ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வரும் ஊர் மதுரை அலங்காநல்லூர்தான். அலங்காநல்லூருக்கும், அழகர்கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. திருமலைநாயக்கர் ஆட்சிக்காலத்திற்கு முன்பு சித்திரைத் திருவிழாவிற்கு வரும் அழகர் இந்த ஊர் வழியாகத்தான் வந்து தேனூர்க்கருகிலுள்ள வைகையாற்றில் இறங்கியிருக்கிறார். அழகர்கோயிலிலிருந்து வரும் அழகருக்கு இந்த ஊரில் வைத்து அலங்காரம் செய்ததால் அலங்காரநல்லூர் என்று அழைக்கப்பட்டிருக்கிறது. பின்பு இப்பெயர் மருவி ‘அலங்காநல்லூர்’ ஆகி விட்டது.
மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்றும், பாலமேட்டில் மாட்டுப்பொங்கலன்றும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாட்டுப்பொங்கலுக்கு மறுநாள் நடத்தப்படுகிறது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருடந்தோறும் யாருக்காக நடத்தப்படுகிறது தெரியுமா? இந்த ஊரின் காவல்தெய்வமான முனியாண்டிக்காகத்தான் நடத்தப்படுகிறது.
முனியாண்டி மலையாள தேசத்திலிருந்து மதுரைக்கு வந்த காவல் தெய்வம். மலையாளதேசத்தில் முனியாண்டியின் அலப்பறை தாங்காமல் அவருடைய அப்பா ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டார். அந்த பெட்டி கரையொதுங்கிய இடம் அலங்காநல்லூர். அதைப் பார்த்தவரிடம் முனியாண்டி தான் இங்கேயே இருந்து மக்களைக் காப்பதாக கூறியிருக்கிறார். அவரை பெட்டியில் வைத்து பார்த்த குடும்பத்தினர்தான் இங்கு காலம்காலமாக பூசாரியாக இருந்து வருகின்றனர். இதுபோன்ற கதைதான் கருப்புசாமிக்கும் சொல்லப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு ஒரு வருடம் நடத்தாவிட்டாலும் அந்த ஊர் மக்களுக்கு அதிக பிணிகள் ஏற்படுமென நம்பிக்கை நிலவுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஜல்லிக்கட்டைத் தடை செய்ய ஊரில் காலரா பரவியுள்ளது. பின் வழக்கம் போல தொடர்ந்து நடத்தியுள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன்பு கூட ஜல்லிக்கட்டைத் தடை செய்ய சட்டம் வந்தபோது அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த உதயசந்திரன் தன் பொறுப்பேற்று சிறப்பாக நடத்திக்கொடுத்தார்.
முனியாண்டி மிகவும் துடியான தெய்வம். நான் மதுரை முனிச்சாலையில் பிறந்தவன். எனவே, முனியாண்டி மீது எனக்கு அதிகப்பிரியம் உண்டு. முனி என்றாலே மக்களுக்கு அச்சமும் உண்டு. ஒருவரை முனி பிடித்துக்கொள்ளும் என்று அஞ்சுவார்கள். மதுரை மொட்டக்கோபுரம் முனியாண்டியை நிறைய பேர் வணங்கி வருகிறார்கள். சித்திரை வீதிகளில் சுற்றும்போது நானும் முனியாண்டியை வணங்கிச் செல்வேன். முனியாண்டி சொல்லி வரங்கொடுப்பவர் என்று கூறக் கேட்டிருக்கிறேன்.
அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் தென்னந்தோப்புகள் சூழ உள்ளது. முன்பு இப்போது இருப்பதைவிட நிறைய மரங்கள் இக்கோயிலில் அடர்ந்திருந்தன.
கோயிலினுள் நுழைந்தவுடன் இடதுபுறம் சேமங்குதிரையில் முனியாண்டி அழகாக அமர்ந்திருக்கிறார். மற்ற கோயில்களில் எல்லாம் குதிரையின் முன்னங்கால்கள் இரண்டு பூதங்களின் தலையில் படும்படி அமைத்திருப்பார்கள். இங்குள்ள சேமங்குதிரை சற்று வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது. குதிரையின் கால்கள் அந்தரத்தில் மிதப்பது போலிருக்கிறது. பூதகணங்கள் இருவரும் கையில் கொம்பு போன்றதொரு வாத்தியக்கருவியை வைத்திருக்கின்றனர்.
குதிரைக்காலிற்கு நடுவில் கிருஷ்ணன் மிக அழகாக நின்று கொண்டிருக்கிறார். குதிரையின் கீழ் ஒரு புறம் மேளவாத்தியம் வாசிக்கும் ஆண்சிலைகளும், மறுபுறம் நர்த்தனம் ஆடும் பெண்சிலைகளும் உள்ளது.
குதிரை வாலின் கீழ் இங்கு வால்தாங்கி சிலை இல்லை.
கோயிலில் விரித்த சடையுடன் மூலவராக வீற்றிருக்கும் முனியாண்டியைப் பார்த்தாலே மேனி சிலிர்த்துவிடும். அந்தளவு துடியோடு இருக்கிறார். இடதுபுறம் இந்தாண்டு வந்த உற்சவர் சிலை இருக்கிறது. வருடந்தோறும் திருவிழாவின் போது புதிதாக முனியாண்டி சிலைகளை செய்கின்றனர். கோயிலின் பின்னால் கடந்த வருடங்களிலிருந்த முனியாண்டி சிலைகள் உள்ளன. இப்போது கோயிலில் மூலவர் இருக்குமிடத்தில் டைல்ஸ் எல்லாம் போட்டு மண்டபம் அமைத்து உள்ளனர். எனக்கென்னவோ, காவல்தெய்வங்கள் எல்லாம் மரத்தின் கீழ் வெயிலிலும், மழையிலும் இருப்பதுதான் சரியாகப் படுகிறது.
மதுரையில் இதுபோல் உள்ள காவல்தெய்வங்களை எல்லாம் போய் பார்த்து பதிவு செய்ய வேண்டும் என்றிருக்கிறேன். மதுரை அருளட்டும்.
வருடந்தோறும் இந்த ஊரில் முனியாண்டி கோயிலில் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அப்போது எருதுகட்டும் நடைபெறுமாம். இந்த ஊரில் திருவிழாவின் போது இரவு பூசாரி ஊரைச்சுற்றி வரும் போது யாரும் வெளியே வரமாட்டார்களாம். வாய்ப்பிருந்தால் இந்தாண்டு செல்ல வேண்டும்.
(அலங்காநல்லூர் பெயர்க்காரணம் குறித்து ஆறுமுகம் அவர்கள் எழுதிய மதுரைக்கோயில்களும் திருவிழாக்களும் என்ற நூலில் வாசித்தேன்.
முனியாண்டி குறித்து மணா எழுதியதை நட்பூ தளத்தில் வாசித்திருக்கிறேன்.
ஆறுமுகம் அவர்களுக்கும், மணா அவர்களுக்கும் நன்றிகள் பல)
இன்றும் மதுரை மக்கள், பிறந்த குழந்தை தீட்டு கழிக்க முதல் காணிக்கை செலுத்துவது மொட்டை முனிக்குத் தான். சிறுதெய்வங்களின் கதை எப்போதும் மனதுக்கு பிடித்ததாகவே இருக்கிறது.
தங்கள் பதிவை வாசிக்கும் போதே மேனி சிலிர்த்தது உண்மை. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்.
“மதுரைக்கோயில்களும் திருவிழாக்களும்” நூல் அறிமுகத்திற்கு நன்றி. வாங்க வேண்டும்.
அருமையான பதிவு.
அற்புதமான படத்தொகுப்புகள்.
முடிந்தால் ‘பௌத்தமும் தமிழும்’ படித்துப் பாருங்கள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்பின் சித்திரவீதிக்காரன் – அருமை அருமை – அலங்காநல்லூர் பெயர்க்காரணம் துவங்கி, அங்கிருக்கும் முனியாண்டி வரலாறு கூறி – முனியாண்டியை அங்கம் அங்கமாக வர்ணித்து – அத்தனை வர்ண்னைகளுக்கும் சான்றாக புகைப்படங்கள் கொடுத்து எழுதியது நன்று. இறுதியில் நன்றி கூறும் நற்றமிழர் பண்பு சிலிர்க்க வைக்கிறது. நன்று நண்று – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
பார்த்த கேட்ட தெரிந்த விடயங்களே ஆனாலும் இணையத்தில் வாசிக்கும் போது ஓர் இனம் தெரியாத மகிழ்ச்சி ……..
பாராட்டுக்கள் – மாசி வீதிக்காரன் ( முன்னாள்)
ஜல்லிக்கட்டைத் தடைசெய்வதற்காக சதைவணிகர் ஜான் ஆபிரஹாம் உள்ளிட்ட ஒரு கூட்டம் கிளம்பி வேலை செய்கிறது.
இது முழுக்க வணிக நோக்கங்களுக்காக நடைபெறுவதாகக் கூறுகிறார்கள். கட்டி வைக்கப்பட்ட சல்லிக் காசை எடுப்பதற்காக நடைபெறுகிறது என்று பெயர்க்காரணத்தை முன்னிலைப்படுத்துகிறார்கள் (பரிசுப் பொருள் சல்லிக்காசு பெறாது என்பதை மறைத்துவிடுகிறார்கள்). மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் காயம் ஏற்படுகிறதே என்று மாலைமாலையாகக் கண்ணீர் வடிக்கிறார்கள். சடங்கு என்ற பெயரில் காட்டுமிராண்டிகளாய் நடந்துகொள்கிறீர்களே என்கிறார்கள். அவர்களுக்கு நமது கேள்விகள்:
-> ஜல்லிக்கட்டு பற்றி பேசுவதற்கு முன் எல்லா திருக்கோயில்களிலும் தேவஸ்தானங்களிலும் அவதியுறும் யானைகளைக் காட்டில் சேர்ப்பியுங்கள். (சில தமிழ்நாட்டுக் கோயில்களில் ஒட்டகங்களே வைத்திருக்கிறார்கள்). தசரா விழாவுக்கு யானை எதற்கு? குருவாயூரில் யானை கொடை தருவதற்கு நீங்கள் ஏன் தடைபெறக்கூடாது?.
-> குடியரசு தின அணிவகுப்பில் குதிரைகளும், ஒட்டகங்களும் வருவதைத் தடைசெய்ய ஏன் ஒருவரும் கோரவில்லை?
-> சொல்லொணாத் துயருக்கு உள்ளாகும் காவல்துறை மோப்ப நாய்களுக்கு ஏன் யாரும் பரிந்து பேசவில்லை? கடற்கரையில் பணியாற்ற நவீன வாகனங்கள் இருக்க குதிரைப் படை வேண்டாமென்று ஏன் இதுவரை நீங்கள் சொன்னதே இல்லை?
-> கிரிக்கெட்டைவிட வணிகமயமான விளையாட்டு ஒன்றுண்டா? அதில் மனிதருக்குக் கொட்டையிலும் முகவாய்க் கட்டையிலும் அடிபடுகிறதே? அதை ஏன் முதலில் தடைசெய்யக்கூடாது?
-> குதிரை ரேஸ் பெருநகரங்களில் நடந்துகொண்டுதானே இருக்கிறது? உங்கள் எதிர்ப்புக்குரல் எதுவும் அங்கு ஒலிக்கவில்லையே?
-> இழப்பு ஏற்பட்டால் ஈடு வழங்க இருபது லட்சம் வைப்புத்தொகை கட்டி சல்லிகட்டு நடத்த நிபந்தனை. மிகச்சரி. எங்களூரில் எருதுகட்டு நடத்தாவிட்டால் சாமிகுத்தம் ஆகி ஏகப்பட்ட இழப்புகள் ஏற்படும் என்பது எங்கள் நம்பிக்கை. எருதுகட்டைத் தடைசெய்யும்போது இவ்வாறு இழப்பு ஏற்பட்டால் ஈடுசெய்ய ஒருகோடி டெபாசிட் செய்ய நீங்கள் தயாரா?
எனவே நண்பர்களே “நாங்களாக” விரும்பாதவரை இதை நிறுத்தமுடியாது. “நீங்கள்” இதில் தலையிடும் அவசியம் எதுவுமில்லை. மீறித் தலைப்போட — ச்சீ தடைபோட விரும்பினால் காயடிப்பதைப் பரிசீலிப்போம்.
அலங்காரநல்லூர் பெயரே அழகுதான் நண்பரே,,
களப்பார்வைக்கு மிக்க நன்றி…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன் பதிவிற்கு மறுமொழி அளித்த அனைவருக்கும் நன்றிகள் பல. மொட்டைக்கோபுரம் முனியாண்டி குறித்து தனியொரு பதிவு எழுத வேண்டும். ‘மதுரைக்கோயில்களும் திருவிழாக்களும்’ நூல் மதுரை பாரதி புக் ஹவுஸ் வெளியீடு. இந்நூலாசிரியர் ஆறுமுகம் மதுரைக் காவல்துறையில் பணியாற்றி வருகிறார். மயிலை.சீனி.வேங்கடசாமியின் ‘பௌத்தமும் தமிழும்’ கூடிய விரைவில் வாசித்து விடுகிறேன். அலங்காநல்லூர் முனியாண்டியை படம் எடுக்கும் போது லேசாக நடுக்கம் இருந்தது. அந்தளவு துடியுடன் இருந்தார். ஜல்லிக்கட்டு குறித்து வந்த நாவலான ‘வாடிவாசல்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதைக்குறித்து தனியொரு பதிவு எழுத வேண்டும். அனைவருக்கும் நன்றிகள் பல.
ஜல்லிக்கட்டு நேரில் பார்த்ததேயில்லை. தவறவிட்ட அனுபவங்களில் ஒன்று.
படங்களும் விவரங்களும் அருமையாக இருக்கின்றன. இப்போதை விட முன்பு கோவிலில் மரங்கள் அதிகமாக இருந்தன என்பது லேசாக வலித்தது. காவல் தெய்வங்கள் சிவன் விஷ்ணு இருவரில் யாரின் உரு?
படங்களும் பதிவும் அருமையாக உள்ளன. மிக்க நன்றி
அலங்காநல்லூர் மாடுபிடி விழா என்பதையும் தாண்டி அந்த ஊரின் வரலாற்றை தெரிந்து கொள்ளமுடிந்தது, படங்களும் அருமை
ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் சென்று பார்ப்பது அவ்வளவு உகந்ததல்ல. பெண்கள் இருப்பின் கண்டிப்பாக செல்ல வேண்டாம். ஜல்லிக்கட்டு முடியும் போது நமது குடிமகன்கள் அலப்பறை அளவிடமுடியாது. நான் கடந்த வருடம் சென்றிருந்த போது பாதியில் நிறுத்தப்பட்டது. காரணம், போலீஸ் மீது கல்லெறிந்து மண்டையை உடைத்துவிட்டனர். பதிலுக்கு போலீஸ் வீடு வீடாக சென்று தடியடி நடத்தியது. நானெல்லாம் கட்டிலுக்கடியில் ஒளிந்து கொண்டு தப்பித்தேன். வசந்த் டிவியில் நேரடி ஒலிபரப்பு உண்டு. கண்டு மகிழுங்கள் அடுத்த வருடம்.
தவறுக்கு மன்னிக்கவும். ஒலிபரப்பு அல்ல. ஒளிபரப்பு.
Super
மிக்க நன்றி ஐயா …..
நமது மண்ணின் பெருமையையும் நமது கடவுளின் அருளையும் இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கும் தங்களின் முயற்சிக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தை சமர்ப்பிக்கின்றேன்.
நீங்கள் கூறிய அலங்காநல்லூர் அருள்மிகு ஸ்ரீ முனியாண்டி சுவாமியின் சாமியாடி திரு.சடையாண்டி அவர்களின் மகன்தான் நான். எனது பெயர் ச.ராஜமுனி. நீங்கள் கூறியவற்றில் ஒன்றுமட்டும் தவறானது. முனியாண்டி சாமியின் பெட்டி கரை ஒதுங்கிய ஊர் அலங்காநல்லூர் அல்ல பெரியகுளம். இதற்க்கு பின்னல் ஒரு பெரிய கதையே இருக்கிறது.
மன்னிக்கவும்
நீங்கள் கூறும் வரலாற்றை நிறைய பேர் படிக்கின்றனர். ஆகவே நிறைய விஷயங்களை சேகரித்து பின்னர் வரலாறை கூறினால் பின் வரும் சந்ததியினர் நமது மண்ணின் பெருமையை தவறில்லாமல் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
மிக்க நன்றி ஐயா……