மதுரை புத்தகத் திருவிழாவில் பிரபஞ்சன் சொன்ன கதைகள்

Posted: ஓகஸ்ட் 16, 2011 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரை புத்தகத் திருவிழா

மதுரை மூன்றாவது புத்தகத் திருவிழாவில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளுள் ஒருவரான பிரபஞ்சன் சொன்ன கதைகளை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். தமிழ் எழுத்தாளர்களில் பிரபஞ்சன் மிகவும் சுவாரசியமாக பேசும் ஆற்றல் கொண்டவர். இனி அவரது கதையாடல்.

“நண்பர்களே !

நான் படித்த கதைகள், கேட்ட கதைகள், ரசித்த கதைகள், நான் ரசம் சேர்த்த கதைகளை உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு பெரிய மீன் சின்னமீனை முழுங்க வந்தது. சின்ன மீன் இது நியாயமா என்றது? பெரியமீன் சின்னமீனையே விழுங்க சொன்னது. சின்ன மீனால் முடியவில்லை. இப்பொழுது சின்னமீன் தோல்வியை ஒப்புக்கொண்டது. இந்த ரஷ்ய சிறுகதை 1968ல் மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால், புதுமைப்பித்தன் 1933லேயே இதை ஒரு நூலில் எழுதியிருக்கிறார்.

இதைவிட சின்ன கதையெல்லாம் நம்ம பாட்டி நமக்கு சொல்லியிருக்காங்க. ‘’ஒரு ஊர்ல ஒரு நரியாம், அதோட கதை சரியாம்’’ என சின்ன கதை நம்மூரில் உண்டு. நரியப் பத்தின கதைகளில் அது குறும்பு பண்ணும். ஏமாத்தும். ஆனா, நரி இது எதுவுமே செய்யாது. பாவம் அது. மனிதன் தன் குணங்களைத்தான் நரியிடம் ஏற்றிவிட்டான். எந்த நரியாவது காபி, பீர், தண்ணி அடிச்சுட்டு அடுத்தவனக் கெடுக்க திட்டம் போடுமா? போடாது. பாவம். அது சோத்துக்கு அலையுது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. சமூகத்தப் பத்தியே சிந்திக்கிற விலங்கு.

ஒரு ஜென் கதை சொல்றேன். இப்ப நிறைய பேர் கதை எழுதிட்டு ஜென் கதைன்னு சொல்றாங்கல்ல. அதுயில்ல. லாவோட்சூ போன்ற ஜென் குருமார்கள் வாழ்வில் நடந்த கதைதான் ஜென் கதை. ஒரு மாணவன் குருவைத் தேடி வர்றான். குரு என்னப்பா படிச்சிருக்கன்னு கேட்டார். இவெஞ்சொன்னான் ‘இதுவர வந்த எல்லாத்தையும் படிச்சுருக்கேன்னு’ சொன்னான். குரு சொன்னார் ‘வா, டீ சாப்பிடுவோம்’. ஜென்னில் டீ சாப்பிடுவது ஒரு கலை. குரு டீ கோப்பையை எடுத்து டம்ளரில் ஊற்றிக் கொண்டே இருந்தார். அதிகமாகி வழிய தொடங்கியது. சீடன் நிறைஞ்சுருச்சுன்னான். அவர் சொன்னார் ‘உன் மனதும் நிரம்பியிருக்கு அதை காலி செய்யுன்னு’. இப்படி ஒரு அழகான கதை மூலமா ஞானத்த ஏற்படுத்தினாங்க.

ராமகிருஷ்ணரும் கதைகளாத்தான் சொல்வார். ஒரு படகுக்காரர் கதை சொன்னார். ஒருநாள் படிச்ச வேதாந்தி படகில் ஏறிப்போனார். வேதாந்தி படகுக்காரர்ட்ட உனக்கு வேதம்லாம் தெரியுமான்னு கேட்டார். அவரு எனக்கு தெரியாதுன்னார். உடனே, இந்தாளு வாழ்க்கைல கால்வாசி போச்சேன்னார். உபநிஷதம், இதிகாசமாவது தெரியுமான்னு திரும்பவும் கேட்டார். படகுக்காரர் தெரியாதுன்னார். உடனே வேதாந்தி வாழ்க்கையில பாதிய வீணடிச்சுட்டியே அப்படின்னார். படகுக்காரர்ட்ட பாகவதம், புராணக்கதையாவது கேட்டிருக்கயான்னு கேட்டார். அவர் கேட்டதில்லைன்னு சொன்னார். உடனே இவர் வாழ்க்கைல முக்கால்வாசி போச்சே அப்படின்னார். அப்பொழுது படகில் சிறுதுளை வழியாக தண்ணி வரத்தொடங்கியது. படகுக்காரர் கேட்டார், ‘உங்களுக்கு நீச்சல் தெரியுமான்னு? வேதாந்தி தெரியாதுன்னார். படகுக்காரர்  ‘உங்க வாழ்க்கை முழுதும் வீண்’ என்று கூறி நீரில் தாவி நீந்தி சென்றார். இப்படித்தான் நாம வேதாந்தி போல இருக்கோம் பலர்.

இன்னொரு கதை. இதை என்னைத் தவிர வேற யாரும் சொல்ல மாட்டாங்க. 60வயசு பெரியவர் ஒருத்தர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தார். அவர் பிள்ளைகள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அப்படி இருந்தால்தானே அவர்களுக்குப் பெருமை. வயதானவர் ஒரு நாள் இங்கிலீஸ் பேப்பர் படிச்சுட்டு இருந்தார். ஒரு பொண்ணு ஒரு நாயை கல்யாணம் பண்ணியிருக்குன்னு போட்டு இருந்தாங்க. இவருக்கு ஒரே சந்தேகம். நாயர் இல்லேன்னா, நாயக்கரத்தான் தப்பா போட்டுருப்பாங்களான்னு சந்தேகம். நேரே அந்த பத்திரிக்கை ஆபிஸூக்கு போய்விட்டார். அங்க இருந்த மேலாளர் ஆமா உண்மைதான் ‘நாயத்தான் அந்த பொண்ணு கல்யாணம் பண்ணியிருக்கு’. அதெப்படி நாய கல்யாணம் பண்ண முடியும்ன்னு இவர் கேட்டார். அது பொண்ணோட பிரச்சனை நாங்க என்ன பண்ண முடியும்ன்னு மேலாளர் கேட்டார்.

இவர் குழம்பி போய் வீடு வந்தார். அப்ப அவங்க வீட்டு வேலைக்காரம்மா வந்தாப்ல. அவருக்கு அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு. அந்தம்மா குப்பத்துலதான் அந்த கல்யாணம் நடந்ததுன்னு படிச்ச ஞாபகம். இவரு அந்தம்மாட்ட நாய கல்யாணம் பண்ண பொண்ண பத்தி கேட்டார். அந்தம்மாவும் அது என் ஃப்ரண்டுதான். நான் கூட கல்யாணத்துக்கு போயிருந்தேன். இப்ப கூட அதுக சந்தோஷமாத்தான் இருக்குதுகன்னுச்சு அந்தம்மா. இவரு அப்படி என்னம்மா சந்தோஷம்முன்னு கேட்டார். எனக்குந்தான் ஒரு நாய கட்டி வைச்சாங்க. ஆனா, அவ ஒரு நல்ல நாயாப்பாத்து கட்டிக்கிட்டா. ‘ஐயா ! எந்த நாயாவது சாம்பார்ல உப்பில்லன்னு அடிக்குமா? இல்ல, தினமும் குடிச்சுட்டு வந்து அடிக்குமா? இல்ல, சரக்குன்னா போட்டு திட்டுமான்னு’ அந்தம்மா கேட்டுச்சு.

உண்மைதானே நண்பர்களே ! நாய்களை விட சிலர் இன்னும் கீழாகத்தானே நடக்கிறார்கள். இது மராட்டிய மொழியில் ஒரு பெண் எழுதிய கதை. கவிஞர் தமிழச்சியோட கவிதைகள் அற்புதமானவை. தமிழை புதிய தளத்திற்கு கொண்டு செல்லும் கவிதைகள். அவருடைய வனப்பேச்சி, என் சோட்டுப் பெண் போன்ற கவிதைத் தொகுப்புகள் அழகுத் தமிழில் வெளிவந்துள்ளது. அவருடைய கவிதை ஒன்றைப் பார்ப்போம்.

அவர் தன் கவிதையில் எளிய மனிதர்களின் மனநிலையையே பதிவு செய்து உள்ளார்.

வனப்பேச்சி சொல்கிறது

சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…

இவ்வாறு வனப்பேச்சி எளிய மக்களைத் தேடி வருவதை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து ஒரு கதையை பார்ப்போம். ஒரு போர் வீரன் போரில் அடிபட்டு தன் முகத்தை சேதப்படுத்தி கொண்டதை பிளாஸ்டிக்சர்ஜரி மூலம் சரிசெய்து கொள்கிறான். ஆனால், முகம் சரியானாலும் ஆளே அடையாளம் தெரியாமல் போய்விட்டான். அவன் தன் தாயை காண ஊருக்கு செல்கிறான். ஆனால், தன் தாயிடம் அவனுடைய நன்பன் என்று சொல்லி தங்குகிறான். தாயும் தன் மகனின் நன்பன் என்பதால் நன்றாக சமைத்து போடுகிறாள். இவன் தன் ஸ்நேகிதையை(காதலியை) தேடுகிறான். அவள் வந்ததும் நன்பன் கேட்டதாக சொல்கிறான். பிறகு ஊருக்கு போகிறான். அவன் ஊர் போய் சேர்ந்ததும் இவனுக்கு அவன் தாயிடம் இருந்து கடிதம் வருகிறது. ‘’உன்னுடைய நன்பன் என்று ஒருவன் வீட்டுக்கு வந்தான். ஆனால், எனக்கென்னமோ நீதான் வந்தாயோ என சந்தேகமாக உள்ளது’’. அம்மாவின் கடிதத்தைப் படித்ததும் தான் அவனுக்கு ஆச்சரியம். எப்படி தன்னை அடையாளம் கண்டாள் என்று. தாயை போய் நேரில் பார்த்து இந்த சிதைந்த முகத்தை விரும்பிகிறாயா? எனக் கேட்டான். அவன் தாய் சொன்னாள். ‘இப்பொழுதுதான் உன்னைப் பெற்றதில் பெருமகிழ்வு கொள்கிறேனென்று’ காதலியிடமும் இன்னமும் என்னை விரும்புகிறாயா? என்று கேட்டாள். காதலி சொன்னாள், ‘இப்பொழுதுதான் உன்னை விரும்பவே தொடங்குகிறேன்’ என்றாள். தாயிடம் எப்படி என்னை அடையாளம் கண்டாய் எனக் கேட்டான். அதற்கு உன் உடையை அலசி போடும் போது ‘ என் மகனின் வாசனையை’ உணர்ந்தேன் என்று கூறினாள். இந்த கதைக்கு என்ன பெயர் தெரியுமா?, ‘தேசத்தின் முகம்’.

அந்தமானில் நம்நாட்டு மக்களை அடிமையாக வைத்து ரோஸ்ஐலேண்டிலிரந்து நம் மக்களை வெள்ளையர்கள் ஆண்டார்கள். இன்று அந்த தீவே மணல்மேடாகிவிட்டது. இன்று இந்த இடத்தை தான் சர்ச் என்கிறார்கள், கோர்ட் என்கிறார்கள். ஆதிக்கம் எப்பொழுதும் அடியோடு மண்ணாய் போகும். இப்பொழுதுகூட இடிந்துபோய் மாளிகைமேடு என்ற இடமெல்லாம் அந்த காலத்து மனிதர்களை ஆண்ட அரசர்களின் மாளிகைகள். ஆதிக்கம் எப்பவும் மண்ணாகத்தான் போகும்.

அடுத்து, தும்மல் பத்தி ஒரு கதை. ஒருவன் நாடகம் பார்க்க சென்றான். திடீரென தும்மல் வர குனிந்து நன்றாக முன்னால் இருப்பவர் மேல் தெரிக்கும் படி தும்மினான். அவரிடம் மன்னிப்பு கேட்டான். பிறகு தான் முன்னாலிருந்தவர் மேலாளர் என்று தெரிந்தது. பிறகு வேலைக்கு உலைவச்சுருவாரோன்னு பயந்து மீண்டும் மன்னிப்பு கேட்டான். அவர் ‘இட்ஸ் ஆல் ரைட்(பரவாயில்லை) நாடகத்த பாரு’ன்னு வேகமா சொல்லிட்டு நாடகம் பார்க்க தொடங்கினார். இவனுக்கு அவர் வேகமா சொன்னது கோவமா சொன்னது போல் தெரிந்தது. உடனே அவரிடம் ‘ஸார் தும்மல்ன்றது இயற்கையா வர்றதுன்னு’ திரும்பவும் கூப்பிட்டு சொல்ல அவர் உண்மையிலே கோபமாகி திட்டிவிட்டார். இவன் விடலை. இடைவேளையின் போது, நாடகம் முடிந்த போது என போய் உயிரை வாங்க தொடங்கினான். அவர் இறுதியில் ‘ஒன்ன நான் இனி எங்கேயும் பார்க்க கூடாது’ என மிரட்டி அனுப்பினார். இரவு வீட்டுக்கு வந்து படுத்தான். தூக்கமில்லை. 3 மணிக்கு எழுந்து உடையணிந்து கிளம்பினான். மேளாளர் வீடு போய் கதவைத் தட்டினான். அவரும் யாரோ பெரிய அதிகாரி அழைக்கிறார் என அலுவலக உடுப்பு அணிந்து வந்தார். இவனை பார்த்து என்ன என்றார். தும்மல்’ன்றது என தொடங்கினான். அவர் இனி உலகத்துல உன்னை எங்க பார்த்தாலும் சுட்டுவிடுவேன் ஓடிப்போயிரு என அனுப்பினார். இதில் பெரிய கொடுமை என்னவென்றால் இரவு வந்து படுத்தவன் அப்படியே இறந்து விட்டான். 1904ல் செகாவ் எழுதின கதை. கீழ்வேலை பார்ப்பவர்களின் உண்மைநிலையை எடுத்துக் காட்டியது’’

என அற்புதமான கதையாடலை நன்றி கூறி முடித்தார்.

பிரபஞ்சனின் வலைதள முகவரி. http://www.prapanchan.in/

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s