மின்வெட்டில் இருளும் மின்னுலகம்

Posted: ஒக்ரோபர் 7, 2011 in வழியெங்கும் புத்தகங்கள்

…மின்சார என்ஜினீயரைச் சுற்றி நிகழும் வாழ்வை அருமையாகப் படம் பிடிக்கும் நாவல் மின் உலகம். அநுபவ சாரம் நிறைந்த இந்த எழுத்தைப்போல் பல்வேறு நவீன துறைகளையும் தழுவி வளர வேண்டும் தமிழ் இலக்கியம். திரு நீல.பத்மநாபனின் இக்கதை அந்த வளர்ச்சிக்கு ஒரு நல்ல அடையாளமாகும் தகுதியுடையது. திரும்பத் திரும்ப ஒரே சூழ்நிலை, ஒரே விதமான பாத்திர அச்சுக்கள், ஒரே விதமான கதைப்போக்கு என்று படித்துச் சலித்தவர்களுக்கு இந்த நாவல் ஒரு புதுமையாக அமையும்…
– நா.பார்த்தசாரதி

நீல.பத்மநாபனின் “மின்உலகம்” நாவல் குறித்த எனது பதிவை எழுதத்தொடங்கியது மிகவும் சுவாரசியமான விசயம். இப்பொழுதெல்லாம் மாலை வேளைகளில் மழை இடி-மின்னலுடன் வந்து விடுகிறது. “யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே” என்பதை “பெரியமழை வரும் பின்னே கரண்ட் போகும் முன்னே” என்று கூடச் சொல்லலாம். அந்தளவு எங்கள் பகுதியில் இது அன்றாட நிகழ்வு. மழை லேசாகத் தூறத் தொடங்கியது. அதுவும் முன்பு போல இப்பொழுது அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் முன்னெச்சரிக்கையாக சிம்னி விளக்கைப் பொருத்தி வைத்துக்கொண்டு அருகில் டார்ச்லைட்டையும் எடுத்து வைத்துக் கொண்டு எழுதத்தொடங்கினேன்.

நீல.பத்மநாபனின் மின்உலகம் நாவலை எனக்கு அறிமுகம் செய்தும் அந்நூலை எனக்கு வாசிக்கவும் தந்த இராதாகிருஷ்ணன் அய்யாவிற்கு நன்றி. நீல.பத்மநாபனின் சிறுகதைத்தொகுப்பு ஒன்று வாசித்திருக்கிறேன். மிகவும் அருமையாகயிருந்தது. இனி நீல.பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள் நாவல்கள் எல்லாம் வாசிக்க வேண்டும். மின்உலகம் பாதி வாசித்துக்கொண்டிருக்கும்போதே ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவல் ஞாபகம் வந்தது. இரண்டு நாவல்களின் களமும் வேறுவேறு என்றாலும் ஒரு மனிதனின் ஒரு நாள் வாழ்வை படம் பிடித்துக் காட்டுவதுதான் இவ்விரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை. இரண்டும் தமிழின் முக்கியமான நாவல்கள் என்று சொல்லலாம். மின்உலகம் குறுநாவல்தான் என்றாலும் அது ஏற்படுத்தும் அதிர்வுகள் அதிகம். ஜூனியர் இன்ஜினீயராக பணிபுரியும் இராஜசேகரின் ஒரு நாள் வாழ்க்கைதான் கதை. அதனூடாக அவனது குடும்பச்சூழல், வேலையில் ஏற்படும் சிரமம், அகநெருக்கடியில் வாழும் அவனது மனநிலையை மிக அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்.

இந்நாவலில் நீல.பத்மநாபன் பணியிடங்களில் ஏற்படும் பல தொல்லைகளைச் சுட்டிக்காட்டுகிறார். முதலாவதாக எனக்குப்படுவது மேலதிகாரியின் அதிகாரத்திமிர். பொதுவாகவே மின்தடை ஏற்படும்போது அநேக வீடுகளில் மின்னலுவலக ஊழியர்களைத்தான் முதலில் திட்டுவார்கள். பிறகுதான் விளக்கே பொருத்துவார்கள். பாமர மக்கள் அப்படிச்செய்தால் பரவாயில்லை. மின்னலுவலகத்தில் என்ஜினீயராக பணிபுரிபவரே புரிந்து கொள்ளாமல் எப்படி நடந்து கொள்கிறார் என நாவலில் வரும் ஒரு காட்சியை பாருங்கள்:

ஃபோனை வைத்துவிட்டு அவன் திரும்பியதும் ஃபோன் அலறியது. அவன் எடுத்தான்.
“இது சங்கரராமன். யாரு ராஜசேகரனா?”
“ஆமா சார்….”
“சே… என்ன இழவா இருக்கு! இங்கே என் ஹௌஸில் லைட் இல்லையே!”
“சார்… எச்.ஒய்.எஸ். நம்பர் வொன் பீடர் பால்ட்….”
“அடுத்தாத்தில் எல்லாம் லைட் இருக்கே….”
“அதுக்கு என்ன செய்யறது சார்! அது த்ரி பாய்ண்ட் த்ரி கெ வி பீடரில் கிடக்குது. சார் வீட்டு கனக்சனும் முன்னால் அதில்தான் கிடந்தது. சார்தான் அன்னைக்கு அந்த பீடரில் கிடந்தா அடிக்கடி லைட் அணையுது, இலவன் கெ.வி.பீடரில் உங்க வீட்டு கனக்சனையும் மாற்றிப் போடனுமுண்ணு சொன்னீங்க. அதுதான் மாற்றிக் கொடுத்திருக்கோம்…”
“ஏன் கம்பிளீட் லோடையும் த்ரி பாயிண்ட் த்ரி கெ.வி லைனில் ஆக்கினால் என்னா?”
“இப்போ எரிஞ்சுகிட்டிருக்கிற ஒரு சில வீடுகளில் உள்ள லைட்களும் அணையும்…”
“அணையட்டுமே… இங்கே இந்த மின்சார போர்டின் அஸிஸ்டன்டு என்ஜினீயர் நானும் என் குடும்பமும் இருட்டில் உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவுங்களெல்லாம் வெளிச்சத்தில் இருப்பதா? சே… எனக்கு இது அவமானமா இருக்கு! இது என் பிரஸ்டீஜின் க்வஸ்டின்!”
“சார்… இப்போ அதுக்கு நான் என்ன செய்யட்டும்! இங்கே நாங்க எல்லோரும் ஆபீஸில் இருட்டில்தான் உட்கார்ந்திருக்கோம்…”
“ஓகோ… அப்படித் திமிரா பேசுறே… இல்லையா? அப்படீன்னா எக்ஸிகூட்டிவ் எஞ்ஜினீயர்கிட்டெ புகார் பண்ணாமல் வழியில்லை.”

இப்படி அந்தாளு அதிகாரத்திமிரா பேசிட்டு ஜூனியர் இன்ஜினீயர திட்டுறாரு. மரம் விழுவது எவ்வளவு சாதாரணம் என்பதையும் அதற்காக மின்தடை செய்வது எவ்வளவு அவசியம் என்பதையும் தெரிந்தவரே இப்படி அதிகாரத்திமிரில் நடந்தால் பின் மற்றவரை என்ன சொல்வது?. மேலும், ஒரு மின்அலுவலக மேலதிகாரியின் வீட்டிற்கு சரியாக வால்டேஜ் வரவில்லை என்பதற்காக அவர் வீட்டுக்கருகில் புது டிரான்ஸ்பார்மர் போடச்சொல்வது எல்லாம் எவ்வளவு கொடுமை பாருங்கள். இக்கதையில் மட்டுமல்ல நம்முன் பல சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டேதானிருக்கிறது. மேலதிகாரியாய் இருப்பவர்கள் தங்களை கடவுளுக்கு நிகராக நினைத்துக் கொள்வதை பார்க்கும்பொழுது சிரிப்பாய் வருகிறது.

அடுத்து ஜூனியர் இன்ஜினீயர்கள் தொழிலாளர்களைப்போல  தொழிற்சங்கங்களில் இருக்க இயலாததை சுட்டிக்காட்டுகிறார். அவர்கள் பாவம் இரண்டு வர்க்கங்களுக்கும் நடுவில் கிடந்து முழிக்கிறார்கள். ஒருமுறை அடிமட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள். அதனால், அவனுக்கு கீழே உள்ள தொழிலாளர்கள் எல்லாம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஒரு நாள் இரவு முழுக்க மின்னலுவலகத்தை இராஜசேகரன் தனியே காவல் காக்க வேண்டியதாகிறது. அப்போது கீழ்நிலை ஊழியர்கள் தாங்கள் கருங்காலியாக பணிபுரிய முடியாது எனவே நீங்கள் வந்து இரவுக் காவல் இருங்கள் என்று சொன்னதை நினைத்து அவன் மட்டும் கருங்காலியா என்ன? என்று எண்ணிக் குழம்பிப்போகிறான். அரசு ஊழியர்களாவது சங்கம் வைத்துக்கொள்ள முடியும். ஆனால், அரசு ஊழியரல்லாத அலுவலர்கள் சங்கம் என்று எதாவது இருக்கிறதா? அவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு போராடியதாக எதாவது செய்தி வந்திருக்கிறதா? வேலைநிறுத்தம், உண்ணாவிரதம், மறியல் என்று அரசு ஊழியரல்லாத அலுவலர்கள் போராட முடியுமா? இது எதுவுமே நடக்காது. சம்பளத்த நூறுரூபாய் கூடக் கேட்டாலே வெளிய அனுப்பிடுவாங்க. அன்பேசிவம், அங்காடித்தெரு படம்லாம் எல்லோரும் பார்த்திருப்பீங்கள்ல? இது ஊழல், லஞ்சத்தை விட மிகமுக்கியமான பிரச்சனைதான். யாரும் பேசுவதில்லை. பேசவேண்டியவர்கள் பேச முடியாது. பேசுனா வேலைய விட்டு அனுப்பிடுவாங்க. சமீபத்தில்கூட அரசு ஊழியர்களுக்கு ஏழாவது அகவிலைப்படி உயர்வு என்ற செய்தியை கேள்விப்பட்டிருப்பீர்கள். அரசு ஊழியரல்லாத நம்மளைப் போன்றோர்க்கு அகவிலைப்படி எல்லாம் சம்பளம் கொடுக்காவிட்டாலும் மனசாட்சிப்படி சம்பளம் வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வருமா? அரசு கவனிக்குமா? நாவலைத்தாண்டி வரிகள் வழிந்து கொண்டிருக்கிறது. சரி, கதைக்குள்ள வருவோம்.

நிறுவனங்களில் ஏற்படும் சில குழப்படிகளைக் குறிப்பிடுகிறார். தொழிலாளர்களுக்கான ஓவர்டைம் பிரச்சனை, கடைசி தேதி மின்கட்டணம் கட்டத் தவறியபோது பீஸை புடுங்குவது, முன்பணம் தராமல் பொருள்களை வாங்கி வேலையை முடிக்கச்சொல்வது, மேலதிகாரிகளிடம் போட்டுக்கொடுப்பவர்கள் என விசயங்களை கதையினூடாக பதிவு செய்திருக்கிறார். இப்படி மின்னுலகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளை அம்பலமாக்கிய நாவலாகக்கூட இதைச் சொல்லலாம்.

இந்நாவலின் நாயகனான இராஜசேகரன் இருபத்திநாலு மணி நேரமும் வேலை குறித்தே சிந்தித்துக் கொண்டிருக்கிறான். அல்லது அப்படி சிந்திக்கும்படி அவன் நிர்பந்திக்கப்படுகிறான். இந்நாவலின் இறுதியில்கூட வீட்டில் உறங்கி கொண்டிருக்கும் பொழுது ஃபோன் வருகிறது. எடுத்தால் ரேடியோஸ்டேஷன்கிட்டயிருக்கும் டிரான்ஸ்பார்மரில் இடிச்சத்தம் கேட்டதாகவும், பின் தீப்பிடித்ததாகவும் அங்கிருந்தவர்கள் சொல்ல அதை சரி செய்ய அங்கு போவதாக லைன்மேன் பரமு சொல்ல உடனே அவனும் அங்கு போகவேண்டியதாகிறது. அப்படியே மணியை பார்த்து காலண்டரில் நாளை கிழிக்கிறான். அடுத்த நாள் அவனுக்கு அப்பொழுதே தொடங்கிவிடுகிறது. நல்லமழையில் இரவில் இராஜசேகரன் கிளம்பிச்செல்வதோடு நாவல் முடிகிறது.

இராஜசேகரன் குடும்பத்தைக் கவனிக்கக்கூட நேரமில்லாமல் இருக்கிறான். இரண்டு பெண்குழந்தைகள், ஒரு பையன், மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறாள். அப்படியிருக்கும்போதுகூட அவனால் வீட்டிற்கு எதுவும் செய்ய முடிவதில்லை. முழுநேரமும் மின்அலுவலகம்தான் அவன் உலகமாயிருக்கிறது. அவன் வீட்டிலிருக்கும்போதுகூட அலுவல் சம்பந்தமாக அவனை யாராவது பார்க்க வந்துவிடுகிறார்கள் அல்லது போனில் அலுவல் சம்பந்தமாகப் பேசுகிறார்கள். அவனுக்கும் மற்றவர்களைப் போல் மாலை வேளைகளில் வீடு வரணும், மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பொழுதைக்கழிக்கணும் என நிறைய ஆசைகள் இருக்கிறது. ஆனால், இது எதையுமே செய்யவிடாமல் பணி அவனைத் துரத்துகிறது.

தான் உட்பட இந்த உலகின் எல்லாவற்றின் மீதும் அவனுக்கு வெறுப்பும் எரிச்சலும் வந்தன. பள்ளிக்கூட, கல்லூரி நாட்களில், படிப்பு – பரீட்சை- ஆசிரியர்கள் – இத்தகைய கெடுபிடிகள். பிறகு வேலையில் பிரவேசித்த பிறகு, மேலதிகாரிகள், கீழ் ஊழியர்கள், பொதுமக்கள், இந்த மும்முனைகளிலிருந்து வரும் பிரச்சனைகள் விளைவிக்கும் மன உளைச்சல்கள்… வீட்டில்… தாம்பத்திய வாழ்வில் தான் தாமரையிலைத் தண்ணீராய் வாழ்வதாய் மனைவியின் கசப்பு… அப்பாவின் அன்பை அடுத்துத் தெரிய வாய்ப்புக் கிடைக்காத குழந்தைகள்… அவர்களின் கூட, விடுமுறை நாட்களில்கூட, ஒருமணி நேரம் கூட செலவழிக்க முடியாததன் அவஸ்தை வேறு… பெண்ணெடுத்த வகையில் மாமனாரின் பாரபட்சமான செய்கைகள் எழுப்பும் அகக்குடைச்சல்கள்… அதோடு பெற்றவர்களுக்கும், சகோதரர்களுக்கும் தன்னைப்பற்றி இருக்கும் ஒருவித அதிருப்தியை நினைத்துள்ள தன் இதய வேதனை

இப்படி பலதையும் நினைத்துக் கொண்டு தூங்குகிற இராஜசேகரன் போலத்தான் பலருடைய வாழ்க்கையும் நிலையில்லாமல் இருக்கிறது.

அதிகாலையில் எழுந்ததும் ஃபோன் பண்ணி அந்தக் குழிய ஏன் மூடல? அதச் செஞ்சுட்டியா? இதச் செஞ்சுட்டியான்னு எக்ஸிகூட்டிவ் இன்ஜினியர் கேட்டு அன்றைய தின மனநெருக்கடியைத் தொடங்கி வைக்கிறார். ஒரு வீட்டிலிருந்து கரண்ட் போனதற்கு திட்டுபவர், பெரிய இடத்தில் பணிபுரிபவர் தன் வீட்டில் மின்சாரக் கட்டணம் அதிகமாக வருகிறது என்று மீட்டரைச் சரிபார்க்கச் சொல்வது, ஒருவர் தன்னுடைய எருமைமாடு எலக்ட்ரிக் ஷாக்கால்தான் இறந்ததென்று அதற்கு நஷ்ட ஈடு கேட்பது, ஒருவர் தன் தம்பி வீட்டிலுள்ள புளியமரத்தால்தான் மின்தடை வருகிறதென அந்த மரத்தை வெட்டச் சொல்லி அனத்துவது, திடீரென போஸ்ட் மரத்தில் ஏறிய ஊழியர் விழுந்ததால் அவரை ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என பல வேலைகளோடு இரவு வரை பணிபுரிந்து கொண்டிருக்கும் இராஜசேகரனைப் பார்க்கும்பொழுது நமக்கே பாவமாயிருக்கிறது. ஏன் இந்த வேலையைப் போட்டுப் பார்த்துட்டு இருக்கணும். பேசாட்ல சாலைபஜார்ல (கதை திருவனந்தபுரத்தில் நிகழ்கிறது) ஒரு தள்ளுவண்டில தட்டுக்கடைய போட்டுக்கூட நிம்மதியா இருக்கலாம்ல எனத்தோன்றுகிறது. இராஜசேகரனைப் போல பலர் பணிக்கு அடிமையாகி விடுகிறார்கள். இவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இவர்களைப் போன்றவர்கள் திடீரென ஒரு வாரம் விடுமுறை விட்டால் அலுவலகம் இல்லாததால் அப்படியே அதிர்ந்து போய்விடுவார்கள். இது போல உள்ள நண்பர்கள்தான் தியானம், யோகா எனப் போய் அதில் அடிமையாகி விடுகிறார்கள்.

மின்உலகம் நீல.பத்மநாபனின் மிக முக்கியமான நாவல். இதை வாசித்ததும் ரொம்ப மகிழ்ந்தேன். காரணம் பத்தாவது முடித்துவிட்டு டிப்ளமோவில் மின்னியல் & மின்னணுவியல் படிக்க வேண்டும் என்பதுதான் என் இலக்காக வைத்திருந்தேன். நல்லவேளை கிடைக்கவில்லை. பிறகு பணிரெண்டாவது முடித்தபின் டிப்ளமோ முடித்தாலும் அச்சமயம் மதுரையும், தமிழும் என்னை ஆட்கொண்டதால் என்னுடைய பணியை நானே மாற்றிக்கொண்டேன். தமிழில் இது போன்ற பலதுறை சம்பந்தப்பட்ட நாவல்கள் வர வேண்டும். நீல.பத்மநாபன் தன் அலுவலகச்சூழலை எழுதியதுபோல நானும் கூட பின்னாளில் இதுபோன்ற ஒரு நாவலை எழுத வேண்டுமென்று ஆசையிருக்கிறது. அதற்காகத்தான் இப்பொழுதே வீட்டு வாசலில் ஒரு நாவல் மரம் வைத்திருக்கிறேன்.

குறிப்பிட மறந்துவிட்டேனே நான் நினைத்தது போலவே மழை லேசாக வலுத்ததும் மின்வெட்டு ஏற்பட்டுவிட்டது. ‘இந்த நகரில் மின்வெட்டு சர்வ சாதாரணமாகிப்போயிருந்தது. அதிலும் கோடைக்காலத்தில் ஏற்படும் மின்வெட்டுகூட அங்கிருப்பவர்களுக்குப் பழகிப்போய் விட்டது. மின்சாரமற்றுப்போன மதிய நேரங்களில் மரங்களில் இலை அசைவதே இல்லை’ என்று எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது போல கோடைக்காலத்திலேயே மின்வெட்டு பழக்கமாயிருக்கிறதென்றால் மழைக்காலத்தில் கேட்கவும் வேண்டுமா? மின்தடைக்கும் அரசு அவ்வப்போது எதாவது காரணம் சொல்லிக்கொண்டுதானிருக்கிறது. மின்சாரம் இல்லாமல் வாழ முடியாதபடி மின்னுலகவாசிகளாகிவிட்டோம். மின்தடையும் ஒரு ஆட்சி மாறுவதற்கு காரணமாக இருக்கிறதென்றால் முக்கியமான விசயந்தானே. கட்டாயம் ஒரு முறை மின்உலகம் வாசியுங்கள்.

மின்உலகம், நீல.பத்மநாபன், அன்னை பப்ளிகேஷன்ஸ்.

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் மதுரைவாசகன்

  அருமையான இடுகை – நீல பத்மநாபனின் மின்னுலகம் நாவல் படித்து, இரசித்து, மகிழ்ந்து, மீண்டும் அசை போட்டு, மீண்டும் படித்து, அனுபவித்து – நாவலைப் பற்றிய ஒரு நீண்ட இடுகை இட்டு மனம் மகிழ்ந்தது நன்று மதுரை வாசகன். இவ்விடுகை முதலில் கை எழுத்துப் பிரதியாக எழுதி – பிறகு கணினியில் தட்டச்சி – இடுகையாக மாற்றியது என்பதனை எண்னும் போது – உன் உழைப்பு தெரிகிறது. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. ramalingam சொல்கிறார்:

  நல்ல அறிமுகம். உடனே படிக்கத் தூண்டுகிறது.

 3. தொப்புளான் சொல்கிறார்:

  மேற்கோள் காட்டப்பட்டுள்ள உரையாடலைப் படிக்கும்போது இந்நாவலில் ஒருவிதத்தில் மலையாளம் தமிழாக மாறியுள்ளதாகவும், மற்றொரு விதத்தில் தமிழ் மலையாளமாக மாறியுள்ளதாகவும் தோன்றுகிறது.

  ஒருநாள் இன்பச் சுற்றுலா, ஒருநேர ஓசிச் சாப்பாடு என்றெல்லாம் “சலுகை”களை வாரிவழங்க அவர்கள் தயாராகவே இருக்கும்போது நீங்கள் “உரிமை”, தொழிற்சங்கம் என்றெல்லாம் பேசுவது நம்நாட்டின் வளர்ச்சிவீதத்தைக் கடுமையாகப் பாதிக்கும். அதற்கான காலங்களும், உலகங்களும் இன்னும் இருக்கின்றனவா?

  மின்வெட்டு குறித்தெல்லாம் கவலையேபடாதீர்கள். நடுவண் அரசின் திட்டப்படி எல்லாம் நல்லவிதமாக நடக்கும் என்றால் கூடியவிரைவில் மின்உற்பத்தி, கடத்துகை, பகிர்மானம் மூன்றுமே முழுக்கத் தனியார் மயமாகிவிடும். பிறகென்ன, கன்னித்தீவே சொர்க்கபுரியாக மாறிவிடும். ஆனால், எல்லாருமே “உரிய விலை” கொடுத்துத்தான் ஆகவேண்டும். அணு உலைகள்தான். அணைக்கட்டுகள்தான். சுரங்கங்கள்தான். வாடிக்கையாளர் சேவைதான். எல்லாமே மெகா சைஸ். யாமம் நாவலில் பிரான்சிஸ் டே சொல்வதுபோல இந்தக் குப்பங்களை எல்லாம் நமது சிப்பாய்கள் பார்த்துக்கொள்வார்கள்.

  ..இருந்தபோதும் மின்வாரியத்தில் ஓவியக் கண்காட்சி நடத்துகிற செந்தில் போன்ற இளநிலைப் பொறியாளர்களும், அதை ஊக்குவிக்கின்ற உயரதிகாரிகளும் இருக்கவே செய்கின்றனர்.

 4. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  அன்புத் தம்பி,
  அருமையான பதிவு.நாவலை உள்வாங்கி அப்படியே சாரத்தைப் பிழிந்து கொடுத்துவிட்டீர்களே.பல்லாண்டு காலமாக என் மனதில் அசைபோட்டுக்கொண்டிருந்த கதையை பலரையும் கவர்ந்திழுத்து வாசிக்க
  வைக்கும் வகையில் அமைந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி இப்படியே
  தொடர வாழ்த்துகிறேன்

 5. மறுமொழியிட்டு என்னை மேலும் செதுக்க உதவும் தமிழ்உள்ளங்களுக்கு நன்றி. மறுமொழியிட்ட சீனாஅய்யா, ராமலிங்கம், தொப்புளான், இராதாகிருஷ்ணன்அய்யா மற்றும் அனைவருக்கும் சித்திரவீதிக்காரனின் நன்றி. கூடங்குளத்தில் அணுஉலை அமைப்பதாகட்டும், அரிட்டாபட்டியில் மலையை அறுப்பதாகட்டும் எல்லாமே தவறு. இயற்கையை மனிதன் நாசப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. இதை அரசே முன்னின்று நடத்துவது தான் வருந்தத்தக்கது. மக்கள் போராட முன்வந்திருப்பது பெருமகிழ்வை தருகிறது. பிரதமரின் கூற்றை விகடனில் பார்த்து நொந்து போய்விட்டேன்.
  “கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை நிறுத்தினால், தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். கூடங்குளம் பகுதி மக்களுடன் இந்திய அணு சக்திக் கழகம் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. கல்வி, சாலைகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் சமுதாயப் பணிகள் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன” – மன்மோகன்சிங் (நன்றி – ஆனந்தவிகடன்.19-10-11, 26-10-11)
  பிரதமரின் இந்த கூற்றைப் படித்ததும் சிரிப்பு தான் வந்தது. அவதார் தமிழ் பதிப்பில் பார்க்கும் போது அந்தக் கம்பெனிக்காரன் சொல்வான் நாவியின மக்களுக்கு நாம் ரோடு போட்டு கொடுத்தோம், பள்ளிக்கூடம் கட்டிக்கொடுத்தோம், தமிழ்சொல்லிக்கொடுத்தோம் என்ற அந்த வசனம் தான் ஞாபகம் வந்தது. அறிவியலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த அரசும், அறிஞர்களும் முன்வர வேண்டும். அதை விட்டு மக்களை சோதனைக்கூட எலியாக்கிவிடக்கூடாது.

 6. karthik bala சொல்கிறார்:

  உங்களின் வாசிப்பனுபவங்கள் மிகவும் நேர்த்தியான ரசனையுடன் உள்ளன. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்.

 7. சம்பளம் நூறு ரூவா கூட்ட ஆயிரந்தடவை யோசிக்கிறாங்ங. ஆனா, விலைவாசிய மட்டும் சகட்டுமேனிக்கு கூட்டுறாங்ங. அரசு ஊழியர்களுக்கு மட்டும் கூட்டிக் கொடுத்தா போதுமா? மத்தவங்ங எல்லாம் இங்கதான வாழுறோம். நாலாயிரம், ஐயாயிரம் வாங்கி பொழக்கிறது இனி ரொம்ப சிரமந்தான். இன்னும் இரண்டாயிரம், மூவாயிரம் வாங்குறவங்க எல்லாம் என்ன செய்வாங்க? கரண்ட கண்ட நேரத்துல அமத்துறாங்ங. அங்கிட்டு ஒரு கூட்டம் அணுஉலையை திறந்து உயிருக்கு உலை வைக்கிறதுக்கு காத்துருக்கு. வாழ்க்கை ஜி.நாகராஜன் சொன்ன மாதிரி ‘யாரோ முட்டாள்பய சொன்ன கதை’ மாதிரியிருக்கு. கேட்க நாதியில்லாம போச்சு. மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றி.
  – சித்திரவீதிக்காரன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s