திரும்பிப்பார்க்கிறேன் – 2011

Posted: திசெம்பர் 28, 2011 in பார்வைகள், பகிர்வுகள்

மறந்து விடுதலும் ஒருவகைச்

சுதந்திரம்தான்!

நினைவு கூர்தலும் ஒருவகைச்

சந்திப்புதான்!  

-கலீல் கிப்ரான்

திரும்பிப்பார்க்கும்போது எல்லாமே அழகாகத்தானிருக்கிறது. காலம் மிகப்பெரிய மருத்துவன். கவலைகளையும், கசடுகளையும் மறக்கச்செய்யும் மாமருந்து அவனிடம்தானிருக்கிறது. நினைத்துப்பார்க்கும் போது 2011 மிக முக்கியமான வருடமாகத்தானிருக்கிறது. ‘நினைத்தாலே இனிக்கும்’ இந்த வருட நினைவுகளை இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

தெப்பத்திருவிழா, கிராமதெய்வத்திருவிழா, சித்திரைத்திருவிழா, தேர்த்திருவிழா, புத்தகத்திருவிழா, சந்தனக்கூடுத்திருவிழா என வாழ்க்கையே கொண்டாட்டமாகத்தானிருக்கிறது. “வாழ்க்கை ஒரு திருவிழா, அதைக் கொண்டாடுங்கள்” என்று ஓஷோ சொன்னது நினைவுக்கு வருகிறது. பசுமைநடை, தமிழ்மணநட்சத்திரவாரம், மதுரைப்பதிவர்களுடன் சந்திப்பு என நிறைய மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழ்ந்த வருடம். தொ.பரமசிவன் அய்யாவின் உலகமயமாக்கப் பின்னணியில் பண்பாடும் வாசிப்பும் என்ற உரையை எனது நாட்குறிப்பேட்டில் தொகுத்து வைத்திருந்ததை பதிவேற்றியிருந்தேன். அந்த உரை அம்ருதா இலக்கியமாத இதழில் முழுவதும் வந்தது பெருமகிழ்வைத் தந்தது.

நான்மாடக்கூடலாம் மதுரை குறித்து நிறைய பதிவிட வேண்டும் என்று விரும்புகிறேன். மதுரையில் சமணம் குறித்த பதிவுகள் இன்னும் சிறப்பாக, அதிகம் பயணிக்கவும், வாசிக்கவும் வேண்டும். இப்பதிவிற்கு பசுமைநடை பெரும் துணையாக உள்ளது. அதை சிறப்பாக நடத்தும் அ.முத்துக்கிருஷ்ணனுக்கும், தொல்லியல்அறிஞர் சாந்தலிங்கம் அவர்களுக்கும் நன்றிகள் பல. பசுமைநடை கீழ்குயில்குடி, அரிட்டாபட்டி, கொங்கர்புளியங்குளம், மாங்குளம் மீனாட்சிபுரம், வரிச்சூர்குன்னத்தூர், திருப்பரங்குன்றம், முத்துப்பட்டி பெருமாள்மலை என தொடர்ந்து கொண்டிருக்கிறது. பசுமைநடைப் பயணத்தில் மாங்குளம், வரிச்சூர், திருப்பரங்குன்றம் பற்றி இன்னும் பதிவிடாமல் இருக்கிறேன். என்னுடைய சோம்பேறித்தனத்தை எண்ணி வெட்கமாக இருக்கிறது. மேலும், ஏற்கனவே சென்ற யானைமலையைக் குறித்தும் பதிவிடாதது வருத்தமாக இருக்கிறது. அடுத்த ஆண்டில் இவை அனைத்தையும் ஆவணப்படுத்த வேண்டுமென்று இருக்கிறேன். மதுரையும் தமிழும் அருளட்டும்.

தூங்காநகரில் உற்சவவிழா, நாட்டுப்புறப்பாடல்களும் விடுகதைகளும், சித்திரைத்திருவிழா, அழகனைக்காண அலைஅலையாய் கூட்டமும் திருமாலிருஞ்சோலையில் திருத்தேரோட்டமும், நாட்டுப்புறக்கலைகள் அகமும் புறமும், மறைந்துவரும் விளையாட்டுகளும் மறக்க முடியாத நினைவுகளும் என கொஞ்சம் பதிவுகளே நாட்டுப்புறவியலின் கீழ் எழுதியிருக்கிறேன். அடுத்தாண்டு நாட்டுப்புறவியல், மதுரையில் சமணம் குறித்த பதிவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

புத்தகவாசிப்பில் இந்த வருடம் மறக்க முடியாத அளவிற்கு மகிழ்வைத் தந்துள்ளது. நாற்பதிற்கும் மேற்பட்ட நல்ல புத்தகங்கள் வாசித்தேன். எஸ்.ராமகிருஷ்ணனின் நாவல்களான துயில், உபபாண்டவம், உறுபசி, யாமம், நெடுங்குருதி என ஐந்தையும் இந்தாண்டுதான் வாசித்தேன். வண்ணநிலவனின் கடல்புரத்தில், கம்பாநதி வாசித்தது மறக்க முடியாத அனுபவம். ஜி.நாகராஜனின் ஆக்கங்கள் முழுவதும் வாசித்தேன். நிறைய கட்டுரைத்தொகுப்புகள், சிறுகதைகள், கவிதைத்தொகுப்புகள் வாசித்தேன். உறைமெழுகின் மஞ்சாடிப்பொன் இந்தாண்டு வாசித்த கவிதைத்தொகுப்பில் மிகவும் பிடித்திருந்தது. மர்ஜானே சத்ரபி எழுதிய “ஈரான்” எனும் படக்கதைப் புத்தகம் முற்றிலும் வித்தியாசமானது. மதுரையை மையமாகக் கொண்டு வந்துள்ள சு.வெங்கடேசனின் ‘காவல்கோட்டம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன். அந்நாவலை எப்படியாவது அடுத்தாண்டு வாசித்துவிட வேண்டுமென்றிருக்கிறேன்.

தமிழ்மண நட்சத்திர வாரம் மூலம் நிறைய புதிய நண்பர்கள் சித்திரவீதியில் தடம்பதித்து சென்றது மகிழ்வான விசயம். மன்மதன் அம்பு, ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, வாகை சூட வா என 2011ல் பார்த்த நான்கு படங்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த வருடம் வம்சி சிறுகதைப் போட்டிக்காக எனது முதல் சிறுகதையான ‘அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு’ எழுதினேன்.  அணுஉலைக்கு எதிராக தனியொரு பதிவு எழுத வேண்டுமென்று நினைத்தேன். புளூட்டோ & யுரேனஸிலிருந்து இன்னும் போதுமான நிதி வராததால் இன்னும் எழுதாமல் இருக்கிறேன்.

மதுரை பதிவர்களை சந்தித்தது தித்திப்பான விசயம். தருமி அய்யாவைத்தான் முதலில் சந்தித்தேன். அடுத்து வரிச்சூர் பசுமைநடையின் போது மதுரை சரவணன் அவர்களை பார்த்தேன். அன்றே, அவருடன் ‘வலசை’ சிற்றிதழ் குறித்த கலந்துரையாடலுக்கு கீழ்குயில்குடி சென்றபோது கார்த்திகை பாண்டியன் மற்றும் ஸ்ரீ’யை சந்தித்தேன். அன்று மாலை நடந்த எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகவெளியீட்டுவிழாவில் சீனா அய்யாவைச் சந்தித்தேன். இராதாகிருஷ்ணன் அய்யாவை அவரது இல்லத்தில் சந்தித்தேன். பிறிதொரு நாள் சீனா அய்யா வீட்டில் மதுரை பதிவர்கள் எல்லோரும் சந்தித்தபோது நா.மணிவண்ணன், சோலையழகுபுரம் பாலாஜி மற்றும் கவிஞர் ஆத்மார்த்தியைப் சந்தித்தேன். ஈரோடு பதிவர் சங்கமத்தில் தமிழ்வாசியைப் பார்த்தேன். மேலும், பெங்களுர் ஆர்.கோபியையும் சந்தித்தேன். எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய பதிவு ஒவ்வொன்றும் சிறப்பாக வர உதவும் சகோதரர்க்கும், நண்பர்களுக்கும், அன்பு கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து என்னுடைய பதிவை வாசித்தும், மறுமொழிகளிட்டு உற்சாகமும், ஊக்கமும் தரும் அனைவருக்கும் நன்றிகள் பல. வாசிக்கப் புத்தகங்கள் தந்து உதவிய அனைவருக்கும் நன்றி. வண்ணதாசனின் பொருத்தமான வரிகளோடு இப்பதிவை நிறைவு செய்கிறேன்.

வாழ்ந்ததைக் காட்டிலும் வாழவேண்டியது அதிகமிருப்பதாகவும் பெற்றதைவிட இழந்துவிட்டது அனேகம் என்றும் நான் நினைத்ததில்லை. ஆனால் எழுதி முடிக்கிற ஒவ்வொரு சமயமும் எழுதியதைக் காட்டிலும் எழுத வேண்டியது அதிகமாக இருப்பது போலச் சமீபத்தில் தோன்றுகிறது. நேற்றுப் புரிந்ததைவிட இன்று வாழ்வையும் நேற்று எழுதியதைவிட இன்று மனிதர்களையும் சரியாகப் புரியவும் எழுதவும் முடிகிறது       

– வண்ணதாசன்.

பின்னூட்டங்கள்
 1. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக் காரன் – 2011ல் சாதித்ததை விட வருகிற புத்தாண்டில் அதிகம் சாதிக்க நல்வாழ்த்துகள். காவல் கோட்டம் என்னிடம் இருக்கிறது – படிக்கலாமே – தொடர்பு கொள்க – வாழ்க்கை ஒரு திருவிழா – அதைக் கொண்டாடுவோம். கலீல் கிப்ரான் கூறியதும் வண்ண நிலவன் கூறியதும் இங்கு குறிப்பிட்டமை பொருத்தமாக இருக்கிறது. அம்ருதா இலக்கைய மாத இதழில் உரை வெளி வந்தமைக்கு பாராட்டுகள். புத்தாண்டில் முதல் நாளன்று விடுமுறை தானே – அலை பேசியில் பேசி விட்டு வீட்டிற்கு வாயேன். மதுரைப் பதிவர்களை ஒருவர் ஒருவராக சந்தித்தது நன்று. இன்னும் இருக்கிறார்கள். சந்திப்போம். இடுகை எழுதும் பொறுமைக்குப் பாராட்டுகல் – இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. N.Rathna Vel சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  வாழ்த்துகள்.

 3. florajeevava சொல்கிறார்:

  நன்று…………!

 4. சீனா அய்யாவிற்கு நன்றிகள் பல. ‘காவல்கோட்டம்’ நாவலை முடிந்தால் நாளை வந்து வாங்கிக்கொள்கிறேன். எப்படியாவது அந்நாவலை வாசித்துவிட வேண்டுமென்று இருந்தேன். தங்கள் மறுமொழி நெஞ்சில் பால் வார்த்தது. மதுரை பதிவர்கள் எல்லோரும் அடுத்தாண்டு முதலாவது அடிக்கடி சந்திக்க முயற்சிப்போம். மறுமொழியிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

 5. ramji yahoo (@ramjiyahoo) சொல்கிறார்:

  ஜி நாகராஜனின்
  படைப்புக்கள் , புத்தகம் பெயர், பதிப்பாளர் பெயர்களுடன் பகிர்ந்தால் மிகவும் உதவியாக இருக்கும்

  • ஜி.நாகராஜன் ஆக்கங்கள், காலச்சுவடு பதிப்பகம், விலை.450 ரூ.
   தொகுப்பாசிரியர் ராஜமார்த்தாண்டன். இந்நூலில் ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே.., குறத்தி முடுக்கு’ நாவல்களும் ஜி.நாகராஜன் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் கவிதைகள், உரைநடை மற்றும் ஆங்கிலப்படைப்புகளும் உள்ளன. ஜி.நாகராஜனின் வாழ்க்கைக்குறிப்பு மற்றும் சுந்தர ராமசாமி, சி.மோகன் எழுதிய பதிவுகளும் பின்னிணைப்பாக உள்ளன. அற்புதமான புத்தகம். ராம்ஜி அவர்களுக்கு நன்றி.

 6. dharumi சொல்கிறார்:

  31 தேதி கூட முடியுமா? முயற்சித்துப் பாருங்களேன்……

 7. தொப்புளான் சொல்கிறார்:

  //புளூட்டோ & யுரேனஸிலிருந்து இன்னும் போதுமான நிதி வராததால் இன்னும் எழுதாமல் இருக்கிறேன்//

  அப்துல்கலாம் கூடங்குளம் விஷயத்தில் நடந்துகொண்டது குறித்து காலச்சுவடு இதழில் பா.செயப்பிரகாசம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதுபற்றி ஜெயமோகனிடம் ஒருவர் கேட்கிறார். அதற்கு பதிலளிக்கையில் ஜெயமோகன் முத்துகிருஷ்ணனை “விலைபோய்விட்ட வசைபாடி”களில் ஒருவர் என்கிறார். நீங்கள் “விலைபோய்விட்ட வசைபாடிகளின் விலைவந்துசேராத துதிபாடி”யோ?

  இது தொடர்பான பொது அறிவு வினா ஒன்று: போராட்டங்களுக்கு நேரடி அன்னிய முதலீடு எத்தனை சதவீதம் அளவுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது? தவளை நாராயணனுக்குத்தான் வெளிச்சம்.

 8. radha22 சொல்கிறார்:

  நல்ல பதிவு.புதிய ஆண்டில் உங்கள் பதிவுகள் அலைஅலையாகத் தொடர்ந்து
  வந்து கொண்டேயிருக்க வாழ்த்துகின்றேன்.

 9. அப்பாதுரை சொல்கிறார்:

  [புத்தாண்டு வாழ்த்துக்கள்]

 10. jaghamani சொல்கிறார்:

  . ‘நினைத்தாலே இனிக்கும்’ இந்த வருட நினைவுகள் ரசிக்க வைத்தன.. பாராட்டுக்கள்..

 11. kashyapan சொல்கிறார்:

  நண்பரே! மதுரை அருகில் சாமநத்தம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அதுதான் சமணர் ரத்தம் என்ற பெயரில் சமனர்கள் கழுவேற்றப்பட் ட இடம் என்பார்கள். மதுரையில் 40 வருடம் இருந்தேன் . அங்கு சென்று தகவல் சேகரிக்க முயன்றேன் முடியவில்லை.. நீங்களாவது போய் பார்த்து எழுதுங்கள்.—காஸ்யபன்.

 12. Ananthi சொல்கிறார்:

  http://govindarj.blogspot.com/2012/01/blog-post_05.html

  இப்போ தான் இந்த செய்தி படிச்சுட்டு உடனே உங்களை வாழ்த்தி இந்த கம்மென்ட்…ரொம்ப மகிழ்ச்சி சுந்தர்..மதுரை ரசிகனான உங்களுக்கு இந்த மதுரைக்காரியின் வந்தனங்கள்…விகடன் பொருத்தமான நபரை தன் வரவேற்ப்பு அறையில் போட்டு தனக்கும்,மதுரைக்கும் பெருமை சேர்த்து கொண்டது…சுந்தர்…புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்…

 13. சுட்டபழம் சொல்கிறார்:

  ஆப்பி நியு இயர் மச்சி 😉 இப்படியே நிறைய பதிவு போட வாழ்த்துக்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s