அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு…

Posted: ஒக்ரோபர் 23, 2011 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்

(வம்சி பதிவர்களுக்காக நடத்தும் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட எனது முதல் சிறுகதை)

மதுரையிலுள்ள ஒரு சிறுகுன்றின் உச்சியில் பாறை மீது மல்லாந்து படுத்து வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். நீலமாய் வெகுநீளத்துக்குத் தெரிந்தது. பாறையின் குளுமை இதமாகயிருந்தது. மெல்லப் புரண்டு தொலைவில் தெரியும் கோபுரங்களை, வீடுகளைப் பார்க்கும்போது நகரம் விளக்கொளியில் மிதந்து கொண்டிருந்தது. ஆரஞ்சுப்பழம் போல சூரியன் கிழக்கிலிருந்து வெளிவரத் தொடங்கினான். மதுரை மாநகரை பார்த்துக்கொண்டே படுத்துக்கிடக்கும்போது இளம்வெயில் இதமாக உடலெங்கும் பரவியது.

‘டேய் எந்திரிடா, வீட்டுக்குள்ளார வெயிலு வர்ற வரைக்கும் என்னடா தூக்கம்? ராத்திரி பூராம் பரிச்சைக்கு படிக்கிறவங்கெணக்கா கதைப்புத்தகம் படிக்கிறது. காலம்பெற வெள்ளென எந்திரிச்சோம், குளிச்சோம், கிளம்புனோம்ற பழக்கமேயில்ல. கடுங்காப்பி வேணும்னா எந்திரி பெறவு ஆறிப்போச்சுன்னா ஒனக்குன்னு தனியா சூடு பண்ணணும்’.

அம்மாவின் அதிகாலை சுப்ரபாதம் கேட்டு மெல்ல எழுந்தான். வேகவேகமா எந்திரிச்சு போயி பல்லவெளக்கிட்டு வந்து கடுங்காப்பிய எடுத்துட்டு வந்து திண்ணையில உட்கார்ந்து ஒவ்வொரு மடக்கா ரசிச்சு குடிச்சுக்கிட்டிருந்தான். இப்படியே எல்லாம் இதமா இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்னு நெனச்சான். காப்பியக் குடிச்சுட்டு டம்ளர குழாயில கழுவி அடுப்படில போட்டுட்டு காலண்டர பார்த்தான். குதிரையில இருந்து அழகரு இவனெப்பார்த்து சிரிக்கிற மாதிரி இருந்துச்சு. தேதி இருவத்தோம்போதாயிருச்சு, மக்ஞாநாளு சம்பளம் வாங்கிரலாம்ன்ற நெனப்பு வந்ததும் இவனும் அழகர பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டான். குழாயில தண்ணியடிச்சு குளிச்சுட்டு, சாப்பிட்டு வேலைக்கு கிளம்பினான். சைக்கிள் மேல உட்கார்ந்து காக்கா கத்திட்டு இருந்துச்சு. அப்பத்தான் காக்காவுக்கு சோறு வைக்காம போறோம்ன்ற ஞாபகம் வந்துச்சு. கொஞ்சூண்டு பழைய சோத்த அள்ளி காக்காய்க்கு வச்சுட்டுக் கிளம்பினான். சைக்கிளப் பார்த்தா அது பாவமா நின்னுக்கிட்டிருந்துச்சு. பின்னாடி டயர்ல ஒட்டுப்போட்ட இடம் ‘ரொம்பநேரம் தூங்கி எந்திரிச்சவன் மூஞ்சிமாதிரி’ வீங்கி இருந்தது. சம்பளம் வாங்குனதும் புதுசு மாத்திரணும்ன்னு வழக்கம்போல நெனச்சுக்கிட்டான். பல மாசமா இப்படிச்சொல்லி அத ஏமாத்துறதுக்காக என்னிக்காச்சும் ஒருநாள் நடுரோட்ல நிக்கப்போது அன்னிக்குத்தான் தெரியும் அதோட அருமையென உள்ளுக்குள் கெவுலி அடித்தது.

மந்தையில் பள்ளிக்கு வந்துகொண்டிருந்த பசங்களைப் பார்த்ததும் தானும் காக்கி பேண்டும், வெள்ளைச் சட்டையும் போட்டு படிக்க சென்ற காலங்கள் நினைவுக்கு வந்தது. தாவணி கட்டிய இவனது வகுப்பு தேவதைகளின் சிரிப்பொலி கேட்டது போன்ற பிரமை ஏற்பட்டது. இப்படிப் பின்னோக்கிய நினைவுகளோடு சைக்கிளை முன்னோக்கி அழுத்திச் சென்று கொண்டிருந்தான். பல நினைவுகள் அலைக்கழிக்க அவற்றையெல்லாம் தட்டிவிட்டு பாதையை பார்த்து போய்க் கொண்டிருந்தான். வழக்கம் போல ரயில்வே கேட் அடைத்திருந்தது. சின்ன வயசுல இருந்தே ரயில பார்த்துட்டு போனாத்தான் அவனுக்கு மகிழ்ச்சியாயிருக்கும். சைக்கிளை கேட்டுக்கிட்ட போய் நிறுத்தி காத்துக்கொண்டிருந்தான். ரயில் வந்து போனதும் இரண்டு பக்கமும் இருந்து படைகள் சண்டையிடப் போவது போல வாகனங்கள் நகரும். முதலில் காலாட்படைகள் போல நடைபயணிகள், குதிரைப்படைகள் போல இருசக்கரவாகனங்கள், யானைப்படைகள் போல ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்கள், தேர் போல லாரிகள், இராஜாவின் தேர் போல மெல்ல இறுதியில் கடக்கும் அரசுப்பேருந்துகள் என தான் ஒரு நவீன போர்க்களத்தில் நிற்பது போலத்தோன்றியது. பெரும்பாலும் யாரும் அடித்து சண்டையிட்டுக் கொள்வதில்லையானாலும் ஒருவித வன்மத்துடனே அனைவரும் எதிர்நோக்கி கடப்பதாகத் தோன்ற வழக்கமான புன்னகையை உதிர்த்துக்கொண்டே ‘கேட்’டு திறந்ததும் சைக்கிளை அழுத்த தொடங்கினான். வாழ்க்கையில் பல மேடு பள்ளங்கள் இருக்கும் என்பதை உணர்த்துவது போல சாலையிருந்தது.

வேலைக்குச் சென்றதும் வழக்கமான பணிகள் தொடர்ந்தன. நகலெடுக்க கடைக்குச் சென்றவன் டீக்கடையில் வெயிலில் பொன்னிறத்தில் மின்னிக்கொண்டிருந்த பஜ்ஜியைப் பார்த்ததும் நாவூறத்தொடங்கியது. கடைக்குச் சென்று பஜ்ஜி வாங்கி சாம்பார், சட்னியோடு குழப்பியடித்தவுடன் உடம்பில் பெருந்தெம்பு ஏற்பட்டது. இனி எவெயெந்த வேலை சொன்னாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பினான். அர்த்தங்கெட்ட வேலை பார்த்து வாழ்க்கை வீணாகிவிடுமோ என்ற அச்சம் மனதில் எழுந்தது.சம்பளம் வாங்குனதும் ஒருநாள் லீவப்போட்டு எங்கிட்டாவது போய்ட்டு வரணும். அப்பத்தான் இந்த மண்டையடி குறையும் என மனசுக்குள்ளேயே திட்டமிட்டுக்கொண்டான். அலுவலக வேலையாக வங்கிக்குச் செல்லும்போது அங்கு காத்திருக்க வேண்டிய நேரத்தில் வாசிப்பதற்காக நேற்றிரவு வாசித்து மிச்சம்வைத்திருந்த வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ நாவலை இரகசியமாக எடுத்துவைத்துக்கொண்டான். வங்கியில் எதிர்பார்த்தது போல நல்ல கூட்டம். டோக்கன எடுத்துட்டு வாசல்ல வந்து உட்கார்ந்து ‘கடல்புரத்திற்கு’ சென்றான். வாசித்துமுடித்ததும் எல்லோரும் அன்பானவர்களாகவும், எல்லாம் அழகாகவும் தெரிந்தது. சிரித்துக்கொண்டே வரிசையில் போய் நின்றான்.

மாலை வீட்டுக்கு கிளம்பலாமென்ற நேரத்தில் போகும்போது பொங்கல் வைக்கும் கூட்டம் அப்பத்தான் அடுப்பக்கூட்டியிருந்தது. . வீட்டுக்குப் போக முடியாட்டியும் டவுனுக்குள்ள சுத்திட்டு போகலாம்னு நெனச்சு மெல்ல நழுவ திட்டமிட்டு அனுப்ப வேண்டிய துரிதஅஞ்சல்களை எடுத்துட்டு சீக்கிரங் கிளம்பினான். தெரிந்த நண்பரை ரீகல்கிட்ட வரச்சொல்லி இரவு சேர்ந்து ஊருக்கு போய்விடலாமென அழைத்துவிட்டு சைக்கிளை வேகவேகமாக அழுத்தினான். சைக்கிள ஒரு திசைய பார்த்து ஓட்டினாலும் மனசு பலதிசைகளிலும் அலைபாயத்தொடங்கியது. தனக்கு பிடித்த பாடல் ஒலிக்க தானும் பாடிக்கொண்டே சைக்கிளை ஒரு ஓரமாய் நிறுத்தி இடது காலை ஊன்றி அலைபேசியை எடுத்து முகப்பை பார்த்ததும் அப்படியே முகம் மாறியது. எதிர்முனையின் கேள்விகளுக்கு பதில்சொல்லி விட்டு முகத்தை சுளித்து, சுளித்து திட்டிக்கொண்டே சைக்கிளை அழுத்தத் தொடங்கினான். பணியிடத்திலிருந்து அழைப்பு வந்தாலே எப்போதும் நடக்கிற விசயந்தான்.

துரித அஞ்சலை அனுப்பிவிட்டு நண்பருக்காக ரீகல் தியேட்டர் வாசலில் காத்துக்கிடந்தான். நண்பர் வந்ததும் சித்திரவீதிக்குள் கிளம்பினர். டவுன்ஹால்ரோட்டில் நுழைந்து மேலக்கோபுர வீதி வழியாக சித்திரை வீதிகளை அடைந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு திண்டுக்கல்ரோடு வழியாக திரும்பி வருவதுதான் அவர்களது வழக்கம். இவர்களுக்கு இது ஒருவிதமான சுகமான போதை. எந்தப் பிரச்சனையென்றாலும் இங்கு வந்து ஒரு சுற்று சுத்திச்சென்றால் அது தீர்ந்துவிடும் அல்லது மறைந்துவிடும் என்ற நம்பிக்கை. மாலைநேர விளக்கொளியில் புதியமனிதர்கள், பலவிதமான கடைகளையும் பராக்கு பார்த்துக்கொண்டே மேலமாசிவீதி வந்துவிட்டனர். ஒரு சிறுவன் டீ வாங்கிக் கொண்டு போனதை பார்த்ததும் இவனுக்கு கோபங்கோபமாக வந்தது. படிக்கிற வயசுல டீ வாங்கி கொடுத்துட்ட திரியிறானே என்று உடன்வந்த நண்பனிடன் புலம்பத்தொடங்கினான்.  இதற்கு முன் வேலை பார்த்த இடத்தில் வருத்தப்பட்டு பாரஞ்சுமந்தது, விற்பனை பிரதிநிதியாய் நாய்போல அலைந்தது, இன்னொரு இடத்தில் நாய்க்கு சாப்பாடு வாங்கி கொடுத்தது, மேலும் அது கக்கியதை கழுவிவிட்டது, ஏசி சர்வீஸ் பார்க்கும் வேலைக்கு போய் பெரும்பாலும் அதை கழுவ எந்நேரமும் கழிப்பறைக்கருகிலிருந்த சூழலால் வெறுத்து அந்த வேலையை விட்டது, ஆயில்சீல் எண்ணி எண்ணி கண் போய்விடுமென அஞ்சி அந்த வேலையைத் துறந்தது என படிச்சு முடிச்சுட்டுத் தான் பார்த்த வேலைகளை எல்லாவற்றையும் நண்பனிடம் சொல்லிக்கொண்டு நடந்தான். சமீபத்தில் வாசித்த சிறுகதையில் ஜி.நாகராஜன் வாழ்க்கையை ‘யாரோ முட்டாப்பயல் சொன்ன கதை’ன்னு சொன்னது ஞாபகம் வந்தது. எதையோ படிச்சுட்டு எந்தெந்த வேலையோ பார்த்துட்டு திரியும் தன் வாழ்க்கையும் அவனுக்கு அப்படித்தான் தோன்றியது.

நண்பர் ரொம்ப சூடாயிருக்கீங்க. வாங்க உங்களுக்கு புடிச்ச பன்னீர் சோடா குடிப்போம்ன்னு அழைக்க சரின்னு கடைக்கு சென்றான். பன்னீர் சோடாவை குடித்துக்கொண்டே பிறைபோல் அழகாக வளைந்திருந்த தெற்குகோபுரத்தை பார்த்தான். இவ்வளவு சிலைகளை எப்படி இவ்வளவு உயரத்தில் செய்தார்கள் என்றெண்ணிக் கொண்டிருக்கையில் சிலைகளிலிருந்தவர்களெல்லாம் இவனையே பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. தெற்கு சித்திரை வீதியில் நடைபாதைத்திண்டில் அமர்ந்தனர். போறவாரவங்களையெல்லாம் பார்த்துக்கொண்டே கதைத்துக் கொண்டிருந்தனர். போகிற தேவதைகளெல்லாம் இவங்களையே பார்ப்பது போல எண்ணி கற்பனையில் மிதந்தனர். வானம் மையிருட்டில் இருந்தது. மழை வருமென்றெண்ணி கிளம்பினர். இருக்கிற காசுக்கும் ரசபானிபூரி வாங்கி ஆளுக்கய்ந்தாய் சாப்பிட்டு நடந்தனர்.

மங்கம்மா சத்திரத்திற்கெதிரே ரயில்நிலைய சுற்றுச்சுவருக்கருகில் சைக்கிளை நிறுத்தியிருந்த இடத்திற்கு வந்தனர். சாவியை போட்டு சைக்கிளை எடுத்தால் பின் டயர் அமுங்கி அப்படியே உட்கார்ந்துவிட்டது. ‘அய்யய்யோ பொழப்பக்கெடுத்திருச்சே இனி என்ன பண்றது? காசு வேறயில்ல’ன்னு புலம்பினான். சைக்கிளை ஸ்டாண்டில் போட்டுட்டு நடந்து போயிருவோம்ன்னு நண்பர் சொல்ல பத்து கிலோமீட்டர இந்நேரத்துல நடக்கவாவென அதிர்ச்சியாக கேட்டான். அருகில் மரத்தடியில் நின்று கொண்டிருந்த அக்கா வந்து என்னப்பா பிரச்சனைன்னு கேட்க சைக்கிள் டயர் கிழிந்த கதையை சொன்னான். உடனே, தோளிலிருந்த பையிலிருந்து நூறு ரூபாயெ எடுத்து நீட்டி ‘இந்தா வச்சுக்கோ’ என்றார். இவன் திகைத்து நிற்க, அவள் ‘என்னப்பா ஒரு வேசி கையில காசு வாங்குறோம்ன்னு யோசிக்கிறீயா’ன்னு கேட்க, அய்யய்ய… ‘அதுல்லக்கா அஞ்சுகாசு, பத்துக்காசுகெல்லாம் ஆயிரங்கணக்கு பாக்குறவங்களை பாத்திருக்கேன். யாருன்னே தெரியாத எனக்கு நூறு ரூபாய் கொடுக்கிற உங்க மனச பார்த்து திகைச்சுபோயிட்டேன்’ன்னான். உடனே அவள், ‘எங்க உடம்புவேனா அழுக்கா இருக்கலாம், மனசு சுத்தமாத்தானிருக்கு’ன்னு சொல்ல ரொம்ப நன்றி சொல்லி அந்த காசை வாங்கிட்டான். சம்பளம் போட்டதும் தற்றேன்னு சொல்ல அவள் அதெல்லாம் வேணாம். சைக்கிளுக்கு டயர மாத்து, இந்த காச வச்சு இப்ப கட்டபொம்மன் சிலைக்கு எதுத்தாப்ல இட்லி சுட்டுவிக்கிற பாட்டிட்ட போயி சாப்ட்டுட்டு சைக்கிள அங்கனயிருக்க ஸ்டான்டுல போட்டுட்டு பஸ்ஸூல போங்க’ன்னு சொன்னதும் தன்னையறியாமல் கையெடுத்து வணங்கிவிட்டு சைக்கிளை உருட்டிட்டு மௌனமாக நடந்தனர். அன்று வானம் நட்சத்திரங்களேதுமற்று நிர்வாணமாக இருந்தது. அருகிலிருந்த டீக்கடையிலிருந்து கேட்ட பாடல் அவர்களின் மௌனம் கலைத்தது.

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவேயில்லையடா!

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா!

என்ற கமல்ஹாசனின் குரலோடு தாங்களும் சேர்ந்து ‘அன்பே சிவம், அன்பே சிவம்’ என்று உணர்வோடு பாடினர். இந்த மதுரையும், அங்கிருக்கும் வீதிகளைப்போல அழகான மக்களும் உள்ளவரை அன்பே எல்லாமுமாகயிருக்கும் என்ற நம்பிக்கையுடன் நடந்தனர்.

(கோபுரங்கள் சூழ்ந்த மதுரை படம் வீக்கிபீடியா தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. பயனர் எஸ்ஸார் அவர்களுக்கு நன்றி. அடுத்த மதுரை சித்திரை வீதி கோட்டோவியம் மனோகர் தேவதாஸ் வரைந்தது. அவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி)

பின்னூட்டங்கள்
 1. இரண்டு வருடங்களுக்கு முன் காந்திஅருங்காட்சியகத்தில் தானம் அறக்கட்டளை நடத்திய குறும்படவிழாவில் பார்த்த ‘நிறம் மாறும் வண்ணங்கள்’ எனும் படம் மனதை மிகவும் பாதித்து விட்டது. அதில் மகாபலிபுரத்திலுள்ள ஒரு குடிசையில் வசித்து வரும் பாலியல் தொழிலாளியான அரவாணி மிக அற்புதமான ஓவியர். அவருடன் உள்ள மற்றொரு பாலியல் தொழிலாளி கிடைக்கிற பணத்துக்கெல்லாம் இதுலயே செலவழிக்கிறீயே? இதெல்லாம் வித்தால் என்ன? என்று ஓவியங்களை பார்த்து கேட்டதும் அவர் உடம்பத்தான் விக்கிறோம்? மனசையும் விக்கச்சொல்றீயா?ன்னு கேட்டுக் கொண்டே வண்ணங்களையெல்லாம் முகத்திலெடுத்து அறைந்து கொண்டு அழுவார். இந்தக் காட்சியை பார்த்ததும் என்னையறியாமல் வெகுநேரம் அழுது கொண்டிருந்தேன். அதன் தாக்கம்தான் இந்தக் கதையின் இறுதிக்காட்சிக்கான காரணம் எனலாம்.

  மற்றபடி மதுரையில் வசிப்பவர்கள் எல்லாம் எப்பொழுதும் கத்தியும், அருவாளையும் தூக்கிட்டே எப்பப் பார்த்தாலும் திரிவது போல காட்டும் திரைப்படக்காரர்களுக்கு இக்கதையில் வரும் இளைஞர்களைப் போலத்தான் நிறையபேர் மதுரையில் வசிக்கிறோம் என்பதையும் இக்கதை மூலம் பதிவு செய்ய விரும்பினேன். இவையிரண்டையும் பூர்த்தி செய்ய வம்சி நடத்திய இந்த சிறுகதைப்போட்டி உதவியது. தோழர் மாதவராஜ் அவர்களுக்கும், வம்சி பதிப்பகத்திற்கும் மற்றும் வாசித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி.
  சித்திரவீதிக்காரன்

 2. suryajeeva சொல்கிறார்:

  படிக்க மனசுக்கு நல்லா இருந்துச்சு

 3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திரவீதிக்காரன்

  கதை இயல்பாக, தெளிந்த நீரோடை போல் செல்கிற்து. கரு அருமை. வெற்றி பெற நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. சூர்யஜீவா அவர்களுக்கும், சீனா அய்யாவிற்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.

 5. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  கதைபற்றி கூற அதிகம் இல்லையாயினும் சொல்ல நினைத்த கருத்தை
  தெளிவாககஃகூறி விட்டீர்கள் .ஆனால் நடை மிக நன்றாக உள்ளது.
  மதுரை வீதிகளில் நடப்பது பற்றி கூறியுள்ளது மிக அருமை.வாழ்த்துக்கள்
  keep it up.

 6. இராதாகிருஷ்ணன் அய்யாவிற்கு நன்றி. இத்தளத்தில் முதல் பதிவாக ‘சித்திரவீதிகள்’ எனும் கட்டுரையை 2010, அக்டோபர் 23 அன்று பதிவிட்ட அதே தேதியில் (23.10.2011), இரண்டாவது வருடம் மீண்டும் மதுரை சித்திரவீதிகளை பற்றி இந்தக் கதையினூடாக எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு மதுரைக்கும், தமிழுக்கும் நன்றி.

 7. muniasamy சொல்கிறார்:

  madurai in alagai kooriyathodu madurai vaal makkalin manathin alagaiyum kooriyathu en manathai varudi vittathu

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s