அழகனைக் காண அலைஅலையாய் கூட்டமும், திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும்

Posted: ஓகஸ்ட் 21, 2011 in ஊர்சுத்தி, நாட்டுப்புறவியல், நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

குலமலை, கோலமலை, குளிர்மலை, கொற்றமலை

நிலமலை, நீண்டமலை, திருமாலிருஞ்சோலையதே

– பெரியாழ்வார்

திருப்பதி ஏழுமலையானை விட திருவனந்தபுரம் பத்பநாபசாமி பணக்காரனாக இருந்தாலும் அவர்கள் இருவரும் திருமாலிருஞ்சோலை அழகரை நெருங்கக்கூட முடியாது. ஏனெனில், அழகுமலையான் ஏழை, எளிய மக்களின் தெய்வம். சித்திரைத் திருவிழா அல்லது அழகர்கோயில் தேர்த்திருவிழா பார்க்கும் பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் விசயம் பெருந்தெய்வமான அழகர் எப்படி இவ்வளவு எளிய மக்களை தன் அடியாராக கொண்டிருக்கிறார் என்பதுதான். தொ.பரமசிவனின் அழகர்கோயில் எனும் நூலை வாசிக்கும்போது இக்கோயில் மக்களுடன் கொண்டுள்ள தொடர்பையும், தமிழ்நாட்டு வைணவம் குறித்தும் அறியலாம். அடுத்து பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவனின் அழகர்கோயில் நூல் குறித்து தனிப்பதிவே இடலாமென்றிருக்கிறேன்.

சித்திரைத்திருவிழாவிற்கு அடுத்து அழகர்கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்வு ஆடித்திருவிழா. இதில் ஆடிப்பௌர்ணமி அன்று நடக்கும் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அழகர்கோயிலில் தேரோட்டம் சென்ற ஆண்டு பார்த்தபோதே கங்கணம் கட்டிக்கொண்டேன். அடுத்த ஆண்டும் கட்டாயம் தேர் பார்க்க வருவதென்று. அழகர்கோயில் தேரோட்டம் மற்ற கோயில் தேரோட்டங்களை விட சற்றே வித்தியாசமானது என்றே கருதுகிறேன். ஏனென்றால், இத்தேரோட்டத்தைக் காண பெரும்பாலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களும், வெளியூரைச் சேர்ந்த கிராம மக்களும்தான் அதிகம் வருகிறார்கள்.

 

நண்பரது கட்டவண்டி(TVS50) நடுவில் இம்சையை கொடுத்துவிடுமென்று அஞ்சி சொகுசுப்பேருந்தில் சென்றோம். பொதுவான நாட்களில் பேருந்து செல்லும் பாதையில்தான் தேர் சுற்றி வரும் என்பதால் பேருந்தை சற்று தொலைவிலேயே நிறுத்திவிடுகின்றனர். நானும் நண்பரும் இறங்கி நடக்கத்தொடங்கினோம். மக்கள் கூட்டம்கூட்டமாக அழகனைக்காண வண்டி கட்டி வந்துள்ளனர். லாரி, கார், குட்டியானை(டாடா ஏஸ்), டிராக்டர், ஆட்டோ, பைக் மற்றும் பாரம்பரியமான மாட்டுவண்டியிலும் வந்து குவிந்து விட்டனர். வாகனங்களே ஆயிரக்கணக்கில் இருக்குமென்றால் கூட்டத்தை நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

வெளிக்கோட்டையான அழகாபுரிக் கோட்டைக்குள் நுழைந்து இரணியன் கோட்டையை நோக்கி நடக்கத்தொடங்கினோம். கடந்த மாதந்தான் குடமுழுக்கு நடந்ததால் தோரணவாயில் வண்ணமயமாகக் காட்சி தந்தது. உள்ளே நுழைந்ததும் சென்ற ஆண்டிற்குள் நுழைந்தது போலவேயிருந்தது. இரண்டு புறமும் விதவிதமான கடைகள். பீமபுஸ்டி அல்வாக்கடைகள், பலகாரக்கடைகள், சர்பத்கடைகள், சொளகு மற்றும் ஒலைக்கொட்டான் விற்பவர்கள், பலூன் விற்பவர்கள், விளையாட்டுச்சாமான் விற்பவர்கள், பேரிக்காய், கொய்யாப்பழம், நவாப்பழம் விற்பவர்கள், சட்டிபாத்திரம் விற்கும் பாத்திரக்காரர்கள், படங்கள் மற்றும் போஸ்டர்கள் விற்பவர்கள் என பலவிதமான வியாபாரம் நடந்து கிராமச்சந்தை வீதி போல இருந்தது. பலூன் இப்பொதெல்லாம் ஆப்பிள் மாதிரி இல்லை. குதிரை, மான் என வித்தியாசமான அமைப்பில் வந்துவிட்டது. மழை மேகமூட்டமாக இருந்ததால் மலையைக் காண மிகவும் ரம்மியமாக இருந்தது. திருமாலே பச்சையாய் மலை போல படுத்து இருப்பதாக தோன்றியது. தேர் நிலையில் நின்று கொண்டிருந்தது.

நானும் நண்பரும் அப்படியே தேர் வரும் வீதியில் வலம் வந்தோம். இராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, விருதுநகர், திருச்சி போன்ற பலமாவட்டங்களிலிருந்தும் அழகனைக்காண சுற்றம்சூழ வந்திருந்தனர். மணப்பாறையிலிருந்து ஒரு குழுவினர் நடந்தே வந்ததாக தினசரியொன்றில் படித்தேன். அதே போல பலர் பாரம்பரியமாக வரும் மாட்டு வண்டியில் வந்திருந்தனர்.

இப்போதெல்லாம் கட்டைவண்டியைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. மாட்டுவண்டியாகட்டும் அல்லது டிராக்டராகட்டும் எல்லாவற்றையும் அழகாக கூடாரம் போல போட்டு வண்டிகளை கொண்டு வந்திருந்தனர். எல்லா இடங்களிலும் சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது. ஆடி வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருந்த ஆடுகள் எல்லாம் மரத்தடிகளில் தோலுரிந்து தொங்கிக் கிடந்தன. பெரியபெரிய டவராக்களில் சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது. பல இடங்களில் படையலாகி கொண்டிருந்தது. பார்க்கும் போது எனக்கும் பசிக்கத் தொடங்கியது. யாராவது சாப்பிட கூப்பிட மாட்டார்களா என பார்த்துட்டே நடந்தோம்.

தேரில் இம்முறை மரச்சக்கரங்கள் கழட்டப்பட்டு எட்டு டன் எடை கொண்ட இரும்புச்சக்கரங்கள் மற்றும் ஹைட்ராலிக் பிரேக் தொழில்நுட்பத்துடன் சக்கரங்கள் இணைக்கப்பட்டிருந்தன. பாதிவரை சிமெண்ட் ரோடு போட்டிருந்தால் தேர் மிக அழகாக ஆடி ஆடி அசைந்து வந்தது. நான்கு வடங்களைப் பிடித்து உற்சாகமாக பக்தர்கள் வடம் பிடித்து வந்தனர். சுந்தரராசப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் அழகாக உலா வந்தார். தேரில் திருமாலிருஞ்சோலை அழகன் பவனி வர முன்னால் பக்தர்கள் பரவசத்துடன் கோவிந்தோ! கோவிந்தோ! என சரணமெழுப்பி வந்தனர்.

தப்படித்து கொம்பூதி மேளதாளத்துடன் கருப்புசாமி போல சாமியாடிகள் ஆடிவந்தனர்.

கையில் அருவாள், தடி, திரி கொண்டு விதவிதமான அலங்காரங்களில் பலர் ஆடி வந்தனர். பஜனைபாடிக்கொண்டு ஒரு குழுவினர் மகிழ்ச்சியாக வந்தனர். சவ்வு மிட்டாய்காரரை தெப்பத்திருவிழாவிற்கு பிறகு இங்கு பார்த்தேன். மிக அழகாக ஒரு சிறுவனுக்கு மோட்டார் பைக் செய்து கொடுத்து கொண்டிருந்ததை பார்த்த போது இவ்வளவு பெரிய கலைஞன் அடையாளம் தெரியாமல் போய்கொண்டிருக்கிறாரே என வருத்தமாக இருந்தது.

 

தேர் கோட்டை வாசல் கிட்ட வந்ததும் நின்று விட்டது. பாதி தூரம் சிமெண்ட் ரோடு என்பதால் எந்தவித பிரச்சனையும் இன்றி இலகுவாக வந்துவிட்டது. மண்பாதையில் கனமான இரும்புச்சக்கரங்கள் பதிந்து நகட்ட முடியாமல் சிரமப்பட்டுக்கொண்டிருந்தனர். நாங்கள் முன்னகர்ந்தோம். நானும் நண்பரும் திருமலைநாயக்கர் கட்டிய மண்டபத்தின் முன் வந்து கொண்டிருந்தபோது அங்கு அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. சரியான கூட்டம். எனக்குப் பசி. சரி கடையில எதாவது வாங்கிச் சாப்பிடுவோம்ன்னு நடந்தோம். ஒருவர் சாக்கில் புளியோதரை பொட்டலமாக போட்டு அப்போதுதான் கொடுக்கத் தொடங்கியிருந்தார். அவரிடம் இரண்டு பேரும் ஆளுக்கொரு பொட்டலம் வாங்கி உண்டோம். அப்படியே பதினெட்டாம்படிக் கருப்பண சாமியை கும்பிட்டு அங்கு எதிரில் உள்ள குளக்கரையில் அமர்ந்தோம். இந்தக் குளம் மண்ணில் பல வருடங்களாக புதையுண்டு இருந்தது. போன வருடம்தான் இதை கண்டுபிடித்தனர். மிக பெரிய அழகான குளம். தண்ணிதான் இல்லை.

இருவரும் மீண்டும் தேரைப்பார்க்க நடந்தோம். வழி நெடுக உள்ள கடைகள், விதவிதமான மனிதர்கள் எல்லாவற்றையும் பார்த்து அங்கேயே இருந்துவிடத்தான் ஆசை. ஆனால், வீட்டுக்கு கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தேர் இடத்தைவிட்டு நகரவில்லை. தேர் சக்கரத்தின் பின்புறம் பெரிய மரங்களை வைத்து அழுத்தியெல்லாம் பார்த்தனர். அது லேசாய் அசைந்துதான் கொடுத்தது. நாங்களும் கிளம்பி விட்டோம்.

மறுநாள் நாளிதழில் பார்த்தேன். தேரை அந்த இடத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமாக நகர்த்தி மாலை வரை ஆகியும் நிலைக்கு கொண்டு வர முடியவில்லையாம். இப்படித் தேர் நடுவில் நின்று விட்டால் தங்குதேர் என்பார்களாம். இதற்குமுன் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை இப்படி நடந்ததாம்.

இந்த வாரம்(24.8.11) ஆனந்தவிகடன் இணைப்பாக வரும் என் விகடனில் அழகர்கோயில் தேர் திருவிழாவிற்கு கூட்டுவண்டி பூட்டி வரும் கிராம மக்களை குறித்த செய்தி வந்திருந்தது. அதைக்காண்போம்.

காரைக்குடி அருகில் உள்ளது வேலங்குடி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் பரம்பரை பரம்பரையாக அழகர் திருவிழாவிற்குக் கூட்டு வண்டி பூட்டிக்கொண்டு வருவதை வழக்கமாகவைத்து இருக்கிறார்கள்.

இவ்வூரைச்சேர்ந்த பெரியவர் சோலையன் “எனக்கு விவரம் தெரிஞ்சு 30 வருஷமா வண்டி கட்டுறோம். வழக்கமா தேருக்கு அஞ்சு நாள் முன்னாடி வண்டியைக் கெளப்பிருவோம். போற வழியில் ஒரு இரவு தங்கி சமையல் செஞ்சு பூஜைக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக்கிட்டு ராத்திரி அழகர் கோட்டைக்கு போயிருவோம். பொழுது விடிஞ்சதும் முடி இறக்கி, மலை ஏறி ராக்காச்சி கோயில்ல போயி தீர்த்தம் ஆடுவோம். அடுத்ததா, அழகரைக் கும்பிட்டு வந்து காலையில் கை நனைப்போம். மறுநாள் பதினெட்டாம்படியானுக்குக் கிடா வெட்டி கறிக்கஞ்சி ஆக்குவோம். நாங்க ரெண்டு ராத்திரி தங்கணும்கிறது அழகரு எங்களுக்கு இட்ட கட்டளை. காலையில் தேர் கெளம்பி கெழக்கால வரும்போதே, ‘போயிட்டு வாரம்பா’னு  பதினெட்டாம்படியான்கிட்ட சொல்லிட்டு, வண்டிய கெளப்பிருவோம். மிச்சம் சொச்சம் இருக்கிற கறிக் கஞ்சியைக் குடிச்சுக்கிட்டே மறுநாள் சாயந்திரம் 5 மணிக்கு எல்லாம் வீடு வந்து சேர்ந்துருவோம். அழகர் கோயில்ல ஆக்குனதை வீட்டுக்கு எடுத்துட்டு வரக்கூடாதுங்குறது ஐதீகம். அதனால் மிச்சம் சொச்சம் இருந்தா வீட்டுக்கு வெளியில்வெச்சு அக்கம்பக்கத்து சனங்களை கூப்பிட்டு சாப்பிட வெச்சிருவோம்!” என கூட்டு வண்டிப் பயணத்தை அழகாக விவரித்தார்.

என் விகடனுக்கு நன்றி. அடுத்த முறை அழகர் தீர்த்தமாட மலைக்கு செல்லும் திருவிழாவிற்கு அழகர்கோயில் செல்ல வேண்டும். நீங்களும் கட்டாயம் அழகர்கோயிலுக்கு வந்து பாருங்க.

பின்னூட்டங்கள்
 1. Kumaran சொல்கிறார்:

  அழகர் கோயில் நூலைப் பற்றிய இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  புதிதாகத் தோரண வாயில் கட்டியிருக்கிறார்களா என்ன?

  குடையுடன் இருக்கும் படத்தில் இருப்பவர்கள் யார்?

 2. தொப்புளான் சொல்கிறார்:

  ‘திரு’மாலிருஞ்சோலை, ‘திரு’த்தேரோட்டம் – என்னப்பா, ‘திரு’ப்புளியோதரை (புளியமுது?!) கூடிப்போச்சா?

  //உள்ளே நுழைந்ததும் சென்ற ஆண்டிற்குள் நுழைந்தது போலவேயிருந்தது.//

  சென்ற ஆண்டில் அல்ல..பல பத்தாண்டுகளாக காலம் உறைந்துவிட்டதுபோலத் தோன்றுகிறது.

  அவர் யாரு, வெள்ளியக்குன்றம் ஜமீனா?

  பிரதீப் சக்கரவர்த்தி என்பவரும் ஆங்கிலத்தில் ‘திருமாலிருஞ்சோலை – மக்களின் கோயில்’ என்கிற மாதிரியான தலைப்பில் நூல் வெளியிட உழைத்து வருவதாகக் கேள்விப்பட்டேன்?!

  அழகர், ராக்காச்சி, பதினெட்டாம்படியானை மட்டும் சொல்றாங்க..ஆறாவது படைவீடு, சுட்ட பழமோ, சுடாத பழமோ தந்ததுன்னு இவன்ய்ங்க விட்ட கதை மக்கள்ட்ட எடுபடலியா? இன்னும் என்னதான் செய்யுறது? (இப்பத்தான ‘பழமுதிர்’சோலையில தங்கத்தேர் விட்ருக்கீங்க? அடுத்து பாதயாத்திரையும், பஞ்சாமிர்தமும் ஆரம்பிச்சுப்பாருங்க! வியாபாரம் அமோகமா நடக்கும்!)

 3. அழகர்கோயிலுக்குள் நுழையும் போது இருந்த கோட்டைவாசல் சிறியதாக இருந்ததால் குடமுழுக்கின் போது இடித்து படத்தில் உள்ளது போல புதுப்பித்துக் கட்டியிருக்கிறார்கள். படத்தில் குடையுடன் உள்ளவர் வெள்ளியக்குன்றம் ஜமீன்தார். அவர் தான் இத்தேரோட்டத்தை நடத்தி வைக்கிறார். இது குறித்து தொ.பரமசிவன் அய்யாவின் ‘அழகர்கோயில்’ நூலில் “வெள்ளியக்குன்றம் ஜமீன்தாருக்கு கி.பி.1659ல் திருமலைநாயக்கர் வழங்கிய பட்டயத்தில் அழகர்கோயில், ‘ஆடி உற்சவத்தில் சன சமூகத்துடன் திருத்தேர் ஒட்டிவைத்துத் தீர்த்தம் திருத்தளுகை பட்டுப்பரிவட்டமும் பாளைய சனங்களுக்குப் படியும்’ பெற்றுக்கொள்ள உரிமை அளித்துள்ளார்”.
  அழகர்கோயில் மலைமேல் உள்ள முருகன்கோயில் சமீபத்தில் கட்டப்பட்டது தான். இங்கு முன்பு முருகனுக்கு கோயில் கிடையாது. ஆற்றுப்படையை தான் நம்மவர்கள் ஆறுபடையாக்கி நம்பிக்கையுடன் வணங்கிவருகின்றனர். இது குறித்து தொ.பரமசிவன் அய்யாவின் ‘அழகர்கோயில்’ நூலில் தனி கட்டுரையொன்றே எழுதியுள்ளார். அதிலிருந்து “ வைணவர்கள் தொடுத்த வழக்கிற்கு 1967ல் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, ‘இம்மன்றம் வழக்கிற்கு முன்னிருந்தவாறு சோலைமலை மண்டபம் அல்லது புளிக்குமிச்சான்மேடு அல்லது சாம்பல்புதூர் மண்டபம் என்றே அழைக்கப்பட வேண்டும். பழமுதிர்சோலை முதலிய பிற புதிய பெயர்களால் அழைக்கப்படக்கூடாது. மேலும், இம்மண்டபம் அழகர்கோயிலின் சொத்தே என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது”. ஆனால், இப்பொழுது அறநிலையத் துறையிலிருந்து குடமுழுக்கு எல்லாம் நடத்திவிட்டார்கள். அதெல்லாம் விடுங்க நமக்கு திருப்புளியோதரை அல்லது திருப்பஞ்சாமிர்தம் கிடைத்தால் மகிழ்ச்சி தானே.
  அழகர்கோயில் நூல் குறித்து புரட்டாசியில் பதிவு எழுதிவிடுவேன் என நினைக்கிறேன்.
  மறுமொழியிட்ட சகோதரர்கள் இருவருக்கும் நன்றி!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s