மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை. அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.
இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
– மாவீரர் வேலு பிரபாகரன்
மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு எதிரில் உள்ள முத்துப்பட்டி மலைக்கு இம்மாதம் பசுமைநடைப் பயணமாக மாவீரர் தினத்தன்று மகாவீரரைக் காண சென்றதைக் குறித்த பகிர்வு.
அதிகாலை எழுந்து நானும் சகோதரரும் பசுமைநடைக்குக் கிளம்பிச்சென்றோம். வழியில் ஆச்சர்யமாக வைகை ஆறாக ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்தோம். மகிழ்வாகயிருந்தது. நாகமலை புதுக்கோட்டையில் போய் எங்கள் குழுவினர்க்காகக் காத்திருந்தோம். காளவாசல் மற்றும் நாகமலை புதுக்கோட்டை என இரண்டு சந்திப்பு புள்ளிகள். இன்றைய வானம் தள நண்பரை சந்தித்தோம். அவரது நண்பர்களோடு சேர்ந்து தேநீர் அருந்தச்சென்றோம். மழையில் கொஞ்சம் தேநீரும், நிறைய அரட்டையுமுமாகப் பொழுதுபோனது. எல்லோரும் வர அங்கிருந்து முத்துப்பட்டி சென்றோம். மதுரைக்காமராசர் பல்கலைக்கழகக் குடியிருப்புகளுக்கு எதிரே இருந்த சிறுபாதையில் மலையை நோக்கிச் சென்றோம்.
எலி கரும்பியது மாதிரி மலையை மேலே நிறைய கரும்பியிருக்கிறார்கள். சமணர்களால் கொஞ்சம் தப்பித்து பரிதாபமாய் நிற்கிறது. தொலைவில் சமணமலையில் லேசான வெயில் தெரிந்தது. மெல்லிய சாரலுடன் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். நகர்கள் நகர்ந்து நகர்ந்து மலையடிவாரம் வரை வந்துவிட்டன.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யாவுடன் சேர்ந்து நடக்கத்தொடங்கினோம். இந்த மலையை முத்துப்பட்டி மலை, கரடிப்பட்டி பெருமாள்மலை என்றெல்லாம் அழைக்கிறார்கள். வழியில் மக்கள் தோட்டங்களில் பூவெடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். மலையடிவாரத்திலிருந்த அந்த ஊர்க்காரர்களிடம் “பஞ்சவர் படுக்கை” எங்கிருக்கிறது என விசாரித்து அவர்கள் காட்டிய பாதையில் நடந்தோம். நிறைய பெயர்த்தெடுத்துவிட்டார்கள்.
தேனியில இருந்து ஆண்டிப்பட்டி வழியா மதுரைக்கு வர்ற வழியில இருந்த ஒரு மலையை இப்போ காணோம். கிரானைட்டா எக்ஸ்போர்ட் ஆயிடுச்சு. அந்நியச் செலாவணி, தேசிய வருமானம்னு வர்த்தக நிபுணர்கள் சொல்றாங்க. மக்களுக்கும் சந்ததிகளுக்கும் சொந்தமான, நிரந்தரமான ஒரு இயற்கைச் செல்வத்தை இல்லாம ஆக்குவதற்கான உரிமையை உனக்கு யார் தந்தான்னு அவர்களை எழுத்தாளன் கேட்க வேண்டாமா?
– நாஞ்சில்நாடன்
நாஞ்சில்நாடன் சொல்வதுபோல அந்நியச்செலவாணியா மலையப் பாக்குறவங்ஙள என்ன செய்யுறது? இப்ப சில்லரை வணிகம் என்று வேறு புதுக்குடைச்சலை கொண்டு வர்றாங்ங?
பஞ்சவர்படுக்கைக்கு நாங்கள் செல்லும்போது ஆடுகள் மழைக்கு குகைத்தளத்தருகில் ஒதுங்கியிருந்தன. சூழலே மிகவும் அருமையாக இருந்தது. லேசான சாரல், பசுமையான வெளி, தொலைவில் தெரியும் குன்றுகள், நீலவானம், ஈரம்படிந்த பாறைகள் என இயற்கை எல்லா இடங்களிலும் நீக்கமறநிறைந்து தன் படைப்பின் உச்சத்தை பிரதிபலித்துக்கொண்டிருந்தது.
அந்த மலைக்குகையில் இருபதுக்கும் மேற்பட்ட படுக்கைகள் வெட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு படுக்கையும் நல்ல வழுவழுப்பாக செதுக்கப்பட்டு உள்ளது. ஒரு படுக்கைக்கும் இன்னொரு படுக்கைக்கும் இடையே சிறுமேடு உள்ளது. குகைத்தள முகப்பில் கிறிஸ்து பிறப்பிற்கு முந்தைய தமிழ் பிராமிக்கல்வெட்டுக்கள், தென்பகுதியில் மகாவீரர் சிற்பங்கள் அதன் கீழே தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் உள்ளன. அருகில் இயற்கையாக அமைந்த மற்றொரு குகை உள்ளது. அதனுள் ஒரு படுகைமேல் கல்வெட்டொன்று உள்ளது. அது மிகவும் மழுங்கிப்போய் காணப்படுகிறது. அதன்மேலே சமீபத்தில் நம்மவர்கள் செதுக்கிய கல்வெட்டுக்கள்தான் நிறைய உள்ளன. ஒருபுறம் மலையை காசாக்கும் கூட்டம், மறுபுறம் மலையை இப்படி நாசமாக்கும் கூட்டம். இதற்கிடையே நம்பிக்கையூட்டும் விதமாக பசுமைநடைக்கு வரும் சிறுவர் சிறுமியர்களைப் பார்க்கும் போது சற்றுத் தெம்பாயிருக்கிறது.
குகைத்தளத்தின் கீழ் தனித்தமர்ந்திருக்கும் மகாவீரர் சிற்பத்தைப் பார்க்கும் போது அங்கேயிருந்து மதுரையையும், மலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தால் போதுமென்று இருந்தது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சமணத்துறவிகளால்தான் இன்றும் இந்த மலைகள், குன்றுகள் எல்லாம் இன்னும் பிழைத்திருக்கின்றன என்றென்னும்போது அத்துறவிகளின் அடிபணிகிறேன். வணங்குகிறேன்.
வழக்கம்போல குகைத்தளத்தினுள் அமர்ந்து சமணப்பள்ளி மாணவனானேன். அதுவும், மூன்று சிம்மம் மேல் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்திருக்கும் மகாவீரர், அடியில் சிறிய யாளி, இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் மேலே ஓரமாக சிதைந்த அந்தச் சிற்பத்தருகில் அமர்ந்து இருந்தேன். இதுபோன்ற தனிச்சிற்பம் வேறு எந்தப்படுகையிலும் நான் பார்த்ததில்லை. பசுமைநடை நட்சத்திரங்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருப்பதே சுகம்.
பசுமைநடையை சிறப்பாக நடத்திவரும் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் மழைப்பயணம் குறித்து பேசினார். இம்முறை மழையால் பசுமைநடை இருக்குமா என பலரும் அலைபேசியில் அழைத்து அடிக்கடி விசாரித்து இருக்கின்றனர். சிலர் முதல்நாள் இரவு பணிரெண்டு மணிக்கு கூட கேட்டு உறுதி செய்துள்ளனர். இந்த மழையிலும் அறுபதுபேர்கிட்ட வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். மேலும் சிலர் அதன்பின் வந்தனர். இதுபோன்ற ஆர்வத்தைப்பார்க்கும் போது இன்னும் பல பயணங்கள் செல்ல உற்சாகமளிப்பதாகக் கூறினார்.
தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா இம்மலை குறித்த தகவல்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், சமணம் குறித்து பேசினார். இயற்கையாக அமைந்த இந்தக் குகைத்தளத்தின் முகப்பில் அதை செய்து கொடுத்தவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இங்குள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டுக்கள் கி.மு.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். குகைமுகப்பில் கிழக்கு நோக்கி காணப்படும் தமிழ்பிராமிக்கல்வெட்டில் ‘சையஅளன் விந்தைஊர் காவிய்’ என்ற வரிகள் காணப்படுகின்றன. இதில் விந்தைஊர் என்பது இன்றுள்ள மதுரை வண்டியூராக இருக்கலாம். இன்னொரு படுக்கையிலுள்ள கல்வெட்டில் ‘முசிறிகோடன்’ என்ற வரிகள் காணப்படுகிறது. கேரளாவிலுள்ள முசிறியைச் சேர்ந்த ஒருவன் இதை செய்வித்து கொடுத்திருக்கலாம்.
மேலும், அந்தக்காலத்திலேயே இந்தப்பகுதி நெடுஞ்சாலையாக இருந்திருக்கிறது. இந்த மலைக்கு அருகிலுள்ள கீழ்குயில்குடி, கொங்கர்புளியங்குளம் ஆகிய இடங்களிலும் சமணத்தின் சுவடுகள் உள்ளன. வணிகர்கள் அந்தக் காலத்தில் சமணத்தை ஆதரித்தனர். அதனால் பெரும்பாலான வழித்தடங்களில் சமணச்சுவடுகள் காணப்படுகின்றன.
குகைத்தளத்தில் தெற்கு நோக்கி காணப்படும் இரண்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும் ஒன்று போலவே காணப்படுகின்றன. அரசமரக்கிளைகளின் கீழ் முக்குடைக்கு அடியில் அர்த்தபரியங்காசனத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர் சிற்பம் மகாவீரராக இருக்கலாம். தீர்த்தங்கரரின் இருபுறமும் இருவர் கவரி வீச அழகாக அமர்ந்திருக்கிறார். அதன்கீழ் வட்டெழுத்துக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இவை கி.பி.எட்டாம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். பராந்தகப்பர்வதமாயின குரண்டிப்பள்ளியை சேர்ந்த மாணவர் ஒருவர் இதைச் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக்காலத்தில் ஆவியூர்க்கருகிலுள்ள குரண்டியில் சமணர்களின் பெரும்பள்ளி இருந்துள்ளது. அப்பள்ளியில் நிறைய மாணவர்கள் பயின்று உள்ளனர். குரண்டிமலைக்கு அக்காலப்பெயர்தான் பராந்தக பர்வதம். இன்னொரு கல்வெட்டில் கீழ்குயில்குடி ஊரார்க்காக குரண்டிப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் செய்திருக்கலாம். அந்தக்காலத்தில் சமணத்தைப் பின்பற்றிய மக்கள் இதை நேர்த்திக்கடன் போல் செய்திருக்கலாம். கழுகுமலையில் நிறைய சிற்பங்கள் வரிசையாக உள்ளன. கீழ்குயில்குடியிலும் பெரும்பள்ளி இருந்திருக்கிறது. அதன் சுவடுகள் இன்றும் அந்த மலையில் உள்ளன.
கல்வெட்டுக்களை வாசித்து அதன் பொருளை சாந்தலிங்கம் அய்யா கூறினார். அதில் கேட்டவற்றை கொஞ்சம் பதிவு செய்து இருக்கிறேன். சமணர்கள் இது போன்ற மலைகளில் தங்கி மக்களுக்கு அந்தக் காலத்திலேயே அனைவருக்கும் சமச்சீர்கல்வி, இலவச மருத்துவம்(மூலிகை) வழங்கியுள்ளனர். தமிழுக்கு நிறைய நூல்களை கொடையாக சமணர்கள் வழங்கியுள்ளனர். இந்தப்பகுதியில் உள்ள மலையில்தான் திருத்தக்கத்தேவர் சீவக சிந்தாமணி இயற்றியிருக்கிறார்.
சாந்தலிங்கம் அய்யாவுடன் பேசிக்கொண்டிருக்கும் போது பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வுமையம் குறித்துக் கூறினார். மேலும், மதுரையில் சமணம் என்று சாந்தலிங்கம் அய்யா எழுதிய புத்தகத்தை விரைவில் வெளியிடவிருப்பதாக கூறினார். பசுமைநடைக்கு முதல்நாள் கூட கல்வெட்டுக்களை தேடிப்பயணித்து வந்ததை கூறினார். தன்னால் முடிகிற வரை இது போன்ற பணிகளை தொடர்ந்து செய்ய இருப்பதாக கூறினார். அவரது பணியை நினைத்துப் பார்க்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறது. சிலர் தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் பார்ப்பதற்கு ஆங்கில எழுத்துகள் போல இருக்கின்றனவே எனக்கேட்டதற்கு அவற்றின் சாயல் சில எழுத்துகளில் இருக்கலாம், மற்றபடி தமிழ் பிராமிக்கல்வெட்டிற்கும் ஆங்கிலத்திற்கும் தொடர்பில்லை எனக்கூறினார். தமிழில் அ முன்பு பார்ப்பதற்கு ஆங்கில எழுத்தான கே’வை திருப்பி போட்டது போல இருக்கும் என உதாரணத்தோடு விளக்கினார்.
மழை பெய்து கொண்டிருந்த போது படுகைகள் இருக்கும் குகைத்தளத்தில் ஒதுங்கி நின்றோம். குகை முகப்பில் புருவம் வெட்டியிருந்ததால் மழை உள்ளே நுழையவில்லை. அந்தக் காலத்திலேயே நம்மவர்கள் இதையெல்லாம் கணித்து வைத்திருந்ததைப் பார்க்கும்போது வியப்பாயிருக்கிறது. உணவை அங்கு கொண்டு வந்து வைத்து வழங்கினர். படுகைகளில் நின்று கொண்டே சட்னி,சாம்பாருடன் இட்லியை குழைத்து சாப்பிட்ட போது இதுபோன்ற உணவு சமணர்களுக்கு சாப்பிடக் கொடுத்துவைக்கவில்லையென நினைத்து வருந்தினேன்.
மழை விடாமல் பெய்தாலும் அடுத்து ஒரு திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால் மழையோடு நானும் சகோதரரும் கிளம்பினோம். நாகமலையைப் பார்க்கும் போது மஞ்சுமூடி மலையையே மறைத்துவிட்டது. மழையோடு பாதயாத்திரையாக பழனி சென்றது போல் மழையோடு சென்ற இந்தப் பசுமைநடை என்றும் நினைவில் பசுமையாகயிருக்கும். அற்புதமானதொரு நாளை வழங்கிய மகாவீரரையும், மாவீரரையும், மதுரையையும், மழையையும் வணங்கி மகிழ்கிறேன். நன்றி
பல அறிய தகவல்கள்.
பகிர்விற்கு நன்றி நண்பரே!
இதையும் படிக்கலாமே :
“அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?(3) எது சிறந்தது? (நிறைவுப் பகுதி)”
தங்கள் பதிவு அருமை. ஆவலை மிகவும் தூண்டுவதாக உள்ளது.பசுமை நடையில்
கலந்து கொள்ள உடல்நிலை தோதாக இல்லை. அரிய வாய்ப்பை இழக்கிறோம்
என்ற வருத்ததஃதை உங்கள் பதிவு ஓரளவு குறைக்கின்றது மிக்க நன்றி, தோழரே
தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்
விவரங்களும் வேகமும் (பொறுமலும்) அருமை. படித்து அனுபவித்தேன். முட்டாள்தனமான கேள்வி என்று கேட்கும் பொழுதே தோன்றுகிறது – இருப்பினும்.. உள்ளூர் அரசாங்கமோ சமூகமோ இது போன்ற அழிவுகளைத் தடுக்க எதுவும் செய்யாததேன்? unesco போன்ற அமைப்புகளின் உதவியோடு இனியும் அழிவதைத் தடுக்கலாமே? ஒரு சிறு பொறி பெருந்தீயாகப் பல நேரம் மாறிவிடும். நாஞ்சில் நாடன் போன்றோரின் உதவியோடு கொஞ்சம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாமே? படிக்கும் பொழுதே பாரமாக இருந்தது. தமிழில் ஐ என்ற எழுத்து வர அத்தனை நூற்றாண்டானதா? (வந்தும் என்ன பயன் என்ற ‘ஐ’யம் 🙂
மழையில் பழனிக்கு பாதயாத்திரை போக ஆசை வந்து விட்டது.
தனபாலன் அவர்களுக்கும், ராதாகிருஷ்ணன் அய்யாவிற்கும், அப்பாத்துரை அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
அரசின் அனுமதி இல்லாமலா மலையை அறுக்கிறார்கள்? சமணர்களின் தொல்லியல் சுவடுகளால்தான் நிறைய மலைகள் தப்பித்து உள்ளன. அரசால் அல்ல! அரிட்டாபட்டி, யானைமலை போன்ற ஊர்களில் கிராம மக்களே மலையை அறுக்க போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களும் மலை அறுப்பதை எதிர்த்து போராடி வருகிறார்கள். பசுமைநடை மூலமும் இதுபோன்ற மலைகள் அறுப்பதை தடுக்கத்தான் பயணித்து வருகிறோம். சமூக ஆர்வலர் எழுத்தாளர். அ.முத்துகிருஷ்ணன் தான் எங்கள் பசுமைநடையை நடத்தி வருகிறார். மறுமொழியிட்ட நண்பர்களுக்கு நன்றி.
நல்ல பதிவு.அரிய ,கானாத புஹைப்படங்கள்.நன்றி.