மிதமான காற்றும் இசைவான கடலலையும் தமிழ்ச்செல்வன் கதைகளும்

Posted: செப்ரெம்பர் 5, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

நினைத்தபடி வாழ இங்கு யாரையும் இம்மூடச்சமூகம் அனுமதிப்பதில்லை. அதிலும் படைப்பாளிகள் தம் அன்றாட வாழ்வெனும் இம்சை தின்றது போக மிச்சத்தில்தான் தம் சக மனிதர்களோடு பேசித்தீர வேண்டியிருக்கிறது. வறுமை இல்லைதான் என்றாலும் வாழ்வு பற்றிய அச்சமே வாழ்வைப் பிழைப்பாக்கி படைப்பு வீரியத்தை – கம்பீரத்தை நம்மிடமிருந்து பறித்துச் செல்கின்றது. இது மத்தியதர வர்க்கத்து வியாதி.  படைப்பாளி ஒரு நடுத்தர வர்க்கமாகவே நீடிக்கும் வரை இவ்வியாதி பீடித்திருக்கும். பெருவாரியான உழைக்கும் மக்களின் உலகைச் சார்ந்தவனாகவே தன்னை மாற்றிக்கொள்ளும்போதே நச்சரிக்கும் மனதிலிருந்து விடுதலை கிட்டும்.  எல்லைகளை உடைக்காமல் புதிய கற்பனைதான் தோன்றுமோ? 

 – ச.தமிழ்ச்செல்வன்

ச.தமிழ்ச்செல்வனின் “மிதமான காற்றும் இசைவான கடலலையும்” தொகுப்பில் உள்ள சிறுகதைகளை வாசிக்கத் தொடங்கியதும் என் பால்யத்திலிருந்து இன்று வரையிலான வாழ்க்கையை சில கதைகளின் ஊடாக பார்த்தேன். பெரும்பாலான கதைகள் நம் வாழ்விற்கு நெருக்கமாகவோ அல்லது நமக்கு நெருக்கமானவர்களின் வாழ்க்கையை போலத்தான் இருக்கின்றன. சில கதைகள் தம்பதிகளுக்குள் ஏற்படும் பிணக்குகளை பேசுகின்றன. சில கதைகள் சாதியின் கொடுமைகளை உக்கிரத்தோடு உணர்த்துகின்றன. பெரும்பாலான கதைகள் கந்தகபூமியின் வெப்பத்தை உமிழ்கின்றன. குறைகளோடும், வலிகளோடும் மெல்லிய நம்பிக்கையோடு வாழும் நம் அன்றாட வாழ்வைத்தான் இதில் உள்ள முப்பத்திரண்டு கதைகளும் பேசுகின்றன. இதில் உள்ள சிறுகதைகள்தான் ச.தமிழ்ச்செல்வனின் மொத்த சிறுகதைத் தொகுப்பு எனும்போது நமக்கு பெரிய இழப்பாகத் தோன்றுகிறது. களப்பணியை வாழ்வாக கொண்ட தோழர் இன்னும் மக்களின் கதைகளை எழுத வேண்டும். தமிழின் முக்கியமான சிறுகதைத் தொகுப்புகளில் ச.தமிழ்ச்செல்வனின் இந்த தொகுப்பும் கட்டாயம் நாம் வாசிக்க வேண்டிய ஒன்று.

அசோகவனங்கள்“, “வெயிலோடு போயி” என்ற இரண்டு சிறுகதைகளைத்தான் இயக்குனர் சசி “பூ” திரைப்படமாக எடுத்தார். மிகவும் அருமையாக சிறுகதையை காட்சிப்படுத்தியிருப்பார். மாமன் தங்கராசையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் மாரி போன்ற எத்தனையோ பேர் இன்னும் நம்மோடு வாழத்தானே செய்கிறார்கள்.

நிறைய கதைகளில் இளஞ்சிறார்களின் மனநிலையை மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார். கருப்புக்கலருக்காக காய்ச்சல் அடிப்பதாக சொல்பவன் (மற்றும் மைனாக்கள்), சுற்றுலா செல்லும் பலநாட்களுக்கு முன்பிருந்தே கனவுகளோடு அலைந்து தயாராகும் சிறுவனின் கனவு தகரும் போது அவனுடைய கதறல் (வார்த்தை), தீப்பெட்டி ஒட்டும் சிறுவனின் தம்பி வண்டியில் விற்று வரும் திண்பண்டங்களை வாங்க காசில்லாமல் அழுவது(பாவனைகள்), இளஞ்சிறார்களிடம் பாலியல் அத்துமீறல் செய்பவர்களால் பாதிக்கப்படும் சிறுவர்கள் (லங்கர்பாய், பின்னணி இசையின்றி), தன்னுடன் பணியாற்றுபவர்கள் தன் கண்முன்னே தீவிபத்தில் இறந்ததை கண்டு இரவில் நினைத்து நினைத்து அலறும் சிறுவன் (குரல்கள்), பரிட்சைக்குப் பயந்து பிள்ளையார், ஏசு என சாமியை மாற்றி, மாற்றி கும்பிட்டாவது பாஸாகத் துடிப்பது (பதிமூணில் ஒன்று) என பலகதைகளில் சிறுவர்களின் வாழ்க்கையை அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

26ஆம் பக்கத்து மடிப்பு’ என்ற சிறுகதை வாசித்ததும் சற்று அச்சமாகயிருக்கிறது. திருமணமாவதற்கு முன் புரட்சிகரமான வாசகனாயிருந்தவன் திருமணத்திற்கு பிறகு புத்தகத்தை எடுத்துப்பார்க்கும்போது அவர் வேலையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். அவ்வளவு காலம் அவர் புத்தகத்தைத் திறக்கவே முடியவேயில்லை. நமக்கும் இந்த சூழல் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சந்தான். சந்தேகப்படும்படியாகவே நடக்கும் கணவன், எடுத்ததற்கெல்லாம் சந்தேகப்படும் மனைவி இவர்களை பற்றிய கதைதான் ‘ஏவாளின் குற்றச்சாட்டுக்கள்’. காதல் திருமணம் செய்து கொண்ட கணவன் மனைவிக்குள் ஏற்படும் இடைவெளியைத்தான் ‘வெளிறிய முத்தம்’ சிறுகதையில் காட்டுகிறார். குதிரைவண்டியில் வந்தவன், தாமதம், அவரவர் தரப்பு சிறுகதைகளும் கணவன், மனைவிக்குள் ஏற்படும் பிணக்குகளைத்தான் பேசுகிறது. புரிதல் இல்லாமல் வாழ்பவர்களுக்கு இந்தக் கதைகள் வாழ்வில் ஒரு புரிதலை ஏற்படுத்தும்.

சொல்லவருவது’ கதையில் மனிதர்களைவிட நாய்கள் பரவாயில்லை என்று சொல்வதாக தோன்றியது. இந்தக் கதையில் தாமிரபரணியாற்றில் நடந்த தாழ்த்தப்பட்ட மக்களின் கொலையைப் பதிவு செய்திருக்கிறார். ‘பதிமூணில் ஒன்று’ சிறுகதையில் ஆடுமேய்ப்பவரின் மகன் சிரமப்பட்டு படிக்க முயல்வதை மிக அழகாக எடுத்துக்காட்டியிருப்பார். ஆனால், பாவம் அவன் போகும் இடமெல்லாம் ஆடு துரத்திக்கொண்டேயிருக்கும். கணக்கு வாத்தியாரிடம் டியூசன் போனால் அவங்க வீட்டு ஆட்டுக்கு புல்லறுக்கச் சொல்வது, ஆங்கிலம் புரியவேண்டுமென ஏசுவை கும்பிட போனால் அங்குள்ள பாதிரியார் தரும் கதைப்புத்தகத்திலும் ஆடுகளாயிருக்க குழம்பிப்போவான். கடைசியில் தேர்ச்சி பெற்று அடுத்த வகுப்புக்குச் சிரமப்பட்டு செல்லவேண்டிய சூழலைக் காட்டியிருப்பார்.

வேறுஊர், உபரி, மீடியம் மூன்று கதைகளும் வறுமையோடு வாழ்பவர்களைப் பற்றிய கதைதான். ‘உபரி’ சிறுகதையில் மாதவருமானத்தில் வரவு, செலவு போக அதிகப்படியாக அறுபது ரூபாய் கையிலிருக்க குழம்பிப்போனவர் அதில் குழந்தைகளுக்கு திண்பண்டம் வாங்க நினைப்பது, இருமலோடு சிரமப்படும் மனைவிக்கு மருந்து வாங்க நினைப்பது, வீடு மாற்ற நினைப்பது என பல யோசனைகள். இறுதியில் கழிப்பிடவாளி கைப்பிடியில்லாமல் தூக்கி வரும் மகனைப்பார்த்து முதலில் வாளி வாங்க வேண்டுமென நினைப்பார். அடுத்து ‘மீடியம்’ சிறுகதையில் ஒரே ஜட்டியோடு சிரமப்படுபவர் கடைக்கு சென்று விலை கேட்டால் கர்ச்சீப் வாங்கத்தான் காசு இருக்கும்.  இதெல்லாம், நம் வாழ்வில் அடிக்கடி நிகழும் நிகழ்வுதான்.

‘பிரக்ஞை’ கதையில் நம்மைப்போல் ஒருவனைப் பற்றி வரும் வரிகளை வாசித்து பாருங்கள்.

வீட்டில் உட்கார்ந்து எவளையாவது நினைத்து உருகிக் கொண்டிருப்பான். எந்த நண்பனைப் பற்றியாவது எண்ணி மனம் நெகிழ்ந்து கொண்டிருப்பான். பால்யத்து நினைவுகளில் ஆழ்ந்து போயிருப்பான். திடீரென கிணற்றில் ஒரு கல் விழும்- திடுமென ஆபீஸ். அப்புறம் தொடந்து ‘திடும்திடும்’தான்!

‘அப்பாவின் பிள்ளை’ கதையில் வருபவனைப்போல அழகியலுடன் வாழ நினைப்பவனுக்கு வேலை கிடைத்து அழகியல் மறந்து போவது போல எனக்கும் நிறைய முறை நிகழ்ந்து இருக்கிறது. வீட்டுக்கு கிளம்பலாம்ன்னு நினைக்கிறப்ப போஸ்ட்ஆபிஸூக்கு போகச்சொல்வது, நல்ல மத்தியான நேரத்துல பேங்குக்கு போகச்சொல்வது என நானும் அனுபவித்திருக்கிறேன். அதுவும் கதையில் வருவது போலவே மேலாளர் ‘கண்ணா, ராஜா’ன்னு கூப்பிட்டு இந்த வேலையெல்லாம் அன்பாத்தான் கொடுப்பாங்க. வேலையெல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு போய் நானும் கதையில் வருபவனைப்போல வீட்டில் உள்ளவர்கள் மேலெல்லாம் எறிஞ்சுவிழுவேன்.

‘கருப்பசாமியின் அய்யா’ கதை எங்க குடும்ப கதைதான். நல்லா உழைச்சும் சம்பாதிக்க தெரியாத அப்பா, அதுனாலயே திட்டுற அம்மா, அப்பா வாங்கித் தர்ற திண்பண்டம், விளையாட்டுச்சாமான் மற்றும் அவரைப் பற்றி பெரியவங்க சொன்ன கதைகளை கேட்டு அப்பாவை பெரிய ஆளாக நினைக்கும் கருப்பசாமிக்கும் எனக்கும் அதிக வித்தியாசமில்லை.

இதில் உள்ள எல்லா கதைகளை குறித்தும் எழுத ஆசைதான். எல்லாமே மிகவும் நெருக்கமான கதைகள்.

இளம் வெயிலும் மிதமான காற்றும் இசைவான கடலலையும் எல்லோருக்கும் வாய்க்க நாம் கதை எழுதுவதுதான் ஒரே வழி 

என்று முன்னுரையில் ச.தமிழ்ச்செல்வன் சொல்கிறார். சித்திரவீதியிலிருந்து தமிழ்வீதிக்கு போய் அவரை இன்னும் நிறைய சிறுகதைகள் எழுதச்சொல்லிக்கேட்போம்.  www.satamilselvan.blogspot.com

நேருக்கு நேரான வார்த்தைகளில் நிகழ்வுகளை ஊடறுத்து மனங்களின் அடுக்குகளுள் தத்தளிக்கும் வாழ்வை இழுத்து வந்து கேள்விக்குள் நிறுத்தும் கதைகள். கேலியும் சிரிப்பும் விளையாட்டுமாய் வறுமையைக் கடந்து செல்லப் பழகிவிட்ட ஒரு வாழ்வைப் பூச்சின்றிப் பேசும் கதைகள்.

(பின்னட்டையிலிருந்து)

தமிழினி பதிப்பகம். விலை ரூ.150

பின்னூட்டங்கள்
 1. தோழன் மபா சொல்கிறார்:

  தமிழ்மணம் நட்சத்திரமாக உயர்ந்ததற்கு எனது வாழ்த்துகள்.
  மனித மனங்களைப் பேசும் இத்தகைய கதைகள்தான் நமக்கு இன்றைய தேவை. இத்தகைய தனித்துவம் வாய்ந்த கதைகளை வெறும் கதைகள், என்று நாம் ஒதிக்கிவிடமுடியாது. அவை நமது வாழ்வின் அன்றாட நிகழ்வுகள் என்பதை தங்களது பதிவு மிக அழகாக வலியுறுத்துகிறது. நல்லதொரு பதிவு நண்பரே… ! வாழ்த்துகள்.

 2. ச.தமிழ்ச்செல்வனின் அனைத்து சிறுகதைகளும் தமிழின் மிக முக்கியமான சிறுகதைகள். நல்ல மறுமொழியளித்த தோழன் மபா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!

 3. சென்னைபித்தன்i சொல்கிறார்:

  நல்லதொரு சிறுகதைத் தொகுப்பை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி!

 4. shenisi சொல்கிறார்:

  நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே..

  ப்ளாக் பக்க வடிவமைப்பு நன்றாக உள்ளது!

 5. vidyashankar சொல்கிறார்:

  புதுமைபித்தன் ,ஆதவன்,ச தமிழ்செல்வன் மூவரிடமும் இழையோடும் நகைச்சுவை ரசனைக்குரியது

 6. சென்னைபித்தன் அய்யாவுக்கும், shenisi அவர்களுக்கும், வித்யாசங்கர் அவர்களுக்கும் மிக்க நன்றி. தளவடிவமைப்பு நன்றாக உள்ளது என்றால் அதற்கான முழுப்பெருமையும் என்னுடைய சகோதரர் தமிழ்ச்செல்வம் அவர்களையே சேரும். ஆதவன் சிறுகதைகள் தான் இன்னும் அதிகம் வாசிக்கவில்லை. புதுமைபித்தன் கதைகள் நிறைய வாசித்திருக்கிறேன். எல்லோருக்கும் நன்றி!

 7. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  அருமையான பதிவு.முன்னுரையைப்பார்த்தால் தமிழ்ச்செல்வன் அதிகமாக எழுதாத்தற்கான காரணம் புரிகிறது.திருமணம் முடிந்தபின் நீங்களும் இவ்வாறு
  ஆகிவிடக்கூடாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s