அணிகலன்களின் தேவதையைப் பாடும் கலைஞன்

Posted: செப்ரெம்பர் 10, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

கோலரிட்ஜ் எனும் அறிஞனின் கூற்று ஒன்றுண்டு. முதல் தரத்தை மீண்டும் மீண்டும் முதல் தரம் என்று சொன்னால், மூன்றாம் தரத்தைப் பற்றிக் கவலை வேண்டியதில்லை என. பழந்தமிழ்ப் பாடல் ஒன்றுமுண்டு. தினம் எட்டுத்தேர் செய்யும் தச்சன் முழுத்திங்கள் உழைத்து தேரின் சக்கரத்து ஓர் ஆரக்கால் செய்ததுபோல், எம்முளும் உளன் ஒரு பொருநன் என்று. அதுபோலுள்ளன இந்தக் கவிதைகள். எம் மொழிக்கு சேரும் எந்தப் பெருமையும் எமக்குச் செருக்களிப்பது. அந்தச் செருக்குடன் வாழ்த்துகிறேன். தமிழ் கூறும் நல்லுலகம் தாணுபிச்சையாவின் எதிர்காலக் கவிதைகளுக்காகக் காத்திருக்கும்.

– நாஞ்சில்நாடன்

கவிதை குறித்தெல்லாம் எழுதுமளவு எனக்கு ஆற்றல் கிடையாது. தாணுபிச்சையாவின் ‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ கவிதைப் புத்தகத்தை கொடுத்த அண்ணன் வித்தியாசமாக இருக்கும் வாசித்துப்பார் எனக்கொடுத்தார். இதுவரை வாசித்த அணிகலன்களைக் குறித்த கவிதைகள், கேட்ட பாடல்கள் பெரும்பாலும் காதல்கவிதைகளாகத்தான் இருக்கும். அதுவே ஒரு பொற்கொல்லன் விரல்படும் போது அவனது வாழ்க்கை பாடுகளையும் சேர்த்து அறிய முடிகிறது. சிமிக்கி, கம்மல், அட்டிகை, கொலுசு, மெட்டி, இரட்டைவடச்சங்கிலி எல்லாம் இவரது வரிகளில் பட்டு ஒளிர்கின்றன. மேலும், தொன்மை, பட்டறைகளில் படும் பாடுகள், வறுமை, வலி எல்லாவற்றையும் கவிதையினூடாக பதிவு செய்திருக்கிறார்.

மினுக்கம்

குச்சியைப் பிடித்து

 எழுதத் தெரியாத பிராயத்தில்

ஊதுகுழலையும் 

உலைக் குறடையும் 

பற்றிப் பிடிக்கவைத்த தாத்தா 

காய்ச்சவும்

உருக்கவும்

மின்னூதவும் 

எனப் பொன்னைப் பழக்கியதும்

தேடத் தொடங்கிற்று மனம்

காணும் யாவினுக்குள்ளும்

மினுக்கத்தை.

நகை என்பது பெண்ணுக்கு விலங்கு. புன்னகைதான் பெண்ணுக்கு அழகு என்ற நவீனக் கருத்து பரவிக்கொண்டிருக்கின்றது என்றாலும் சிமிக்கி அணிந்த பெண்ணின் தோற்றப் பொலிவு குறித்து தாணுபிச்சையா எழுதியுள்ள கவிதைவரிகள் மனத்துக்குள் ஈரத்தைத் ததும்பச் செய்கின்றன. ‘அணிகலன்களின் தேவதை’ கவிதையில் அடையாளப்படுத்தப்படும் சிமிக்கி, கிளிக்கூண்டு சிமிக்கி, முகமறியாப் பெண்ணின் சிமிக்கி என அறிமுகமாகும் சிமிக்கி பற்றிய கவிஞரின் பார்வை, அழகியலின் வெளிப்பாடு. பெண்ணும் பொன்னும் கலந்த நிலையில் இயற்கையாக அவதானிக்கப்படும் பொன் அணிகலன்கள் ஒருநிலையில் கொண்டாட்டமாக மாற்றம் பெறுகின்றன.    

– ந.முருகேசபாண்டியன்

அணிகலன்களின் தேவதை

அணிகலன்களின்

தேவதையென்று

வேறெந்த நகையையும்

சொல்ல முடியாது

சிமிக்கியைத் தவிர

 

தேவதைகள் சிமிக்கி

அணிந்திருப்பார்களா

 சிமிக்கி அணிந்தவர்கள்

தேவதைகளாவார்களா

 

தேவதைகளின் அணிகலன்

எதுவாகவும் இருக்கலாம்

அணிகலன்களே இல்லாமலும்

தேவதைகள் இருக்கலாம்

 

சிமிக்கியைத் தவிர

வேறெந்த நகையையும்

சொல்ல முடியாது

அணிகலன்களின் தேவதையென்று.

அம்மாவின் அட்டிகை

அக்காவின்

கல்யாணத்திற்காய்

விற்ற வீடு

அம்மாவின் அட்டிகையில்

வாங்கியது.

 

அம்மாவின்

அம்மாவும் புலம்புகிறாள்

தன் பூர்வீக வீட்டை விற்று

 எங்கள் தாத்தா

அந்த அட்டிகையை

 செய்துபோட்டாரென்று

 

அட்டிகை

செய்து செய்தே

குறடாகிவிட்ட அத்தானின்

கவுரவத்தை மீட்க  

அக்காவின்

அட்டிகையும் அடைந்தது

மீட்க முடியாத

துயரத்தின் வெற்றிடத்தை.

தாணுபிச்சையாவின் கவிதை உலகம் அறியப்படாத கலாச்சாரத்தின் புதிர்களினூடாக தனது பெரும்பயணத்தை நிகழ்த்துகிறது. தொன்மங்களின் விசித்திர நுண்பரப்பை படைப்பிற்கான மூலக்கூறாக உள்வாங்கியுள்ளது. பஞ்சகருமார்களின் வாழ்வுப்புலம் சார்ந்த படிமங்களும் குறியீடுகளும் உருவகங்களும் அனுபவங்களுமாக தமிழ்நவீனக் கவிதையின் ஒரு வெற்றிடப் பரப்பை நிரப்பியுள்ளது. ஒற்றைத்தன்மை சமய அரசியலுக்குள் பன்முக பண்பாட்டு அடையாளங்கள் அழித்தொழிக்கப்படுகையில் சொந்த அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்யும் பண்பாட்டு அரசியலை அடையாள மீட்பாக இக்கவிதைகள் முன்னிறுத்துகின்றன.   

– ஹெச்.ஜி.ரசூல்

மிச்சம்

எங்கேனும் ஓடிச்சென்று

எச்சில் இலைகளைப் பொறுக்கி

உயிர்பிழைத்தாலும் 

நான் ஒருபோதும்

 தின்னமாட்டேனென

இப்போது 

உறுதிசொல்ல முடியாது

என் சொக்காரன்மார்

மிச்சம்வைத்த

சயனைடை.

தையற்கலைஞர்கள் ரெடிமேட் துணிகள் வந்தபோது மாற்றுத் தொழிலைத் தேடி நகரங்களை நோக்கியும் மாநிலம் கடந்தும் சென்றதை இன்று பதிவு செய்வதற்கு ஆட்கள் யாருமில்லை. இதேபோலதான் பிற மாநிலத்தை சேர்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் நகைக் கடைகளையும் பிரமாண்டமான ஷோரூம்களையும் திறந்திருக்கின்றனர். நகைத்தொழிலாளர்களின் போராட்டம் என்பது அவர்கள் வாழ்வில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் நீர்த்துப்போனது.                        

 – எஸ்.செந்தில் குமார்.

திசாபலன்

செவ்வாயோடு

சுக்கிரனும் சந்திரனும் உச்சம் பெற்று

ஆறு எட்டு பன்னிரண்டில்

மறையாதிருப்பதால்

நடிகனாகிப் பின்

நீயும் ஆள்வாய்.

 

இந்தக் கவிதைகள் ஒவ்வொன்றையும் குறித்து நான் எழுதத் தொடங்கினால் எனக்கெதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிடுவீர்கள். நாஞ்சில்நாடன், ந.முருகேசபாண்டியன், ஹெச்.ஜி.ரசூல், எஸ்.செந்தில்குமார் என நான்கு ஜாம்பவான்கள் இந்நூலின் இறுதியில் அற்புதமாக இக்கவிதைத் தொகுப்பைக் குறித்து எழுதியிருக்கும்போது நான் எழுதலாமா?.

இன்று இயந்திரங்கள் இதயங்களையே இயக்கத்தொடங்கிவிட்டன. ஒரு இயந்திரம் ஒரு மனிதனின் பலநாள் உழைப்பை மட்டுமல்ல அவனுடைய வாழ்வையும் வினாடியில் காலி செய்துவிடுகிறது. இன்று பல நகைத்தொழிலாளிகள் சயனைடைத் தின்று தற்கொலை செய்துகொள்கிறார்கள். நாம் கவனிக்க வேண்டிய விசயம் இது. ஆனால், நாம் லட்சக்கணக்கில் விவசாயிகள் மடிந்த போதே கண்டுகொள்ளவில்லை. இப்போதா கண்டு கொள்ள போகிறோம்? ஊழலை ஒழித்தால் போதும் என்றல்லவா நாமிருக்கிறோம். செந்தில் குமார் சொல்வது போல பிரம்மாண்டமான நகைக்கடைகள் நாலைந்து மதுரையிலே வந்து நகைத்தொழிலாளியின் வாழ்வை நசுக்கி விட்டது. மதுரை தெற்காவணிமூலவீதி முழுக்க நகைக்கடைகளும், அதைச்சுற்றியிருந்த பட்டறைகள் எல்லாம் இன்று முன்னைப்போல இயங்கவில்லை என்பது முற்றிலும் உண்மை.  உலகமயமாக்கலின் காலடியில் கலைகள் நசுங்கிக் கிடக்கின்றன. கலைகள் அழிவதும் மனிதன் அழிவதும் ஒன்றுதான்.

தமிழில் கவிதைகள், சிறுகதைகளுக்காகவே சிறப்பாக இயங்கும் உயிர்எழுத்து பதிப்பகம் இக்கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. விலை 65ரூபாய். கட்டாயம் வாங்கி வாசியுங்கள். நன்றி

பின்னூட்டங்கள்
 1. அப்பாதுரை சொல்கிறார்:

  தாக்கம் தணிய மறுக்கிறது.
  உயிர் எழுத்து முகவரியும் சேர்த்திருக்கலாமே?

 2. maduraivaasagan சொல்கிறார்:

  அப்பாதுரை அவர்களுக்கு நன்றி. ‘உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ அற்புதமான கவிதைத் தொகுப்பு. உயிர்எழுத்து பதிப்பக முகவரி.
  உயிர்எழுத்து பதிப்பகம்,
  9, முதல்தளம், தீபம் வணிக வளாகம்,
  கருமண்டபம்,
  திருச்சி.1

 3. தொப்புளான் சொல்கிறார்:

  அண்ணன்மார், ஆசான், பட்டறைப் பையன்கள் பற்றிய அந்தக் கவிதையை அலுவலகச் சூழலில் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு.

  எனக்கான கிரீடத்தை யார் வந்து செய்து தரப் போகிறார்கள் என்பதை நினைத்தும் அடிக்கடி உருவேற்றிக்கொள்வதுண்டு.

  சின்னாட்களுக்கு முன்பு குடும்பத்தோடு கோயம்புத்தூரில் தற்கொலை செய்துகொண்டவர்கள் பற்றி நாளிதழில் படித்து அவ்வூரில் வசிக்கும் – அச்செய்தியை அறிந்திராத- தம்பியைக் கேட்டபோது, “ஆர்.எஸ்.புரமா இருக்கும். நகைத்தொழில் செய்றவங்களா இருப்பாங்க. சயனைடு சாப்பிட்டு சாகிறது அடிக்கடி நடக்குது” என்று சரியாகச் சொன்னான். அதிர்ச்சியாக இருந்தது.

  நம்மூரில் இவர்போன்ற கலைஞர்களும், வினைஞர்களும் கவிதை எழுதுவது பெருகும் என்றால் முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், முதல்வர்களின் கவிதைகளில் இருந்து விமோசனம் கிடைக்கும் (பேரரசுகள், குற்றரசுகள் தனி ரகம்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s