மதுரை உலகின் தொன்மையான நகரம்

Posted: செப்ரெம்பர் 8, 2011 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்

புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்

தான் வாட, வாடாத தன்மைத்தே-தென்னவன்

நான்மாடக் கூடல் நகர்.  

– பரிபாடல்

உரை

நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள் (மதுரை தவிர) அனைத்தினது பெருமைகளையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது (மதுரை) பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு, சீர்தூக்குமிடத்து உலகத்துள்ள ஏனை அனைத்து நகரங்களின் பெருமையும் மெலிந்தேற, தன் பெருமை அங்ஙனம் மெலியாமல் தன் பெருமையாலே துலாத்தட்டு தாழும் தன்மையுடைத்து  பாண்டியன் ஆளும் நான்மாடக்கூடல்நகர்.

 

மதுரை புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் அய்யா இந்தப் பரிபாடலை குறித்து சொன்னதும் தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தளத்தில் பரிபாடலைப் படித்து அதன் பொருளையும் வாசித்தேன். பரிபாடல் மதுரையைக் குறித்து பாடப்பட்ட சங்க இலக்கியம். அதில் மதுரை, வைகை, திருமால், செவ்வேள் குறித்து பல பாடல்கள் உள்ளன. தொ.பரமசிவன் அய்யாவுக்கும் தமிழ் இணையப்பல்கலைக்கழகத்திற்கும் நன்றி.

 

எல்லோருக்கும் அவர்கள் ஊர் மிகவும் பிடிக்கும். அதுவும் மதுரைக்காரர்கள் அனைவருக்கும் தங்கள் ஊர் மேல் சற்று அதிகமாகவே பாசம் உண்டு. மதுரையை எங்கு சென்றாலும் சுமந்து கொண்டு வாழுமிடத்தையெல்லாம் மதுரையாகவே எண்ணி வாழும் அன்பு உள்ளங்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம். நம்ம மதுரை எல்லோருக்கும் பிடித்தமான ஊர் என்பதில் ஐயமில்லை. எனக்கு எல்லா ஊர்களும் மிகவும் பிடிக்கும். ஆனால், எங்கு தங்கினாலும் ‘தங்க’ மதுரைக்கு எப்ப போவோம் என்றுதான் மனது நினைக்கும். மதுரையின் பெயர்க்காரணம், அதன் பெருமை பற்றியெல்லாம் கூறும் சிறுபதிவு.

 

தற்போதைய மதுரை, முற்காலத்தில் கடம்ப மரங்கள் நிறைந்த அற்புத வனமாய்த் திகழ்ந்ததாக புராணங்கள் சுட்டுகின்றன. இதனால் ‘கடம்பவனம்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது. மதுரை என்ற பெயர்க்காரணத்தை விளக்க புராணக்கதையொன்றும் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது. சிவபக்தனான தனஞ்சயன் என்னும் வணிகன், ஒருநாள் தொழில் நிமித்தம் காட்டிற்குள் பயணம் செய்தபோது, தேவர்கள் எல்லாம் கூடி, ஒரு கடம்ப மரத்தடியில் சுயம்புலிங்கம் ஒன்றை வணங்கிக் கொண்டிருந்ததைக் கண்டான். இந்தச் செய்தியை மன்னன் குலசேகர பாண்டியனிடம் தனஞ்சயன் சொல்ல, மன்னனும் உடனே அவ்விடத்தில் கோவில் ஒன்றை எழுப்பினான். அதற்குப் பிறகு கோவிலை மையமாக வைத்து மதுரை மாநகரை வடிவமைத்தான். இந்நகருக்குப் பெயர் சூட்டும் நாளன்று சிவபெருமான் எழுந்தருளியதாகவும், அவரது சடைமுடியிலிருந்து சந்திரக் கலையின் புத்தமுது நகரின் மீது விழுந்ததாகவும், அதனால் இந்நகர் மதுரை என்று பெயரிடப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. மதுரம் என்றால் தமிழில் இனிமை என்று பொருள்.

மருத மரங்களும் நிறைந்திருந்த காரணத்தால் ‘மருதை’ என்றழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மதுரை என்று திரிந்ததாகவும் சில ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். அதற்குச் சான்றாக தற்போது மதுரையின் சுற்றுப்பகுதிகளில் வாழுகின்ற கிராமப்புற மக்கள் இன்றைக்கும் கூட மதுரையை ‘மருதை’ என்றழைப்பதும் குறிப்பிடத்தக்கது.

சங்க காலத்தில் தமிழ்ப்புலவர்கள் அனைவரும் கூடி இலக்கியப் பூர்வமான கலந்துரையாடல்கள் நடத்தியதன் காரணமாய் ‘கூடல்மாநகர்’ என்ற பெயராலும், திசைக்கொன்றாய் கோட்டையின் நான்கு வாசற்புறங்களைக்(மாடங்கள்) கொண்டு திகழ்ந்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது. ‘கூடல்’ என்னும் பெயர் பொதுவாக இரு நதிகள் சங்கமிக்கும் இடத்தைக் குறிப்பதாகும். பழங்கால நகரங்கள் பல இத்தகைய கூடல்களில்தான் அமைந்திருந்தன. அதுபோன்றே மதுரை மாநகரும் கூட, வைகை நதியும் அதன் உபநதியும் சங்கமித்த இடத்தில் அமையப்பெற்றிருக்க வேண்டும். காலப்போக்கில் அந்த உபநதி தன் போக்கை மாற்றியிருக்கக்கூடும் என்பதும் ஆய்வாளர்களின் கருத்தாகும்.

‘ஆலவாய்’ என்ற மற்றொரு பெயராலும் மதுரை அழைக்கப்பெற்றது. ‘ஆலம்’ என்ற சொல்லுக்கு நீர்நிலை என்று பொருள். பழம் மதுரையைச் சுற்றி அகழியும், கோட்டையின் வடபுறத்தில் அகழியை ஒட்டி வைகையும் எப்போதும் நீர்நிறைந்து ஓடியதால் ‘நீர் நிலைகளுக்கு நடுவே அமைந்த ஊர்’ என்ற பொருள்பட இப்பெயர் வழங்கப்பெற்றது என்று அறிஞர் மயிலை.சீனி.வேங்கடசாமி குறிப்பிடுகிறார்.

மாநகர் மதுரை எப்போதும் மணக்கோலம் பூண்டது போன்ற தோற்றத்துடன் திகழ்வதாக இளங்கோவடிகள் ‘மணமதுரை’ (சிலம்பு 24;5) என்ற சொல்லாடல் மூலமாக விளக்குகிறார். ‘விழாமலி மூதூர்’ எனும் சிறப்புப் பெற்ற மதுரை, ஆண்டின் அனைத்து மாதங்களிலும் விழாக்கோலம் பூண்டு திகழ்கிறது. அது மட்டுமின்றி, தமிழ் மாதங்களின் பெயர்களாலேயே தெருப்பெயர்கள் அமைந்துள்ளதும் மதுரையின் மற்றுமொரு சிறப்பாகும். மதுரைவாழ் மக்கள், குளங்கள், கண்மாய்கள் போன்ற நீர்நிலைகளை அடிப்படையாகக்கொண்டு, அப்பெயர்களாலேயே தங்களின் சிற்றூர்களை அழைத்து மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் ‘கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்’ என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். மெகஸ்தனிஸின் வருகைக்குப் பிறகு, ஏராளமான ரோமானியர்களும், கிரேக்கர்களும் மதுரைக்கு வந்து பாண்டிய அரசர்களுடன் வணிகத்தொடர்பு வைத்திருந்தனர். உலகப் பேரழகி கிளியோபாட்ராவுக்கு பாண்டி நாட்டிலிருந்து முத்து, மயில் தோகை, அகில், சந்தனம் போன்ற பொருட்கள் ஏற்றுமதியானதாக கிரேக்க நாட்டுப் பண்டைய இலக்கியங்கள் கூறுகின்றன.

 ( நன்றி – நீரின்றி, தானம் அறக்கட்டளை )

 

இதில் உள்ள படங்கள் எல்லாம் 1945ல் மதுரையில் எடுத்த பழைய ஆவணப்படத்தில் இருந்து எடுத்தது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களது தளத்தில் “திரும்பிப்பார்” என்ற கட்டுரையைப் பார்த்து இந்த படத்தை எடுத்தேன். இந்தப்பதிவில் திருச்சி, மற்றும் சென்னை குறித்த பழைய ஆவணப்படங்களை காண்பதற்கான இணைப்பு உள்ளது. நன்றி. www.sramakrishnan.com

திரும்பிப் பார்

பழைய மதுரையின் வீதிகளில் குதிரை வண்டிகள் கடந்து போவது, சுழித்தோடும் வைகை ஆற்றில் மீன்பிடிப்பது. வெற்றிலை வியாபாரம் செய்யும் பெண்கள், துறவிகள், எளிய மனிதர்கள். சிறுவர்கள், பாம்படம் அணிந்த பெண்கள்.  கோவிலின் அழகு ஒளிரும் புறத்தோற்றம் என மதுரையின் கடந்தகாலத்தைப் பார்க்க பார்க்க நெகிழ்ச்சி தருவதாகவே இருக்கிறது.

Old Madurai, South India, in 1945 and now

http://youtu.be/TV21eP0uu_0

மதுரை குறித்து ஏழாம் வகுப்பு சமச்சீர்கல்விப் பாடப்புத்தகத்தில் உள்ள பாடம் ‘தூங்கா நகர்’. அந்தப்பாடத்திலிருந்து சில பகுதிகள் மட்டும் காண்போம்.

நள்ளிரவு மணி பன்னிரண்டு. எங்கும் சாலைகள் சந்தடியற்றுக் கிடக்கும்; தெருக்களில் மக்கள் நடமாட்டமே இருக்காது; எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர். இஃது உலக இயற்கை.

ஆனால், இவ்வாறு உலகமே உறங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும் விழித்திருக்கும் ‘தூங்காநகர்’ ஒன்று தமிழகத்திலுள்ளது. அந்நகர் எதுவென உங்களுக்குத் தெரியுமா? ஆண்டின் எல்லா நாளிலும் விழாக்கள் கொண்டாடியபடி இருப்பதால், திருவிழாநகர் என்னும் பெருமை பெற்ற நகரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாற்றிசையிலும் கலையழகு பொருந்திய மாபெருங் கோபுரங்களோடு எட்டுச்சிறிய கோபுரங்களையும் கொண்டு எழில்மிகு சிற்பக்கலைக் கூடமாக விளங்கும் கோயில் மாநகர் எதுவென்று உங்களுக்குத் தெரியுமா? பழம்பெரும் தமிழர்தம் நாகரிகத்தொட்டிலாத் திகழ்ந்த தென்னிந்தியாவின் ஏதென்ஸ் எனப் புகழ்பெற்ற நகருக்கு நீங்கள் சென்றது உண்டா? சங்கம் வைத்துச் செந்தமிழ் வளர்த்த நகரம், முன்பு பாண்டியர்தம் தலைநகராக விளங்கிய நகரம், இன்றைய தமிழகத்தின் இரண்டாவது பெருநகரமாகத் திகழும் நகரம் எதுவெனத்தெரியுமா? இத்துணைச் சிறப்புக்கும் உரிய நகரம் மதுரை என்னும் மாநகரம். 

மதுரை – பெயர்க்காரணம் 

பாண்டிய நாட்டின் பழைமையான தலைநகரமாக விளங்கிய மதுரை, இன்றைய தமிழகத்தின் முதன்மை நகரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மதுரை என்னும் சொல்லுக்கு இனிமை என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. தமிழ் என்றால் மதுரை; மதுரை என்றால் தமிழ். இங்ஙனம், இவை இரண்டும் பிரிக்க இயலாதவை. அதனாலேயே மதுரையைப் போற்றப் புகுந்த புலவர் எல்லாரும் தமிழோடு சேர்த்தே போற்றிப் புகழ்ந்தனர். தமிழ்கெழு கூடல் எனப் புறநானூறு போற்றியது. நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர், தாம் பாடிய சிறுபாணாற்றுப்படையில்,’தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை’ என்று குறித்தார். இளங்கோவடிகள், தமது நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தில், ‘ஓங்குசீர் மதுரை’, ‘மதுரை மூதூர் மாநகர்’, ‘தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை’, ‘மாண்புடை மரபின் மதுரை’, ‘வானவர் உறையும் மதுரை’, ‘பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்’ எனப் பற்பல அடைமொழிகளால் மதுரைக்கு புகழ்மாலை சூட்டி மகிழ்ந்தார். ‘சேரநாடு வேழமுடைத்து, சோழநாடு சோறுடைத்து, பாண்டியநாடு முத்துடைத்து, தொண்டைநாடு சான்றோர் உடைத்து’ என்பன தமிழகத்தின் சிறப்பை உணர்த்தும்.                                                        

நான்மாடக்கூடல்

மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் வழங்குகின்றன. நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவியுள்ளது. திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், நான்மாடக்கூடல் என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர். ‘கன்னிகோவில்’, ‘கரியமால் கோவில்’, ‘காளிகோவில்’, ‘ஆலவாய்க் கோவில்’ ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்ததால், நான்மாடக்கூடல் என்னும் பெயரமைந்தது என்பாரும் உளர்.

வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப்பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்தமையால் நான்மாடக்கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகப் பரஞ்சோதியார் கூறியுள்ளார். எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்துகூடும் வளமான நகர் என்பதால், கூடல் என்னும் பெயர் பெற்றது என்பர். சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லாரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் அறிஞர் கூறுவர்.   

ஆலவாய்

மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆனையிட்டார். பாம்பு வாலை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்றுமுதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும். மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் ஆலவாய் என்னும் பெயர் ஏற்பட்டதாகவும் கூறுவர்.

தென்மதுரையகத்தே சிறந்து நின்ற முதற்சங்கம் கடற்கோளால் அழிந்துபட, கபாடபுரத்தின்கண் இடைச்சங்கம் அமைந்தது. பின்னர், மற்றுமொரு கடற்கோளால் அந்நகரும் விழுங்கப்பட, கடைச்சங்கம் நிறுவப்பட்ட நிலப்பகுதியே இன்றைய மதுரை என்பர்.                                       மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் மருதை என வழங்கிய இடம் காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் மதிரை என்ற பெயர் காணப்படுகிறது. சங்ககால மதுரை, பூம்புனல் ஆறாகிய வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. அம்மதுரையில் யானைமீது போர்வீரன் ஒருவன் உட்கார்ந்து, தன் கையில் மிக உயர்ந்த வெற்றிக்கொடியை ஏந்திச் செல்லும் அளவுக்குக் குன்றைக் குடைந்தாற் போன்ற வாயிலும், பாம்பென நெளிந்து செல்லும் பொறிகளையுடைய பெருமதிலும், அதனைச்சுற்றி ஆழ்ந்து அகன்ற அகழியும் இருந்துள்ளன. யானைக் கூட்டங்கள் அகழிக்குப் போவதற்கு ஏற்ற சுருங்கை(சுரங்க) வழியும் அமைந்திருந்தது.        மதுரைநகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இஃது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றது.                                       சிவன், திருமால், பலராமன், செவ்வேள், ஐயை, கொற்றவை, சிந்தாதேவி எனக் கடவுளர் பலருக்கும் கோவில்கள் இருந்துள்ளன. அரண்மனை, பல்வேறு தெருக்கள், அறங்கூறு அவையம், அம்பலங்கள், மன்றங்கள், அறக்கூழ்சாலைகள், நாளங்காடி அல்லங்காடி முதலியன மதுரையில் இருந்துள்ளன.                                               சங்கப்புலவர்களுள் கணக்காயனார் மகனார் நக்கீரனார், குமரனார், நல்லந்துவனார், மருதனிளநாகனார், இளந்திருமாறன், சீத்தலைச் சாத்தனார், பெருங்கொல்லனார், கண்ணகனார், கதங்கண்ணாகனார், சேந்தம்பூதனார் முதலியோர் அன்றைய மதுரையில் வாழ்ந்தோராவர்.  

மதுரையின் மாண்பு  

சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப்பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனுக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாராகவும் மதுரையை ஆண்டனர். அரிமர்த்தன பாண்டியனுக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார். திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார். பாண்டிய நாட்டை ஆண்ட மன்னருள் பலர், சிறந்த புலவர்களாகவும் விளங்கினார்கள். அவர்களுள் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், வரகுண பாண்டியன், அதிவீரராம பாண்டியன் முதலியோர் நற்காவலர்களாகவும் சிறந்த பாவலர்களாகவும் திகழ்ந்தார்கள். இத்திருக்கோவிலில் மீனாட்சியம்மையும் சொக்கநாதரும் அழகுற வீற்றிருந்து அருளுகின்றனர். கோவிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் அமைந்து உள்ளது. இக்கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது.

 

 

மதுரை குறித்து எத்தனை பதிவு எழுதினாலும் சொல்லித்தீராது, சொல்லில் அடங்காது. எல்லாப் பாதைகளும் ரோம் நகரை நோக்கியே போகின்றன என்று ஒரு பழமொழி சொல்வார்கள். உண்மையிலேயே உலகின் எல்லா வீதிகளும் மதுரை சித்திரவீதிகளை வருகின்றன என்பதே உண்மை.

பதாகைகள் எங்கும் நிறைந்திருக்கும்!

விழாக்கோலம் எப்போதும் பூண்டிருக்கும்!

 மரபின்மணம் வீதியெங்கும் கொண்டிருக்கும்!

நான்கு கோபுரமும் பொலிவாய் வீற்றிருக்கும்!  

எங்க மதுரை! தங்க மதுரை!

பின்னூட்டங்கள்
 1. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  அருமையான பதிவு.7-ம்வகுப்புப் பாடத்தையும் ஆய்வு செய்து விவரம் சேகரித்துக்
  கொடுத்துள்ளீர்களே.மதுரைக்காட்சிகள் அருமை.உங்கள் பதிவு பார்த்து எனக்கு
  உள்ள மதுரை வெறி அதிகமாகின்றது.மதுரையில் பிறந்து,வளர்ந்து,வாழ்வதற்கு
  நாம் எவ்வளவு கொடுத்துள்ளோம்.

 2. florajeeva சொல்கிறார்:

  அருமையான பதிவு….புகைப்படங்கள் எல்லாம் மனதை எங்கோ கொண்டு செல்கின்றன்.தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் இதை facebook கில் பகிரலாம் என் நினைக்கிறேன்.

 3. Kumaran சொல்கிறார்:

  வெளிநாட்டில் வாழ்ந்தாலும் மதுரையில் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். முன்னோர் சொன்ன ஐந்திணையோடு ஆறாம் திணையாக அமைந்த இணையத்தில் ‘கூடல்’ பதிவில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 😉

  மருதை என்பதை மதுரையின் திரிபென்றே இவ்வளவு நாட்கள் எண்ணியிருந்தேன். மருத மரங்களால் ஏற்பட்ட பெயராக இருக்கக்கூடும் என்பது ஏரணத்திற்கு ஏற்புடையதாக இருக்கிறது. ஆனால் இலக்கியங்களில் எங்கும் மருதை என்று குறிக்கப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்கிறேன்.

  கூடல் பெயர்க்காரணமாக கிளைநதி ஒன்று கூறப்படுகிறது. கிருதமாலை என்ற நதியைப் பற்றி பண்டை இலக்கியங்கள் பேசுகின்றன. இப்போது அது மீனாட்சி திரையரங்கு அருகில் ஒரு ஓடையாக (சாக்கடையாக என்று தான் சொல்ல வேண்டும்) ஓடிக் கொண்டிருக்கிறது. கிருதமாலையும் வைகையும் கூடும் இடம் என்பதால் கூடல் என்ற பெயர் பெற்றிருக்கலாம்.

  இங்கே நீங்கள் தந்துள்ள படங்களில் ஒரு திரைப்பட விளம்பரம் இருக்கிறது. அதில் இருக்கும் இம்பீரியல் திரையரங்கில் சிறுவயதில் படம் பார்த்திருக்கிறேன். அந்த அரங்கு இவ்வளவு பழமையானதா என்று வியப்பாக இருக்கிறது.

 4. DJ சொல்கிறார்:

  ம‌துரையைப் ப‌ற்றி விரிவான‌ சித்திர‌த்தைப் புகைப்ப‌ட‌ங்க‌ளுட‌ன் த‌ந்திருக்கின்றீர்க‌ள். நேற்றிர‌வுதான் எஸ்.ராம‌கிருஷ்ண‌னின் ‘ம‌லைக‌ள் ச‌ப்த‌மிடுவ‌தில்லை’ வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் அவ‌ர் 20 வ‌ருடங்க‌ள் க‌ழித்த‌ மதுரைக்குத் திரும்பிப்போகும் ஒரு க‌ட்டுரையை எழுதியிருப்ப‌தை இர‌சித்து வாசித்திருந்தேன் (அவ‌ர‌து இணைய‌த்த‌ள‌த்திலும் இது வ‌ந்திருக்க வேண்டும்).
  ஒரெயொருமுறைதான் த‌மிழ்நாட்டுக்கு வ‌ந்திருக்கின்றேன். ஒருவார‌மே அங்கே த‌ங்கி நின்றிருந்தேன். வ‌ய‌ல்க‌ளோடு வ‌ள‌ர்ந்த‌ நான் செஞ்சிப்ப‌க்க‌மாய் வ‌ய‌ல்க‌ளைப் பார்த்து இர‌சித்த‌போது எங்க‌ளுக்கு வாக‌ன‌மோட்டிய‌ ஒரு அண்ணா கூறினார். ‘எங்க‌ள் ஊர் ம‌துரைப் ப‌க்க‌ம் வாருங்க‌ள்; இன்னும் அழ‌கான‌தாய் இருக்கும்’ என‌. அடுத்த‌முறை த‌மிழ்நாட்டுக்கு வ‌ரும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் வாய்த்தால் ம‌துரைக்கு க‌ட்டாய‌ம் வ‌ர‌த்தான் வேண்டும் 🙂

 5. மதுரை-உலகின் தொன்மையான நகரம் பதிவிற்கு மறுமொழியளித்த அனைவருக்கும் நன்றி. ராதாகிருஷ்ணன் அய்யாவின் மறுமொழி என்னை மகிழ்ச்சி கொள்ள வைக்கிறது. இன்னும் மதுரை குறித்து நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையும் எழுந்துள்ளது.
  ‘’புகைப்படங்கள் எல்லாம் மனதை எங்கோ கொண்டு செல்கின்றன்.தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் இதை face book கில் பகிரலாம் என் நினைக்கிறேன்-ஃபுளோராஜீவா’’ இதில் உள்ள படங்களை தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதையெல்லாம் எடுத்த அந்த முகம்தெரியாத நண்பருக்குத்தான் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
  குமரன் அவர்கள் மறுமொழி என்னை உற்சாகமூட்டுகிறது. மதுரை குறித்தும் சங்கஇலக்கியம் குறித்தும் அவரது கூடல் தளத்தில் மிக அருமையாக பதிவு செய்து வருகிறார். இம்பீரியல் தியேட்டரில் படம் பார்த்திருப்பதாக சொல்கிறார். இன்று அந்த தியேட்டர் இருந்த இடம் சுவடு தெரியாமல் போய்விட்டது. நன்றி.
  டி.ஜே அவர்கள் மறுமொழிக்கு நன்றி. மதுரையை குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் அழகாக எழுதிக்கொண்டேயிருக்கிறார். வாசகபர்வம், துயில், சிலசிறுகதைகளில் பல இடங்களில் மதுரையை குறித்து அவர் அற்புதமாக பதிவு செய்து வருகிறார். துயில் குறித்த தங்கள் பதிவை எஸ்.ரா தளத்தில் பார்த்துத்தான் உங்கள் தளத்திற்கு வந்தேன். துயில் குறித்து நான் எழுதிய பதிவு உங்கள் பதிவு முன் ஒன்றுமேயில்லை எனத்தோன்றியது. இப்போது யாமம் வாங்கியிருக்கிறேன். நூலை வாசித்துவிட்டு உங்கள் பதிவை வாசிக்க விரும்புகிறேன். நூல்களை குறித்த தங்கள் விமர்சனம் அருமை.
  இந்தப்பதிவை தனக்கு பிடித்த பதிவாக தேர்வு செய்த மீனாட்சிநாட்சியாருக்கு நன்றி. மதுரை குறித்து திரைப்படங்களில் தவறாகவே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதை மாற்றவே இந்தப்பதிவு. மதுரைக்கு சிறுமைகள் என்று ஒன்றும் கிடையாது. ஏனென்றால், மனிதர்களை தவிர வேறு எந்தப்படைப்புக்கும் இந்தக்குணம்(சிறுமை) கிடையாது. எல்லா ஊரும் நல்ல ஊரே. நன்றி. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி.

 6. J.vigneshwaran சொல்கிறார்:

  nan migavum perumai pada kudiya visayam nanum maduraikaran than enpathu ithai parkum palar nam madurai methu melum mathipu mariyathai kudum enpathi santhakama illai nanri nanri… miga ninri.

 7. […] பழைய படங்களைப் பார்க்க உலகின் தொன்மையான நகரம் பதிவையும், மதுரையும் தொ.பரமசிவனும் […]

 8. abbas சொல்கிறார்:

  wonder full….

 9. Raja Sekar சொல்கிறார்:

  am really so impressed , its really so nice..

 10. prabhu சொல்கிறார்:

  Koodal Nagar.people from sivagangai ramanathapuram,virudunagar,rajapalayam,theni,dindugal,melur, thothukodi meet here.(everyone is identical in their culture).Its God’s Gift for Madurai.

 11. prabhu சொல்கிறார்:

  Koodal Nagar.Five Types of lands(Kurinchi(Theni),Marutham(Dindugal),Mullai(Sivagangai),Neytal(Ramanathapuram,Thoothukudi),Pallai(Virudhunagar)) surrounds Madurai.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s