கலைப்பார்வையா? காமப்பார்வையா?

Posted: பிப்ரவரி 1, 2012 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

யானைமலை எங்கள் உயிர். யானைமலை எங்கள் தெய்வம். யானைமலை எங்கள் அரண். யானைமலை எங்கள் தொன்மம். யானைமலை எங்கள் வரலாறு. யானைமலை எங்கள் அடையாளம். யானைமலை எங்கள் உலகம்.

மதுரை மலைகள் சூழ்ந்த மாநகரம். இந்த ஊரில் நீங்கள் எந்தத் திசையில் பயணித்தாலும் ஒரு பெரிய மலையைப் பார்க்கலாம். யானைமலை, நாகமலை, அழகர்மலை, திருப்பரங்குன்றம், சமணமலை என நாலாபக்கமும் மலைகளை அரணாகக் கொண்டு அமைந்த உலகின் தொன்மையான நகரம், நம்ம மதுரை. மலைகளெல்லாம் மதுரைக்கு அழகாக, அரணாக இருப்பதாக எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும் வேளையில் யானைமலையை ‘சிற்பநகரம்’ என்ற கலைப்பார்வையோடு ஒரு குழு பார்க்க மனதில் கலக்கம் ஏற்பட்டது.  செவனேன்னு படுத்து மதுரையைப் பார்த்துக்கொண்டிருக்கும் யானையை எழுப்பி நிப்பாட்ட போறாங்ஙளாம். மேலும், நிறைய சிற்பங்கள் செய்து இந்த மலைப்பகுதியையே சிற்ப நகரமாக்க போறாங்ஙளாம். நகரமாக்கப்போறாங்ஙளா, நரகமாக்கப் போறாங்ஙளான்னு தெரியல.

மதுரையை கோயில்மாநகரம் என்றும் அழைப்பார்கள். சிற்பநகரக்குழுவினர்க்கு இங்கு எவ்வளவு பழமையான கோயில்கள், தர்காக்கள், தேவாலயங்கள், குடைவரைகள் உள்ளன தெரியுமா? எத்தனை ஆயிரம் சிற்பங்கள் மதுரையில் இருக்கின்றன தெரியுமா? மதுரை மீனாட்சியம்மன் கோயில் தெற்குகோபுரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சிலைகள் உள்ளன. பிறைபோல அழகாக வளைந்திருக்கும் அந்தக்கோபுரத்தை ரசித்துப்பார்க்கவே ஒரு ஆயுள் போதாது. அதைவிடவா சிற்ப நகரில் சிற்பம் அமைக்கப்போகிறீர்கள்?

மீனாட்சியம்மன் கோயில், கூடல்அழகர் பெருமாள்கோயில், ஹாஜிமார் பள்ளிவாசல், இம்மையில் நன்மைதருவார் கோயில், திருமலைநாயக்கர்மஹால், சென்மேரீஸ், இடைக்காட்டூர் தேவாலயங்கள், மருதநாயகம் கான்சாகிப் தர்கா, கோரிப்பாளையம் தர்கா, திருப்பரங்குன்றம், திருமாலிருஞ்சோலை, திருமோகூர், திருவாதவூர், நரசிங்கம் கோயில்கள், பத்திற்கும் மேற்பட்ட குன்றுகளில் காணப்படும் சமணச்சிற்பங்கள், குதிரையில் அமர்ந்திருக்கும் காவல்தெய்வங்கள் என மதுரையில் எவ்வளவோ பழமையான சிலைகளைக் கொண்ட இடங்கள் உள்ளன. இதையெல்லாம் பார்த்து சலித்துவிட்டதா? பார்க்கப் பிடிக்கவில்லையா?

சிற்பநகரம் அமைக்கும்போது யானைமலையில் இருந்து கிடைக்கும் கிரானைட்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு போகுமாம். இப்பொழுதுதான் இவர்களது ‘கலைப்பார்வை’ தெளிவாக நமக்குத் தெரிகிறது. உதாரணமாக, நான் படுத்துக்கிடந்தால் ஆறடி. நின்றால் ஒரு அடியே அதிகம். மூன்று கிலோமீட்டர் நீளத்தில் படுத்திருக்கும் யானையை எழுப்பி நிற்க வைத்தால் அரைகிலோமீட்டரில் அடங்கிவிடும். மீதியை அறுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது கலைப்பார்வையா? காமப்பார்வையா? காமாலைப்பார்வையா?

தொ.பரமசிவன் அய்யா மதுரை புத்தகத்திருவிழாவில் ‘உலகமயமாக்கல்’ குறித்த உரையில் சொன்ன வரிகள்தான் ஞாபகம் வருகிறது.

உலகமயமாக்கல் என்ற சொல்லே எனக்குப் புரியவில்லை. உலகை எப்படி உலகமயமாக்குவது? மதுரையை எப்படி மதுரை மயமாக்குவது? மதுரையை வண்ணமயமாக்கவேண்டும், ஒளிமயமாக்கவேண்டும் என்று சொல்லுங்கள். புரிகிறது. ஆனால், உலகமயமாக்கம் என்ற சொல்லே நமக்கு புரியவில்லை. நம் ஆட்சியாளர்கள் நமக்கு அளித்த நன்கொடையிது.

நானும் அதைத்தான் கேட்கிறேன்.  யானைமலையை எப்படி யானைமலையாக்குவது? யானைமலையை இப்போது பார்க்கும் போது குதிரை போலவா தெரிகிறது? எங்கிருந்து பார்த்தாலும் அழகாக யானை போலத்தானே தெரிகிறது?  இயற்கையாகவே யானை போல அமைந்த மலை அதிசயமா? அல்லது நாமாக செதுக்கி யானை மாதிரி மாற்றி வைக்கும் மலை அதிசயமா? யானைமலையை சிற்பநகராக மாற்றினால் வெளிநாட்டுக்காரர்களெல்லாம் வீடுவாசல் துறந்து, மறந்து இந்தியா வந்து விடுவார்களா என்ன?

சிற்பநகரம் அமைந்தால் சுற்றுலா பெருகும்! பொருளாதாரம் உயரும்! மக்கள் வாழ்க்கை மேம்படும்! கலைகள் வளரும்! சிற்பிகள் மகிழ்வர்! உலகமே வியக்கும்! என சிற்பநகரக்குழுவினர் சொல்வதைப் பார்த்தால் இவர்கள் சிற்பிகளா? ஜோசியக்காரர்களா? என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. கிரானைட் தொழில் வளரும், பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆவார்கள் என்று சொல்லுங்கள் நம்புகிறேன்.

எப்போதுமே மத்தியஅரசு, மாநிலஅரசுதான் நமக்கு இம்சையைக் கொடுக்கும். பேரைக் காப்பாற்ற தஞ்சாவூரிலிருந்து அரசு என்ற சிற்பி கிளம்பியிருக்கிறார். கலைப்பார்வை கொண்ட அவரிடம் சில கேள்விகள்: உங்க தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்கோயில், கங்கைகொண்ட சோழபுரம், தாராசுரம் கோயில் எல்லாம் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களாக அங்கிகரித்த கோயில்கள் என நினைக்கிறேன். அங்கெல்லாம் சிற்பங்களைப் பார்க்க தினமும் எத்தனை ஆயிரம் பேர் வருகிறார்கள்? வருபவர்கள் சிற்பங்களை ரசித்துப் பார்க்கிறார்களா? இல்லையென்றால் பிரதோஷத்துக்கு வாங்கிய பாலை நந்தி மீது ஊற்றிவிட்டு கொடுக்கிற திருநீறு, குங்குமத்தை கோயில் சுவற்றில் போட்டு போகிறார்களா? ஏன் கேட்கிறேன் என்றால் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் பலநூற்றாண்டுகளைச் சேர்ந்த சன்னதிகள், சிற்பங்கள் எல்லாம் உள்ளன. அவற்றையே யாரும் தனியாக வியந்து பார்த்து நான் பார்த்ததில்லை. வரிசையில் நின்று மீனாட்சியையும், சொக்கநாதரையும் பார்த்தோமா, தெப்பக்குளத்துக்கிட்ட உட்கார்ந்து ஒரு போட்டோ எடுத்தோமான்னு வந்து போறவங்கதான் அதிகம். அதனால் உங்க கலைப்பார்வையை காலம் கடந்து காட்டாதீர்கள்.

இந்தக் காலத்தில் கலைகளுக்கெல்லாம் மதிப்பு குறைவுதான். உலகக்கோப்பையை வென்ற இந்தியஅணிக்கு எத்தனை கோடிகள் கொடுக்கப்பட்டன –  ஆளாளுக்கு போட்டிபோட்டு கோடிகோடியாக கொட்டிக் கொடுத்தார்கள். பத்தாண்டுகளாக உழைத்து மதுரையின் வரலாற்றை நாவலாகப் பதிவுசெய்த ‘காவல்கோட்டம்’ நூலாசிரியர் சு.வெங்கடேசனுக்கு சாகித்யஅகாடமி வெறும் ஒருலட்சம்தான் பரிசு தருகிறது. குடும்பத்தோடு டெல்லி போய் வாங்கிவரவே பத்தாது. சினிமாவில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு ஒரு நடிகைக்கு பல கோடிகள் கொடுக்கப்படுகிறது. நாட்டுப்புறக்கலைஞர்கள் நாக்குத்தள்ள ஆடினாலும் மாதம் நாலாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியுமா? இங்க வந்து கலைப்பார்வை அப்படி இப்படின்னு சொன்னா நகைச்சுவையா இருக்கு.

சதுரங்கம் விளையாடும் போது ராஜாவை நோக்கி குறிவைக்கப்பட்டால்கூட எனக்கு கோபம் வராது. யானையை வெட்டுவது போல் காய்நகர்த்தப்பட்டால் என்னுடைய ஆட்டமே மாறிவிடும். அந்தளவு யானை மேலான காதல் அதிகம். ஜெயமோகனின் ‘மத்தகம்’ என்னும் குறுநாவல் பற்றிய பதிவில் கூட யானையைக் குறித்துதான் அதிகம் எழுதியிருக்கிறேன். எங்க அண்ணனுடன் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது பெரும்பாலான மலைகளைப் பார்க்கும்போது யானை மாதிரி இருப்பதாகச் சொன்னேன். எங்க அண்ணன் யானையைப் பார்க்கும் போது மலை மாதிரிதானே இருக்குன்னு சொன்னாரு. அந்த மாதிரி திருப்பரங்குன்றமலைகூட ரயில்நிலையம் பக்கமிருந்து பார்க்கும்போது யானை நிற்பது மாதிரிதானிருக்கு. இனி நிக்கிற யானையைப் படுக்கவச்சா கிரானைட்டு கிடைக்கும்ன்னு யோசிப்பாங்ஙளோன்னு பயமா வேற இருக்கு.

மதுரையில் நரியைப் பரியாக்கி, பரியை நரியாக்கும் திருவிளையாடல்களை எல்லாம் நிகழ்த்த சிவன் இருக்கிறார். அவர்தான் கல்லை ‘கரி’யாக்கியதாகவும் திருவிளையாடல்புராணம் கூறுகிறது. ஊருக்கு ஒரு சிவன் போதும்.

ஒரே காலில் ஆடிக்கொண்டிருக்கிறாரே என்று வருந்திய பாண்டியனுக்காக சிவன் கால்மாறி ஆடிய வெள்ளியம்பலம் மதுரைதான். சிவனே நின்னா கால்வலிக்கும்ன்னு வருத்தப்படுற ஊர்ல செவனேன்னு படுத்திருக்கிற யானையை நிப்பாட்டப்போறோம்ன்னு சொன்னா எப்படியிருக்கும்? கோயில்ல இருக்கிற யானையையே காட்டில் கொண்டுபோய் புத்துணர்வு முகாம் நடத்திக்கொண்டிருக்கும் போது சும்மா படுத்திருக்கிற யானைய எழுப்பி மதம் பிடிக்க வச்சுறாதீங்க.

படத்துல உள்ள கருப்புச்சாமி ஆனையூர்க்காரரு! யானைமலையை நோக்கித்தான் பார்த்துக்கிட்டிருக்காரு! கருப்பா ஆனைமலைய பத்திரமா பாத்துகப்பா!

பின்னூட்டங்கள்
 1. தனபாலன் சொல்கிறார்:

  மதுரையைப் பற்றிப் பல தகவல்கள் ! அருமையான பதிவு ! கருப்புச்சாமி காப்பாத்துப்பா ! நன்றி நண்பரே !

 2. nandhini30 சொல்கிறார்:

  awareness must be given to people regarding dis…

 3. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதீக்கார,

  யானையின் மீது வைத்திருக்கும் அன்பும் பாசமும் – யானை மலையின் ,மீது வைத்திருக்கும் அலாதிப்பிரியமும் மனதைக் கவர்கிறது. உண்மை – கலைப்பார்வை அல்ல – காமப் பார்வை தான். கோடி கோடியாகச் சேர்க்க அலையும் கூட்டத்தின் சிந்தனை தான் .

  மதுரையில் இல்லாத சிற்பங்களா ? சிற்ப நகரம் மதுரைக்குத் தேவையற்ற ஒன்று. கோபம் கொப்பளிக்க எழுதப்பட்ட பதிவு நன்று. இதனைத்தொடர்ந்து சுரேஷ் கண்ணன் ஜெய மோகன் என்று சென்று பார்த்தேன். மததகம் புத்தகம் உன்னிடம் இருந்தால் தருக.

  படங்கள் அத்தனையும் அருமை

  மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருபவர்கள் சிறப்க் கலையினை இரசிக்கும் மன நிலையில் இல்லை. நேரமில்லை – கூட்டம் இரசிக்க அனுமதிப்பில்லை.

  உலகக் கோப்பையினை வென்றவர்களுக்குக் கோடி கோடியாகக் கொட்டுவதும் நாட்டுப்புறக் கலைஞர்கள் படும் பாடும் ……….சாகித்திய அகடமி கொடுத்த ஒரு இலட்சமும் ……… ஒன்றும் செய்ய இயலாது. ப்லவேறு துறைக்ளை ஒப்பு நோக்குவதில் பயனில்லை, கோபமும் ஆதங்கமும் புரிகிறாது நண்பா ……

  யானை மலையினை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆனையூர்க்கார கருப்புசாமி பார்த்துக்கொள்வார்.

  நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. தொப்புளான் சொல்கிறார்:

  அடுத்து என்ன? நாக மலை படம் விரிக்கும்; பசுமலை பால் கறக்குமா?

  இந்த சிற்ப நகர யோசனையால் உந்தப்பட்டு சில உலகளாவிய/ உள்ளூர் ஐடியாக்கள்:

  (1) பாலாற்றில் பத்து இருபது மீட்டருக்கு பசும்பாலையே ஆறாக ஓடவைப்பது (மீதியை நாங்கள் எடுத்துக்கொள்வது)

  (2) அடிவானத்தை மறைத்து ஓவிய நகரம் உருவாக்குவது

  (3) உடனடி செயல்திட்டம்: எங்கள் ஊர் கண்மாய் ஒரு முன்னூறு ஏக்கர் இருக்கும் (150சி போகும்). ஒரு ஓரத்தில் முன்னூறு அடி ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து ஆண்டு முழுவதும் நீர் தருவது (மீதி நிலத்தை நாங்கள் எடுத்துக்கொள்வது). இந்த செலவுக்கு ஊர்க்காரர்கள் பணம் தரத் தேவையில்லை.

  செயல்படுத்த விருப்பம் உள்ளவர்கள், மணலோ, மார்பிளோ, மன்னார்குடியோ, மயிலாப்பூரோ – ஏதாவது ஒரு மாஃபியா தொடர்புகொள்ளவும்.

  ஏன் நம்மூர் சிற்பிகளும், விஞ்ஞானிகளும், நிபுணர்களும் மட்டும் இப்படி?

  இந்த “சிற்பி” இருபத்தைந்தாயிரம் கோடியில் ஆயிரம்கோடியை ஆனைமலைவாசிகளுக்கு அள்ளி வீசி வள்ளலாகிறார்.

  அப்துல்கலாம் என்ற “விஞ்ஞானி” இருநூறு கோடிக்கு கூடங்குளத்தில் காகிதப் புறா பறக்கவிட்டு “உலை நல்லது” என்று 100% உத்தரவாதம் தருகிறார். இங்கு விட்டது போதாதென்று இலங்கைக்கும் சென்று மலைப்புறா, நிலப்புறா, கடல்புறா என கலர்கலராய் புறாவிடுகிறார். பேச்சு புறா புறா என்று. செய்வது அணுகுண்டு ஏவுகணை. பிறகு யாரோடு சேர்வார்?

  ராமஸ்வாமி அய்யர் என்றொரு “நிபுணர்” ஒப்பந்தத்தில் ஓட்டை என்று சொல்லி பெரியாற்று நீரை தமிழர்கள் மறந்துவிடவேண்டும் என்கிறார்.

  இதுபோக பசுமை புரட்சியின் ஒன்றுவிட்ட சித்தப்பா, “நடுநிலை” அரசியல் விமர்சகர், ஹார்வர்ட் மேனாள் பேராசிரியர், இதழியல் அறப்போதகர் என இவன்ய்ங்க தொல்லை தாங்க முடியல. தமிழர்கள் எல்லாம் எங்களை மாதிரி பாமரர்களாய் இருந்து தொலைஞ்சாத்தான் எங்க உயிருக்கே உத்தரவாதம்போல!

 5. Senthil kumar.K சொல்கிறார்:

  Thangalin intha katturaikku mikka NANRIGAL. Intha MAMADURAIYIL ethunaiyo kavanathukku varaatha MAAPERUM POKKISHANGAL ullana. Athai muthalil paathukappon anaivarukkum theriyapaduthuvom.. potruvom..

 6. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  நன்றி.

 7. எம்.ஏ.சுசீலா சொல்கிறார்:

  அன்பின் சித்திரவீதிக்காரன்..
  என் போலவே மதுரை மீது பாசம் வைத்திருக்கும் உங்கள் இணை மனத்தைக் கண்டு கொண்டதில் மகிழ்ச்சி.இனி,மதுரையைப் பற்றி நினைவு வரும்போதெல்லாம் உங்கள் வலைக்கு வந்து விடுவேன்.
  காவல் கோட்டம் பற்றித் தொடர்ந்து எழுதவிருக்கிறேன்.அது என்னை ஈர்த்ததற்குக் காரணமும் மதுரைதான்…
  என் பதிவுகளுக்கு நீங்கள் எழுதிய சிறப்பான கருத்துரைகள் கிடைத்தன.உங்கள் ஆர்வத்துக்கு மிக்க நன்றி[உங்கள் மின் அஞ்சல் தெரியாததால் இதையும் பின் ஊட்டத்தில் சேர்த்திருக்கிறேன்]..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s