வண்ணநிலவனுடன் கடல்புரத்தில்….

Posted: திசெம்பர் 15, 2011 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்

டிசம்பர் பதினைந்தாம் தேதி பிறந்தநாள் காணும் வண்ணநிலவன் அவர்கள் பல்லாண்டு மகிழ்வோடு வாழ மதுரையையும், தமிழையும் வேண்டுகிறேன்.

உயிருக்கு உலைவைக்கும் அணுஉலைக்கெதிராக போராடி வரும் கடல்புரத்து மக்களையும், போராட்டக் குழுவினரையும் வணங்கி இப்பதிவைத் தொடங்குகிறேன்.

வண்ணநிலவனின் கடல்புரத்தில் தமிழின் சிறந்த நாவல்களுள் ஒன்று. அதைக் குறித்த சா.கந்தசாமியின் பகிர்வைப் பார்ப்போம்.

கடல்புரத்தில், பரபரப்பூட்டும் சம்பவங்களும் கிளர்ச்சி தரும் காட்சிகளும் கொண்ட நாவல் அல்ல. ஆனால், இது ஒரு நல்ல நாவல். கலைத்தன்மை நிறைந்த உயர்வான நாவல். படித்தவர்கள் மனத்தில் பல காலத்துக்கு அழுத்தமாக நிற்கக்கூடியது. இதன் கதாபாத்திரங்கள் இயல்பாக வளர்ந்து, இயல்பாக பேசி, இயல்பாக நடந்து, இயல்பாகவே நம் மனத்தில் இடம் பிடித்துக் கொள்கிறார்கள்.

ஒரு தேர்ந்த சிறுகதையைப்போல போராட்டத்துடன் தொடங்குகிறது நாவல். அனாதி காலமாகத் தந்தைகளுக்கும் மகன்களுக்கும் இடையில் நிலவிவரும் நெருடல், உள்ளார்ந்த இணக்கமின்மை என்ற இழைகளோடு மின்னல் வெட்டு போன்ற சம்பவத்துடன் முழு வீச்சோடு ஆரம்பமாகிறது. ஆனால், போகப்போக, நெருடல்களும் கோபங்களும் அமிழ்ந்துபோக, கடல்புரத்து மக்களின் ஜீவ சரித்திரம் – குரூஸ் மிக்கேல், அவன் மனைவி மரியம்மை, மகன் செபஸ்தி, இளைய மகள் பிலோமி, பணியாள் சிலுவை, பக்கத்து வீட்டுக்கார ஐசக், பிலோமியின் சிநேகிதி ரஞ்சி, பிலோமிக்கு பிரியமான சாமிதாஸ், மரியம்மையின் பிரிய வாத்தி, எல்லோருக்கும் பிரியமான பவுலுப் பாட்டா இவர்களின் கதையாகி – மனிதர்களின் இதயங்களில் இயல்பாகக் குடிகொண்டுள்ள மூர்க்கக்குணம் வெறித்தன்மையோடு, ஆனால், களங்கமின்றி விவரிக்கப்படுகிறது.

வாழ்க்கையின் முரண்பாடான அம்சங்களை மிகவும் யதார்த்தமாகவும் தீவிரமாக எதிர்க்க வேண்டிய அம்சங்களை மென்மையாகவும் சாத்தியமே என ஏற்றுக்கொள்ளும்படி சொல்லுகிறது இந்த நாவல். விஷயத்தைவிட, சொல்லும் முறையில் அபூர்வமான கலைத்தன்மை பூரணம் பெறுகிறது. இந்த நாவலின் சிறப்பு அம்சமே இதன் பாஷைதான். மென்மையும் குளுமையும் உயிர்த் துடிப்பும் கொண்ட பாஷை. எதையும் சாதிக்கவல்ல பாஷை. இந்த நாவலையும் ஸ்தாபிக்கிறது.

இன்னும் பல காலத்துக்குக் கடல்புரத்தில் சிறந்த நாவலாகவே இருக்கும்.

-சா.கந்தசாமி.

வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவலை இராதாகிருஷ்ணன்  அய்யாவிடம் வாங்கி வந்த அன்றே வாசித்து முடித்துவிட்டேன். இராதாகிருஷ்ணன் அய்யாவிற்கு நன்றிகள் பல. நல்ல நாவலை வாசித்துவிட்டு எப்படித்தூங்க முடியும்?. அன்று இரவு வெகுநேரம் கடல்புரத்தின் நினைவுகளில் மனது  அலைபாயத் தொடங்கியது.

வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’ என்னை அதிகம் ஈர்த்தற்கு காரணம் வாசித்து முடித்ததும் எல்லா மனிதர்களின் மீதும் அன்பு பெருகியது. கடல்புரத்தின் ஈரத்தை தன் எழுத்தில் பாய்ச்சி வண்ணநிலவன் நம் நெஞ்சிலும் அன்பை பெருகச்செய்கிறார். இந்நாவலில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் கொச்சையாகப் பேசினாலும், அவர்கள் இதயங்களில் அன்பு  கசிந்து கொண்டேதானிருக்கிறது. இவ்வளவு அன்பான மனிதர்களைக் காசு வாங்கிக்கொண்டு போராடுகிறார்கள் என்று கதை சொல்லும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வாழ்க்கையில் பல விஷயங்களைச் சொல்லி வெளியிட முடியாத நளினங்கள் உண்டு. அனுபவத்தால் மட்டுமே உணர முடிகிறவைகள் என வண்ணநிலவன் சொல்வதுபோல இந்நாவலை வாசித்த அனுபவத்தை என்னால் எழுத்தில் அந்தளவு பதிவு செய்ய இயலுமா எனத்தெரியவில்லை. இது ‘கடல்புரத்தில்’ குறித்த விமர்சனப்பதிவும் அல்ல. என்னை ஈர்த்த கடல்புரத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த பத்திகளிலிருந்து சிலவற்றை மற்றும் தொகுத்திருக்கிறேன்.

கடலிலிருந்து தோன்றியவர்கள் என்பதாலோ என்னவோ நம் எல்லோருக்குள்ளும் கடற்கரையில் வசிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. ஆதியில் மதுரை கடற்கரையோரமாக இருந்ததாக சொல்வார்கள். பாண்டியர்கள் கடல்புரத்தை சேர்ந்தவர்கள்தானே! இராமநாதபுரத்து பக்கம் பயணிக்கும் போது கடலோர மீனவர்களின் வீடுகளைப் பார்க்கும் போது ஆசையாக இருக்கும். அது போன்றதொரு வீட்டு முற்றத்தை வண்ணநிலவன் தன் எழுத்தில் ஓவியமாக வரைந்துவிடுகிறார்.

புறவாசலில் கொல்லைப்புறம் ரொம்பவும் நீளமானது. நடைப்படியைவிட்டு இறங்கினதும் மணலில்தான் காலை வைக்க வேண்டும். மேலக் கடைசியில் வேலி ஓரத்தில் கிணறு. கிணற்றுக் கைப்பிடிச் சுவரடியில் வாளி, கயிறுடன் இருந்தது. கிணற்றடி சுத்தமாகக் காய்ந்து போயிருந்தது. சுற்றியிருந்த சின்னதான சிமெண்டு ஓடையில், காற்றடித்துப் போட்டிருந்த குறுமணல் படிந்திருந்தது. நாலைந்து வாகை மரங்கள். எல்லாம் நிலா வெளிச்சத்தில் பார்க்க அழகாயிருந்தன. அவளுடைய தாத்தா தாசையா இருந்த வரையில் அந்தத் தென்னைகள் அவருடைய பிரியமான குழந்தைகள். இப்போது எப்போதாவது மரியம்மை சத்தம் போட்டால் பிலோமி தண்ணீர் ஊற்றுகிறதுண்டு. ஆனால், தண்ணீர் ஊற்றினாலும் ஊற்றாவிட்டாலும் அந்த மரங்கள் இன்னும் விசுவாசத்துடன் காய்த்துக் கொண்டிருக்கின்றன. மரங்களுக்கு நடுவே தாத்தா தார் பாய்ச்சிக் கட்டிக்கொண்டு, தண்ணீர் வாளியைத் தூக்கியபடி சாய்ந்து சாய்ந்து நடந்து போகிறதுபோல இருந்தது.

இந்நாவலின் முக்கிய கதாபாத்திரமான பிலோமிக்கும், ரஞ்சிக்குமிடையேயான நட்பை வண்ணநிலவன் மிக அற்புதமாக எழுதியிருக்கிறார். இது போன்ற நட்புகளால்தான் இன்னும் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. நமக்கும் இந்நாவல் வாசித்ததும் ரஞ்சி போல ஒரு தோழி கிடைக்க மாட்டாளா என்று ஏங்குமளவு அவர்கள் நட்பை உயர்வாக படைத்திருக்கிறார். பிலோமிக்கு ரஞ்சியைப் பார்த்தாலே சந்தோஷம்தான்.

கோயிலின் அமைதியில் தன்னுடைய வியப்பை வெளியிட முடியாமல் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘’ரஞ்சி, ரஞ்சி நீயா?’’ என்றாள். அதுவரையிலும் அவள் மனசிலிருந்த எல்லாம் மறந்து போய் புதிய சந்தோஷம் அவளைத் தேடி வந்தது. இந்த ரஞ்சியைப் பார்த்தாலே போதும். சந்தோஷம்தான். ரஞ்சியைப் பார்த்துவிட்டு யார்தான் சந்தோஷப்பட முடியாது? ரஞ்சி என்றாலே சந்தோஷம்.

பிலோமியின் அன்பில் நனைந்து நெகிழ்ந்து போயிருக்கும் ரஞ்சியின் மனநிலையை பதிவு செய்வதோடு உலகில் எல்லோரும் அன்பானவர்கள் என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்கிறார் வண்ணநிலவன்.

ரஞ்சி உட்கார பாய்த் தடுக்கை எடுத்துப் போட்டாள். ரஞ்சியின் கையைப் பிடித்து உட்கார வைத்தாள். அந்தத் தோழி பிலோமியிடம் ஒரு குழந்தையைப் போல, அவளுடைய பிரியத்துக்கு முன்னால் அடக்கத்துடன் உட்கார்ந்தாள். பிலோமி அவளிடம் பழைய நாட்களை நினைவு கொண்டபடி பேசிக்கொண்டே பால் இல்லாமல், அவளுக்குப் பிடித்தமான சூட்டில் காபி போட்டுக் கொடுத்தாள். ரஞ்சி அவளுடைய அன்பில் நனைந்து போய் வார்த்தையாடாமல் அதை வாங்கிக் குடித்தாள். பிலோமி நீட்டிய கையைப் பிடித்துக்கொண்டே கஷ்டப்பட்டு எழுந்து புறப்பட்டாள். ரஞ்சி, பிலோமியுடைய கையைப் பிடித்துக்கொண்டபோது, ரஞ்சிக்கு நெஞ்சே கீழே விழுந்துவிட்டது மாதிரி இருந்தது. அந்தக் கை எவ்வளவு நேசத்தை வாரிக் கொடுக்கிற கை. இந்த ஸ்நேகமெல்லாம் என்ன விலை பெறும்? வீட்டுக்கு வெளியே ஆர்ப்பரிக்கிற கடலையே கை நீட்டிக் கொடுத்தால்கூட தகுதியானதுதானா? இதெல்லாம் எப்படித் தானே விளைகின்றன? மனுஷர்களுக்குள்ளே மிகவும் கொடியவர்களென்று சொல்லுகிறோமே அவர்களுக்கும் இது போல ஒரு ஸ்நேகிதம், இதுபோல ஒரு நேயமான கையை அறிமுகமில்லாமலா இருக்க முடியும்? இதெல்லாம் எவ்வளவு பரந்தது? ஆழமானது; அந்தக் கடலையே போல இவைகளிலெல்லாம்தான் வாழ்வின் பிடிப்புகள் பிரித்துப் போட இயலாதபடி மாயமாய் பிணைந்துக் கிடக்கின்றன. எவ்வளவு கொடுமையானதாக வாழ்க்கை வருத்தினாலும் இங்கே யாரும் சாகப் பிரியப்படவில்லை. அதற்கு இந்த ஸ்நேகங்களும் பிரியங்களும்தான் காரணம்.

மீன் தரகனாராக வரும் சாயபுக்கு பிலோமி மீதும், மிக்கேல் குடும்பத்தின் மீதும் பாசம் அதிகம். வேற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்த போதும் அவர்கள் குடும்பத்து மனிதர்களில் ஒருவராகவே நடந்து கொள்கிறார். பிலோமியும் தனியொரு உலகம் போனால்கூட தரகனார் போன்ற அன்பு கொண்ட மனிதர்கள் அங்கு இருக்க வேண்டுமென்று ஓரிடத்தில் நினைக்கிறாள்.

“மோளுக்கு என்ன வேண்டும்னாலும் எங்கிட்ட வந்து சொல்லு. இந்த முஸல்மான் ஒருத்தன் உசிரோட இருக்க வரைக்கியும் ஒன்னயக் கண் கலங்க வுடமாட்டேன்” என்று பிலோமிக்கு ஆறுதல் சொன்னார்.

வல்லத்தின் மீது பாசம் கொண்ட குரூஸ் மிக்கேல் அதை ஒரு சூழலில் விற்றுவிட்டு பித்துபிடித்துப்போவதைப் பார்க்கும் போது நமக்கே பரிதாபமாகிவிடுகிறது. சமீபத்தில் ஒரு பயணத்தின் போது கடற்கரைக்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. அப்போது, கரையோரமிருந்த கட்டுமரம் ஒன்றின் மீது படுத்துக்கொண்டு வானத்தில் நிலவைப் பார்த்துக்கொண்டு அலையின் ஓங்காரத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எழுந்து வர மனமேயில்லை. இந்நாவலில் பிலோமி தன் துக்கத்தை அலை ஓசையில்தான் மறக்கிறாள். அலையின் ஓசை எல்லாவற்றையும் மறக்கச் செய்யும் வல்லமை கொண்டது.

பிலோமிக்கு எல்லாம் கசப்பாக இருந்தது. கசப்பான, எதிலும் ஈடுபட முடியாத அனுபவங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கின்றன. வானத்தை வெறித்துப் பார்த்தாள். கூட்டம் கூட்டமாக நீர்க்காகங்கள் போய்க் கொண்டிருந்தன. பெரிய ராஜா கழுகுகள் கடல் பக்கத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. கழுகுகள் கடல் பக்கத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கடலினுடைய இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சலில்தான் அவளுடைய மனசு ஈடுபட்டது. அவளுக்குச் சங்கடமாக இருக்கும் போதெல்லாம் அந்த ஊரில் எந்த மூலையில் இருந்தாலும் கேட்க முடிகிற கடலின் ஓய்வற்ற இரைச்சலில்தான் அவளுடைய எல்லா நினைவுகளும் வற்றிப்போய் மனசு வெறுமையாகி இருக்கிறது. அப்போது அந்தக் கடல் கண் முன் வரும். எத்தனை எத்தனை தோற்றங்கள். வல்லங்களையும் படவுகளையும் காலையில் கரைக்குக் கொண்டுவருகிற கடல்; பறையக்குடி பிள்ளைகளுக்காகச் சிப்பிகளையும் சின்னச் சங்குகளையும் கரையில் நுரையுடன் கொண்டு வந்து தள்ளுகிற கடல்; அவளுடைய பால்யத்தின் அக்காள் அமலோற்பவ மேரியுடன் அப்பச்சியுடைய வல்லம் கரைக்கு வருகிறதைப் பார்த்துக் கூடையுடன் காத்திருந்த கடல் – இப்படி ஒவ்வொன்றாய் அவளுக்கு நினைவுக்கு வரும்.

வண்ணநிலவனின் கடல்புரத்தில் வாசித்துவிட்டு எங்க அப்பா பொக்கிஷம் என்றார். எங்க அம்மாவுக்கு இந்நாவலில் வரும் சிறுகதாபாத்திரமான டாரதி மூலம் அவருடைய ஆசிரியை டாரதி ஞாபகம் வந்துவிட்டது. ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்தும் தனியொரு பதிவே எழுதலாம். அந்தளவு ஒவ்வொருவரும் நம் மனதில் எளிதாக இடம் பிடித்து விடுகிறார்கள். வண்ணநிலவன் முன்னுரையில் சொல்வது போல ‘எல்லோரும் உயர்வானவர்கள்தான்’ என்ற எண்ணம் வாசித்ததும் நமக்கும் தோன்றுகிறது. பார்க்கப் பார்க்க சலிக்காத விசயங்களில் கடலும் ஒன்று. அதுபோல, வாசிக்க வாசிக்க சலிக்காத நூல்களில் ‘கடல்புரத்தில்’ நாவலும் ஒன்று.

எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள்தான். மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளோ இழந்தாலும் பெறுகிறதற்கும் எதாவது இருந்து கொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, ‘எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம்’ என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது; உண்மையோடு நெருங்கிய சம்பந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்களிடம் பொய்சொல்ல மாட்டான். கலைக்குப் பொய் ஆகாது.                                                                          

-வண்ணநிலவன்

கடல்புரத்தில், கிழக்கு பதிப்பகம், 75 ரூபாய்

நெய்தல்நில மக்களின் வாழ்க்கை குறித்து நான் வாசித்த முதல் நாவல் ராஜம் கிருஷ்ணனின் அலைவாய் கரையில், அதற்கடுத்து ஜெயமோகனின் கொற்றவையில் நெய்தல் பகுதி, வறீதையாவின் நெய்தல் சுவடுகள் எனும் கட்டுரைத்தொகுப்பு, கடல்புரத்தைச் சேர்ந்த ஜோ டி குரூஸின் ஆழி சூழ் உலகு, தோப்பில் முகமது மீரானின் ஒரு கடலோர கிராமத்தின் கதை, ஆ.சிவசுப்ரமணியனின் உப்பிட்டவரை கட்டுரைத்தொகுப்பு. சமீபத்தில் தான் கடல்புரத்தில் வாசித்தேன். இவ்வளவு நாள் வாசிக்காமல் போய்விட்டோமே என எண்ணுமளவிற்கு என்னை ஈர்த்த நாவல். வண்ணநிலவனின் தாசனாகவே மாறிவிட்டேன்.

வண்ணநிலவனைக் குறித்தும், அவரது சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள் வாசிக்க வண்ணநிலவனின் வலைதள முகவரி இங்கே.

சாரல்விருது வண்ணநிலவனுக்கும், வண்ணதாசனுக்கும் இந்தாண்டு வழங்கப்படுகிறது. தம் எழுத்தின் மூலம் நம் மனதிலுள்ள கவலைகளை, கசடுகளை அழித்து அன்பைப் பாய்ச்சுபவர்கள். தாமிரபரணியின் ஈரத்திலும், குற்றாலத்தின் சாரலிலும் நம்மை நனைய வைப்பவர்கள். நம் வாழ்வின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யும் படைப்பாளிகள். இருவரையும் வணங்கி மகிழ்கிறேன்.

படங்கள் வண்ணநிலவன் தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. சுல்தான் அவர்களுக்கு நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
 1. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  பயனுள்ள பகிர்வு
  உங்களுடன் இணைந்து நானும் வண்ண நிலவன் அவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்

 2. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  மிகஅருமையான கதை. வண்ணநிலவன் மிக அடக்கமாக ஏதோ எழுதினேன். அதை
  இவ்வளவு பாராட்டுகிறார்கள் என்று கூறுகிறார்.அவருக்கு இத்துணை அடக்கம்
  எளிமை கூடாது. பகிர்வுக்கு நன்றி. நேர்மையானபதிவு வாழ்த்துகள்

 3. தொப்புளான் சொல்கிறார்:

  முன்னொரு காலத்தில் சென்னைத் தொலைக்காட்சியின் மண்டல ஒளிபரப்பில் வாராந்திர தொடராக வந்த கதைதானல்லவா? லிவிங்ஸ்டன் சினிமாவுக்கு வருமுன் நடித்தது? அது வெளிப்புறத்தில் (அவுட்டோர்) எடுக்கப்பட்டதே ஒரு புரட்சிகரமான விஷயமாகத் தெரிந்தது.

  அந்த நாடகத்தில் நாம் “காப்பி” என்று சொல்லுவதை அவர்கள் “கோப்பி” என்று சொல்லுவார்கள் என்பதும், செவ்வாய்கிழமை ஒருமணிநேர நாடகம் உள்ளிட்ட எல்லாவற்றிலும் குணச்சித்திர வேடம் ஏற்கக்கூடியவர் அதிலும் நடித்திருந்தார் என்பதுவும்தான் நினைவில் இருக்கிறது.

  கொண்டாட்டமாகவோ, போராட்டமாகவோ இருக்கும் வாழ்வில் அன்பும், நம்பிக்கையும் சுரப்பதும், கசிவதும், அலைபுரள்வதும் மகிழ்வான விஷயங்களே!

 4. தொப்புளான் சொல்கிறார்:

  இம்மாத (ஜனவரி ’12) தீராநதி இதழில் அ.ராமசாமி அவர்களும் கடல்புரத்தில் பற்றிய சிறப்பான அலசலை வழங்கி அதனூடே தமிழ் நாவல் நவீனமான வரலாறு, வண்ணநிலவனின் எழுத்துச் சிறப்பு பற்றியெல்லாம் எடுத்துரைத்துள்ளார்.

 5. அப்பாதுரை சொல்கிறார்:

  வண்ணநிலவன் படித்ததேயில்லை. அறிமுகத்துக்கு நன்றி.

 6. ramakrishnan சொல்கிறார்:

  அறிமுகத்துக்கு நன்றி.
  வண்ண நிலவன் அவர்களுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்கிறேன்.

 7. வணக்கம்,

  உங்கள் கடல்புரத்தின் பார்வை மிகவும் அருமை.. உங்களுக்கு தெரிந்தது ஒன்றுமில்லை.. மதுரையைப் பற்றி அழகாக எழுதி வருகிறீர்கள்..

  ” ஆதியில் மதுரை கடற்கரையோரமாக இருந்ததாக சொல்வார்கள். பாண்டியர்கள் கடல்புரத்தை சேர்ந்தவர்கள்தானே ”

  மதுரை கடல் அருகில் இல்லை. மதுரையை ஆண்டவர்களான பாண்டியர்கள் கொற்கையிலிருந்து வந்தவர்கள்தான். இப்போது ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை வாழ்ந்து வரும் மீனவர்களான பரதவர்கள் தான் பாண்டிய வம்சத்தை தோற்றுவித்தவர்கள். மீனாட்சி அம்மன் கோவிலும் அவர்களால்தான் கட்டப்பட்டது என்று கூறுவர். பாண்டிய மன்னர்களின் சின்னமாக மீன் வைக்கப்பட்டதும் அதன் காரணமாகத்தான்.

  பரந்து விரிந்து கிடக்கும் கடல் வாழ்க்கையைப் பற்றி பதிவிட்டர்கள் குறைந்த பேரே.. அவர்களில் வண்ண நிலவன் மறக்க முடியாதவர்.. முடிந்தால் அவருடைய ரெய்னீஸ் ஐயர் தெருவும், கம்பா நதியும் படித்து விட்டு உங்கள் எண்ணங்களை பதிவிடுங்கள்.. காலத்தால் மறக்க முடியாத கலைஞன் வண்ணநிலவன் அவர்கள்..

 8. kesavamani சொல்கிறார்:

  நல்லதொரு பதிவு. வண்ணநிலவனின் கடல்புரத்திலும் கம்பாநதியும் தமிழின் சிறந்த நாவல்கள். இரண்டையும் வாசிக்காமல் காலம் கடத்துவது சரியல்ல என்று தங்கள் பதிவைப் பார்த்ததும் உணர்கிறேன். தற்போது கையிலிருக்கும் “புலி நகக்கொன்றை“யை வாசித்ததும் இவை இரண்டையும் வாசிக்க வேண்டும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s