட்சி திட்டங்களை தீட்டி நம் மண்ணை மலடாக்கி, உணவை நஞ்சாக்கி மேலும், விவசாயிகளை கடனாளிக்கிய கதையைத்தான் இந்நூல் சுட்டிக்காட்டி நம் சொரணையைக் கொஞ்சம் உறைக்க வைக்கிறது. நெல் நட்ட இடங்களில் எல்லாம் கல் நட்டு விளை நிலங்களை எல்லாம் விலை நிலங்களாக்கி இனி உணவுக்காக வருங்காலத்தில் மற்ற நாடுகளை நோக்கி நாம் பிச்சையெடுக்கப் போவதைத்தான் சுட்டிக்காட்டுகிறது. லட்சக்கணக்கில் விவசாயிகள் கொத்துக்கொத்தாய் மடிந்தபோதும் மானாட மயிலாட, கிரிக்கெட்டு பார்த்து தறிகெட்டு கிடக்கும் நம் மனிதத்தை கேள்விக்குட்படுத்துகிறது. மேலும், புரட்சியெல்லாம் மக்கள் செய்ய வேண்டும் அரசு செய்தால் புரட்டாசி மாசம் சுண்டல் வாங்கக்கூடப் பயன்படாது என்பதை நம்மை உணரச்செய்யும் புத்தகம்.

நமக்கு நம்பிக்கை தரும் விசயம் என்னவென்றால் ‘உன்னால் முடியும் தம்பி’ கமல்ஹாசன் போல நிறைய பேர் தனியாக தீவிரமாக இயற்கை விவசாயம், மரம்வளர்ப்பு போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருவதுதான் நம்மை சுதந்திரமாக மூச்சு விடச்செய்கிறது.

இந்நூலை வாசிப்பதோடு நின்றுவிடாமல் நாமும் சில காரியங்களை செய்யலாம். குளிரூட்டபட்ட கடைகளில் கிடைக்கும் காய்கறிகள், ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பழங்கள்தான் தரமானவை என்ற மூட நம்பிக்கைகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு வீதியில் கூவி விற்றுவருபவர்களிடம் வாங்கலாம். நமக்கு தேவையான காய்கறிகளை நம் வீட்டிலேயே வளர்க்கலாம். மண்புழு வளர்ப்பு போன்ற பயிற்சிகளை கிராமத்தில் கொடுக்க ஏற்பாடு செய்யலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் அடுத்த தலைமுறையாவது இயற்கையோடு வாழ வழிவகை செய்யலாம். மேலும், இயற்கை விவசாயம் குறித்து அறிய பசுமை விகடன் போன்ற பத்திரிக்கைகள், புத்தகங்கள் வாசியுங்கள்.

கீழே உள்ள இணைப்புகளிலிருந்து விவசாயம் குறித்த தளங்களுக்கு செல்லுங்கள்.

முக்கூடற்பள்ளு குறித்து தனிப்பதிவில் பார்ப்போம். படங்களை தந்துதவிய கோயில்பாப்பாகுடி நண்பர்களுக்கு நன்றி!

 

எஸ்.ராமகிருஷ்ணன் தளத்தில் நம்மாழ்வார் உரை குறித்த ‘உயிர்க்கொல்லி’ பதிவை வாசியுங்க. http://www.sramakrishnan.com/?p=2471

‘செய் அல்ல செய்வோம்’ என இயற்கை விவசாயம் செய்யும் ஆர்கானிக் ஆனந்தின் தளம் http://organicananth.blogspot.com/

உழவன் http://tnvas-farmers.blogspot.com/

வேளாண்மை.காம் http://beta.velaanmai.com/

மருதம் http://marutam.blogspot.com/

விவசாயப் புரட்சி http://vellamai.blogspot.com/

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘கண்திறந்தது’ படத்திற்காக 1959ல் எழுதிய கீழ்க்கண்ட வரிகளோடு முடிக்கலாமென நினைக்கிறேன்.

எழுதிப் படிக்க அறியாதவன்தான்

உழுது ஒழச்சு சோறு போடுறான்…

எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி

நல்லா நாட்டைக் கூறு போடுகிறான் –

இவன் சோறு போடுறான் –

அவன் கூறு போடுறான்.

பின்னூட்டங்கள்
 1. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  நீண்ட நாட்களுக்குப்பின் அருமையான பதிவு இட்டிருக்கிறீர்கள்.நன்றி.படங்களும் கருத்தும் அருமை.அரிசியை இலவசமாக க்கொடுத்து விவசாயிகளின் உழைப்பை
  துச்சமாக நினைக்கும்படி கேவலப்படுத்தும் அரசின் செய்கையை என்னவென்று
  கூறுவது.அரிசி என்ன தானாக விளைந்துவுடுமா?ஒரு சிரியகுண்டூசியைக்கூட
  இலவசமாகப்பெற முடியுமா.எத்தனை நாள் கொடுக்க முடியும் இலவச அரிசியை?எந்த விவசாயிக்கு வேலைசெய்யத்தோன்றும்?தொழிலே நசிந்துவிடாதா?முன்பு மதிப்பு ஒரு ரூபாய்.இப்பொழுது சுழியம்.பெரியவித்தியாசம் இல்லையே.இனி இந்த நிலையை யார் மாற்ற் முடியும்?

 2. V. Sathishkumar, Bangalore. சொல்கிறார்:

  r u god man sir.

 3. V. Sathishkumar, Bangalore. சொல்கிறார்:

  u r god man

 4. எழிலேந்தி சொல்கிறார்:

  இயற்கை வேளாண்முறையை, படித்த விழிப்புணர்வு பெற்ற நம்மை போன்றோர்கள் தான், செயல்ப்டுத்த முன்வர வேண்டும்.

  அய்யா நம்மாழ்வார் அவர்கள், ஏற்கனவே இயற்க்கை மரபியல் வேளாண் முறையை கையாண்டு, நல்ல விளைச்சலை எடுத்து நிரூபித்துள்ளார்..!

  இனி நம்மை நாமே நமது அனுகுமுறையை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்..!

 5. sarath.S சொல்கிறார்:

  Today we led our life in artificial way.But some of the living legend make our life in a natural way such as farming and their habitat.So some of them are namalvar,mathuramakrishanan,and great japanese masanobu fukuoka. So help for natural, and to become natural world.

 6. Shankar.B சொல்கிறார்:

  நல்ல தகவலுக்கு நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s