நாட்டுப்புறக்கலைகள் – அகமும், புறமும்

Posted: செப்ரெம்பர் 8, 2011 in நாட்டுப்புறவியல், பார்வைகள், பகிர்வுகள்

படிச்சது இன்ஸ்ட்ருமென்டேசன் – ஆனால்
புடிச்ச இன்ஸ்ட்ருமென்ட்
பறை

மதுரை புத்தகத்திருவிழாவில் தொ.பரமசிவன் “மதுரை நகரின் நீரும், நெருப்பும் கூட தமிழ்ச்சுவை அறியும்” எனச் சொன்னார். அதே போல் இங்குள்ள காற்றில் எப்போதும் தப்பும், தவிலும் அதிர்ந்து கொண்டிருக்கும். இளமையிலிருந்தே ஆட்டம், பாட்டம் எனக் கொண்டாட்டமாக இருப்பவன் நான். திரைப்படங்களை விட இதயத்திற்கு நெருக்கமானவை நாட்டுப்புறக்கலைகள்தான்.

நையாண்டி மேளம், தப்பாட்டம் மற்றும் சித்திரைத்திருவிழாவில் துருத்தி நீர் தெளிப்போர் ஆடும் ஆட்டமும் என்னை நாட்டுப்புறக்கலைகளின் காதலனாக மாற்றியது. பொதிகை தொலைக்காட்சியில் நாட்டுப்புறக்கலைகள் குறித்து வாரம் ஒருமணி நேரம் ஒரு கலையைப் பற்றி விரிவாக நிகழ்ச்சி ஒளிபரப்பான போது அதைவிடாமல் பார்ப்பேன். தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், வில்லுப்பாட்டு என வாரவாரம் பார்த்து ஆரவாரமாக இருந்தேன். அந்தக் கலைஞர்களின் வாழ்வைப் பற்றிக் காட்டும் போது வறுமையில் அவர்கள் உழல்வதைக் காணும் போது நமக்குக் கண்ணீர் வந்துவிடும். ‘ஏழுமலை ஜமா, கர்ண மோட்சம்’ போன்ற குறும்படங்களில் காட்டியதைப் போல அந்தக் கலைஞர்களின் வாழ்க்கை மிகவும் வலியுடையதாகத்தானிருக்கிறது.

சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் தினம் ஒரு திருக்குறள் சொல்லும் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் பார்த்து பள்ளியில் நான் எனது நண்பர்களுடன் அது போல அன்றைய நிகழ்வை வில்லுப்பாட்டு போலப் பாடி மகிழ்வேன். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றிய சித்திரை வீதிகளை கல்பாவி போக்குவரத்தை நிறுத்தியபிறகு சுற்றுலாத்துறைச் சார்பாக தெருவோரத்திருவிழா என்னும் நிகழ்ச்சி வாரவாரம் சனிக்கிழமை மாலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை நிகழ்த்தினார்கள். இதில் தான் நான் முப்பதுக்கும் மேற்பட்ட நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளைப் பார்த்தேன். ஜிம்ளா மேளம் என்னும் அற்புதமான கலையை ஒரு முறை தலித் கலைவிழாவில் அரசரடி மைதானத்தில் பார்த்தேன். அதற்கடுத்து இருமுறை சுற்றுலாத்துறை நடத்திய தெருவோரத்திருவிழாவில் தெற்கு சித்திரை வீதியிலும், திருமலைநாயக்கர் அரண்மனை முன்பும் பார்த்தேன். அந்தக்கலைஞர்களின் வயது அறுபதுக்கும் மேலிருக்கும். அவ்வளவு உற்சாகமாக அந்த வயதில் ஆடினார்கள். அந்த ஆட்டம் பார்த்த பிறகு அவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டுமென்று நினைத்தேன். அந்தளவு என்னை ஈர்த்த ஒரு ஆட்டம் ஜிம்ளா மேளம்.

ஒரு முறை மக்கள் கலைவிழாவில் ஆறுமுச்சந்தியில் வைத்து களியலாட்டம், குறும்பராட்டம், தப்பாட்டம் மற்றும் வீதி நாடகம் பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. அதே போல் காந்தி அருங்காட்சியகத்தில் தோற்பாவைக்கூத்தில் மாமேதை அம்பேத்கரின் வாழ்க்கையை காணும் வாய்ப்பு கிட்டியது. தானம் அறக்கட்டளை தமுக்கத்தில் நடத்திய கூடலரங்கம் என்னும் நிகழ்வில் நிறைய நாட்டுப்புறக்கலைகளைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அதில் தான் சக்தி கலைக்குழுவினரின் தப்பாட்டமும், குச்சியாட்டமும் பார்த்தேன். மேலும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களைச் சார்ந்த சில நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளைத் தமுக்கத்தில் பார்த்தேன். மதுரை மூன்றாவது புத்தகத்திருவிழாவில் மதுரைக்காமராசர் பல்கலைக் கழக நாட்டுப்புறவியல் துறை மாணவர்கள் ஆடிய தப்பாட்டமும், சிலம்பாட்டமும் என்னை மெய்சிலிர்க்க வைத்தன. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல்விழாவின் போது தப்பாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், தெருக்கூத்து எல்லாம் பார்த்திருக்கிறேன். இன்றும் எங்காவது கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடந்தால் போய் பார்த்துக்கொண்டு தானிருக்கிறேன். எனக்கு ஆசை என்னவென்றால் இந்த கலைகளை எல்லாம் திருவிழாக்களில் போய் பார்க்க வேண்டும். அப்போதுதான் இன்னும் நெருக்கமாக இருக்கும். தெருக்கூத்தை வடமாவட்டங்களிலும், கணியான் கூத்து, வில்லுப்பாட்டு எல்லாம் குமரி, நெல்லை மாவட்டத்திலும் போய் பார்க்க ஆசை.

தப்பாட்டம் பழக வேண்டுமென்பது ரொம்ப நாள் ஆசை. 2018ன் இறுதியில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் மதுரை சதங்கை கலைக்கூடத்தில் மையம் வீதி நாடகக் குழு ஒருங்கிணைப்பில் மூன்று நாட்கள் தப்பாட்டம் பழகினேன். தேர்ந்த ஆட்டக்காரனாக விட்டாலும் அந்த மூன்று நாளில் தப்பை அடித்து ஆடவும், சில தாளங்களை அடிக்கவும் பழகிவிட்டேன். எப்போதும் அலைபாய்ந்தபடி இருக்கும் மனம் அந்த மூன்று நாட்களும் தப்பின் தாளங்களிலேயே லயித்துக் கிடந்தது. ‘தந்தனாக்கும் தக்குஉக்கு தக்கும்’ என ஒரு தாளக்கட்டு எந்நேரமும் என்னுள் ஓடிக்கொண்டேயிருந்தது. பொதுவாகவே புதிய விசயத்தைக் கற்றுக் கொள்ளும்போது ஒருநிலைப்படும் மனம் ஒரு கலையைப் பழகும் ஒருநிலைப்படுவதோடு உள்ளூர பெருமகிழ்வும் கொள்கிறது. தாளக்கட்டுகளை இசைத்தபடி எதிரெதிரே ஆடிச்செல்லும் போது அடைந்த உவகை எழுத்தில் எங்ஙனம் அடைப்பது?

தப்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரையாட்டம், வில்லுப்பாட்டு, ஆழிநடனம், பொம்மலாட்டம், தோற்பாவைக்கூத்து, தெருக்கூத்து, கணியான் கூத்து, களியலாட்டம், சிலம்பாட்டம், கைச்சிலம்பாட்டம், ஜிம்ளா மேளம், பச்சைக்காளியாட்டம், காவடியாட்டம், கோலாட்டம், அனுமன் ஆட்டம், கும்மி, கரகாட்டம், ராஜாராணியாட்டம், பகல்வேஷம், குறவன்குறத்தியாட்டம், கருப்புச்சாமியாட்டம், குச்சியாட்டம், வள்ளி திருமணம், மதுரைவீரன் நாடகம் என நான் இதுவரைப் பார்த்த நாட்டுப்புறக்கலைகள் மிகவும் குறைவு. தமிழகத்தில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட கலைகள் இருந்தனவாம். ஆனால், இன்று எண்பது கலைகள் தான் இன்று உள்ளனவாம். அதிலும் பாதி அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன.

நாட்டுப்புறக்கலைகளைக் காக்க நாம் என்ன செய்ய முடியும்? என்று யோசித்த போது கிடைத்த சில யோசனைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • நம் இல்ல விழாக்கள், அலுவலக விழாக்களில் கட்டாயம் ஒரு நாட்டுப்புறக்கலையை நிகழ்த்தலாம். அதோடு நாட்டுப்புறக்கலைஞர்களை மதிப்போடு நடத்துவதும், அவர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவும் வேண்டும்.
  • மதுரையிலுள்ள வலையங்குளம் என்ற கிராமத்திலுள்ள தானாக முளைத்த தனிலிங்கப் பெருமாளுக்கு மாசி சிவராத்திரி தொடங்கிக் கிட்டத்தட்ட 60 நாட்களுக்கும் மேலாகத் தினந்தோறும் இரவு நாடகம் நிகழ்த்துகிறார்கள்.
  • வலையங்குளம் கிராமத்தைப் போல நமது ஊரிலும் திருவிழாக்களின் போது நாட்டுப்புறக்கலைகளை நிகழ்த்துவதை நேர்த்திக்கடனாகக்கூடச் செய்யலாம்.
  • தியானம், யோகா எல்லாம் பழகச் சாமியார்களிடம் செல்வதைத் தவிர்த்து மகிழ்ச்சியாக இருக்க நாட்டுப்புறக்கலைகளைக் கற்றுக்கொண்டு விடுமுறை நாட்களில் ஆடி மகிழலாம்.
  • பள்ளி,கல்லூரிகளில் நாட்டுப்புற நடனம் என்றாலே நாட்டுப்புறப்பாடல்களுக்கு மட்டும் ஆடுவதைப்போல இன்னும் நிறைய நிகழ்த்துக்கலைகள் உள்ளதைத் தேடிப் பழகி ஆடலாம்.
  • பள்ளிகளில் அந்தந்த வட்டார கலைகளையும் அத்துடன் பிற பகுதிகளின் கலை ஒன்றையும் அனைவருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
  • நிறைய நாட்டுப்புறக்கலைஞர்கள் மிகவும் வயதானவர்களாக மாறிவிட்டதால் அவர்களோடு அந்தக்கலைகள் அழியும் அபாயம் உள்ளது. எனவே, அவர்களை வைத்து அந்தக் கலைகளை ஆவணப்படுத்த வேண்டும்.
  • பள்ளி, கல்லூரிகளில் அவர்களைக் கௌரவ ஆசிரியர்களாக நியமிக்கலாம். இதன் மூலம் அவர்களது வாழ்க்கை பிரச்சனைகள் தீரும்.
  • எதுவுமே முடியாவிட்டால் ஆபாசக்கூத்துகளாக இருக்கும் சினிமாப்பாட்டுக்கு ஆடும் நிகழ்ச்சிகளையாவது பார்க்காமல் புறக்கணியுங்கள். நம்முடைய கலைகள் தானே மீண்டும் செழித்து வளரும். கோணங்கி சொன்னது போல ‘வளர்ந்தால் தேயும் கலை, தேய்ந்தால் வளரும் கலை’.

(இந்தக் கட்டுரை பத்தாம் வகுப்பு தமிழ் பாடநூலில் இணையத்தில் காண்க பகுதியில் வந்துள்ளது. தமிழ்நாடு அரசு பாடநூல் குழுவிலிருந்த ஆசிரியர்களுக்கும், உதயசந்திரன் அவர்களுக்கும் நன்றி. இக்கட்டுரையில் தப்பாட்டம் பழகியது பற்றிய பத்தியும், வலையங்குளம் நாடக விழா குறித்த செய்தியும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன)

பின்னூட்டங்கள்
  1. வலசை சிற்றிதழ் குறித்து நடந்த கீழ்குயில்குடி கூட்டத்தில் பகல்வேசத்தில் அனுமார் வேடமிட்டவர் ‘ராமாபரந்தாமா’ பாடித்தொடங்கிவைத்தார். ஆலமரத்தடியில் இது போன்ற கூட்டமும்,கலையும் நிகழ்த்திய நண்பர் கார்த்திகைபாண்டியனுக்கு நன்றி. அதைக்குறித்து விரைவில் ஒரு பதிவு எழுதுகிறேன்.

  2. pon சொல்கிறார்:

    nantu nantu….ungkalin aathangamum….athai eppadi ellaam paathukkakalaam enta parinthuraiyum ungkalukkul irukkum kalai aarvamum, avarkalin paal kaattu partivum pottathakkathu…

  3. greatmaba சொல்கிறார்:

    விரிவான அலசல். நாம் மறந்த நாட்டுப்புறக் கலைகளுக்கு ‘சென்னை சங்கமம்’ நல்ல வாய்ப்பாக அமைந்தது.
    அந்த நலிந்த கலைங்கர்களுக்கு பொருளாதார உதவியாகவும் அமைந்தது. ஆனால்,
    என்ன செய்வது அதிமுக ஆட்சியில் அதுவும் நின்று போய்விட்டன.

    சும்மா மொக்கை பதிவுகளுக்கு வரிந்துக் கட்டிக்கொண்டு பின்னோட்டம் போடுவார்கள் இந்த பதிவர்கள். ஆனால்,
    இதைபோல அவசியமான பதிவுகளுக்கு பின்னூட்டமே போடமாட்டர்கள். இதுதான் உலகம்.

    துவண்டுவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துகள்.

  4. மறுமொழியிட்ட நண்பர்களுக்கு நன்றி. நாட்டுப்புறக்கலைகளை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்த திரைப்படக்கூத்துகளுக்கு ஆடுவதை பார்ப்பதை நாம் குறைக்க வேண்டும். இந்தப்பதிவில் உள்ள படங்களில் உள்ளவர்களைப் பாருங்கள். எவ்வளவு வலிகள் இருந்தாலும் இந்த கலையை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார்கள். அவர்கள் தான் என் வழிகாட்டிகள்.
    நாட்டுப்புறக்கலைகள் குறித்து தேடி வரும் நண்பர்களுக்கு இந்த பதிவு கட்டாயம் பிடிக்கும். அந்த நம்பிக்கை இருக்கிறது. அடுத்து பார்த்த கலைகள் குறித்து ஒவ்வொன்றாக பதிவு செய்யப்போகிறேன். தோழன் மபா அவர்களுக்கு ரொம்ப நன்றி. எனக்கு பிடித்த வரிகள் ”தோல்விகளுக்கு முதல் காரணம் வெற்றி. எனவே, எனக்கு வெற்றியை பிடிக்காது”.
    ”வீழ்வதில் தான் விருப்பம் எனக்கு, என்னைத்தள்ளி விட்ட பாவம் யாருக்கும் வேண்டாம்”.

  5. florajeeva சொல்கிறார்:

    மதுரையில் இருந்து …இலக்கியதரமான எழுத்துக்கள்.பெருமையாக இருக்கிறது.வெற்றிக்கு வாழ்த்துக்கள்.நல்ல அலசல்.

  6. சுந்தரவடிவேல் சொல்கிறார்:

    வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஒவ்வொரு ஆண்டு விழாவிலும் நம்முடைய பாரம்பரியக் கலைகளுக்கு முதலிடம் தரப்படுகிறது. சென்ற ஆண்டு கனெக்டிகட்டில் மதுரை வீரன் தெருக்கூத்து நிகழ்ச்சியும், இவ்வாண்டு சார்ள்ஸ்டன் விழாவில் திண்டுக்கல் சக்தி குழுவினரின் பறையாட்டம், கரகம், தேவராட்டம் நிகழ்ச்சியும் விழாவுக்கு மகுடம் வைத்தன!
    வாழ்க!

  7. ஃபுளோராஜீவா அவர்களின் வாழ்த்துக்கு நன்றி. சுந்தரவடிவேல் அவர்களின் மறுமொழி என்னை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டது. மதுரைவீரன் தெருக்கூத்து நான் மதுரையிலேயே பார்த்ததில்லை. அமெரிக்காவில் மதுரைவீரன். கிழக்குச்சித்திரைவீதி நாயகன் அமெரிக்காவரை சென்றுவிட்டார். மகிழ்ச்சி. மேலும். சக்திகலைக்குழுவினரின் தப்பாட்டம். மேனியெல்லாம் சிலிர்க்கவைத்துவிடுமே! நான் பார்த்திருக்கிறேன். தேவராட்டத்தில் வரும் உறுமியும் அவர்களின் வண்ண உடையும் நம்மை மெய்சிலிர்க்க வைப்பன. போகிற போக்கை பார்த்தால் அமெரிக்காவில் நாட்டுப்புறக்கலைகள் செழிக்கப்போகின்றன. இங்கு தமிழன் ”மானாடமயிலாட’ பார்த்து தன் கலைச்சேவையை தீர்த்துக்கொள்ளவேண்டியது தான்.
    வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்திற்கு நன்றிகள். வாழ்த்துகள். இன்னும் பல கலைகளை நிகழ்த்துங்கள். நன்றி.

  8. sureshkumar சொல்கிறார்:

    அற்புதமான கருத்துக்கள். நாட்டுப்புற கலைகள்தான் நம்முடைய மூதாதைகளின் அடையாளம். நாம் பாதுகாக்கவேண்டிய பெட்டகம்.

  9. cheenakay சொல்கிறார்:

    அன்பின் சித்திர வீதிக்கார, அருமை அருமை – பதிவு அருமை – எத்தனை எத்தனை தகவல்கள் – உன்னுடைய திறமை பிரமிக்க வைக்கிறது. ஆர்வம் பாராட்டுக்குரியது – எவ்வளவு தகவல்கள் – அத்தனையும் பகிர்ந்தமை நன்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

பின்னூட்டமொன்றை இடுக