கதவைத்திற காற்றுவரட்டும்

Posted: செப்ரெம்பர் 28, 2011 in வழியெங்கும் புத்தகங்கள்

கவிதை மனிதத்தன்மையின் குரல். தர்க்கத்தின் குரலோ, விஞ்ஞானத்தின் குரலோ, வேதாந்தத்தின் குரலோ அல்ல… மனிதனின் உணர்வுரீதியான எதிர்வினை உயிர்களின் மதிப்பைச் சார்ந்தும் நிகழ்வதில்லை. உயிர்களுடன் நாம் கொண்டிருக்கும் தொடர்பைச் சார்ந்தே நிகழ்கின்றன.

கவிதையின் அனுபவ மையத்தைப் பிறருக்கு உணர்த்துவது நுட்பமான காரியம். நுட்பமும் மென்மையும் கூடிய உணர்ச்சி, கவிதையின் முதல் தளத்தை ஊன்றிப் பார்க்கும் ஆற்றல், கவிதை கேட்கும் விரிவுக்கு இடம்தரும் வாழ்க்கை அனுபவம், விவேகமான கற்பனை இவை இல்லாமல் ஒரு கவிதையையும் அனுபவிக்க முடியாது. சுய அனுபவம் பெறாமல் கவிதையைப் பிறருக்கு உணர்த்தவும் முடியாது.

கவிதைகள் எண்ணற்ற குணங்கள் சார்ந்து நிற்கலாம். அதன் நோக்கம் சார்ந்து அது மென்மையாகவோ, ஆக்ரோஷமாகவோ, அமைதியை உருவாக்கக் கூடியதாகவோ அல்லது மனத்தொந்தரவுகளைத் தூண்டுவதாகவோ, உள்ளடங்கிய ஓசையைக் கொண்டதாகவோ, ஓசையின் ஆர்ப்பாட்டம் கொண்டதாகவோ இருக்கலாம். உத்தேசவிளைவுகளை நோக்கிப் பாயும் பாய்ச்சலே அதன் முதல் குறிக்கோளாக இருப்பதால் அதன் குறிக்கோள்களுக்கு ஏற்ப அது கோலங்கள் கொள்ளும்

– சுந்தர ராமசாமி

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது

எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி

எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி 

 நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது

உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது

சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது

நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது

 எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது

எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்

தத்தளிப்பைப் பற்றி எழுது

 எழுது உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்

 ஒன்று செய்

உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று என்னைக் கேட்காமலேனும் இரு.

கொல்லிப்பாவை அக்டோபர் 1985

சுந்தர ராமசாமி கவிதை, கவிதையை வாசிப்பது குறித்துக் கூறுவதோடு உனக்கான கவிதையை நீயே எழுது என்கிறார். பயப்படாதீர்கள். நான் கவிதையெல்லாம் எழுதப்போவதில்லை. சுந்தர ராமசாமியின் மொத்தக் கவிதைகளை வாசித்ததைப் பகிர்ந்துகொள்ளத்தான் இந்தப் பதிவு. ‘கவிதையின் அனுபவ மையத்தை உணர்த்துவது நுட்பமான காரியம்’ என்று சுந்தர ராமசாமியே சொல்கிறார். எனவே, என்னிடம் நுட்பத்தை எதிர்பார்க்காமல் வாசியுங்கள். இறுதியில் இக்கவிதைகள் குறித்து நுட்பமாக கவிஞர் சுகுமாரன் கூறியுள்ளதை வாசியுங்கள். மேலே உள்ள கவிதை தவிர மற்ற கவிதைகளில் எல்லாம் எனக்கு பிடித்த வரிகளை மட்டுமே எடுத்து உள்ளேன். முழுவதும் வாசிக்க சுந்தர ராமசாமி கவிதைகள் புத்தகத்தை வாங்கி வாசியுங்கள்.

மந்த்ரம்

ட்யூப்லைட் சுந்தராச்சி உபயம்

குத்துவிளக்கு கோமுட்டிச்செட்டி உபயம்

உண்டியல்பெட்டி தெ.கு.வே. உபயம்

பஞ்சதிரி விளக்கு ஆண்டி நாடார் உபயம்

குண்டுச்சட்டி பால்பாயச உருளி த்ரிவிக்ரமன் நாயர் உபயம்

சூடன்தட்டு ரீஜென்று மகாராணி உபயம் 

தகரடப்பா ஆறு நித்யானந்தா உபயம்

அலுமினியப் போணி வமு.சல.பெ.ம.

அரிகரபுத்திரன் செட்டியார் உபயம்

ஸ்க்ரு ஆணி நட்டு பட்டு அம்மாள் உபயம் 

தீபத்தட்டு பெரியன் தாத்தாச்சாரி உபயம்

சின்னத்தட்டு ஒரு டஜன்

வைரங்குளம் மிட்டாதார் உபயம்

வைரங்குளம் மிட்டாதார்

                  அவர் அப்பா உபயம்

 அவர் அப்பா

                 அவர் அப்பா உபயம்

அவர் அப்பா

             அவர் அம்மா உபயம்

அவர் அம்மா

            அவர் அப்பா உபயம்    

இலக்கியவட்டம் செப்டம்பர் 1964

இந்தக் கவிதையை வாசித்தபொழுது சிரிப்பை அடக்கமுடியவில்லை. பலநாட்கள் இந்த உபயக்குறிப்புகளை பற்றிப் பேசிக் கொண்டிருந்திருக்கிறோம். அதிலும் ஒரு முறை உபயக்கல்வெட்டுகளை குறித்து நான் ஏதோ சொல்ல இறுதியில் அதை இன்னொருவர் தப்பாக புரிந்துகொண்டு பெரிய பிரச்சனையாகிவிட்டது. ஆனால், சுந்தர ராமசாமி உபயத்தை குறித்து மிகவும் அங்கதத்துடன் இதை எழுதியிருக்கிறார். இறுதி பத்தியில் உள்ள ஸ்வாமி நம்ம உபயம், நாம ஸ்வாமி உபயம் என்பதையெல்லாம் வாசித்து ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த கவிதை. இந்தக் கவிதையை கோயில்களில் ஆயிரக்கணக்கில் பிரதி எடுத்து வழங்கலாம்.

கொள்கை

மேற்கே

ரொமாண்டிசிஸம்

நாச்சுரலிஸம்

ரியலிஸம்

அப்பால் 

இம்பிரஷனிஸம்

என் மனைவிக்கு

தக்காளி ரஸம்

 

அப்பால்

ஸிம்பலிஸம்

கூபிஸம்

ஸர்ரியலிஸம்

மீண்டும்

வெறும்

ரியலிஸம்

இலக்கியவட்டம் செப்டம்பர் 1964

எனக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தாலும் வாசிப்பது இந்த வகையான எழுத்து என்றெல்லாம் தெரியாது. இந்த இசங்கள் எல்லாம் நம்ம மண்டைக்கு ஏறாது. இஸங்களை குறித்து சுந்தர ராமசாமி எழுதிய ‘கொள்கை’ என்ற கவிதை எனக்கு மிகவும் பிடிக்கக் காரணம் இதுதான். சமீபத்தில் விகடனில் வாசகர் பதில்களுக்குக் கூட எஸ்.ராமகிருஷ்ணன் இந்தக் கவிதையை எடுத்துக்காட்டியிருந்தார். 

அலைச்சல்

தேடி அலையாதே 

அலைந்து திரியாதே

நாட்குறிப்பில்

 ‘நாளை வாழ்வின் துவக்கம்’ என

மீண்டும் குறித்தென்ன பயன் 

குறித்த பொழுதெல்லாம்

துவங்காத வாழ்வு

மீண்டும் குறிக்கத் துவங்குமென

மதி மயங்கி

மீண்டும் நாளையெனத்

தவணையிட்டுப் பயனென்ன

வாழ்வுக்கு விதியில்லை

சாவுக்கும் தவணையில்லை

உருண்டோடும் பந்தோ

பின்னோட உருண்டோடும்

எழுத்து மார்ச் 1966

நான் படிக்கும் காலத்திலிருந்தே இலக்குகளை நாளை என்றுகூட குறித்து வைக்க மாட்டேன். அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம் என்றுதான் குறித்துவைப்பேன். நாளை என்றால்கூட சீக்கிரம் வந்துவிடுமென்ற பயம்தான். அதுவும் படிக்க உட்கார்ந்ததும் என்றிலிருந்து படிக்கலாம் எனத் தெளிவாக திட்டமிட்டு படிப்பதை இந்த வாரத்திலிருந்து ஒத்தி போடுவதைத்தான் முதலில் செய்வேன். இப்போதுகூட எழுத வேண்டிய பதிவுகள் குறித்த பெரிய பட்டியல் உள்ளது. ஆனால், எல்லாம் இந்த வாரத்திலோ அல்லது இந்த மாதத்திலோ இல்லை. இப்பழக்கத்தை கேலி செய்வதாகத்தான்  ‘அலைச்சல்’ என்ற கவிதை உள்ளது. ஆனாலும், நான் திருந்தமாட்டேன்.

வெட்கப்படாமல் துக்கப்படு

நண்ப

இளம் வயதில் நீ படித்த படிப்பு எனக்குத் தெரியும்

வாழ்வின் கோலங்கள் தெரியத் தெரிய

நீ நொந்துபோனதையும் நான் அறிவேன்

 பின் துக்கம் வடியும் காலத்தைத்

தத்துவத்தின் எக்களிப்பில் நீ வர்ணித்தது

இன்றும் என் நினைவில் நிற்கிறது.

நண்ப 

வெயிலிலும் வறுமையிலும்

சோதனைகளின் நெருப்பிலும்

நீ வாடி வெதும்பியதையும்

நான் அறிவேன். 

யாரோ ஒருவனுக்காக 1987

‘யாரோ ஒருவனுக்காக’ தொகுப்பிலுள்ள இக்கவிதை சம்பந்தமில்லாமல் டிப்ளமோ படித்து அதற்கு சம்பந்தமில்லாமல் பணிபுரியும் எனக்காகவே எழுதப்பட்டது போலத் தோன்றும் கவிதையிது. மேலும், இறுதியில் உள்ள ‘நம் துக்கம் விமோசனத்திற்கு இட்டுச்செல்லும்’ என்ற வரி அருமை. இந்தக் கவிதையில் உள்ள பெரும்பாலான வரிகள் எனக்கு நெருக்கமானவை. நானும் வெட்கப்படாமல் இனி துக்கப்படுவேன்.

சவால்

ஓய்ந்தேன் என மகிழாதே

உறக்கமல்ல தியானம்

பின்வாங்கல் அல்ல பதுங்கல்.

அஃக் நவம்பர் 1972

பொதுவாக நம்மை நாமே உசுப்பேற்றிக்கொள்வதற்கு சில வரிகள் தேவை. உதாரணமாக மகாகவி பாரதியின் கவிதை வரியான ‘’வேடிக்கை மனிதரைப்போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?’’ என்பது போன்ற வரிகளை அடிக்கடி சொல்லிக்கொள்ளும்போது கொஞ்சம் தெம்பாகத்தான் இருக்கும். அதுபோல இக்கவிதையில் உள்ள வரிகளை இனி அடிக்கடி சொல்லிக்கொள்ளலாம். அதிலும் இறுதிவரியான ‘எனது கொடி பறக்கிறது அடிவானத்துக்கு அப்பால்’ என்பதை இனி ஓயாமல் சொல்லிக் கொள்வேன். அடிவானத்துக்கு அப்பால் என்பதால் யாரும் பார்க்கமாட்டார்கள் என்ற தைரியம்தான்.

சுந்தர ராமசாமியின் கவிதைகளில் உள்ள தலைப்புகள் எல்லாமே அருமை. அதிலும் இப்பதிவின் தலைப்பு மிகமிக பிரபலம் நம்ம நித்தியானந்தாவால். இனி நித்தியானந்தாவைப்பற்றி தொடர் எழுதணும் என்றாலும் சுந்தர ராமசாமியின் கவிதையிலிருந்தே ஒரு வரி எடுத்துக்கொள்ளலாம். ‘தகரடப்பா ஆறு நித்தியானந்தா உபயம்’, ‘கதவைச் சுண்டாதே தயவுசெய்து’. ‘நடுநிசி நாய்கள்’ என்று சமீபத்தில் வந்த திரைப்படத்தின் தலைப்புக் கூட சுந்தரராமசாமியினுடையதுதான்.

சுந்தர ராமசாமியின் கவிதைகளின் தலைப்புகளே கவிதை போல உள்ளது. உதாரணத்திற்கு கொஞ்சம் தலைப்புகளை பார்ப்போம்:

கடலில் ஒரு கலைஞன்

பின் திண்ணைக் காட்சி

நடுநிசி நாய்கள்

ஆளற்ற லெவல் கிராஸிங்கில்

சாத்திக் கிடக்கும் கதவுகள்

பூர்த்தி பெறாத ஓவியம்

இல்லாத போது வரும் நண்பன்

பூக்கள் குலுங்கும் கனவு

அடிவயிறு குளிரும் காலம்

அதுதான்; ஆனாலும்

கதவைச் சுண்டாதே தயவுசெய்து

மின்விசிறிகள் சம்பந்தமாக ஒரு வருத்தம்

பதிவுகள் அழியும் காலம்

பறக்கத்துடி

காற்றில் எழுதப்படும் கவிதை

சிதறும் கண்ணாடிகள்

கவிதை என்பது சுதந்திரம்

நீ யார்?

கொந்தளிக்கும் குடல்

சாகா இறப்பு

அம்மணம் கொள்வோருக்கு ஒரு சிறிய எச்சரிக்கை

சைக்கிளில் பூ விற்பவர்

 சுந்தர ராமசாமியின் கவிதைத்தொகுப்பை வாசிக்கக் கொடுத்த சகோதரருக்கு நன்றி. சுந்தர ராமசாமி நாற்பது ஆண்டுகளுக்கும் மேற்பட்ட தன் படைப்பிலக்கிய வாழ்வில் ஏறத்தாழ நூற்றுக்கும் சற்று அதிகமாகத்தான் கவிதைகள் எழுதியிருக்கிறார் எனும்பொழுது இதன் தரம் குறித்து நாம் அறியலாம். ஒவ்வொரு கவிதையும் இயல்பாகவே நமக்கு நெருக்கமாகி விடுகிறது. மேலும், சுந்தர ராமசாமியின் கவிதை குறித்து கவிஞர் சுகுமாரனின் கருத்துக்களையும் வாசியுங்கள்.

அனுபவத்தின் நுண்மையான தளத்தையே கவிதைக்கான ஆதாரப் பரப்பாக சுந்தர ராமசாமி கருதுகிறார். மனிதச் செயல்பாடுகள் வாழ்க்கையைத் தொடும் கணத்தை விரிவாக்குவதையே கவிதையாக்கமாகக் கொள்கிறார். அனுபவத்தின் சாரமற்ற கணங்களை விலக்குவதில் தொடர்ந்து எச்சரிக்கையாகவும் இருந்துவந்திருக்கிறார். இந்த எச்சரிக்கையுணர்வே அவரது கவிதைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. சமயங்களில் படைப்பாக்க மௌனத்துக்கும் காரணமாக இருந்திருக்கிறது. வாழ்வனுபவத்தை அறிதல், உணர்தல், விமர்சித்தல் ஆகிய செயல்களையே சுந்தர ராமசாமி கவிதைகள் படைப்பின் குணாம்சங்களாகக் கொண்டிருக்கின்றன.

சுந்தர ராமசாமியின் பாடுபொருள்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்த காலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருள்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு பற்றியும் அதில் மறைந்திருக்கும் சிக்கல்கள் சிறுமைகள் புதிர்கள் வியப்புகள் ஆகியவற்றை அலசுகின்றன. அலசலின் முத்தாய்ப்பாகச் சமகால வாழ்வு சார்ந்த ஒரு கருத்துநிலையை வந்தடைகின்றன. அந்தக் கருத்தாக்க நிலை அவரே குறிப்பிட்டதுபோல் கோட்பாடுகள் சார்ந்து அமைவதல்ல.

கவிதைக்கென்று காலம்காலமாக ஒதுக்கப்பட்டிருக்கும் பொருட்களை மிக எச்சரிக்கையுடன் அவர் புறக்கணித்திருக்கும் துணிவு தமிழில் எந்தக் கவிஞனுக்கும் இல்லாதது. இயற்கை, சமூகம் ஆகிய தளங்களில் சுந்தர ராமசாமி தேர்ந்தெடுக்கும் கவிதை மையங்கள் கவிஞனாக எனக்கு ஒரே சமயத்தில் பொறாமை எழவும் கற்றுக் கொள்ளவும் முன்னுதாரணங்கள். அவரது இயற்கை மனிதனின் உறவால் விகாசம் பெறுவது. அவரது சமூகம் மனிதனின் செயலால் உலுக்கப்படுவது. அதனால் அவரது கவிதை இயற்கையை வழிபாட்டுப் பொருளாகவோ, சமூகத்தைப் பிரச்சாரக் களமாகவோ மாற்றுவதை நிராகரிக்கிறது. 

– சுகுமாரன்

சுந்தர ராமசாமி கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், விலை 125ரூ.

சுந்தர ராமசாமியின் படம் அழியாசுடர்கள் தளத்திலிருந்தும், புத்தகத்தின் படம் காலச்சுவடு  தளத்திலிருந்தும், சுகுமாரனின் படம் அவரது  வலைப்பூவிலிருந்தும் எடுக்கப்பட்டது. அனைவருக்கும் நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பு நிறை நண்ப மதுரை வாசகன்

  அருமையான இடுகை – படித்தேன் இரசித்தேன் மகிழ்ந்தேன்.

  ஒரு தட்டச்சுப் பிழை – ஒற்றுப்பிழை – சந்திப்பிழை இல்லாமல் இவ்வளவு நீண்ட இடுகையினைப் பொறுமையாக தட்டச்சியது உன் ஈடுபாட்டினைக் காட்டுகிறது. சுந்தர ராமசாமியின் கவிதைகளை ஆழ்ந்து படித்து, அதன் உட்கருத்தினைப் பகிர்ந்தமைக்கு நன்றி. 1960களில் எழுதிய கவிதைகள் இன்றைக்கும் பொருந்துகின்றன. மந்த்ரம் – உன் கவிதையை நீயே எழுது – வெட்கப்படாமல் துக்கப்படு ( இது இன்றைய இளைஞர்கள் பலருக்கும் பொருந்தும் ) .அனைத்தும் அருமை. கவிஞர் சுகுமாரனின் கருத்தும் அருமை. பகிர்வினிறகு மீண்டும் நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. சீனா அய்யாவிற்கு நன்றிகள் பல. ஒரு தட்டச்சுப் பிழை – ஒற்றுப்பிழை – சந்திப்பிழை இல்லாமல் பதிவுகள் வருவதற்குத் தமிழுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். சுந்தர ராமசாமியின் கவிதைகள் நூலுக்கு முகப்பு மற்றும் உள்பக்க ஓவியங்கள் வரைந்த ஏ.வி.இளங்கோவை குறிப்பிட மறந்துவிட்டேன். மிக அற்புதமாக வரைந்து இருக்கிறார். மேலும், சுந்தர ராமசாமி, சுகுமாரன் படங்களை கவிதை போல எடுத்த புகைப்படக்காரருக்கும் நன்றி.

 3. தொப்புளான் சொல்கிறார்:

  கவிதைகள் புரியாதவை, அதிலும் தலைசிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகள் அணுகமுடியாதவை என்பது போன்ற நமது சில முன்முடிவுகளைக் கலைத்துப் போடுவதாக உள்ளன பசுவய்யாவின் கவிதைகள்.

  உபயம் பற்றிய கவிதையை கைப்பிரதியாக அச்சிட்டுக் கொடுக்கும்போது பிட் நோட்டிஸ் உபயம்: பிளாக்கர் சித்திரவீதிக்காரன் என்று அச்சிட மறக்கவேண்டாம்.

  நித்தியானந்தா உபயம் தகரடப்பாவா, அடிவாங்கின சொம்பா என்பது விவாதத்திற்குரியது.

  ஒருவேளை ஓவியங்களிலிருந்து ஆரம்பித்தால் இந்த இசங்களெல்லாம் புரியுமாயிருக்கும்.

 4. arunkumar சொல்கிறார்:

  super

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s