தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக சித்திரவீதிக்காரன்

Posted: செப்ரெம்பர் 5, 2011 in பார்வைகள், பகிர்வுகள்

தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒரு வித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசையும் தொலைத்து தம் நேரத்தையும் செலவழித்து, மனைவி மக்களுடைய வெறுப்பையும் சம்பாதித்து, தமிழைக் கணிணியில் ஏற்றப் பாடுபட்ட அத்தனை தமிழ் உள்ளங்களையும் இந்தக் கட்டுரை மூலம் நான் நினைத்துக் கொள்கிறேன். பிரதானமாக, தம் பிறந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, சொந்த நாட்டைப் பறிகொடுத்து உலகம் எங்கும் சிதறிப்போயிருந்தாலும் கம்ப்யூட்டர் வலைகளில் தனி ஆவேசத்தோடு தமிழைத் தவழவிடுவதன் மூலம் தாம் இழந்த ஒரு நாட்டை மீண்டும் கண்டுபிடித்து அதில் மகிழ்ச்சி காணும் ஈழத்துத் தமிழர்களை மறக்க முடியாது.

– அ.முத்துலிங்கம் கணித்தமிழ் சிறப்பிதழ், காலச்சுவடு ஏப்ரல் 2006.

தமிழ்மணத்தின் மூலம் தமிழ்மனங்களுடன் இணைய வாய்ப்பு கிடைத்ததை எண்ணிப் பேருவகை அடைகிறேன். இணையத்தில் தமிழ் வளரப் பாடுபடும் அனைவரையும் வணங்கி மகிழ்கிறேன். மதுரை சித்திரைவீதிகளில் சுற்றித்திரியும் சாதாரண வாசகனான நான் தமிழ் மீதும் மதுரை மீதும் தீராக்காதல் கொண்டவன். மதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்து விடப்பட்டவர்களுள் ஒருவன். விழாமலிமூதூர், ஆலவாய், தூங்காநகரம், கோயில்மாநகரம் என்ற பல சிறப்பு பெயர்களையுடைய மதுரையைக் குறித்தும், அம்புலிமாமாவில் தொடங்கி இன்று வரை என்னை வழிநடத்தும் புத்தகங்களைக் குறித்தும், நாட்டுப்புறத்தெய்வங்கள் & கலைகள் குறித்தும், பயணங்களில் நிகழும் கூத்துக்களையும், நல்வாசகனாக்கிய மதுரை புத்தகத்திருவிழா குறித்தும், மதுரையில் மலைகளில் காணப்படும் சமணத்தின் சுவடுகளைக் குறித்தும் என்னுடைய பதிவுகளை எழுதி வருகிறேன். இதை நான்மாடக்கூடல், ஊர்சுத்தி, வழியெங்கும் புத்தகங்கள், மதுரையில் சமணம், நாட்டுப்புறவியல், மதுரை புத்தகத்திருவிழா மற்றும் பார்வைகள், பகிர்வுகள் என்ற பகுப்புகளின் கீழ் காணலாம்.

புத்தகங்களைக் குறித்தெல்லாம் நான் எழுதுவது விமர்சனப்பதிவு கிடையாது. என்னை மிகவும் பாதித்த புத்தகங்களைக் குறித்த எனது பகிர்வுதான். விமர்சனம், திறனாய்வு செய்யுமளவு எனக்கு அறிவில்லை. கலீல் ஜிப்ரான் அதிகம் பேசுகிறவனை குறித்து ஒரு வரியில் மிக அழகாகச் சொல்கிறார்.

அதிகம் பேசுபவன் குறைந்த அறிவு உடையவன். பேச்சாளிக்கும் ஏலம் போடுபவனுக்கும் அப்படியொன்றும் அதிக வித்தியாசமில்லை.

எனவே, நான் கொஞ்சம் அமைதியாக இருப்பதே வாசிக்கையில்தான். அதனால்தான் நிறைய வாசிக்கிறேன். மேலும், என்னை வாசகன் என்று சொல்லிக்கொள்வதற்கான தகுதியென்னவென்றால் நான் தொலைக்காட்சி வாரம் ஒருமணிநேரம் பார்ப்பதே இப்போது அரிதாகிவிட்டது.

எனக்கு அரசியலில் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த், ராமதாஸ், திருமாவளவன், சரத்குமார் என எல்லோரையும் மிகவும் பிடித்துப்போன காரணத்தினால் யாருக்கு வாக்களிப்பது எனத்தெரியாமல் சுயேட்சை யாருக்காவது வாக்களித்து விடுவேன். பொதுவாக நான் சமகால அரசியல் குறித்து எதுவும் எழுதுவதில்லை. ஏன்னா, அது எனக்கு அவ்வளவு தெளிவாக புரியவுமில்லை, புரியப்போவதுமில்லை. தமிழ்சினிமா குறித்து எழுதலாம் என்றால் நானே வருடத்திற்கு நாலு படம்தான் பார்க்கிறேன். அதைக்குறித்து என்ன எழுதுவது? மதுரையில் சமீபத்தில் பவர்ஸ்டார் டாக்டர்.சீனிவாசன் தனது லத்திகா திரைப்படத்தின் நூற்றைம்பதாவது நாளைக் கொண்டாடினார். இனி மன்னவன், ஆனந்ததொல்லை விழாவும் இங்குதான் என்று கூறியிருக்கிறார். அந்தளவு மதுரை எல்லாவற்றையும் தாங்கி இயங்கிக் கொண்டே இருக்கிறது.

வாழ்ந்ததைக் காட்டிலும் வாழவேண்டியது அதிகமிருப்பதாகவும் பெற்றதைவிட இழந்துவிட்டது அனேகம் என்றும் நான் நினைத்ததில்லை. ஆனால் எழுதி முடிக்கிற ஒவ்வொரு சமயமும் எழுதியதைக் காட்டிலும் எழுத வேண்டியது அதிகமாக இருப்பதுபோலச் சமீபத்தில் தோன்றுகிறது. நேற்றுப் புரிந்ததைவிட இன்று வாழ்வையும் நேற்று எழுதியதைவிட இன்று மனிதர்களையும் சரியாகப் புரியவும் எழுதவும் முடிகிறது

-வண்ணதாசன்

வண்ணதாசன் சொல்வதுபோல இன்றுதான் நான் ஓரளவுக்கு தெளிவான பார்வையையே பெற்றிருக்கிறேன். ஆனால், அதற்குள் பதிவு எழுத வந்துவிட்டேன். எவ்வளவோ புத்தகங்களைக் குறித்தும், எத்தனையோ இடங்களைக் குறித்தும் எழுத ஆசைதான். குணா கமல் சொல்வது போல இந்த வார்த்தைதான் வரமாட்டேன்கிறது. தமிழில் சிறந்த புத்தகங்கள்கூட மறுபதிப்பு காணாமல் மறைந்து விடுகிறது. இந்த நிலைமை மாற ‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ என்ற இலக்கோடு செயல்படுவோம்.

தமிழில் வாசித்தால் அதனால் என்ன பலன் கிடைக்கும் என்று கேட்பவர்களிடம் பெருஞ்சித்திரனாரின் கீழ்வரும் பாடலைக் கூறுங்கள்:

தமிழ்படித்தால்,

அறம் பெருகும் தமிழ்படித்தால், அகத்தில் ஒளிபெருகும்

திறம் பெருகும் உரம் பெருகும், தீமைக் கெதிர் நிற்கும்

அறம் பெருகும் ஆண்மை வரும், மருள்விலகிப் போகும்

புறம் பெயரும் பொய்மை யெலாம், புதுமை பெறும் வாழ்வே!

மதுரையில் ஒருபுறம் மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணித்திருவிழா தொடங்கிவிட்டது. மறுபுறம் புத்தகத்திருவிழாவும் நடைபெற்று வருகிறது. மதுரை புத்தகத்திருவிழாவை மாவட்ட ஆட்சித்தலைவர் உ.சகாயம் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழண்ணல் வாழ்த்துரை வழங்கினார். மிக அருமையான நிகழ்வு. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகத்திருவிழா தொடக்கவிழா அன்றே வந்துவிட்டார். ஒரே கொண்டாட்டமாகவே இருக்கிறது. எனவே, கொண்டாட்டமான வாரத்தில் இந்த நட்சத்திரவாரம் வாய்ப்பு கொடுத்ததற்கு தமிழ்மணத்திற்கு நன்றி. மதுரை சித்திரவீதியை வணங்கி இந்த நட்சத்திர வாரத்தைத் தொடங்குகிறேன். எல்லோரும் தொடர்ச்சியாக சித்திரவீதியில் தடம்பதிக்க அன்புடன் அழைக்கிறேன். எல்லாவீதிகளும் மதுரை சித்திரவீதியை நோக்கியே வருகின்றன. நீங்களும் வாருங்கள். நன்றி!

அன்புடன்,

சித்திரவீதிக்காரன்

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் மதுரை வாசகன் – தமிழ் மண நட்சத்திரமாக ஒளிர நல்வாழ்த்துகள் – பாராட்டுகள் – தங்களின் வாசிப்பும் எழுத்தும் என்னைக் கவர்கிறது. இரசிகனாகவே மாறுகிறேன். அடிக்கடி சந்திக்கலாமே – தொடர்பில் இருக்க விரும்புகிறேன். cheenakay@gmail.com – 9840624293

 2. dharumi சொல்கிறார்:

  நம்ம ‘ஏரியாக்காரர்’ நட்சத்திரமானது மிக்க மகிழ்ச்சியானது. வாழ்த்துகள்.

  நல்ல பதிவுகளை எதிர்நோக்குகிறேன்.

 3. uraikal121 சொல்கிறார்:

  வலைபதிவு வடிவமப்பு அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

  அரசியலில் மொழியரசியலும் உண்டு. கடைசிப்பத்தியில் நீங்கள் எழுதியது அதுவே.

  உங்கள் சமணர்கள் பற்றியப் பதிவுகளை நான் படித்திருக்கிறேன். மற்றவர்களையும் படிக்கச்சொல்லியிருக்கிறேன்.

  மதுரை நல்லவூர்.

 4. soundarapandiann சொல்கிறார்:

  தமிழ்மணத்தில் நட்சத்திரமாக ஜொலிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்…

 5. chennaipithan சொல்கிறார்:

  நட்சத்திர வார வாழ்த்துகள்.அழகு தமிழில்,மேற்கோள்களுடன் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

 6. மதுரை சொக்கன் சொல்கிறார்:

  வாழ்த்துகள் மதுரைக்காரரே!

 7. வாழ்த்திய அனைவருக்கும் சித்திரவீதிக்காரனின் மனமார்ந்த நன்றிகள் பல. சீனா அய்யாவின் வாழ்த்து என்னை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது! நன்றி அய்யா! நம்ம ஏரியாக்காரர் என்று பெருமிதத்துடன் வாழ்த்திய தருமி அய்யா அவர்களுக்கும் நன்றி! சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு நன்றிகள் பல! அழகுத்தமிழில் எழுதியதாக வாழ்த்திய சென்னைபித்தன் அய்யா அவர்களுக்கும் நன்றி! நம்ம ஊர்க்காரரான மதுரை சொக்கன் அவர்களுக்கும் நன்றி! உண்மையின் “உரைகல்”லாய் மொழிஅரசியல் குறித்து கூறியுள்ளீர்கள். உண்மைதான். கட்சி அரசியல் சார்ந்து நாம் ஈடுபடாவிட்டாலும் நாம் அனைவரும் பலவிதமான நுண்அரசியலில் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். சமணம் குறித்து தொடர்ச்சியாய் பயணித்துக்கொண்டும், வாசித்துக்கொண்டும் இருக்கிறேன். தங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி! மேலும், தொடர்ச்சியாய் சித்திரவீதிக்கு வந்துகொண்டிருக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

 8. Neechalkaran (@Neechalkaran) சொல்கிறார்:

  வாழ்த்துகள் நண்பரே!

 9. karthik raja சொல்கிறார்:

  அழகு தமிழ் பெருமகிழ்ச்சி, வாழ்த்துகள் நண்பரே! மதுரைக்காரரே!
  அன்புடன் மதுரை வாசகன்.

 10. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  இது நான் எதிர்பார்த்த்துதான்.வாழ்த்துக்கள்.இனி அருவி போல் கொட்ட்ட்டும்உங்கள்
  பதிவுகள்.நல்ல ஊக்க டானிக் கிடைத்துள்ளது.மீண்டும் வாழ்த்துக்கள்.

 11. நீச்சல்காரன், நண்பர் கார்த்திக்ராஜா, ராதாகிருஷ்ணன்அய்யா அவர்களுக்கும் நன்றிகள் பல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s