நாஞ்சில்நாடனின் ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’

Posted: செப்ரெம்பர் 7, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலை முறைகள், கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள். அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது. 

– நாஞ்சில் நாடன்

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ புத்தகத்தின் உள்அட்டையில் இதை வாசித்ததும் வாங்காமல் இருக்க முடியுமா? பள்ளியில் பத்து மதிப்பெண்ணுக்காக எனக்கு பிடித்த இட்லிகடைக்காரர், நான் மிளகாய் பஜ்ஜி கடை அதிபரானால் எனக் கட்டுரைக்கனிகள் படித்து கட்டுரைகளின்மீது வெறுப்பு கொண்டிருந்த நாளில் தொ.பரமசிவன், நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களின் கட்டுரை படித்துதான் கட்டுரைகள் மீதான ஈர்ப்பு வந்தது. இந்தப்புத்தகம் நாஞ்சில்நாடனின் கட்டுரைகள், முன்னுரைகள், மதிப்புரைகள் அடங்கிய தொகுப்பு. இதில் உள்ள எல்லா கட்டுரைகளும் முக்கியமானவை. நாஞ்சில் நிரந்தர பயணி, தன் பணிக்காரணமாக இந்தியாவெங்கும் சுற்றியவர். நாஞ்சில் சங்க இலக்கியம் முதல் இன்றைய நவீன இலக்கியம் வரை வாசிப்பவர். நாஞ்சில் ஒரு கட்டுரையை ஏனோதானோவென்றெல்லாம் எழுதுவதில்லை. அவரது ஒவ்வொரு கட்டுரையை வாசிக்கும்போதுதான் அதற்கான உழைப்பு எவ்வளவு இருக்கும் என்று நாம் உணர முடிகிறது. நாஞ்சிலைப்போல இவ்வளவு சிரத்தையோடு என்னால் எழுத முடியாது. அதனால்தான் இத்தனை நாளாய் இந்நூல் குறித்து எழுதவில்லை. சரி, நாஞ்சில் எழுத்தாளர். நாம் வாசகன்தானே எனத்தொடங்கிவிட்டேன்.

இதில் உள்ள கட்டுரைகளை வாசிக்கும்போது நாஞ்சில் நாடனின் ரௌத்திரம் நம்மையும் தொற்றி கொள்கிறது. எத்தனைவிதமாக நாம் ஏமாற்றப்படுகிறோம்; மேலும் நாம் செய்யும் சில காரியம் எல்லாம் எவ்வளவு தப்பு என்பதை ஒவ்வொரு கட்டுரை மூலமாக சாட்டையெடுத்துச் சுழற்றுகிறார். மகாகவி பாரதி சொன்ன ‘பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்’ என்னும் வரி நாஞ்சிலுக்கும் பொருந்தும்.

தமிழைக் கொலை செய்யும் திரையிசைப் பாடல்கள், பாலின் விலைக்கு நிகராக வந்த தண்ணீரின் விலை எனக் கண்முன் நடக்கும் அநியாயங்களை தன் எழுத்தின் மூலம் கேள்விக்குட்படுத்துகிறார். இந்நூலை வாசித்த பிறகு நான் தமிழ் சினிமா பார்ப்பதையே குறைத்து விட்டேன். இப்பொழுதெல்லாம் வருடத்திற்கு ஐந்து படம் பார்ப்பதே அதிகமாக தெரிகிறது. இதற்காகவே நாஞ்சிலுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

‘கொட்டிக் கிழங்கோ கிழங்கு’ என்ற கட்டுரையில் முறையான கழிப்பிட வசதியில்லாமல் பயணங்களில் பெண்களுக்கு ஏற்படும் சிரமங்களை விவரிக்கிறார். ஆண்களாவது பேருந்து நிற்கும் இடங்களில் எங்கனயாவது போய் இருந்துட்டு வந்துருவாங்க. பொதுவாக பேருந்து நிறுத்தும் அந்த அத்துவானக்காட்டில பெண்கள் பேருந்தை விட்டே இறங்க முடியாது, பிறகெங்கே கழிப்பிடங்களுக்கு செல்வது?. நாஞ்சில் சொல்வது போல நெடுநேரம் பயணிக்கும் பேருந்துகளிலாவது ஒரு கழிப்பறை அமைப்பது அவசியம். விலையில்லா அரிசி போடும்போதும் இக்காலத்தில் கழிப்பிடங்களுக்கு சென்றால் ஐந்துரூபாய் வரை வாங்கி விடுகிறார்கள். இந்தக் கொடுமையை எங்கே போய் சொல்வது?  

மங்கலம், குழூஉக்குறி, இடக்கரடக்கல்’ கட்டுரையில் பெண்களின் மார்பகங்களை எப்படி வியாபார நோக்கத்தோடு திரைப்படங்கள் மற்றும் ஊடகங்கள் காட்டுகின்றன என்பதை தெளிவாக எடுத்துரைத்து கண்டிக்கிறார். இதன் தலைப்பின் பொருள் வாசித்த காலத்தில் புரியவில்லை. நன்னூல் வாசிக்கும்போதுதான் அறிந்தேன். ‘ங போல் வளை ஞமலி போல் வாழேல்’ என்ற கட்டுரையை வாசிக்கும் போதும் நாஞ்சில் தமிழ் ஆசிரியர் என்றே பலர் நினைப்பார்கள். அந்த அளவு சங்க இலக்கியத்தில் தேர்ச்சி கொண்டவர். ஓரிடத்தில் போலி ஆசிரியர்களையும் கண்டிக்கிறார். இன்று பெரும்பாலான ஆசிரியர்கள் வேலைக்கு வந்தபின் படிப்பதேயில்லை என்பதுதானே உண்மை.

‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ என்ற கட்டுரை செல்போன்களை எப்படி நாம் முறைகேடாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என சுட்டிக்காட்டுகிறார். இப்பொழுது இன்னொரு கொடுமை என்னவென்றால் அவசரமாக அழைப்பு வருகிறதென்று எடுத்தால் ஒரு பெண் குரல் அழைத்து உங்க பிரச்சனைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என கொஞ்சலான குரலில் அழைக்கிறது. அசந்தா ஆளையே காலி பண்ணிருவாங்ங, கவனம். நான் பொதுவாக செல்போனில் அதிகம் பேசுவதில்லை. எனவே, நானும் நாஞ்சில் கட்சிதான்.

கான்வென்ட்கள், தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியப் பள்ளிகள், மதரஸாக்கள், குளிர் வாசத்தலங்களில் அமைந்த ரெசிடன்சியல் பள்ளிகள், கேந்த்ரீய வித்யாலயங்கள்… இவற்றின் ஊடே வக்கும் வகையும் அற்றவர்களின் மக்கள் பயிலும் மாநகராட்சிப் பள்ளிகள்.  என, ‘நாடு இவர்களுக்கு என்ன செய்யப் போகிறது?’ என்னும் கட்டுரையில் மாநகராட்சி பள்ளி மாணவர்களை பற்றி கூறுகிறார். என்னுடைய மாநகராட்சி பள்ளி நாட்களை நினைவூட்டிய பதிவு. இதில் நாஞ்சில் சொல்வதுபோல மற்றவர்களோடு மாநகராட்சி பள்ளி மாணவர்கள் போட்டியிடுவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாக தெரியும். நானெல்லாம் அந்த வகையறாதான். இங்கு சமச்சீர் கல்வி (பொது பாடத்திட்டம்) மட்டும் வந்தால் போதாது சமச்சீர் பள்ளிகளும் வேண்டும். என்ன செய்ய சீர் இல்லாத கல்விமுறைகளும் கூர் இல்லாத மக்களும் இருக்கும்போது?

‘அன்பெனும் பிடி’ கட்டுரையை வாசித்து வண்ணதாசன் நமக்கும் கடிதம் எழுதமாட்டாரா, வண்ணதாசனின் கோட்டோவியங்களை நாமும் காண முடியாதாயென ஏக்கமாயிருக்கிறது. மேலும் இந்நூலில் எம்.எஸ். மற்றும் சுந்தரராமசாமி பற்றிய இவரது கட்டுரையை வாசித்ததும் நமக்கும் அவர்கள்மேல் பிரியம் வருவது தவிர்க்க இயலாதது. இவர் தனக்கு எழுதும் முன்னுரைகள் மிக எளிமையானவை. மேலும் மற்றவர்களுக்கு எழுதும் முன்னுரைகள் அல்லது மதிப்புரைகளில் அவர்களது நிறைகளை சுட்டிக்காட்டுவதோடு குறைகளையும் மனங்கோணாமல் கூறி மேற்கொண்டு எழுத ஊக்குவிக்கிறார்.

‘வாசச்சமையலும் ஊசக்கறியும்’ என்ற கட்டுரையில் உணவைக் குறித்து பிரமாதமாக எழுதியிருக்கிறார். ஆனால், பசிக்கும்போது எதையோ சாப்பிட்டா சரின்னு இருக்கிற எனக்கும் இந்த கட்டுரைக்கும்தான் சம்மந்தமில்லாமலிருக்கிறது. மற்றபடி எனக்கும் ரசிச்சு சாப்பிடணும்ன்னு ஆசைதான். முடியலை.

பிறர்க்கு நாஞ்சில்நாடன் எழுதிய முன்னுரைகளில் பெருமாள் முருகனின் ‘நிழல்முற்றம்’ வாசித்திருக்கிறேன். நாஞ்சில் தனக்கு எழுதிய முன்னுரைகளில் ‘நாஞ்சில்நாட்டு வெள்ளாளர்வாழ்க்கை’ வாசித்திருக்கிறேன். மதிப்புரைகளில் ஆ.இரா.வெங்கடாசலபதியின் ‘முச்சந்தி இலக்கியம்’ வாசித்திருக்கிறேன். இந்தப் புத்தகங்களை வாசிக்கத்தந்த சகோதரர்க்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். நாஞ்சில்நாடன் மகுடேஸ்வரனின் காமக்கடும்புனலுக்கு எழுதிய முன்னுரையை வாசித்தபிறகுதான் ‘மண்ணே மலர்ந்து மணக்கிறது’ கவிதைத்தொகுப்பு வாசித்தேன். மேலும், மகுடேஸ்வரனின் வலைப்பூவிற்கும் நாஞ்சில்நாடன் வலைத்தளத்திலிருந்துதான் சென்றேன்.

நாஞ்சில் எழுத்தோடு சிற்பங்களையும், ஓவியங்களையும் ரசித்து காண்பவராகவும் இருக்கிறார். நானும் வாய்ப்பு கிடைக்கும் போது ஓவியக்கண்காட்சி மற்றும் கோயில்களில் உள்ள சிற்பங்களையும் போய் பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.

தமிழில் வந்த முக்கியமான கட்டுரைத்தொகுப்புகளில் இந்நூலும் ஒன்று. தமிழினி வெளியீடு. 150ரூபாய். பின்னட்டையில் உள்ள வரிகளையும் வாசியுங்கள்.

நதியின் பிழையன்று எனில் எவர் பிழை? வான் பொய்த்தது. குலக்கொடிதானும் பொய்த்தது. சுழன்றும் ஏர்ப்பின்னதா உலகம்? சீர்த்தமுலைபற்றி வாங்கக்குடம் நிறைத்த வள்ளற் பெரும் பசுக்கள் ஆயர்பாடி நீங்கி ஏதிலிகளாய், காமக்கடை விரிக்கும் கனவுத்திரைச் சுவரொட்டிகளைப் பெருநகர்ப்பாலை மதில்கள் தோறும் மேய்கிற அவலம்… நெஞ்சு பொறுக்குதில்லை நாஞ்சிலுக்கு. மேழி பிடித்த கைகுவித்து ஆற்று நீரை அள்ளிப் பருகியவர் இன்று மினரல் வாட்டரை விலைகொள்ளும் பதற்றம்; வாழ்வாங்கு வாழ விழைபவர் மக்களே போல்வரொடு வழிநடக்க நேர்வதன் பரிதவிப்பு; இழிதகையோர் கோன்மை அவையில் நிலவக் கண்ட ஆற்றாமை; அரசியல் பிழைத்தோர் பரத்தமைக்கு நிகரென அறத்தை ஆக்கிய காலத்தில் நிற்கும் கைப்பு; எட்டுத்திக்கும் மதயானை. என் செயலாம் இந்த உலகியற்றியானை? என் செய்வான் கணியன் பூங்குன்றனின் மாணாக்கன்? ஆவநாழியில் எஞ்சியவை சொற்கள்தான். நாஞ்சில் நாடன் தொடுக்கும் போது ஒன்று; தைக்கும் போது ஓராயிரம்!

நாஞ்சில்நாடனின் கதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் மற்றும் நாஞ்சில் குறித்த பல தகவல்களை மொத்தமாக திரட்டி சுல்தான் என்பவர் நாஞ்சில்நாடனுக்கென தனி வலைப்பதிவு நடத்தி வருகிறார். அங்குபோய் இன்னும் வாசியுங்கள். www.nanjilnadan.wordpress.com

பின்னூட்டங்கள்
 1. vidyashankar சொல்கிறார்:

  நீங்களும் நல்லாவே கட்டுரை எழுதுகிறிர்கள் .படிக்க சுகமாகவே இருந்தது

 2. சங்கரபாண்டி சொல்கிறார்:

  ”கதாநாயக நடிகனுக்கு படத்துக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் தருகிறார்கள். பத்தாயிரம் ரூபாய் மாசம் சம்பளம் வாங்கும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியன் அந்தத் தொகையை ஊதியமாகப் பெற 300 ஆண்டுகள் பணி செய்ய வேண்டும். முன்னூறு நெடிய ஆண்டுகள், முப்பது தலை முறைகள், கூலிக்காரன் என்றால் ஆயிரம் ஆண்டுகள். அழுகை வரவில்லையா உங்களுக்கு? எனக்கு வருகிறது” -நாஞ்சில். பத்தாயிரத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் இந்த ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்தினால் நம்மவர்கள் இப்படி நடிகன் பின்னாடி சுற்றுவார்களா? மேலும், நாஞ்சில் சொல்வது போல போலி ஆசிரியர்களையும் கவனிக்க வேண்டும். என்னத்த சொல்றது?

 3. என்னுடைய கட்டுரையும் வாசிக்க சுகமாக இருந்தது என வாழ்த்திய வித்யாசங்கருக்கு மிக்க நன்றி. மேலும், பேராசிரியர்கள் எல்லாம் பேருக்கு ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்று கோபப்படும் சங்கரபாண்டி அவர்களுக்கு நன்றி.

 4. இந்தக் கட்டுரையை பிடித்தமான கட்டுரையாக தேர்வு செய்த சுல்தான் அவர்களுக்கு நன்றி. மேலும், நாஞ்சில் நாடனின் தளத்தில் புத்தகமதிப்புரையில் இக்கட்டுரையையும் சேர்த்ததற்கு சுல்தான் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. கீழே விகடனில் படித்த, பிடித்த கவிதை.
  மடியில் கனம்?
  அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் ஆயிரம் மாணவிகளுக்கு மூன்று கழிவறைகள் முந்நூறு லேப்-டாப்!
  தளவாய்சாமி, சொல்வனம் – நன்றி.ஆனந்தவிகடன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s