மறைந்து வரும் விளையாட்டுக்களும் மறக்காத நினைவுகளும்

Posted: செப்ரெம்பர் 6, 2011 in நாட்டுப்புறவியல், பார்வைகள், பகிர்வுகள்

கோலிகுண்டு, பம்பரம், சில்லாக்கு, பாண்டி, ஒத்தையா ரெட்டையா, சொட்டாங்கல்லு, பூப்பறிக்க வருகிறோம், காலாட்டுமணி கையாட்டுமணி, எறிபந்து, கொலகொலயா முந்திரிக்கா, பச்சக்குதிர தாண்றது, ஓடிப்புடிச்சு ஒளிஞ்சுபுடிச்சு, தாயம், பரமபதம், ஆடுபுலியாட்டம், பல்லாங்குழி, கல்லா மண்ணா, டியாண்டோ டியாண்டோ, திருடன் போலீஸ், தீப்பெட்டிப்படம் சேக்கிறது, சடுகுடு, கிட்டி (கில்லி), எருவாட்டி, கண்ணாமூச்சி, கிறுகிறுவானம், ரயில்வண்டி, நொங்குவண்டி டயர்வண்டி ஓட்றது, குச்சி விளையாட்டு (சிலேட்டு குச்சிதான்), குலுக்குச்சீட்டு என இளமை பூராம் விளையாடித் திரிந்ததால் இன்றுவரை விளையாட்டாய் இருக்கிறது வாழ்க்கை.

மேலே பட்டியலிலுள்ள விளையாட்டுக்கள் எல்லாம் இளமையில் விளையாடித் திரிந்தவை. இதில் பாதி விளையாட்டுக்கள் பேர்கூட இன்று உள்ள சிறுவர்கள் யாருக்கும் தெரியாது. மேலும், அப்படி விளையாடும்  சிறுவர்-சிறுமியர்கள் எல்லோரும் ஊராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் படிப்பவர்கள் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த விளையாட்டுக்கள் அழிவதால் என்ன பெரிதாய் ஆகிவிடப்போகிறது என்று நினைப்பவர்களைப் பார்த்தால் பாவமாயிருக்கிறது. ஏனென்றால், இன்று இந்தியாவின் தேசியவிளையாட்டாக மாறிவரும் கிரிக்கெட் விளையாட்டே அல்ல. அது முழுக்க, முழுக்க வியாபாரம். கோடி, கோடியாய் முதலீடு செய்யும் தொழில். விளையாட்டு எப்பொழுது வியாபாரம் ஆனதோ அப்பொழுதே அதை நாம் பார்ப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், நாமோ கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு கோயில்கட்டிக் கும்பிட்டுக்கொண்டிருக்கிறோம். நானும் பள்ளியில் படிக்கும்போது இடைவெளி வேளைகளில் கூட கிரிக்கெட் விளையாடித் திரிந்திருக்கிறேன். நல்லவேளை அதைத் தொடரவில்லை. மேலும், தொலைக்காட்சியில் அதைப்பார்ப்பதுமில்லை. சரி அதை விடுங்க. மேலே, உள்ள விளையாட்டுக்கள் குறித்து பார்ப்போம்.

 

மேலே பட்டியலிட்ட விளையாட்டுக்கள் எல்லாமே கொஞ்சம்தான். இன்னும் பல நண்பர்கள் அவர்கள் விளையாடிய விளையாட்டுக்களின் பேரை குறிப்பிட்டால் நூறுக்கும் அதிகமான விளையாட்டுக்கள் குறித்து அறியலாம். தற்போது இருபத்தைந்து வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லோருமே இந்த விளையாட்டுக்களைக் குறித்து கட்டாயம் அறிந்திருப்பார்கள். மேலும், இன்னும் நம் தாத்தா காலத்து விளையாட்டுக்களை எல்லாம் அறிந்தால் பட்டியல் நீளும். மேலும், விளையாட்டுக்களை எப்படி கொண்டாடி இருக்கிறார்கள் என்று தெரியும். கிராமப்பகுதியில் வசிக்கும் நண்பர்கள் இன்னும் நிறைய விளையாட்டுக்களைக் குறித்து எழுதலாம். கம்மாயில் மீன் பிடிப்பது, மரத்தில் ஏறித்தாவி குளிப்பது என இன்னும் நிறைய இருக்கிறது.

இந்த விளையாட்டுக்களை எல்லாம் நினைக்கும் போது ஒரு கூட்டமே நினைவுக்கு வருகிறது. தனியாகவா விளையாட முடியும்?. குண்டு விளையாட்டில் தேக்கியது, பம்பரத்தில் ஆக்கர் விழுந்தது, கபடியில் உப்புக்கு சப்பாணியா என்னை பாடிவர அனுப்புவது, கிட்டி விளையாடி ஊர் ஊராய் சுற்றியது, திருடன் போலிஸ் விளையாட்டில் பாடும் பாட்டு (டக்! டக்! யாரது? திருடன்! என்னா வேண்டும்? நகை வேண்டும்! என்னா நகை?….), டயர்வண்டிய வீதிவீதியா ஓட்டி அலைந்தது, பள்ளிக்கூடத்தில் பாடமெடுக்காத வேளையில் குலுக்குச்சீட்டு விளையாடியது, காலாட்டுமணி கையாட்டுமணியில் பிடிக்காதவங்களை நச்சுன்னு கொட்டுறது, பிலிம்ல படம் காட்ட காசு போட்டு பிலிம்மா வாங்கி குவிக்கிறது, பச்சக்குதிர தாண்டுறப்ப கள்ளாட்ட பண்றது, கிறுகிறுவானம் சுத்தி கீழே விழுந்து கிடப்பது, வைகுண்ட ஏகாதசிக்கு முழித்திருந்து பரமபதம், தாயம், சதுரங்கம் விளையாடியது, போஸ்ட்மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிருந்து கண்ணாமூச்சிக்கு பட்டுவந்தது, சோப்புத்தண்ணிய ஊத்தி முட்டைவிட்டு திரிஞ்சது, உடைந்த வளையல்களை சோடி சேர்த்து விளையாடியது என ஞாபகங்கள் கிளைவிட்டுக்கொண்டே இருக்கின்றன. என்னுடைய ஒரு ஆசை என்னவென்றால் எப்படியாவது இந்த விளையாட்டுக்களை இன்றைய தலைமுறையிடமும் விதைத்துவிட வேண்டும் என்பதுதான்.

தமிழ்த்திரைப்படங்களில் சிலபடப்பாடல்கள் இன்னும் அந்த விளையாட்டுக்களை ஞாபகமூட்டும் அற்புத பதிவாக இருக்கிறது. உதாரணத்திற்கு வெயில் படத்தில் வரும் வெயிலோடு விளையாடி.., பூ படத்தில் வரும் ச்சூ ச்சூ மாரி.., பசங்க படத்தில் பேர் போடும் போது வரும் விளையாட்டு குறித்த பாடல்கள், களவானி படத்தில் பேர் போடும்போது வரும் சொட்டாங்கல்லு பாட்டு என நிறைய. இந்தப்பாடல்கள் எல்லாம் அப்படியே பால்யத்திற்கு அழைத்து சென்றுவிடுகின்றன. இன்றும் கிராமங்களில் உள்ள சிறுவர்கள் இதெல்லாம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த மெட்ரிக்குலேசன், சி.பி.எஸ்.சி என வாயில் நுழையாத பள்ளியில் படிக்கும் மாணவர்களை நினைத்தால் பாவமாயிருக்கிறது. மண்ல விளையாடாத புண்ணு வந்துரும்ன்றதுல இருந்து அவங்ஙள விளையாடவே விடாம டியூசன், கராத்தே க்ளாஸ், பாட்டு க்ளாஸ்ன்னு அனுப்பி க்ளாஸ்ல முதல் ஆளா வர வைக்கிறதுலதான் குறியா இருக்காங்க. அந்த சிறுவர்களை கணிணிபூத விளையாட்டுக்களில் இருந்து காப்பாற்றுங்கள்! உங்களுக்கும் விளையாட்டு குறித்த நினைவுகள் தோன்றுகிறதா அதை கட்டாயம் மறுமொழியிடவும். அதைவிட முக்கியம் உங்கள் நினைவுகளை அடுத்த தலைமுறையிடம் கட்டாயம் கடத்திவிடுங்கள். கிரிக்கெட் தவிர்! என்னும் புதிய ஆத்திசூடியை நினைவில் நிறுத்துங்கள். நன்றி.

பின்னூட்டங்கள்
 1. Natkeeran சொல்கிறார்:

  பதிவிற்கு நன்றி.

  குறைந்த பட்சம் நாம் இவற்றை ஆவணப்படுத்தி வைத்தால், வரும் தலைமுறை ஒரு வேளை மீட்டுக்க உதவியாக இருக்கும்.

  மொழியையும், கலைகளையும், தொழில்களையும் இழந்த பிற பல பழங்குடி மக்களிடம் இந்த இழப்பின் பெறுமதி என்ன என்று கேட்டுப் பார்க்கவேண்டும்.

  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

 2. ila சொல்கிறார்:

  இதே தலைப்பில் மீண்டும் ஒரு நட்சத்திரப் பதிவு

 3. நாம் விளையாடிய ஆட்டங்களை எல்லாம் விரைவில் கொஞ்சம், கொஞ்சமாக ஆவணப்படுத்த நினைக்கிறேன்.

  \\மொழியையும், கலைகளையும், தொழில்களையும் இழந்த பிற பல பழங்குடி மக்களிடம் இந்த இழப்பின் பெறுமதி என்ன என்று கேட்டுப் பார்க்கவேண்டும்\\

  உண்மையான வரிகள்! நக்கீரன் அவர்களுக்கு நன்றிகள் பல. மேலும், விக்கீபீடியா இணைப்பு கொடுத்தற்கும் நன்றி!

 4. vidyashankar சொல்கிறார்:

  மனசு கனப்பதை தவிர வேறு என்னசெய்வது

 5. ”அத்திலி, பித்திலி, மக்யான், சிக்கான், பால், பரங்கி, ராட்டினம், சீ, சல்” என்ற பாட்டை இப்போதுள்ள பிள்ளைகள் வித்தியாசமாக சொல்லக்கேட்டுயிருக்கிறேன். எப்படியும் இவை அழியாமல் காக்க வேண்டும். மறுமொழியிட்ட இளா அவர்களுக்கும், வித்யாசங்கர் அவர்களுக்கும் நன்றி.

 6. bsundaravadivel சொல்கிறார்:

  Recently in our Tamil Sangam Kodai Vizha we played Kittpul, pamparam, kulai eduthal etc. It was enjoyable to all. Kids loved it. Those who know these games have to just play it and teach our kids. If not in Tamilnadu and Eelam, the games will survive elsewhere.

 7. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சுந்தர் – நீ விளையாடிய விளையாட்டுகள் இப்பொழுது வழக்கில் இல்லை, கிராமப்புரங்களில் கூட மாறிவிட்டது. நகரங்களில் சுத்தமாக இல்லை. என்ன செய்வது – குறைந்த பட்சம் ஆவணப்படுத்திச் செல். தற்காலச் சிறுவர் சிறுமியர்க்கு உதவும் . நல்வாழ்த்துகள் சுந்தர் – நட்புடன் சீனா

 8. சீனா அய்யாவிற்கும், சுந்தரவடிவேல் அவர்களுக்கும் நன்றி.
  சமீபத்தில் நண்பனை பார்க்க சோலையழகுபுரம் சென்றிருந்தேன். நவராத்திரி காலங்களில் மாலை வேளைகளில் கோயில்களில் மற்றும் சில வீடுகளில் கொலு வைப்பார்கள். ஆனால், இங்கு சிறுவர்கள் தெருவுக்குத்தெரு கொலு வைத்து விளையாடியதை பார்த்தபோது மிகவும் மகிழ்வாக இருந்தது. சின்னச்சின்ன பொம்மைகள், விளையாட்டுச்சாமான்களை வைத்து அவரவர் கற்பனைக்கு ஏற்ப வீட்டு வாசல்களில் பொம்மைகளை வைத்து கூட்டமாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். எல்லாவீதிகளிலும் இது போல சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்ததை பார்த்தேன். சிறுவர்கள் எதாவது புது விளையாட்டுக்களை கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.

  • தொப்புளான் சொல்கிறார்:

   குழந்தைகள் காலந்தோறும் தங்களுக்கான விளையாட்டுக்களை உருவாக்கிகொள்வது உண்மைதான். அது ஊர்கள் கடந்து ஒருவாறு பரவிவிடுகிறது. போன வாரம் குழந்தைகள் விளையாடும்போது பார்த்த விளையாட்டுக்கள் இவை:

   * Odd or Even என்று ஒரு விளையாட்டு. கைவிரல்கள் மட்டும் கொண்டு ஆடும் கிரிக்கெட். கைவிரல்களை ஒவ்வொரு மாதிரி நீட்டி மடக்குவதற்கும் ஒரு ‘ஸ்கோர்’. ‘பந்து வீசுபவரும்’ ‘மட்டை பிடிப்பவரும்’ ஒரே நேரத்தில் கைகளைக் குலுக்கி ஒரு எண்ணிக்கையை நீட்டவேண்டும். இரண்டும் ஒரே எண்ணாக அமைந்துவிட்டால் மட்டைபிடித்தவர் ‘அவுட்’. அதுவரை அவர் காட்டிய எண்கள் அவர் எண்ணிக்கையில் சேரும். பிறகு மற்றவர் இவ்வாறு செய்யவேண்டும். யார் அதிகம் ஸ்கோர் செய்கிறார்களோ அவர் வெற்றிபெற்றவர்.

   * Stone, Paper, Scissors என்று ஒரு விளையாட்டு. விரல்களைக் குவித்துவைத்தால் கல். விரித்துவைத்தால் தாள். கத்திரி போன்று வைத்தால் கத்திரி. இந்த வார்த்தைகளை சொல்லி கையை அசைத்து ஏககாலத்தில் மூன்றில் ஏதேனும் ஒன்றை காண்பிக்கவேண்டும். ஒருத்தி தாளும் இன்னொருத்தி கத்திரியும் என்றால் கத்திரி வைத்தவளுக்கு எண்ணிக்கை ஒன்றுகூடும். கத்திரியை வைத்து தாளை வெட்டிவிடலாமே. ஒருத்தி தாளும் இன்னொருத்தி கல்லும் என்றால் தாள் வைத்தவளுக்கு எண்ணிக்கை ஒன்றுகூடும். தாளை வைத்து கல்லை மறைத்துவிடலாமே. ஒருத்தி கல்லும் இன்னொருத்தி கத்திரியும் என்றால் கல் வைத்தவளுக்கு எண்ணிக்கை ஒன்றுகூடும். கல்லை வைத்து கத்திரியை உடைத்துவிடலாமல்லவா? இதே போலத்தான் Snake, Water, Gun விளையாட்டும்.

   ஒன்றுமட்டும் புரிகிறது. இவையெல்லாம் இருந்த இடம்விட்டு நகராமல் கையைமட்டும் வைத்துவிளையாடும் விளையாட்டுக்கள். வாய்ப்பூட்டு போட்டபடி இருந்தால்தான் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்கமுடியும் என்று சொல்லிவிட்டால் கண்ணை மட்டும் அசைத்து விளையாடும் விளையாட்டுக்களையும் கண்டுபிடிப்பார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s