மறக்கமுடியாத ஆளுமை – ஜி.நாகராஜன்

Posted: ஓகஸ்ட் 31, 2011 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

ஜி.நாகராஜனின் “குறத்திமுடுக்கு”தான் முதன்முதலில் வாசித்தேன். அதன்பின் “நாளை மற்றுமொரு நாளே” வாங்கி வாசித்தேன். அவரது சில சிறுகதைகள் மற்றும் அவரைப் பற்றிய கட்டுரைகளையும் அழியாசுடர்கள் தளத்தில் வாசித்தேன். அன்றிலிருந்து ஜி.நாகராஜன் மீது தனிப்பாசமும், மரியாதையும் கொண்டிருக்கிறேன். பல நேரங்களில் ஜி.நாகராஜன் போன்ற ஆளுமைகள் உலவிய வீதிகளில் நாமும் நடக்கிறோம் என்று பெருமையும் எனக்குண்டு. “நாளை மற்றுமொரு நாளே”வில் வரும் தொடக்கக் குறிப்பைத்தான் எனது நாட்குறிப்பேட்டின் முதல் பக்கத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அவ்வரிகள்:

இது ஒரு மனிதனின் ஒருநாளைய வாழ்க்கை.

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக் கூடிய சின்னத்தனங்கள்.

நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல்.

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள்.

பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம்.

இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டாம்.

ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்குப் போலவே

நாளை மற்றுமொரு நாளே!

ஜி.நாகராஜனைக் குறித்த சிறுகுறிப்பையும், பொன்மொழிகள் குறித்து ஜி.நாகராஜனின் கூற்றையும் நாகராஜன் எழுதிய பொன்மொழிகளையும் இப்பதிவில் காண்போம். அவர் பிறந்த செப்டம்பர் மாதம் அவரைக் குறித்த நினைவுதான் இப்பதிவு. இதை எல்லாம் அழியாச்சுடர்கள் தளத்திலிருந்து எடுத்திருக்கிறேன். நன்றி.

1929ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி, தாயாரின் ஊரான மதுரையில் 7ஆவது குழந்தையாகப் பிறந்தார். தந்தை கணேச அய்யர், வக்கீல். சிறு வயதில் தாயை இழந்த நாகராஜன் ஆரம்ப வருடங்களில் மதுரையில் தாய்வழிப் பாட்டி வீட்டிலும் பின்னர் திருமங்கலத்தில் தாய்மாமன் வீட்டிலும் வளர்ந்தார். இடையில் தந்தையார் அவரைத் தம்மிடம் அழைத்துக்கொண்டு பாடங்களைத் தாமே சொல்லிக் கொடுத்தார். 8,9 ஆம் வகுப்புகளை திருமங்கலம் நாடார் உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் மாமா வீட்டில் தங்கிப் படித்தார். மறுபடியும் பழனி சென்று 10,11 ஆம் வகுப்புகளை எம்.ஹெச். பள்ளியில் படித்தார். படிப்பில் படு சூட்டிகையான இவர் வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே இருந்திருக்கிறார். கல்லூரிப் படிப்பை மதுரையில் மதுரைக் கல்லூரியில் மேற்கொண்டார். அப்போது கணிதத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சி.வி. ராமனிடமிருந்து தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்.

பட்டப் படிப்பு முடிந்ததும் காரைக்குடி கல்லூரியில் ஒரு வருடம் வேலை பார்த்தார். பின் சென்னையில் ஏ.ஜி. அலுவலகத்தில் ஓராண்டு பணி புரிந்தார். கல்விப் பணியில் அவருக்கிருந்த இயல்பான நாட்டம் காரணமாக, அவ்வேலையை உதறிவிட்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். இக்காலத்தில்தான் கம்யூனிச இயக்கத்தில் தன்னைத் தீவிரமாக இவர் வெளிப்படுத்திக் கொண்டதை அடுத்து கல்லூரி நிர்வாகம் இவரை வேலையிலிருந்து நீக்கியது.

இதன்பிறகு, திருநெல்வேலி வந்து பேராசிரியர் நா.வானமாமலை நடத்திய தனிப்பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார். கட்சிப் பணிகளிலும் தீவிர முனைப்பு காட்டினார். இக்காலத்தில்தான் படைப்பாக்கத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். நெல்லையில் நான்கு ஆண்டுகள் அவர் பணி தொடர்ந்தது. போதையும் விலைமாதர் நட்பும் அவரிடம் உறவு கொள்ளத் தொடங்கியதும் இக்காலத்தில்தான். அவருடைய நடத்தைகள் கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியபோது அவர் கட்சி அமைப்பிலிருந்து தாமாகவே ஒதுங்கிக்கொண்டு மதுரை வந்து சேர்ந்தார்.

கம்யூனிச கட்சி ஈடுபாடுகள் கொண்டவரும் நண்பருமான பேராசிரியர் சங்கரநாராயணன் மதுரையில் நடத்தி வந்த ‘மாணவர் தனிப் பயிற்சி கல்லூரி’ (எஸ்.டி.சி) ஆசிரியரானார். இக்காலத்தில் சிறந்த ஆசிரியராக அவர் மதிப்பு உயர்ந்திருந்தது. இச்சமயத்தில்தான் உடன் பணியாற்றிய நண்பரொருவரின் ஏற்பாட்டின்படி ஆனந்தி என்ற பெண்ணை 1959ல் மணம் புரிந்தார். மணமான நான்காவது மாதம் ஆனந்தி இறந்து போனார். 1962 ஆம் ஆண்டு நாகலட்சுமி என்ற பள்ளி ஆசிரியையை மணமுடித்தார். இத்திருமண உறவில் கண்ணன், ஆனந்தி என்ற 2 குழந்தைகள் அவருக்கு இருக்கிறார்கள்.

இத்திருமணம் முடிந்த சில மாதங்களில் ராணுவத்தில் சேர்ந்தார். இவருடைய கம்யூனிச கட்சி உறவு வெளிப்படவே ராணுவத்திலிருந்து திரும்பினார். மதுரை வந்து கல்லூரியில் வகுப்பெடுக்கத் தொடங்கினார். அவருடைய பிரபல்யம் சொந்தமாக தனிப்பயிற்சி கல்லூரி ஒன்றைத் தொடங்க வைத்தது. அது வெற்றி பெறவில்லை. மீண்டும் எஸ்.டி.சி., வி.டி.சி., போன்ற தனிப்பயிற்சிக் கல்லூரிகளில் வகுப்பெடுத்தார். எந்த ஒன்றிலும் நின்று நிலைக்க முடியாமல் மாறி மாறி முயற்சிகள் மேற்கொண்டார். 70களின் ஆரம்பம் வரை இது தொடர்ந்தது. சென்னையில் யுனெஸ்கோ திட்டத்தின் கீழ் சில மாதங்களும், மதுரை காந்தி மியூசியத்தில் சில மாதங்களும் பணிபுரிந்தார்.

70களின் ஆரம்ப வருடங்களுக்குப் பிறகு, இவர் எந்த வேலையும் பார்க்கவில்லை. நாடோடி வாழ்க்கை தேர்வாகவோ, நிர்பந்தமாகவோ, சுபாவமாகவோ, ஆழ்மன விழைவாகவோ இவரை வந்தடைந்தது. 1981ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி மதுரை அரசு பொது மருத்துவமனையில் மரணமடைந்தார்.

மதுரையில் ஜி.நாகராஜன் வாழ்ந்த காலத்தில் வாழ முடியாவிட்டாலும் அவர் சுற்றிய வீதிகளில் சுற்றும் வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக நினைக்கிறேன். மக்களைக் குறித்து அவர் எழுதிய பொன்மொழிகளை வாசியுங்கள். மேலும், அவருடைய நூல்களையும் வாசியுங்கள்.

சில எழுத்தாளர்கள் தங்கள் ‘பொன்மொழிகளை’ தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் ‘பொன் மொழிகளே ‘ இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில ‘பொன் மொழிகளை ‘ உதிர்க்கிறேன்:

 1. உண்மை நிலைத்திருக்கும் அளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது இரண்டுக்கும் சம ஆயுள்.
 2. மனிதர்களிடம் நிலவ வேண்டியது பரஸ்பர மதிப்பே தவிர, பரஸ்பர அன்பு அல்ல; அப்போதுதான் ஏமாற்றுக் குறையும்.
 3. தன்மான உணர்வின் வெளிப்பாடாக விளங்கும் அளவுக்குத்தான் தேசபக்தியை பொறுத்துக்கொள்ளமுடிகிறது.
 4. தனிமனிதர்களை மதிக்கத் தெரியாதவர்கள்தான் மனிதாபிமானம் பேசுவார்கள்.
 5. மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்துகிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய்குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன.
 6. எந்தச் சமுதாய அமைப்பிலும் சிறப்புச் சலுகைகள் அனுபவிக்கும் ஒரு சிறுகூட்டம் இருந்தேதீரும். இல்லையெனில் அவ்வமைப்பு சிதைந்துவிடும்.
 7. ‘மனிதாபிமான’ உணர்வில் மட்டும் உயர்ந்த இலக்கியம் உருவாவதில்லை. மனிதத்துவேஷ உணர்வும் சிறந்த இலக்கியத்தை படைக்க வல்லது. இல்லையெனில் ‘மேக்பெத் ‘ என்ற நாடகமோ ‘கலிவரின் யாத்திரை ‘ என்ற நாவலோ உருவாகியிருக்க முடியாது.
 8. இயற்கையிலேயே பீறிட்டு வெடிக்கும் சமுதாயப் புரட்சியை வரவேற்க வேண்டிய நாம், கன தனவான்கள் பதவியில் இருந்துகொண்டு ‘புரட்சி ‘ பேசுவதைச் சகித்துக்கொண்டிருக்கிறோம்.
 9. தனது கலைப்படைப்புகள் மூலம் சமுதாய மாற்றங்களை நிகழ்த்துவதாக நினைக்கும் கலைஞனுக்கு, பனம் பழத்தை வீழ்த்திய காக்கையின் கதையைச்சொல்லுங்கள்.
 10. மனிதனைப் பற்றி பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் ‘மனிதன் மகத்தான சல்லிப்பயல்’ என்றுதான் சொல்வேன்.

இன்னும் தேங்காய் துவையல், பெண்ணின் கற்பு, உலக அமைதி, எள்ளுருண்டை, ‘காலி சிந்த்’ புடவை, பல்லாங்குழி ஆட்டம், பொய்ப்பல், இத்யாதி இத்யாதி பற்றியும் ‘பொன் மொழிகள் ‘ தர முடியும்.

– ஜி.நாகராஜன் படைப்புகள், பக்கம் 347, காலச்சுவடு பதிப்பகம்

http://azhiyasudargal.blogspot.com/search/label/%E0%AE%9C%E0%AE%BF.%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D

பின்னூட்டங்கள்
 1. ஜி.நாகராஜன் என்ற ஆளுமை குறித்து தனியொரு பதிவு விரைவில் எழுத ஆசை. அவர் பிறந்த இந்த மாதத்தில் அவர் குறித்த நினைவுப் பதிவுதான் இது. தமிழின் எழுத்தாளுமைகளில் விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையை அற்புதமாக பதிவு செய்த ஜி.நாகராஜனின் மொத்த சிறுகதைத்தொகுப்பையும் வாங்கி வாசித்து விட்டு அவரை குறித்து எழுதுகிறேன். நன்றி. நீங்களும் ஜி.நாகராஜனை வாசியுங்கள்.

 2. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திரக்காரன் / மதுரை வாசகன் / சுந்தர்

  ஆளுமை – ஜி.நாகராஜன். -இடுகை அருமை – அவரைப் பற்றிய அவரது பிறந்த மாதத்தில் அவரைப் பற்றி எழுதியது நன்று.
  நல்வாழ்த்துகள் சுந்தர் – நட்புடன் சீனா

 3. தோழன் மபா சொல்கிறார்:

  நல்லதொரு அறிமுகப் பதிவு!
  நாளும் தொடர வாழ்த்துகள்.

 4. ஜி.நாகராஜனின் படைப்புகளை அழியாசுடர்களில் சென்று வாசியுங்கள். மதுரை குறித்து மட்டுமல்ல, விளிம்புநிலை மனிதர்களை குறித்த உண்மையாய் பதிந்த ஜி.நாகராஜனை கொண்டாடுவோம். மறுமொழியளித்த சீனா அய்யா அவர்களுக்கும், தோழன் மபா அவர்களுக்கும் நன்றி!

 5. அர்ஷியா.எஸ் சொல்கிறார்:

  நல்லதொரு பதிவு சுந்தர். ஜி. நாவின் மனைவி திருமதி நாகலட்சுமியின் மாணவன் நான். அன்பும் அரவணைப்பும் நிறைந்த அந்த அம்மையாரின் முகத்தில் எப்போதும் ஒருவித சோகச்சிரிப்பு ஓடிக்கொண்டே இருக்கும். அப்போதெல்லாம் எனக்குத் தெரியாது அவர் ஜி.நாவின் மனைவியென்று. அதுபோல் கண்ணன் எனக்கு நண்பன். அவனும் நானும் ஒன்று சேர்ந்து ஊர்சுற்றியிருக்கிறோம். ஒருமுறை பள்ளித்தேர்ச்சி அட்டையுடன் நானும் அவனும் சென்றபோது வழியில் ஜி.நாவை சந்தித்தோம். அப்போதும் அவர் ஜி.நா என்று எனக்குத் தெரியாது. அட்டையை வாங்கிப் பார்த்தவர் ‘இன்னும் நல்லா பண்ணிருக்கலாம்‘ என்று மட்டும் சொன்னார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s