பசுமைநடை நட்சத்திரங்கள்

Posted: நவம்பர் 22, 2011 in பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

‘தேடுங்கள் கண்டடைவீர்கள்’ என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. இது முக்காலும் உண்மை. என் வாழ்வில் நிதர்சனமாகப் பல சந்தர்ப்பங்களில் கண்டுணர்ந்த ஒரு பேருண்மை இது. நம்முடைய விருப்பம் ஆத்மார்த்தமானதாக இருந்தால், அது அப்படியே நிறைவேறத்தான் செய்கிறது. யாரோ நம் கையைப் பிடித்து அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுவது போல்,  நம் விருப்பம் நிறைவேறுகிறது.

 – வண்ணநிலவன்

மதுரையில் சமணம் குறித்து வாசித்தறிந்து அவற்றைக் காண வேண்டுமென்ற ஆவல் மனதில் உதித்தது. சமணமலை, யானைமலை, கழுகுமலை, திருப்பரங்குன்றம் என சில இடங்களுக்கு சகோதரர்களுடனும், நண்பர்களுடனும் சென்றிருக்கிறேன். வண்ணநிலவன் சொல்வது போல நம்முடைய விருப்பம் ஆத்மார்த்தமானதாக இருந்தால் கட்டாயம் அது நடக்கும். அப்படித்தான் சமணர்படுகைகளுக்கு எல்லாம் தொடர்ச்சியாக செல்ல பசுமைநடை எனும் குழு அமைந்தது.

அ.முத்துகிருஷ்ணன்

யானைமலையின் உயரமும், நீளமும் கண்டு நாவூறிய ஒரு கூட்டம் தன் ‘கலைப்பார்வையை’ விவரிக்க விழித்துக்கொண்டனர் அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும். எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் உயிர்மையில் யானைமலை  குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுதினார். அச்சமயம் நடந்த மதுரை புத்தகத்திருவிழாவில் முத்துகிருஷ்ணனை சந்தித்த நண்பர்கள் யானைமலையை போய் காண விரும்பி கேட்க, அவர்களெல்லாம் சேர்ந்து பசுமைநடைப்பயணமாக யானைமலை சென்றுள்ளனர். அந்த நடை குறித்து உயிர்மை மாத இதழில் வந்தது. நானும் முத்துகிருஷ்ணன் அவர்களைத் தொடர்பு கொண்டு பசுமைநடை குழுவில் இணைந்தேன். இரண்டாவது நடையாக கீழ்குயில்குடி சமணமலைக்கு சென்றோம். மிக அற்புதமான பயணம். அதற்கடுத்து அ.முத்துகிருஷ்ணன் பாலஸ்தீனப்   பயணம் செல்ல பசுமைநடை கொஞ்ச நாட்கள் விட்டுப்போனது.

அரிட்டாபட்டியில் கிரானைட் மாஃபியாக்கள் தலையெடுக்க மீண்டும் எங்கள் பசுமைநடை தொடங்கியது. அரிட்டாபட்டி சென்றோம். மிக முக்கியமானதொரு பயணம். அந்த ஊர் மக்கள் மலை மீது கொண்டுள்ள அன்பு விலைமதிப்பற்றது. அதற்கு பிறகு மாதம் ஒரு ஞாயிறன்று பசுமைநடைப் பயணமாக மதுரையில் உள்ள வரலாற்றுச்சின்னங்களை பார்த்து வருகிறோம். கொங்கர் புளியங்குளம் குன்று, மாங்குளம் மீனாட்சிபுரம் மலை, வரிச்சூர் குன்னத்தூர் மலை, திருப்பரங்குன்ற மலை என எங்கள் பயணம் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

முத்துக்கிருஷ்ணனை நான் முதலில் பார்த்தது உயிர்மை புத்தகவெளியீட்டு விழாவில்தான். அதன்பிறகு புத்தகத்திருவிழாவில் எஸ்.ரா தேர்ந்தெடுத்த சிறந்த நூறு புத்தகங்கள், நூறு நாவல்கள் கையடக்கப் பிரதியை கொடுத்துக்கொண்டிருந்தபோது முத்துக்கிருஷ்ணனை சந்தித்தேன். அ.முத்துகிருஷ்ணனின் ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’ கட்டுரைத்தொகுப்பு வாசித்து பல நாட்கள் தூங்காமல் தவித்திருக்கிறேன். இவ்வளவு சாதி, மத வெறி கொண்ட மனிதர்களோடுதானா நாம் வாழ்ந்து வருகிறோம் என்ற எண்ணம்தான். அவர் “நான் முத்துகிருஷ்ணனானது எப்படி?” என்று ஆனந்த விகடனில் பகிர்ந்து கொண்டதை வாசியுங்கள்.

‘பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை’த் தமிழ் மொழிக்கு கொண்டுவரும் நவீன எழுத்துலகில் அ.முத்துக்கிருஷ்ணன் குறிப்பிடத்தகுந்தவர். ‘குஜராத் – இனப்படுகொலை ஆவணம்’ இவரது முக்கியப் பங்களிப்பு. ‘ஒளிராத இந்தியா’, ‘மலத்தில் தோய்ந்த மானுடம்’ மற்றும் பல்வேறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளை எழுதியிருக்கும் முத்துகிருஷ்ணனுக்கு, கல்லூரி படிப்பு முடியும் வரை தமிழ் எழுதப்படிக்க தெரியாது.

“அப்பாவின் தொழில் காரணமாக, நான் பிறந்த உடனேயே மதுரையில் இருந்து வட இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தோம். கோவா, ஹைதராபாத் எனப் பல ஊர்களைச் சுற்றிவிட்டு, நவிமும்பையில் குடியேறினோம். பள்ளிப்படிப்பு முழுக்க அங்குதான். சுமார் 200 தமிழ்க் குடும்பங்கள் இருந்தன என்றாலும் கூட, இந்திதான் பிரதானம். வீட்டைவிட்டு வெளியே வந்தால் எல்லோரும் இந்திதான் பேசுவார்கள். நான் படித்த பள்ளிக்கூடத்தில் இந்தியாவின் அத்தனை மாநிலங்களில் இருந்தும் மாணவர்களும் ஆசிரியர்களும் உண்டு. இதனால், இயல்பாகவே மொழி மீது எனக்கு ஈர்ப்பு வந்தது.  என் அப்பாதான் நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் செயலாளராக இருந்தார். அதை ஒட்டி பொங்கல் விழா, ஆண்டு விழா, சினிமா திரையிடுதல் என ஏதோ ஒரு விழா ஏற்பாடுகள் நடக்கும். இதில் நானும் பங்கேற்பேன்.

அப்பாவின் தொழில் சார்ந்து ஏற்பட்ட பின்னடைவுகளால் எனது 13-வது வயதில் நாங்கள் மீண்டும் எங்கள் சொந்த ஊரான மதுரை, மங்கல்ரேவு நோக்கி வந்தோம். எங்கள் கல்வித்தேவைகளுக்காக அருகில் இருந்த மதுரையில் வசித்தோம். அப்போது வரை எனக்கு தமிழ் மொழி பேச மட்டுமே தெரியும். அதுவும் வட்டார வழக்கு அறியாத ஒருவிதத் தட்டையான மொழி மட்டுமே பேசத் தெரியும். இதனால், மதுரையுடன் ஒட்டவே முடியவில்லை. ஒரு சுற்றுலாப் பயணியின் மனநிலையில்தான் பல வருடங்கள் இருந்தேன். சினிமா போஸ்டர், பேருந்து செல்லும் இடம் என எதையும் வாசிக்கத் தெரியாது. இந்தியை இரண்டாவது மொழிப் பாடமாக எடுத்து மெட்ரிக்குலேஷனை ஒரு வழியாக முடித்தேன். அதன் பின் எலெக்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன் டிப்ளமோ.

அப்போது வீட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி. ஏறக்குறைய உறவினர்கள் அனைவருமே கைவிட்ட நிலையில் மதுரையில் நான் ஓர் அகதிபோல உணர்ந்தேன். நான் விரும்பிப் படித்த அறிவியல் கல்வியைத் தொடர இயலவில்லை. பெரும் மன உளைச்சலில் குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்காகக் குட்டிக் குட்டியாக பல்வேறு வேலைகள் பார்த்தேன். அதன் தொடர்ச்சியாகச் சில காலம் ரயில்வேயில் கான்ட்ராக்ட் எடுத்து சிக்னலிங் பணிகளை மேற்கொண்டேன். அது என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை. இந்தியாவின் பல உள்ளடங்கிய கிராமங்களுக்கும் பயணித்து, அங்கேயே தங்கி வேலை பார்த்ததில் இந்தியக் கிராமங்களின் உண்மை நிலை முகத்தில் அறைந்தது. ராமநாதபுரம் பக்கத்துக் கிராமத்துக்கும், மத்தியப்பிரதேசக் கிராமத்துக்கும் நிலத்தைத் தவிர, எந்த வேறுபாடும் இல்லை. பொருளாதாரம், சாதி எல்லாம் அப்படியே இருந்தன. இதைப் பற்றி நண்பர்களிடம் விவாதித்தபோது ‘இதை எழுது’ என்றார்கள். மொழியே தெரியாதபோது எப்படி எழுதுவது? என் அம்மா தனது 35 வயதுக்குப் பிறகு, தன் சொந்த அனுபவத்தில் தையல் கற்றுக்கொண்டு அதை ஒரு தொழிலாகச் செய்தார். எதையும் கற்க வயது ஒரு தடை இல்லை என்பதை அம்மாவிடம்தான் கற்றுக்கொண்டேன். அம்மாவின் உதவியோடு மெள்ள தமிழ் கற்றேன். சினிமா போஸ்டர், பத்திரிகைகளின் தலைப்பு வரிகள் எனப் படிக்க ஆரம்பித்தபோது மேலும் மேலும் ஆர்வம் வந்தது. பாம்பு சட்டையை உரிப்பதுபோல அந்நிய மனநிலை உருமாற்றம் அடைந்து, நான் இந்த ஊரின் ஆளாக என்னை உணரத் தொடங்கினேன்.

பொதுவாகவே, நம் சொந்தக் கிராமங்களில் இருந்து எவ்வளவு விலகிச் செல்கிறோமோ, அந்த அளவுக்குச் சாதிய உணர்வு குறைகிறது. ஆனால், பலருக்கு இன்றும் சொந்த ஊருடனான உறவு என்பது சாதியை அடிப்படையாக வைத்தே இயங்குகிறது. தமிழ்நாட்டில் கால் பதித்த பின்தான் என் சாதி எது என்றே எனக்குத் தெரியும். இதன் பொருள், மற்ற மாநிலங்களில் சாதி இல்லை என்பதல்ல; ஒப்பீட்டளவில் தமிழ் நாட்டைக் காட்டிலும்  வட மாநிலங்களில்தான் சாதி வெறி அதிகம். ஆனால், நான் வசித்த நவிமும்பையின் வாழ்க்கை சாதியைக் கடந்ததாக இருந்தது. ஆனால், இங்கு சிறுவர்கள்கூட வயதில் மூத்த, முதிர்ந்த தலித்துகளைப் பெயர் சொல்லி அழைப்பதைப் பார்த்து அதிர்ந்து போனேன். கோபமும் முரண்பாடுமாக இதுபற்றி என் அம்மாவுடன் விவாதம் செய்து விடை காண முயல்வேன். ரெட்டை டம்ளர், தனி சுடுகாடு, செருப்பு அணியத்தடை, குடி தண்ணீர் எடுக்கத் தடை, மலம் அள்ளுதல் என சாதியக் கொடூரங்களின் மொத்த பரிணாமங்களும் அறிந்தபோது, இதற்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. பாபர் மசூதி கலவரங்களும் வேறு திசையில் பெரும் அச்சுறுத்தல் வளர்ந்து வருவதை உணர்த்தியது. மறுபுறம் விவசாயிகளின் தற்கொலை என்பது அன்றாடச் செய்தியானது. இந்தச் சூழலில் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம், சொந்த வீடு, கார் என ஊர் உலகமே கச்சிதமாகச் செய்வதை நான் வெறுத்தேன். எல்லோரும் தங்களைப்பற்றியே சிந்திக்கும் இந்த பாணி வாழ்க்கைகூட ஒரு சதியே.

நானும் என் நண்பர்களும் தினமும் மதுரையில் சந்தித்துப் பேசினோம். அவர்கள் என்னை எழுதச் சொன்னார்கள். முதலில் சில மொழி பெயர்ப்பு முயற்சிகளில் ஈடுபட்டேன். பின்னர், கட்டுரைகள் எழுதும் நம்பிக்கை ஏற்பட்டது. அப்புறம் வரிசையாகப் பல்வேறு சிற்றிதழ்களிலும் எழுதத் தொடங்கினேன். என் எழுத்து இந்த சமூகத்தின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சப்படுத்துவதாகவே அமைந்திருக்கிறது. வானத்துக்குக் கீழே இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் தமிழ் நிலத்துக்குக் கொண்டுவந்து சேர்ப்பதும், இந்த பூமியை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்துவதுமே எனது வாழ்நாள் பணியாக இருக்கும்!

(நன்றி – பாரதிதம்பி, ஆனந்தவிகடன். 14.7.10)

சாந்தலிங்கம் அய்யா

கீழ்குயில்குடி சமணமலையில் பசுமைநடையின் போது தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சமணம் குறித்து பல அரிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார். அவரது எளிமையான குணம் என்னை மிகவும் ஈர்த்தது. தொன்மையான கல்வெட்டுகள், வட்டெழுத்துகள், சமணம் பற்றியெல்லாம் எங்களுடன் பகிர்ந்து கொள்வார். வகுப்பறையில் முன்வரிசையில் அமரவிரும்பும் மாணவன் போல ஒவ்வொரு நடையின் போதும் அவருடன் சேர்ந்து நடக்கவே நானும், சகோதரர்களும், நண்பர்களும் விரும்பினோம். அரிட்டாபட்டி பயணத்தின் போது நரந்தம்புல்லை சுட்டிக்காட்டினார். அதன் மணம் எலுமிச்சையின் மணம் போலிருக்கும். அந்த புல்லிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கப்படுவதாகக் கூறினார். மேலும், திருவள்ளுவர், இளங்கோவடிகள் எல்லாம் சமண சமயத்தை சேர்ந்தவர்கள் என்பதையும் எங்களுக்கு கூறினார். ஒவ்வொரு கல்வெட்டையும் வாசித்து அதன் பொருள் மற்றும் எந்தக் காலத்தை சேர்ந்தது என்பதை எங்கள் குழுவினருடன் பகிர்ந்து கொள்வார். அரிட்டாபட்டி மற்றும் மாங்குளத்தில் அவர்கள் அகழ்வாய்வு செய்த காலங்களை எல்லாம் எங்களோடு பகிர்ந்து கொண்டார். இந்த வருட புத்தகத்திருவிழாவில் ‘தொல்லியல் நோக்கில் மதுரை’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரைக்குறித்து இந்து நாளிதழில் வந்த கட்டுரையை தன் பணிச்சுமைகளுக்கிடையிலும் எனக்காக தமிழில் மொழிபெயர்த்து தந்த சகோதரர் தமிழ்ச்செல்வத்திற்கு நன்றிகள் பல.  ‘நம்ம மதுரை’ இந்து நாளிதழ் ஆசிரியர்குழுவிற்கும் நன்றி.  

கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்ளுதல்

சிலர் வரலாற்றை உருவாக்குகிறார்கள். சிலரோ வரலாற்றுக்காகவே உருவாகிறார்கள் – சொ.சாந்தலிங்கம் அத்தகையவர்களில் ஒருவர். எஸ்.எஸ்.கவிதா அவரைச் சந்திக்கிறார். 

ஓய்வுபெற்ற தொல்லியல் அலுவலர் சொ.சாந்தலிங்கம் அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள், அரசர்கள், அரசுகள் குறித்த தகவல்களின் நடமாடும் பெட்டகமாகத் திகழ்பவர். இத்தகைய தகவல்களுக்காக மாணவர்களாலும், அறிஞர்களாலும் ஒருசேர நாடப்படுபவர். ‘நம்ம மதுரை’ பத்திக்காக, மதுரையைச் சுற்றியுள்ள பாரம்பரியத் தளங்களை இனங்காண்பதற்கு அவரது உதவியை நாடுவதில் நானும் விதிவிலக்கல்ல. 

பாரம்பரியச் சின்னங்களையும், சுவரோவியங்களையும் குறித்துப் பேசுகையில் அவரது கண்கள் தீராக்காதலில் மின்னுகின்றன. கூர்நோக்குள்ள இந்த அறிஞர், தொலைதூரக் கிராமங்களிலிருந்தும் மறைந்துள்ள வரலாற்றைக் கண்டெடுக்கிறார். ஒளிபொருந்திய புன்னகையோடு, ஒரே பார்வையில் அதன் காலத்தையும், முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறார். பழங்காலச் சின்னங்களின் தொன்மையையும், தனிச்சிறப்பையும் வியந்து பாராட்டுகிறார். கிடைக்கும் மிக மெல்லிய சான்றினைக் கொண்டும் ஒரு முழுச் சித்திரத்தை அவரால் வழங்கிவிட முடிகிறது. 

“ஒவ்வொன்றிலும் ஒரு ஒழுங்கமைப்பு இருக்கிறது. தொலைந்துபோன துண்டுகளுக்குப் பதிலீடு செய்து, நாம் அவற்றிற்கு உருவம் கொடுக்கிறோம்.” என்கிறார் சொ.சாந்தலிங்கம். 

“பாண்டியநாட்டு வரலாற்றுப் பேரவை”யின் செயலராக, முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கு உதவிவருகிறார். ராஜபாளையத்திற்கு அருகிலுள்ள மாங்குளம், ராமநாதபுரத்துக்கு அருகில் உள்ள அழகங்குளம் ஆகிய ஊர்களில் ரோமானிய நாணயங்களைக் கண்டறிவதில் தொடங்கி, தர்மபுரி மாவட்ட வரலாறு உள்ளிட்ட அரைடஜன் நூல்களைப் பதிப்பிப்பதுவரை அவர் கடந்து வந்துள்ள பாதை நெடியது.

கமுதி அருகிலுள்ள நீராவியில், கைத்தறி நெசவாளரும், விவசாயியுமான தந்தைக்குப் பிறந்த இந்த விலங்கியல் பட்டதாரி, முதுகலையில் தமிழிலக்கியத்திற்குத் தாவினார்.  பின்னாட்களில் மண்மூடிய கல்வெட்டுக்களைத் துப்புரவாக்கி அவற்றுக்குப் பொருள்கூறுவோம் என சென்னையில் தங்கி போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகிவந்த நாட்களில் இவர் அறிந்திருக்கவில்லை. 

இவர் சென்னையில் இருந்தபோது, தமிழக அரசின் தொல்லியல் துறை நடத்திய கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப் படிப்பில் சேரும்படி பேராசிரியர் நா.வானமாமலை அறிவுறுத்தினார். “அவர் சொன்னபடி செய்தேன். இதுதான் எனக்கான துறை என்று பின்னர் உணர்ந்தேன்.” என்று நினைவுகூர்கிறார். 

இவருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் ‘மக்களின் தொல்லியலாளர்’ என்று பரவலாக அறியப்பட்ட முனைவர் நாகசாமி அவர்கள். அவரது அடிச்சுவட்டை இவர் நெருக்கமாகப் பின்பற்றியது கடந்தகாலத்திலிருந்து கற்றுக்கொள்வதில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள இவருக்கு உதவியது. “துறைசார்ந்த அறிவுடன் கூடவே காலந்தவறாமையையும் முனைவர் நாகசாமியிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்கிறார். 

சிந்துசமவெளி எழுத்துருக்களை ஆய்ந்த தலைசிறந்த கல்வெட்டியல் அறிஞரான ஐராவதம் மகாதேவனுடன் கொண்ட தொடர்பு இவரது எல்லைகளை விரிவுபடுத்தியது. 

இத்துறையில் இவர்கொண்ட ஆர்வம் பன்மடங்கு வளர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ‘குடுமியான் மலை’ பற்றிய இவரது முதல் நூலை எழுதவைத்தது. இந்த நூல் படிப்பில் முதல் இடத்தைப் பெற்றுத்தந்ததோடு 1977ல் டி.என்.ராமச்சந்திரன் விருதையும் ஈட்டித்தந்தது. 

குடுமியான் மலை பற்றி ஒரு தொல்லியலாளர் எண்ணும்போது நினைவுக்கு வருவது இசைக் கல்வெட்டே. கிரந்த எழுத்துருக்களைக் கொண்டு வடமொழியில் எழுதப்பட்ட தனிச்சிறப்பான இந்தக் கல்வெட்டு ஏழு சுரங்களையும், 3000க்கும் மேற்பட்ட ராகங்களையும் கொண்ட பழமையான இசை மரபைப் பற்றியது. 

தனது நூலில், சாந்தலிங்கம் அவர்கள் குடுமிநாதர் கோயில், மூலநாதர் பெருமான் அடிகள் கோயில், திருநாலக்குன்றமுடைய கோயில், அகிலாண்டேஸ்வரி கோயில், சௌந்தரநாயகி கோயில் மற்றும் முருகன் கோயில் ஆகிய கோயில்களில் உள்ள 120 கல்வெட்டுக்களில் இருந்து விவரங்கள் சேகரித்துள்ளார். அதே பகுதியில் உள்ள சமணப் படுக்கையில் தமிழ் பிராமி கல்வெட்டு ஒன்றையும் கண்டறிந்துள்ளார். 

சாந்தலிங்கம் அவர்கள் புதுச்சேரி பிரஞ்சு ஆய்வுநிறுவன இந்தியவியல் துறையில் தற்போது தலைவராய் உள்ள முனைவர் ஒய்.சுப்பராயலு அவர்களின் துணைகொண்டு ஆய்வுமுறைகளில் தமது அறிவை வளர்த்துக்கொண்டார். 

பின்னர், “கல்வெட்டுக்களில் இருந்து பெறப்படும் சடங்குகளும், நம்பிக்கைகளும்” என்ற தலைப்பில் மெய்ம்மையியல் முதுவர் பட்டத்தையும், “தொண்டைமண்டலத்தின் வரலாற்று நிலப்பரப்பியல்” என்ற தலைப்பில் முனைவர் பட்டத்தையும் முடித்தார். 

தர்மபுரி மாவட்டத்தில் முதல் பணிநியமனம் பெற்ற கையோடு தனது தேடல்களையும், அகழ்வுகளையும் தொடங்கினார். “நட, தேடு என்பதே ஒவ்வொரு தொல்லியலாளனின் தாரக மந்திரம்” என்று கூறும் இவர், அவரும் அவரைப் போன்றவர்களும் அகழ்வாய்வு நடக்கும் இடங்களில் தகுந்த உறைவிடம் இன்றிக்கூட  பல நாட்கள் செலவிடவேண்டி வருவதைப் பொருட்படுத்துவதில்லை என்கிறார். தொலைவிடங்களில் கடினமான நிலப்பரப்புகளையும், காட்டு விலங்குகளையும் கூட எதிர்கொள்ள நேரிடும் என்கிறார். 

தர்மபுரியில் பணிபுரிந்த காலத்தில் அவர் எழுதிய ‘வரலாற்றில் தகடூர்’ என்னும் நூல் 1990ல், ஆண்டின் சிறந்த வரலாற்று நூலுக்கான மாநில அரசின் விருதைப் பெற்றுத்தந்தது. பனைக்குளம் உள்ளிட்ட பன்னிரண்டு இடங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் பங்கெடுத்தார். அதுபோன்றே, கம்பம் பள்ளத்தாக்கு, நத்தம்பட்டி, சங்கன்திரடு கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அகஸ்டஸ், சீசர் கால நாணயங்களை அடையாளங்கண்டார். குடுமியான்மலை, திருமலை, அரிட்டாபட்டி ஆகிய இடங்களில் உள்ள மூன்று பிராமி கல்வெட்டுக்களை இனங்கண்ட பெருமையும் இவரையே சாரும். தமிழ்நாட்டில் 94 பிராமி கல்வெட்டுக்கள் இருப்பதாகவும், அவற்றுள் 60 மதுரையைச் சுற்றியே இருப்பதாகவும் கூறும் இவர், முன்னோர்களின் பண்பாடு சார்ந்த, மரபு சார்ந்த பழக்க வழக்கங்களைப் புரிந்துகொள்வது பெருமிதம் அளிப்பதாகக் கூறுகிறார். 

எந்த ஒரு தொல்லியலாளரையும் போலவே, தனது வேர்களைக் கண்டடைவதை விரும்புகிறார். நீராவியில், ராஜராஜ சோழனின் 11ம் நூற்றாண்டு தங்கநாணயத்தையும், ஒரு பத்தாம் நூற்றாண்டு நடுகல்லையும், சோழன்தலைகொண்ட வீரபாண்டியன் கால (கி.பி. 944 – 946) வட்டெழுத்து தூண் கல்வெட்டு ஒன்றையும், கல்வெட்டு பொறிக்கப்பட்ட நந்தி சிலை ஒன்றையும் அடையாளம் கண்டுள்ளார். தனது ஆய்வுமுடிவுகளை பல்வேறு இதழ்களிலும் வெளியிட்டுள்ளார். 

“நமக்கு நெடிய வரலாற்றுச்சான்றுகள் இருந்தபோதும், புறக்கணிப்பு காரணமாகவும், யோசனையின்றிச் சிதைத்ததன் காரணமாகவும் எண்ணற்றவற்றை இழந்துவிட்டோம். அனேக சின்னங்களும், வளமான பாரம்பரியமும் நமக்கு இருப்பதன் காரணமாகவோ என்னவோ நாம் அவற்றைப் பொருட்படுத்தாதுவிட்டு நமது வரலாற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இளைஞர்களிடம் உணர்த்தவில்லை. இளையோரைக் குறைசொல்லக் கூடாது. பெரியவர்களாகிய நாம்தான் நமது பண்பாட்டின் தொன்மையை எடுத்தியம்பும் பழங்காலச் சின்னங்களைப் பாதுகாப்பதன் இன்றியமையாமையை இளையோரிடம் விதைக்கத்  தவறிவிட்டோம்” என்கிறார். 

இவ்வாறு கருதித்தான், ஓய்வுபெற்ற தொல்லியலாளர்களும், ஆர்வலர்களும் இவரோடு சேர்ந்து வரலாற்று உண்மைகள் குறித்த முறையான அணுகுமுறையை வளர்த்தெடுக்கும் நோக்கத்தோடு “பாண்டிய நாட்டு வரலாற்றுப் பேரவை”யை ஏற்படுத்தியுள்ளனர். வரலாறு குறித்த ஆர்வம் உடையவர்களுக்கு, வாழும் நாகரிகங்களுள் மிகப் பழமையானதான நாகரிகத்தின் நிலமான பாண்டியநாட்டில் கொட்டிக்கிடப்பவை ஏராளம். 

சாந்தலிங்கம் அவர்கள், மதுரையை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பு பண்டைய பாண்டியநாட்டுப் பகுதியான மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களில் வசிக்கும் ஆர்வலர்களுக்குப் பயனளிக்கும் என்கிறார். ஒரு முழுமையான குறிப்புதவி நூலகத்தை ஏற்படுத்துவதோடு இந்தப் பேரவை ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவது, கல்வெட்டுக்கள் குறித்த பயிற்சிப் படிப்புகள் நடத்துவது, கருத்தரங்குகளும், பயிற்சிப் பட்டறைகளும் நடத்துவது ஆகிய பணிகளை மேற்கொள்ளும். 

இவையன்றி, சாந்தலிங்கம் அவர்கள் மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பசுமை நடை சென்றுவரும் குழுவினரிடையே உரையாற்றியும் வருகிறார்.

 பசுமைநடையை ஒவ்வொரு முறையும் சிறப்பாக நடத்தும் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனுக்கு மிகவும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எங்களுடன்  பசுமைநடைக்கு வந்து தொல்லியல் குறித்து பல அரிய தகவல்களை கூறி வரும் சாந்தலிங்கம் அய்யா அவர்களுக்கும் நன்றி. அடுத்து எங்களுடன் பசுமைநடை வரும் பேராசிரியர்கள் சுந்தர்காளி, பெரியசாமிராஜா,  தர்மராஜன் அவர்களுக்கும் நன்றி. மற்றும் எங்கள் பசுமைநடைக் குழுவிலுள்ள எழுத்தாளர்கள், ஓவியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல துறைகளை சார்ந்தவர்களுக்கும் நன்றி. பசுமைநடை பயணம் குறித்த தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கும் நன்றி.

பின்னூட்டங்கள்
 1. தனபாலன் சொல்கிறார்:

  வணக்கம் நண்பரே! நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

 2. suryajeeva சொல்கிறார்:

  பசுமைநடை பயணம் குறித்த தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கும் நன்றி.

  உங்களுக்கும் நன்றி… நீங்களும் ஊடகம் தான் தோழரே

 3. தொப்புளான் சொல்கிறார்:

  உண்டா லம்ம இவ்வுலகம் என்று மறுபடி சொல்லவைக்கிறது.

  உங்கள் பாணியிலேயே சொல்வதானால், முத்துகிருஷ்ணனை ஒரு காஸ்மொபாலிட்டன் அறிவுஜீவியாகிவிடாமல் தடுத்த மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி. பாலஸ்தீன விடுதலை, சோமாலியக் கடற்பரப்பில் அணுக்கழிவுகள் என்று அவரது அக்கறைகள் உலகளாவியதாக இருந்தாலும் பாதங்கள் வலுவாக நமது மண்ணில் பதிந்திருப்பதாலேயே பசுமைநடை, யானைமலை, கூடங்குளம் என்று தீவிரமாகச் செயற்படமுடிகிறது.

  சாந்தலிங்கம் அய்யா பற்றிய கட்டுரை போன்று இப்படியும் எதையாவது வெளியிட்டுவிடுவதால்தான் தி ஹிந்து நாளிதழை முற்றாகப் புறக்கணிக்கமுடியாமல் இருக்கிறது. அய்யா அவர்கள் உங்களைப் போன்ற இளைஞர்களுடன் வயதான காலத்தில் விடிகாலையில் வேணாத வெயிலில் பலமுறை பார்த்த மலைகளிலும் பாறைகளிலும் ஏறித் திரிவது அவரது அர்ப்பணிப்பு உணர்வைக் காட்டுகிறது.

 4. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  அருமையான பதிவு. சமுதாயத் தொண்டில் அர்ப்பணித்துக் கொண்ட முத்துகிருஷ்ணன் , தமிழகத்தின் தொன்மைவளத்தை உலகறியச் செய்ய
  அயராது பாடுபடும் சாந்தலிங்கம் அய்யா ஆகியோர் பற்றிய உங்கள் எழுத்துக்கள்
  அற்புதமாக உள்ளது. அருமையான எழுத்தாளர் உருவாகிறார் என்று என் மனம்
  மிகுந்த மகிழ்ச்சியடைகின்றது.வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்

 5. மகேஷ் சி சொல்கிறார்:

  நானும் தங்களோடு இணைய ஆவலாக உள்ளேன் .வாய்ப்பளிப்பீர்களா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s