கோணங்கி எனும் தேசாந்திரியின் பயணக்குறிப்புகள்

Posted: நவம்பர் 24, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

நீ நாடாறு மாதம், காடாறு மாதம் அலைபவன். உன்னைக் கேள்வி கேட்க யாருண்டு? என்று வண்ணதாசன் சொன்னது கோணங்கியை!

மதினிமார்கள் கதையில் தொடங்கி சலூன் நாற்காலியில் சுழன்றபடி வரை அவர் எழுதிய கதைகள் தமிழில் புது மொழி பேசுபவை. புனை கதைகளை நவீன மந்திரங்களுக்குள் குழைத்துத் தரும் எழுத்துப் பறவை கோணங்கி.

– ஆனந்தவிகடன்

கோணங்கியை குறித்து நான் முதன்முதலாக வாசித்தது ஆனந்த விகடனில்தான். ஒரு புகைப்படக்கலைஞர் கோணங்கியை படமெடுக்க ஆறுமாதம் அலைந்த கதை முதல் ச.தமிழ்ச்செல்வன் கோணங்கி குறித்து சொன்னதுவரை பல விசயங்கள் அதிலிருந்தன.  இப்படியும் பயணங்களின் மீது காதல் கொண்ட ஒரு மனிதனா என்று வியந்துபோனேன். அன்றிலிருந்து கோணங்கி மீது தனிப்பிரியம் ஏற்பட்டது. மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்த ஒரு இலக்கியகூட்டத்திற்கு கோணங்கி வந்திருந்தார். வாசலில் நின்று கொண்டிருந்த அவரை பார்த்து சகோதரரும், நானும் வணக்கம் சொன்னோம். அவரும் புன்னகையுடன் வணக்கம் சொன்னார். நெடுநாள் பழகியது போன்ற உணர்வை தந்தது அவரது புன்னகை. அன்று கோணங்கி நகுலன் குறித்து அற்புதமான உரைநிகழ்த்தினார். எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய பல கட்டுரைகளில் கோணங்கியை குறித்து எழுதியிருந்ததை வாசித்திருக்கிறேன். எஸ்.ராமகிருஷ்ணனை ஒரு தேசாந்திரியாக மாற்றியதில் கோணங்கிக்கு பெரும் பங்குண்டு. கோணங்கியின் ‘இருள்வ மௌத்திகம்’ புத்தகத்தை சகோதரர் ஒரு மழைநாளில் கொடுத்தார். அன்று கோயில்பட்டி போய் கழுகுமலை சென்றது இன்றும் நினைவிலிருக்கிறது.

கோணங்கியின் ‘மதினிமார்கள் கதை’ எனும் சிறுகதைத்தொகுப்பை நூலகத்திலிருந்து எடுத்தேன். மிகப் பழைய புத்தகம். அதன் தாள்கள் பழுப்பு நிறத்திலிருந்தன. வாசிக்கத்தொடங்கியதும் கரிசல் காட்டுக்கே இழுத்துப் போய்விட்டார் கோணங்கி. மதினிமார்கள் கதையை வாசித்ததும் கதையில் வரும் செம்பகம் போல இளமையில் என்னை வளர்த்த சந்தைப்பேட்டை அக்காமார்களை நினைத்துக்கொண்டேன். கறுப்புரயில் எனும் சிறுகதை விளையாடித்திரிந்த காலங்களை நினைவூட்டியது. ரயில்வண்டியோட்டி தீப்பெட்டியில் பொன்வண்டைப் பிடித்து விளையாடும் சிறுவர்கள் எல்லாம் தீப்பெட்டிக்கம்பெனியில் வண்டியில் ஏறி பணிக்கு செல்வதை இறுதியில் சொல்லி நம்மைக் கலங்க வைத்து விடுகிறார். இன்றும் மின்தடை ஏற்பட்டதும் சிம்னி விளக்கு பொருத்தும்போது இருட்டு எனும் சிறுகதை ஞாபகத்திற்கு வரும். ஒரு சிறுகதையில் தன் மனைவி எழுதும் கடிதத்தில் நகல் வாசனை அடிப்பதாக பதிலெழுதும் கணவன், மற்றொரு கதையில் வரும் தையல்காரர் எல்லாம் நினைவிற்கு வருகிறார்கள். அவரது ‘இருள்வ மௌத்திகம்’ புத்தகத்தைத் வாசித்துக்கொண்டேயிருக்கிறேன். முற்றிலும் புரியாவிடினும் அந்த எழுத்து கறும்புச்சாறு போல ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. கமல்ஹாசனின் கவிதையொன்று ஞாபகம் வருகிறது.

வாசகா – ஓ – வாசகா…
என் சமகால சகவாசி
வாசி…

புரிந்தால் புன்னகை செய்
புதிர் என்றால் புருவம் உயர்த்து
பிதற்றல் எனத் தோன்றின்
பிழையும் திருத்து…

எனது கவி உனதும்தான்
ஆம்…
நாளை உன்வரியின்
நான் தெரிவேன்.                             

– கமல்ஹாசன்

கோணங்கி என்றாலே நினைவுக்கு வருவது அவரது கட்டற்ற பயணம்தான். ஆனந்தவிகடனில் ‘எனக்கு பயணம் பிடிக்கும்’ என்று கோணங்கி சொல்லிய கட்டுரையை வாசியுங்கள்.

நான்காம் வகுப்பு வாசித்த காலத்தில் எங்கள் பள்ளிக்கு ஒருவர் வந்தார். அவரது சட்டையில் சில குழந்தைகளின் முகங்கள். ‘இந்தப் பிள்ளைகளைப் பாருங்கள். அவர்கள் கடலுக்குள் போய்விட்டார்கள். இனி வர மாட்டார்கள்’ என்று கலங்கிய கண்களுடன் சொன்னார். தனுஷ்கோடியை நோக்கி வந்த ரயிலை, அப்போது அடித்த புயல் உள்ளே இழுத்துச் சென்றதில் நூற்றுக்கணக்கானவர்கள் அப்படியே சமாதியானார்கள். அதில் உள்ள முகங்களைத்தான் காட்டினார். அவருக்கு தனுஷ்கோடி வாத்தியார் என்று பெயர் வைத்தோம். ஐந்து பைசா, பத்து பைசா என கை நிறைய வசூலித்து, அவருக்கு கொடுத்தோம். கடலுக்குள் போன ரயில் என்ன ஆனது என்று யோசித்தேன். ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் தனுஷ்கோடி பாலத்தின் படத்தைப் போட்டிருந்தார்கள். இரண்டு கைகளையும் விரித்து நிற்கும் பூதம் போல அது இருந்தது. அந்தப் பூதம் தான் குழந்தைகளைக் கொண்டுபோனதாக நினைத்தேன். அந்த இடம், நிலம், கடல்… இப்போது எப்படி இருக்கும்? என்னுடைய கற்பனைப் பயணத்தின் ஆரம்பம் அதுதான்.

கிராமத்துத் தெருக்களைக் கடந்து இருந்தது பள்ளி. வீட்டில் இருந்து பள்ளி வரை செல்லும் சிமெண்ட் வாய்க்காலை சிலேட் குச்சியைக் கொண்டு கோடு இழுத்தபடி போவதும் வருவதுமாக இருந்தேன். ரோட்டை எனக்கான ஓடு பாதையாக நினைத்து ஓடிக்கொண்டே இருந்தேன். காது வடிந்த கலிங்க மேட்டுப்பட்டி பெண்கள் வயல்காட்டில் குலவை போடுவது, நென்மேனி மேட்டுப்பட்டி வயல்வெளி, கலிங்க மேட்டுப்பட்டி கம்மாய், 20 யானைகள் வரிசையாக நின்ற தோற்றத்தில் படுத்துக்கிடக்கும் குருமலை எனச் சுற்றி அலைந்ததில், எல்லாக் கிராமங்களிலும் மறைந்து திரியும் சூனியக்காரிகள் என்னை ஆட்கொண்டார்கள்.

பூட்டிக்கிடக்கும் வீடுகளின் வாசலைப் பார்த்து நிற்பேன். பழைய வீடுகள் சொன்ன சேதியில் இருந்துதான் என் கதையின் முதல் வரி துவங்குகிறது. எந்த ஊருக்குப் போனாலும் நான் தேடிப் பார்ப்பது அந்தக் கிராமத்துக்கு ஒரு காலத்தில் தாகம் தணித்த கிணறுகளை. பெண்கள் தங்களது அந்தரங்கத்தை பரிமாறிக்கொள்ளும் இடம் அதுதான். கிணற்றடிப் பெண்களின் தோற்றத்தில்தான் எல்லாக் கிராமங்களும் மறைந்திருக்கின்றன. நாகலாபுரத்தில் பார்த்த பம்பை, ஆதக்காள், வேடப்பட்டி பாட்டி எனது கதைகளில் உலவுகிறார்கள். பயணப் பாதையில் தரிசித்த முகங்கள் கதைக்குள் புதைகின்றன. ஊர் ஊராக அலைந்து நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு காகிதச் சுருள் எழுதப்பட்டு இருக்கிறது.

வண்ணத்துப்பூச்சிகளைப் பிசாசுகள் என்று நினைத்து விரட்டிய ஆதிவாசிகள் முதல், மிருகங்களின் எலும்புகளை உப்பில் பதனிட்டு உலர்த்தியவாறு ஜிப்சிகளாகத் திரியும் குறத்திகள் வரை மனிதர்களைப் பார்க்கவே அலைகிறேன். பறவை, மனிதனின் கதையைச் சொல்லியவாறு நகரங்களின் மேல் பறந்து பார்க்கிறேன். வெளிப்படையாகத் தெரியும் கட்டடங்களைவிட, அதை எழுப்புவதற்கு முன்னால் இடிக்கப்பட்ட பாழடைந்த பங்களாக்கள் மட்டுமே எனக்குத் தெரிகின்றன. பட்டினியும் வறுமையும் பின்துரத்த புதுமைப்பித்தன் அலைந்த சென்னைத்தெருக்கள், ஜி.நாகராஜன் கலைத்தெறிந்த மதுரைத் தெருக்கள், கிருஷ்ணலீலா, பவளக்கொடி, நல்லதங்காள், கோவலன் கதைகளை நாடகமாடி முடித்த தென்னகத்தின் அத்தனை கலைத்தெருக்களையும் கால்களால் அளந்தும் களைப்பு வரவில்லை. ஓடிய கால்களுடன் நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

மத்தியப்பிரதேசம் மண்மாடு ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி நடந்தால் மாங்கி, தூங்கி என்ற இரண்டு மண் மலைகள் இருக்கின்றன. நிர்மல் சாகர் முனிமகாராஜ் என்ற தமிழ்ச்சமணன் சமாதி அங்கே இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாட்டுக்கு வந்து போனவன் அவன். காட்டுப்பூக்களைப் பறித்து அவனது சமாதிக்கு அஞ்சலி செலுத்தி இருக்கிறேன். கல்லும் மணலுமான விநோதப் பரப்பில் நடக்கும்போது வனதேவதைகள் நமக்குப் பாதுகாப்பாக வரும். சூரியனின் நிழல் படாத உஜ்ஜயினியில்தான் விக்கிரமாதித்தனின் 32 சிம்மாசனங்கள் இருக்கின்றன. புதிர்க் கதைகளுக்கான 24 கம்பளங்கள் இருக்கின்றன. அங்கு உட்கார்ந்து எனக்கும் கதைகளைத் தருமாறு கேட்கிறேன். காலன், எமன், தூதன் மூவருக்குமான கோயில் அங்குதான் இருக்கிறது. அந்தச் சிறு கோயில் ஏதோ ஒன்றை எனக்கு ரகசியமாகத் தருகிறது.

ஆந்திராவின் அமராவதிச் சிற்பங்கள் நம்முடைய கலையை அப்படியே சொல்கிறது. ஆனால், அங்கு முழுமையாக இல்லை. பாதி சென்னை மியூஸியத்தில்தான் இருக்கிறது என்றார்கள். இங்கு வந்து பார்த்தேன். இதிலும் முழுமையாக இல்லை. லண்டன் மியூஸியத்தில் இருப்பதைத் தெரிந்து அங்கும் போய்ப் பார்த்தேன். ஆக, அமராவதிச் சிற்பங்கள் முழுமையாகப் பார்த்துவிட்டேன்.

அதே ஆந்திரத்தில் நாகார்ஜூனகொண்டா சிற்பக்கூடம் என்னையே செதுக்கியது. ஆந்திரா, பௌத்தத்துக்கு முக்கியமான இடம். சமணம் செழித்த கர்நாடகா காட்கலா நான் பல முறை பார்த்தது. இந்த நூற்றாண்டின் முதல் நாளான 1.1.2000 அன்று அஜந்தாவில் இருந்தேன். ஒரு முறை பார்த்தால் உணர முடியுமா அஜந்தாவை? ஜப்பான் ஓவியன் ஒருவனை பார்த்தேன். அஜந்தாவை 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்து பார்த்துச் செல்வதாகச் சொன்னான்.

நாளந்தாவுக்கும் கயாவுக்கும் மத்தியில் ராஜகிரகம் என்ற நகரம் இருக்கிறது. பதவி, ஆசை, அதிகாரம் அத்தனையும்விட்டு வெளியேறிய புத்தன் அங்குதான் தங்கினான். அவனது காலடி பட்ட இடத்தில் வெந்நீர் ஊற்றுகள் உருவானதாக ஐதீகம். அடுத்தது என்ன என்று அங்கே இருந்துதான் புத்தன் யோசித்தான். ஓர் இரவு அங்கு தங்கியிருந்தபோது, ஒளியற்ற இரவாக அந்த நிலவாக தெரிந்தது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள சாஞ்சி நகரத்தைத்தான் என்னுடைய ‘பாழி’ நாவலில் கொண்டு வந்தேன். அது அசோகரின் மனைவி ஊர். அங்கு இருக்கும் ஆபு மலையைவிட்டு விலக அதிக நாட்கள் ஆகும். இப்படி என்னுடைய பயணம், மறைக்கப்பட்ட இடங்களைத் தோண்டிப் பார்ப்பதாக அமையும்.

போதி தர்மா, மார்க்கோபோலோ, யுவான்சுவாங் ஆகிய மூன்று பயணிகள் எனக்கு மலைப்பை ஏற்படுத்தியவர்கள். எந்த வசதியுமற்ற காலத்தில், தமது மன தைரியம் மட்டுமே அவர்களது மூலதனம். வானம், பூமி இரண்டு மட்டும்தான் பக்கத்துணை. அதில் போதி தர்மாவின் தைரியம் அசாத்தியமானது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வேடன் அவன். பௌத்தத் தத்துவத்தில் தேர்ந்த ஞானியாக மாறி, நாகப்பட்டினம், தனுஷ்கோடி வழியாக இலங்கை போய், அங்கே இருந்து சீனாவுக்குப் போனவன். தமிழகக் குஸ்தியையும் கேரளக் களரிப் பயிற்றையும் அங்கு அறிமுகப்படுத்தியவன்.

தெரிந்த இடங்கள், பார்த்துப் பார்த்துச் சலித்த இடங்கள் என்று இல்லாமல் தொல்லியல் துறையாலேயே தொலைக்கப்பட்ட பகுதிகளைத் தேடி வருகிறேன். எதையும் திட்டமிட்டுச் செய்வது கிடையாது. பிடித்த இடத்தில் விரும்பிய வரை இருக்க வேண்டும். ஆர்வமற்ற இடத்தை நொடியில் கடக்க வேண்டும். மதுரை போய்த் திரும்பலாம் என்று கோயில்பட்டியில் இருந்து பஸ் ஏறினால், மனம் என்னை மறுநாள் காலையில் காரைக்காலுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. அந்தக் கடல் மாமல்லபுரத்தை நோக்கித் தள்ளுகிறது. சிற்பங்கள், தஞ்சாவூருக்கு அழைக்கின்றன. பெரிய கோயில், என்னை மீனாட்சியை நினைக்கத் தோன்றுகிறது. மீண்டும் மதுரைக்கு வருகிறேன். இடைப்பட்ட ஊர்களில் இருக்கும் இலக்கியத் தலைகள் எல்லாரையும் ஒரு தட்டு செல்லக் குட்டு வைத்துவிட்டுத்தான் அவர்களிடம் இருந்து விடுபடுகிறேன்.

இன்னமும் அலுப்புத் தட்டாமல் என்னை அரவணைத்துக்கொள்கிறது தனுஷ்கோடி. கடந்த 20 ஆண்டுகளில் 200 தடவைகள் தனுஷ்கோடி போயிருக்கிறேன். கறுப்பு ரயில், தனுஷ்கோடி, அல்பரூனி பார்த்த சேவல் பெண், திறந்த விழிகளுடன் தூங்கும் ஸ்த்ரீகள், ராமனின் கற்பனையான தற்கொலைப் பாலம் எனப் பல கதைகளுக்கு அதுதான் கரு. ‘பாழி’ நாவலும் அதுதான். தனுஷ்கோடி புயலில் அடித்துச் செல்லப்பட்ட ரயிலில் சமாதியான பிணங்கள், எலும்புகள், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் என எல்லாவற்றின் எச்சங்களும் இன்னமும் இருக்கின்றன. செத்துப்போன பெண்களின் நகைகளைத் திருடி வாழ்ந்த ஒருவன் இன்று அங்கு பைத்தியமாக அலைகிறான். கடைசியாக பச்சைக் கொடி அசைத்து அந்த ரயிலை அனுப்பிய ஸ்டேஷன் மாஸ்டரைப் பார்த்தேன். அந்த மணல் பரப்பில் கால்களைப் பதித்து நடக்கும்போது நானும் சில நாய்களும் மட்டும்தான் சுற்று எல்லையில் இருப்போம். என்னுடைய வேகத்துக்கு நடக்க முடியாமல் மூச்சை இழுத்து நின்றுவிடும் நாய்கள். தனியாகப் போவேன். ரப்பர், தோலில் செய்யும் செருப்புகள் தேயும் என்பதால், டயர் செருப்புகளைப் பயன்படுத்துவேன். புனை கதை நூலகமாக, மணல் நூலகமாக எனக்கு அது தெரிகிறது. அந்த ரயிலில் நானும் போய்க்கொண்டு இருப்பதாகவே உணர்கிறேன்.

எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’

நன்றி: 16.9.09, ஆனந்தவிகடன், கட்டுரை. ப.திருமாவேலன், படங்கள்: வைட் ஆங்கிள் ரவிச்சந்திரன்

எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகளான கோணங்கி (நவம்பர் 1),  கமல்ஹாசன் (நவம்பர் 7), மாவீரர் பிரபாகரன் (நவம்பர் 26) எல்லோரும் இம்மாதம் பிறந்தவர்கள் எனும் போது மகிழ்வாகயிருக்கிறது. கோணங்கி பல்லாண்டு வாழ மதுரையையும் தமிழையும் வணங்குகிறேன். கோணங்கியின் பிறந்தநாள் அன்று கார்த்திகை பாண்டியன் எழுதிய கட்டுரை வாசித்து நெகிழ்ந்தேன். மேலும், பவாசெல்லத்துரை  எழுதிய கட்டுரையையும் வாசியுங்கள். அழியாச்சுடர்கள், தமிழ்த்தொகுப்புகள்  தளங்களிலும் சென்று கோணங்கி குறித்து வாசியுங்கள். கோணங்கியும், எஸ்.ராமகிருஷ்ணனும் தனுஷ்கோடி குறித்து எழுதிய பதிவுகள் வாசித்து எனக்கும் தனுஷ்கோடிக்கு ஒரு முறையாவது போக வேண்டும் போலிருக்கிறது. இவர்கள் எழுத்துக்களை வாசிக்க வாசிக்க நாமும் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது. ஆனால், வாழ்க்கை நம்மை கண்டபடி சுற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பின்னூட்டங்கள்
 1. தனபாலன் சொல்கிறார்:

  நல்ல பதிவு. எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

 2. dharumi சொல்கிறார்:

  //வாழ்க்கை நம்மை கண்டபடி சுற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.//

  !!!

 3. suryajeeva சொல்கிறார்:

  ராகுல்ஜியின் ஊர் சுற்றி புராணம் படித்து முடித்த உடன், இது போல் ஒரு மனிதனால் இந்த கால கட்டத்தில் வாழ முடியுமா என்ற எண்ணம் வந்ததுண்டு… இந்த புத்தகத்தை படிக்கும் முன்னே எனக்கு திருமணம் நடந்து விட்டதால் நான் அந்த தகுதியை இழந்து விட்டதாக கருதினேன்… இருந்தாலும் வேலை விஷயமாக எங்கேயாவது சென்றால் ராகுல்ஜி சொன்னதை கடை பிடித்து பார்த்திருக்கிறேன்…
  மாமல்லபுரம் குகை கோயில்கள் செய்வதற்கு ஒத்திகை செய்ய பழகிய இடம் [காஞ்சிபுரம் அருகே தூசி மாமண்டூர் ஊரை தாண்டிய பிறகு உள்ள மலை தொடர்களில் இருக்கும்] தொல்பொருள் ஆய்வு துறையினரின் கீழ் இருந்தாலும் முறையான சாலை வசதி செய்யப் படாததால் வெறும் வவ்வால்களின் புகலிடமாக இருப்பதை கண்டு அதிர்ந்திருக்கிறேன்.. இன்னும் இது போல் எத்தனையோ என்னில் அடங்காதவை… ஊர் பெயர் தெரியாதவை… நகரமயமாக்கலில் தொலைந்து போனவை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்… அதை வரலாற்று பக்கங்களில் இணைக்க கோணங்கி போன்ற ஆட்கள் தேவை…

 4. தொப்புளான் சொல்கிறார்:

  //ஆனால், வாழ்க்கை நம்மை கண்டபடி சுற்றிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.//

  அந்தோ, என்ன இது ஹெடோனிஸ்ட்டுகளுக்கு வந்த சோதனை?!

  ஊர்சுற்றிகள் உலகையும் அளக்கலாம். கதையும் அளக்கலாம் என்று கொளுத்திப்போட்டு நாம் வம்பளக்கலாம்.

  நாமும் பயணிக்கலாம். ஆனால் இப்போதிருக்கும் கட்டணவிகிதத்தில் பேருந்தில் அல்ல.

  தமிழர்கள் பயணிப்பதில்லை. இங்கும் அங்கும் ஓயாது அலைகிறார்கள்.

 5. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  கோணங்கியின் உரைநடை ஒருவிதமாகத்தான் இருக்கிறது. விகடன் கட்டுரையில் உள்ளது போல அவர் எழுதுவதில்லை.சிறுகதைகள் ஓரளவு படிக்க முடிகிறது. பாழி
  என்ற அவரது நாவல் நடை படிக்க எளிதாக இல்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.சோதனை முயற்சிகளில் அதிகம் ஈடுபடுவார் போலும் பிதிரா
  என்னும் அவரது நாவல் பெயரைக் கேட்டாலே ஒரு சலிப்பு ஏற்படுகிறது.
  இம்மாதிரி இருப்பதாலேயே ஒரு ஈர்ப்பு இருக்கும் போலிருக்கிறது.” இருள்வ மௌனம்” என்பது எதைக்குறிக்கிறது?நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரைகளையும்
  படித்துவிட்டு பிறகு உங்களுடன் பேசுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி

 6. veera சொல்கிறார்:

  best wishes

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s