சரக்குன்னா சரக்குதானா?

Posted: ஒக்ரோபர் 26, 2011 in பார்வைகள், பகிர்வுகள்

மது அருந்துவதால் மகிழ்ச்சி அதிகரிக்கும், துக்கம் குறையும் என்பது பலகாலமாக நம்பப்பட்டு வரும் மூடநம்பிக்கைகளில் ஒன்று. மது அருந்துபவர்கள் எல்லாம் மோசமானவர்கள் என்று கூற முடியாவிட்டாலும் அப்பழக்கம் மோசமானது என்று உறுதியாக கூறலாம். இக்கட்டான சூழலில் 50,100 பணங்கொடுத்து உதவ முன் வராதவர்கள் கூட, சும்மா மது வாங்கித் தரத் தயாராகயிருக்கிறார்கள். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தற்கொலை முயற்சி அல்லது கொலை முயற்சி எனலாம். மது அருந்துவது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்றுகூட சொல்லலாம். பெண்களுக்கு இழைக்கப்படும் பாதி கொடுமைகள் குடியினால்தான் நிகழ்த்தப்படுகின்றன. ஒரு குடும்பத் தலைவனின் குடிப்பழக்கம் அக்குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஏதாவது ஒருவகையில் பாதிக்கிறது. அது தவறு என்று தெரிந்தும் வழிவழியாகத் தொடர்வது எவ்வகையில் நியாயம்?

காலச்சுவடு, கடவு இணைந்து நடத்தும் அற்றைத்திங்கள் எனும் இலக்கியநிகழ்வுக்கு இம்மாதம் வந்த ஆளுமையான வழக்கறிஞர் பொ.இரத்தினம் கொடுத்த கையடக்கப் பிரதியிலிருந்து மதுஒழிப்பு குறித்த சிந்தனைகள் கீழே உள்ளன. இந்நிகழ்வுக்கு சென்று வந்து கையடக்கப் பிரதியை கொடுத்த சகோதரர்க்கு நன்றி.

வளர்ந்து வரும் நாடுகளில் மக்களின் மது நுகர்வு குறைந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மதுவின் நுகர்வு அதிகரித்து வருகிறது. இந்தியாவின் சுகாதார நிலையைப் பொறுத்தவரை பரவிவரும் தொற்று நோய்கள், கலப்படம் நிறைந்த மதுவகைகள், மேலும் மது தொடர்பான பிற தீய பழக்கங்களும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் உணவூட்டம் மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

பாரா மனநலமருத்துவ மையங்களில் உள்ள புள்ளி விவரங்களின்படி 20 வருடங்களுக்கு முன்பு, மதுவினால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப்பட்டவர்கள் மொத்தத்தில் 2 சதவிகிதம் மட்டுமே. ஆனால், தற்போது 30 சதவிகிதம் முதல் 35 சதவிகிதம் வரை மதுவே நோயின் காரணமாக உள்ளது. இதிலிருந்து மதுவின் நுகர்வு அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது. மது அருந்துவோர் குறித்த ஆய்வில் குறைந்த வயதில் உயிர் இழப்பு மதுவினால் அதிகம் ஏற்படுகிறது, சாலை விபத்துகளில் மது அருந்திவிட்டு ஓட்டுபவர்களினால் இறப்பு அதிகமானது என்ற உண்மை தெரியவந்துள்ளது.

அன்றாடம் உழைத்து வாழும் உழைப்பின் மூலம் கிடைக்கும் குறைந்த பட்சக் கூலியையும் அரசிற்கு மதுபானக் கடைகளில் கொடுத்துவிட்டு போதை தலைக்கேற தன் சுயத்தை இழந்து மனிதன் தன் மாண்பைக் குறைத்துக் கொள்ளும் நிலையை மது உருவாக்கி உள்ளது.

புள்ளி விவரங்கள் நமக்குக் கூறும் உண்மைகள் என்ன?

கடந்த 2007,2008 ஆண்டில் சாலை விபத்தில் இறந்தோர் முறையே 12036, 12784. 2009ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை சுமார் 12500 ஆகும். பெரும்பான்மையான விபத்துக்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டவை ஆகும்.

2008ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை 1630. இதில் பெரும்பான்மையானவை குடிபோதையில் நடந்துள்ளன. 2007,2008ம் ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெற்ற பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை முறையே 17619 மற்றும் 19735. இவற்றில் பெரும்பான்மையான குற்றங்கள் குடிபோதையில் ஏற்பட்டுள்ளன.

2007,2008ம் ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முறையே 4265,4133. இவற்றுள் கற்பழிப்பு, வரதட்சணை, கொலை, மானபங்கப்படுத்துதல், குடும்ப சச்சரவு என அடங்கும். இவற்றிற்கு அடிப்படை மதுப் பழக்கமே ஆகும்.

ஒரு சில ஆய்வுகளில் வெளிவந்த தகவல்களைப் பார்ப்போமேயானால் தமிழ்நாட்டில் ஏறக்குறைய 70% ஆண்கள் குடிப்பழக்கம் உள்ளவர்கள் எனக் கூறுகிறது. இந்த 70% குடிப்பழக்கம் உள்ள ஆண்களில் 40% வருடத்திற்கு ஒரு சில நாட்களும், அதாவது மகிழ்ச்சிக்காக குடிப்பவர்கள் என்று கூறுகிறது. அடுத்த 30% ஆண்கள் வாரத்தில் விடுமுறை நாட்களில் மட்டும் நண்பர்களோடு மகிழ்ச்சிக்காக குடிப்பவர்கள். இவர்கள் மதுவிற்கு செலவு செய்வதை விட சாப்பாட்டிற்கு செலவு செய்பவர்கள். மீதமிருக்கும் 30% ஆண்கள் தினமும் தன்னுடைய வருமானத்தில் பாதிக்குமேல் மதுவிற்காக செலவு செய்துவிட்டு சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் போதையை மட்டும் விரும்புபவர்கள். தினமும் குடிக்கும் பழக்கமுள்ளவர்களில் அதிகமானவர்கள் அன்றாடம் வருமானம் உள்ளவர்கள், கூலித் தொழிலாளர்களும், சிறிய தொழில் செய்பவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆக, குடிநோய்க்கு அதிகம் ஆட்படுபவர்கள் ஏழைகளாக இருக்கின்றார்கள்.

அரசு வருமானத்தை என்ன செய்கிறது?

தமிழ்நாடு அரசு பதில் என்ன சொல்கிறது என்றால் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள ஏழை மக்களின் நலத்திட்ட பணிகளுக்காக என்று கூறி பல்வேறு அரசியல் உள்நோக்கங்கள் உள்ள இலவசத் திட்டங்களுக்காக செலவு செய்கிறது. ஏறக்குறைய இலவச திட்டங்களுக்காக அரசு செலவு செய்யும் தொகை ஆண்டிற்கு ரூ.5000 கோடியைத் தாண்டவில்லை. ஆனால், அரசின் மதுவிற்பனை மூலம் வரவு ரூ.16000 கோடியைத் தாண்டிவிட்டது.

நலத்திட்டங்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்கள் அதாவது பெண்கள், விதவைகள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வேலையில்லா பட்டதாரிகள் போன்ற ஏழைகளுக்கு என்கிறது அரசு. இவர்களின் உற்பத்தித்திறன் வாய்ப்பை உருவாக்கி வரும் வருமானத்தை பெருக்குவதற்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் எங்கே?

ஒரு பிரச்சனைக்குரிய குடிநோயாளி தினமும் ரூ.150 அதாவது தன்னுடைய குடிக்கு செலவு செய்வானே ஆனால், ஒரு மாதத்திற்கு ரூ.4500 மதுவிற்கு மட்டும் செலவு செய்கின்றார். ஆனால் இந்தக் குடும்பத்திற்கு பல்வேறு அரசு நலத்திட்டங்கள் அல்லது இலவசத்திட்டங்ள் என்ற பெயரில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.5000த்திற்கு மேல் திட்டங்களாகக் கிடைக்க வாய்ப்பில்லை. ஆக, இந்தக் குடும்பத்தில் உள்ள குடிநோயாளி செலவு செய்கின்ற தொகை, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகமாகும்போது குடும்ப வருமானம் முழுவதும் மதுக்கடைகள் வழியாக அரசிற்கே போய்ச் சேருகிற நிலை ஏற்படுகின்றது. மேலும், தன்னுடைய சிறிய சொத்துக்களையும், உடைமைகளையும் இழந்து மேலும் ஏழையாவதை விட வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகின்றது. மதுவை ஒழிக்காத வரையில் ஏழ்மையை ஒழிக்க முடியாது என்பது உறுதியாகிறது.

மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச் சாராயம் பெருகிவிடும், அரசுக்கு வருவாய் இழப்பாகிவிடும் என்று அரசு தரப்பில் சொல்லப்படுவதில் நியாயம் இருக்கிறதா?

இவை பொறுப்பற்றவர்களது வாதம். மக்கள் நலனுக்கான அரசு இப்படிச் சொல்லக்கூடாது. மக்கள் நலனுக்கான தீயவற்றைத் தடுப்பதுதான் அரசின் கடமை. மது வீட்டிற்கும், நாட்டிற்கும், உயிருக்கும் கேடு – என மதுக்கடைகளில் எழுதி வைத்து கடை நடத்துவது சமூகத்துரோகம் அல்லவா? அரசு வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு கெட்ட செயலை செய்யக் கூடாது. தமிழ்நாட்டில் லாட்டரியை அரசு நடத்தி வருமானம் பெற்றது. லாட்டரியால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் சாமான்ய மக்களே. அதனால் லாட்டரி நடத்துவதை அரசு தடை செய்தது. இது சமூக நலனுக்கான செயலல்லவா? ஆனால், அதே அரசு மதுக்கடையை நடத்தி பல ஆயிரக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கலாமா? மக்கள் துணையோடு கள்ளச் சாராயத்தை அரசு தடுக்க முடியும். வீண் செலவுகளைக் கைவிட்டால் மதுக்கடை வருமானம் தேவையற்றதாகிவிடும்.

நன்றி:

பொ.இரத்தினம், அமைப்பாளர்,
மது ஒழிப்பு மக்கள் படை, 540-K.K நகர், மதுரை-20

மது அருந்தி மதி மயங்கி வீதியில் கிடப்பது சரியா? மகிழ்ச்சி, துக்கம் போன்ற சமயங்களில் மதுவருந்துவது சரியாகாது. மேலும், அந்தப் பணத்தை ஏதேனும் நற்செயல்களில் பயன்படுத்தி மனநிறைவு கொள்ளுங்கள். மதுவின் கேடு குறித்து பலர் கூறும் போதும் அதை திடீரென நிறுத்த முடியாவிட்டாலும் அதை கொஞ்சங்கொஞ்சமாக நிறுத்த முயற்சி செய்யுங்கள். மேலும், பீர் குடிச்சா உடம்புக்கு நல்லது என அள்ளிவிடுபவர்கள் கீழ் உள்ள இணைப்பிற்கு சென்று வாசியுங்கள். http://suryajeeva.blogspot.com/p/blog-page_2027.html
நன்றி – சூர்யஜீவா.

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற மதுக்கடைகளை மூடாமல் மதுரையில் இரவுநேர இட்லிக்கடைகளை அடைத்து தூங்காநகரத்தை தூங்க வைக்க முயலும் காவல்துறையை நினைத்தால் சிரிப்பாக உள்ளது. தீபாவளி, புத்தாண்டு போன்ற நல்ல நாட்களுக்குக்கூட மதுவருந்தி மதி மயங்கி உண்மையான கொண்டாட்டத்தை இழக்கும் நண்பர்கள் மதுவருந்துவதைத் தவிருங்கள் என்ற கோரிக்கையோடு இப்பதிவை முடிக்கிறேன். உண்மையான மகிழ்ச்சி என்பது மனநிலையில் இருக்கிறது, மதுவில் இல்லை.

பின்னூட்டங்கள்
 1. suryajeeva சொல்கிறார்:

  பகிர்வுக்கு நன்றி… இது குறித்து விழிப்புணர்வு அவசியமாகிறது… சின்ன சின்ன சிறுவர்கள் கூட தமிழகத்தில் மது கடைகளில் மது வாங்க முடிகிறது என்பதால், ஆபத்து அதிகமாகிறது… நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்று விட்டு விட நம்மை போன்ற பதிவர்களால் முடியாது என்பதால் கதறுகிறோம்..

 2. ramani சொல்கிறார்:

  அருமையான அனைவரும் அவசியம்
  படித்துத் தெளிய வேண்டிய பதிவு
  பதிவுக்கு நன்றி
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த தீபாவளித் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

 3. maduraivaasagan சொல்கிறார்:

  மது அருந்துவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருக்கலாம். ஆனால், ஆயிரம் காரணம் சொன்னாலும் அது தவறுதான். நம் குடும்பத்தை, சுற்றத்தை எப்படியும் அது பாதிக்கும். அரசு லாட்டரிக்கு தடை கொண்டு வந்தது போல மதுவிலக்கும் கொண்டு வர வேண்டும். சூர்யஜீவா அவர்களுக்கும், ரமணி அவர்களுக்கும் மிகுந்த நன்றி.

 4. தொப்புளான் சொல்கிறார்:

  வாகனங்கள் பங்க்குகளில் பெட்ரோல் / டீசலையும் மட்டுமல்லாது, பார்களில் மதுவையும் நிரப்பிக்கொண்டே ஓடுகின்றன. பயணங்களை தவிர்க்க இயலாத தண்டனைகளாகக் கருதும் தமிழ் இளைஞன் இருக்கையில் அமர்ந்ததுமுதல் இலக்கு சேரும்வரை மட்டையாகிக் கிடப்பதையே விரும்புகிறான்.

  காற்றில் சொத்தைக் கரும்பின் வாடையை ஒத்த நெடி மற்ற நாற்றங்களோடு விரவி இருக்கிறது.

  கண்ணியம் கால்பிளந்து கால்வாய் ஓரம் கவிழ்ந்தடித்துக்கிடக்கிறது. உண்மையில் உடல்நலக் குறைவால் நினைவிழந்து கிடப்பவர்களையும் போதையில் புரள்பவர்களாய்க் கருதி கடந்துசெல்கிறோம்.

  குடிபோதையில் 50 பைசா சில்லரைக்காக பெட்டிக்கடைக்காரர் கொலைசெய்யப்பட்டதைப் படிக்கிறோம். வாய்ச்சண்டையாகவும், மீறிப்போனால் கைகலப்பாகவும் முடிந்திருக்கக்கூடியவை வாழ்க்கையைத் தொலைப்பதில் முடிவதைக் கண்ணுறுகிறோம்.

  ஏன் குடிக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியுமே தவிர, குடிப்பதை நியாயப்படுத்தமுடியாது.

  என்றாலும், குடிநோயாளிகள் திருந்தவேண்டியவர்கள் என்பதைவிட சிகிச்சைபெறவேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். அரசே திருந்தவும், திருத்தப்படவும் வேண்டியிருக்கிறது.

 5. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  அருமையான பதிவு ஒரு தலைமுறைக்கு முன் மதுவைப் பற்றி தெரியாதவர்களே
  அதிகம்.ஒளிந்து மறைந்து பயத்தோடு எங்கோபோய் வாங்கிக் குடிப்பார்கள்.
  தற்போதைய நிலை? வருவாய்க்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
  இளையதலைமுறை தானாக உணர்ந்து திருந்தினால்தான் உண்டு.அதற்கு
  உங்கள் பதிவு பெரிதும் உதவும்..காலத்திற்கேற்ற பதிவு.

 6. chitrasuraj@gmail.com சொல்கிறார்:

  உங்கள் பின்னுட்டத்தை பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் . நேரம் இருந்தால் பார்க்கவும்
  http://manasaali.blogspot.com/2011/11/03.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s