சில நிகழ்வுகள் சில பகிர்வுகள்

Posted: செப்ரெம்பர் 11, 2011 in பார்வைகள், பகிர்வுகள்

பரண்களில் ஏற்றி வைத்த சாமான்களை இறக்கி, மீண்டும் பரணுக்கு ஏற்றுகிற இடைவெளியில் எங்கெங்கோ சென்று திரும்புகிறோம் நாம். அனுபவித்தபோது இருந்த மனத்தைவிட மீள்பார்க்கிற மனம் சற்றுக்கனிந்து கிடப்பதால், அனுபவங்களைப் புதிய வெளிச்சங்களில் அல்லது புதிய வெளிச்சக் குறைவுகளில் பார்க்கத்தோன்றுகிறது இப்போது.

  – வண்ணதாசன் (உயரப்பறத்தல்)

வண்ணதாசன் சொல்வதுபோல மீள்பார்க்கிறபோது நிறைய விசயங்கள் அழகாகத்தெரிகின்றன. ஆனால், நிறைய நிகழ்வுகளை குறித்துப் பகிர ஆசைதான். காலமும், மொழியும் வசப்படாத வேளையில் என்ன செய்வது? எனவே, சில விசயங்கள் குறித்த சிறுகுறிப்பை தொகுத்திருக்கிறேன். அதை விரிவாக வாசிக்க இணைப்பும் இருக்கிறது. அதில் போய் மேலும் வாசியுங்கள். நன்றி.

அற்றைத்திங்கள்

காலச்சுவடு, கடவு மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்தும் இலக்கியநிகழ்வுதான் அற்றைத்திங்கள். பல்வேறு ஊர்களில் நடந்த இந்நிகழ்வு இப்போது நம்ம மதுரையில் மாதந்தோறும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவகல்லூரி நுழைவாயில் அருகிலுள்ள அரங்கில் நடைபெறுகிறது. தமிழின் முக்கிய ஆளுமைகள் பங்குபெறும் இந்நிகழ்வில் ஞாநி கலந்து கொண்டபோது சென்றிருந்தேன். மிக அற்புதமாகப் பேசினார். அவருடைய வாழ்க்கை, பணி, அரசியல் குறித்தெல்லாம் அற்புதமாகப் பேசினார். அந்த உரையை மதுரை சரவணன் மிக அருமையாக பதிவு செய்திருக்கிறார். அதற்கான இணைப்பு http://veeluthukal.blogspot.com/2011/06/blog-post_19.html

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்

ஜெயமோகனின் கொற்றவை, விஷ்ணுபுரம் எல்லாம் வாசித்திருக்கிறேன். ஆனால், அவரது உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அயோத்திதாசர் குறித்து ஜெயமோகன் பேசுகிறார் என்று சேகர் அண்ணன் சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சியாகயிருந்தது. அந்நிகழ்வுக்குச் சென்று இருந்தேன். மிக அருமையாக ஒரு மணிநேரங்கிட்ட பேசினார். அயோத்திதாசரின் படைப்புகளை வாசிக்க நினைத்திருக்கிறேன். அந்த உரைக்கான இணைப்பு http://www.jeyamohan.in/?p=18727

சமணநடை

மதுரையில் பெரும்பாலான மலைகளில் காணப்படும் சமணர் படுகைகள், கல்வெட்டுக்களைப் பார்க்கவும், பாதுகாக்கவும் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் தீவிர முயற்சியால் ‘பசுமைநடை’ என்று ஒரு குழுவாக மாதமொருமுறை பயணித்து வருகிறோம். இம்முறை எங்களுடன் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனும் வந்திருந்தார். வரிச்சூர் சென்ற அந்த பயணத்தை தன் தளத்தில் சமணநடை என்ற பெயரில் பதிவு செய்துள்ளார். அதற்கான இணைப்பு http://www.sramakrishnan.com/?p=2562

வீட்டுக்கு வீடு நூலகம்

“வீட்டுக்கு வீடு சன் டண் டணா டண்” என்று இல்லாமல் வீட்டுக்கு வீடு நூலகம் என்ற இலக்கோடு அனைவரும் செயல்படுவோம். முதல் தொடக்கமாக ஐநூறு ரூபாய்க்குப் புத்தகங்கள் வாங்கி ஒரு சிறு அலமாரியில் தொடங்கி, பின் மாதாமாதம் ஒரு புத்தகமாவது வாங்குவது, விழாக்களுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்பது, பிறர்வீடுகளுக்குச் செல்லும்போது புத்தகங்களை வாங்கிச்செல்வது என புதிய பழக்கங்களை ஏற்படுத்தி வீட்டையே நூலகமாக மாற்றுவோம்.

டி.வி. – இந்த இரண்டு எழுத்துகளால் குழந்தைகளைக் கவரமுடியும் என்றால் இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளால் முடியாதா என்ன? உங்கள் குழந்தையின் கற்பனையைத் திறந்துவிடுங்கள். ஒரு நூலைத் திறந்துகொடுங்கள்.

– யாரோ.

காக்கை குருவி எங்கள் ஜாதி

எந்தப்பறவையும் உணவுக்காக மட்டும் பறப்பதில்லை. பறப்பது சுகம், பறப்பது தியானம், பறப்பது கொண்டாட்டம், பறப்பது வாழ்க்கை.

ஆனால், இன்று பறவைகளை காண்பதே அரிதாகி வருகிறது. பறவைகளுக்காக கூடங்குளத்தில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பால்பாண்டி போன்ற மனிதர்கள் இருக்கும்போது நாமும் எதாவது செய்ய வேண்டும். கான்கிரிட் காடுகளாக உலகம் மாறிவரும் சூழலில் பறவைகள் தங்குவதற்கு மரமும், உண்ண உணவும், நீரும் இன்றி அழிந்து வருகின்றன. தினமும் நம் வீட்டில் பறவைகளுக்கு கொஞ்சம் நீரும், உணவும் வைத்தோமானால் அவைகள் அழிவது காக்கப்படும். நான் இதை செய்து வருவதால் உங்களையும் கேட்டுக்கொள்கிறேன். http://koodu.thamizhstudio.com/katturaigal_20.php

வலசை

தமிழில் மொழிபெயர்ப்புகளுக்காக வலசை எனும் சிற்றிதழை கார்த்திகைப்பாண்டியனும், நேசமித்திரனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இந்நூலைப் பாதிதான் வாசித்திருக்கிறேன். எனக்கு இதுபோன்ற நூல்கள் ரொம்பப்பிடிக்கும். ஏன்னா எனக்கு தமிழ் தவிர மற்றமொழிகள் வாசிக்கத்தெரியாததால் இது போன்ற நூல்கள் மற்ற நாட்டிலுள்ள படைப்புகளையும் தமிழில் படிக்க மிகவும் உதவியாகயிருக்கின்றன. கீழ்குயில்குடியில் ஆலமரத்தடியில் இந்நூல் குறித்த ஒரு உரையாடல் நடைபெற்றது. தமிழில் உள்ள முக்கியமான கவிஞர்கள், எழுத்தாளுமைகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கலந்துகொள்ள நானும் சென்றேன்.  பசுமைநடை பயணம் முடிந்து வரும்பொழுது நானும் மதுரைசரவணன் அவர்களும் சேர்ந்து சென்றோம். மதுரை பதிவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக முக்கியமான நிகழ்வு. வலசை குறித்த கார்த்திகைப்பாண்டியன் அவர்களது பதிவிற்கான இணைப்பு

http://ponniyinselvan-mkp.blogspot.com/2011/09/04-09-11.html

அமெரிக்காவின் நாதாறித்தனம்

செப்டம்பர் பதினொன்று அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள், பெண்டகன் தாக்கப்பட்ட நாள் ‘தீவிரவாத ஒழிப்பு நாள்’. ஆனால், அதே அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் குண்டு போட்ட நாளான ஆகஸ்ட் முதல்ஞாயிறு இப்பொழுது நண்பர்கள் தினம். வரலாற்றை யார் வேண்டுமானாலும் திசைமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அமெரிக்கா உலகின் இரட்சகராகவே மாறி வருகிறது. மேலும், நட்பும் இப்போது பெரும்பாலும் நாதாறித்தனமாகிவிட்டது. ‘என் ஒரே நண்பன் நீதானென்று’ குறுஞ்செய்தியை ஒரு கூட்டத்துக்கே அனுப்புறாங்ங. அது கூடத் தப்பில்ல. ஆனால், அதே நண்பன் சாதித்தலைவனின் படத்திற்கு பின்னால் நின்று கொண்டு முறைத்துப்பார்த்துக் கொண்டிருக்கிறானே அதுதான் கஷ்டமாக இருக்கிறது.

கதைசொல்லி

கதை சொல்லும் பழக்கம் இன்று அரிதாகி வருகிறது. கதை கேட்காத நாளே இல்லை என்று இருந்த நிலை மாறி இன்று கதைசொல்லும் பழக்கம் அருகிவருகிறது. தொலைக்காட்சிபெட்டிகள் மனிதனை முழுங்கிக் கொண்டிருக்கின்றன. உள்ளானும் சுள்ளானும் என்ற கதை வாசிச்சீங்கன்னா நீங்களும் ‘ஒனக்கு விசயந்தெரியாதா’ எனக் கதை சொல்லக் கிளம்பிவிடுவீங்க. மேலும் தமிழ்ஸ்டுடியோ என்னும் தளத்தில் ஆளுமைகளை கதைசொல்ல வைத்து கதைசொல்லி என்றே ஒரு பகுப்பு வைத்திருக்கிறார்கள். அங்கு போய் கதைகளைக் கேளுங்க. பிறகு சொல்லுங்க. http://koodu.thamizhstudio.com/kadhaisolli.php

தைப்பூசம்தான் தமிழ்ப்புத்தாண்டு – தொ.பரமசிவன்

சித்திரை முதல்நாளையும், தை முதல்நாளையும் தமிழ்ப்புத்தாண்டாக ஆட்சியாளர்கள் மாற்றி மாற்றி மாத்திக்கொண்டிருக்கும் வேளையில் தைப்பூசம் அன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு என்கிறார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன். ‘மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாள்’ என்ற வரிகள் மூலம் தமிழ்மாதங்கள் பௌர்ணமியில் தொடங்கி பௌர்ணமியில்தான் முடிகின்றன. அப்படியானால் தைமாதம் வரும் பௌர்ணமி அன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு என்கிறார் தொ.ப.  சுட்டியைத் தட்டி அதைக் குறித்து மேலும் வாசிக்கவும்.

மரணதண்டனையைத் தூக்கு

இன்னும் பிறக்காத தலைமுறைக்கு என்ற தியோடோர் பாஸ்கரனின் நூலை வாசித்தபோது தோன்றியது நாம் அனைவருமே குற்றவாளிகள்தான் என்று. அடுத்த தலைமுறைக்கு இவ்வுலகை உருப்படியாக விட்டுப்போகாமல் கடல், மலை, நதி, காடு மற்றும் பிறஉயிரினங்கள் என எல்லாவற்றையும் சீரழித்துக்கொண்டிருக்கும் நாம் அனைவரும் குற்றவாளிகள்தான். இதற்கெல்லாம் நமக்கு என்ன தண்டனை? அப்படியிருக்கும் போது இட்லி வாங்கிக்கொடுத்தற்காக, சட்னி வாங்கிக்கொடுத்தற்காக எல்லாம் மரணதண்டனை கொடுத்தால் என்ன நியாயம்? மரண தண்டனையை நம் சட்டத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அப்பாவிகள் தூக்கிலிடப்படுவார்கள்.

பட்டப்பகல் திருடர்களை பட்டாடைகள் மறைக்குது, ஒரு

பஞ்சையத்தான் எல்லாஞ்சேர்ந்து திருடனென்றே உதைக்குது

என்ற பட்டுக்கோட்டை வரிதான் ஞாபகம் வருகிறது. நன்மைகள் தீமைகள் யார்தான் அறிவார்?

மறுமொழியில் வந்த கவிதை

நகுலன் குறித்த பதிவு எழுதியிருந்தபொழுது மறுமொழியாய் கவிதைகளை இட்ட சகோதரர் தொப்புளானுக்கு நன்றி. இது போன்ற மறுமொழிகள்தான் என்னை உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. அவரது மறுமொழியை வாசிங்க.

நகுலன் வீட்டில் யாராவது எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறார்கள். இந்த பாதிப்பில் எனக்கும்கூட எழுதத் தோன்றியது. கீழே சில:

யார் இல்லாமலும்
வாழ்ந்துவிடலாம்
நான் இல்லாமல்
வாழ முடியாது
•••

இரவு
பகல்
மீண்டும்
இரவு
பகல்
மீண்டால்
இரவு
பகல்
•••

முதல் நாள் நடக்கிறேன்
புதிய மனிதர்கள்
பரபரப்பு, சந்தடி, குழப்பம்
தினமும் நடக்கிறேன்
அதே மனிதர்கள்
நிதானம், அமைதி, ஒழுங்கு
•••

பொங்கலுக்காய் அடித்துக்கொள்
புரிந்துகொள்கிறேன்
திருநீறை என்ன
தின்னவா போகிறாய்?
எவன் முதலில்
எடுத்தால்தான் என்ன?
•••

நான் பல்லி உண்பவனில்லை
என்பதை
என் அறைப்பல்லிகள்
எப்படியோ அறிந்திருக்கின்றன 

 •••

 இன்னொரு தருணத்தில் இதுபோன்ற மேலும் சில கவிதைகளைப் பகிர்ந்துகொண்டார். அவையும் கீழே:

அவனுக்கு
அவன் தான்
முதல் மனைவியாம்
அதுவல்ல
ஆச்சரியம்
அவன்
அவனே தானாம்!

****

 

எனவே நான் எழுதுகிறேன்
எனவே நான் தூங்குகிறேன்
.
.
எனவே நான் எழுதுவேன்
எனவே நான் தூங்குவேன் 

****

 

இரவு மிருகங்களின்
கூசும் பகல்களாய்
பகல் விலங்குகளின்
தூக்க இரவுகளாய்
கழிகின்றன நாட்கள்!
என்னா சொகம்!
என்னா சொகம்!!

*****

சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும்

கல்யாண வீட்டில்;

ஒருவர் – என்னங்க பொண்ணு மிக்ஸிய மிதிச்சு அனுஷ்கா படத்த பார்க்குது?

மற்றொருவர் – இப்ப எங்கங்க அம்மி கிடைக்குது, நட்சத்திரம் தெரியுது?                அதான் இப்படி புதுமையா அம்மி மிதிச்சு அருந்ததி                       பார்க்கிறாங்க!

இப்படி மூடப்பழக்கங்களை எப்படியாவது காலந்தோறும் இந்த சாதி மாதிரி கட்டிக்காப்பாத்திட்டே வர்றோம். ஆனால், நம் முன்னோர்களிடம் இருந்த இயற்கை ரசனை, ஓவியம், சிற்பம், கலையுணர்வு போன்ற நல்லவிசயங்கள் எல்லாவற்றையும் தொலைத்தும், இழந்தும் வருகிறோம். சரியானதை நோக்கி பயணிப்போம்…

பின்னூட்டங்கள்
 1. Pattu சொல்கிறார்:

  ‘ தினமும் நம் வீட்டில் பறவைகளுக்கு கொஞ்சம் நீரும், உணவும் வைத்தோமானால் அவைகள் அழிவது காக்கப்படும்.’

  நல்ல யோசனை. ஓரு அழகிய கூடு கிடைக்குமிடம் இங்கே. http://www.shopping.natureforever.org/

 2. Pattu சொல்கிறார்:

  கூடு பற்றி இப்போது தான் அறிந்தேன்.
  நன்றி.

 3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் காரன்,

  அருமை அருமை – தலைப்பிற்கேற்க, சில நிகழ்வுகளை, நினவில் கொண்டு – பகிர்ந்தமை நன்று. படித்ததும் பார்த்ததும் கேட்டதும் உணர்ந்ததும் பகிர்ந்தமை நன்று.

  வண்ணதாசன் கூறுவது போல் மனம் சற்றே கனிந்த பிறகு – நமது பார்வையும் மாறி விடுகிறது. அப்பொழுது உணர்ந்ததை விட – இப்பொழுது அசை போட்டு ஆனந்திக்கையில் அதிக மகிழ்ச்சி அடைகிறோம்.

  அடுத்த அற்றைத் திங்கள் நிக்ழ்வினிற்கு நானும் வருகிறேன். முன் கூட்டியே நினைவுறுத்தவும். சரவணனின் இடுகை நான் ஏற்கனவே படித்து மறுமொழியும் போட்டது தான். அயோத்தி தாசரின் படைப்புகள் படிக்கலாமே !

  சமண நடை கூட நானும் வர விரும்புகிறேன். அடுத்த முறை அழைத்துச் செல்

  வீட்டுக்கு வீடு நூலகம் – நாம் இதனைப் பற்றிப் பேசுவோம்.

  காக்கை குருவி – நீ செய்யும் செயல் நல்ல செயல் – நீரும் உணவும் பறவைகளுக்கு அளிப்பது புண்ணியம். பாவண்ணனின் பறவைகளின் பயணம் படித்தேன்.

  வலசை இதழ் படித்தேன் – நல்லதொரு முயற்சி .

  நண்பர்கள் தினம் என்பதெல்லாம் நம்க்குத் தேவை இல்லாத ஒன்று – நாளும் நமக்கு நண்பர்கள் தினம் தான்.

  கதைகள் கேட்கத் தொடங்குகிறேன் – உள்ளானும் சுள்ளானும் அருமை – கதை சொல்லி சென்று பார்க்கிறேன்

  தமிழ்ப் புத்தாண்டு என்னைப் பொறுத்த வரை சித்திரை தான் – பழக்கத்தை மாற்றுவது இயலாத செயல்.

  மரண தண்டனை – அரசு எடுக்க வேண்டிய முடிவு.

  சிரிப்பதற்கும் சிந்திப்பதற்கும் – படித்து விட்டுச் சிரிப்போம் – சிந்திக்க மறுப்போம்,.

  நல்லதொரு இடுகை – நல்வாழ்த்துகள் சுந்தர் – நட்புடன் சீனா

  எப்பொழுது சந்திக்கலாம் சுந்தர் ?

 4. தொப்புளான் சொல்கிறார்:

  தொப்புளானின் கவிதைகள் கவிதையையே வெட்கத்தில் தலைகுனியச் செய்பவை. உண்மையான கவிதை அரசிதழில் பெயர் மாற்ற விண்ணப்பம் செய்திருப்பதாகக் கேள்வி.

 5. மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி. கூடு தளம் உண்மையிலேயே மிக அற்புதமான தளம். விரிவான மறுமொழியளித்த சீனா அய்யாவிற்கு நன்றி. அற்றைத்திங்களுக்கு இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 18ந் தேதி மாலை திரைப்பட இயக்குனரும், எழுத்தாளருமான அம்ஷன்குமார் வருகிறார். சமணநடை அடுத்து நவம்பர் மாதம்(திருப்பரங்குன்றம்). தேதி அறிவித்தவுடன் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன். கட்டாயம் வாருங்கள். நன்றி அய்யா. தொப்புளானின் கவிதைகள் அற்புதமானவை, அதை அவர் கவிதையே இல்லையென்றாலும். இது போன்ற பகிர்வுகள் உண்மையிலேயே ஊக்கம் தருவதாக உள்ளன. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s