யானைமலையும் பசுமைநடையும்

Posted: பிப்ரவரி 6, 2012 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், மதுரையில் சமணம்

மதுரை, கடல், யானை இவைகளையெல்லாம் பார்க்கப் பார்க்க சலிக்காது. அந்தப்பட்டியலில் மதுரை யானைமலையையும் சேர்த்துக்கொள்ளலாம். யானைமலையை எங்கிருந்து பார்த்தாலும் மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். யானைமலையில் உள்ள சமணர் தங்கியிருந்த குகைகள், சிற்பங்கள், நரசிங்கப்பெருமாள் கோயிலுக்கெல்லாம் முன்பொருமுறை நானும், சகோதரனும் சென்று இருக்கிறோம்.

முதன்முதலில் பசுமைநடைப்பயணம் யானைமலையிலிருந்துதான் தொடங்கியது. யானைமலை மீதான கலைப்பார்வையை ஒருகும்பல் விவரித்தபோது இந்த ஊர்மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சிகளும் போராடி ஒருவழியாக தடுத்து நிறுத்திவிட்டார்கள். அச்சமயத்தில் எழுத்தாளர்.அ.முத்துக்கிருஷ்ணன் உயிர்மையில் எழுதிய நீண்ட கட்டுரை  அம்மலை குறித்த பிரச்சனைகளை தெளிவாக விளக்கியது. அச்சமயம் நடந்த மதுரை புத்தகத்திருவிழாவில் முத்துக்கிருஷ்ணனை சந்தித்த நண்பர்கள் எல்லோருமாய் சேர்ந்து யானைமலைக்கு முதன்முறையாக பசுமைநடைப்பயணம் சென்றுள்ளனர். அதைக்குறித்து நண்பர் கார்த்திகைப்பாண்டியன்  மிக அருமையானதொரு பதிவு எழுதியுள்ளார். அதற்கடுத்த நடையிலிருந்து நான் பசுமைநடையில் தொடர்ந்து பயணித்து வருகிறேன். புத்தாண்டு வாழ்த்துடன் ஜனவரி22’ல் ‘யானைமலையில் பசுமைநடை’ என வந்த குறுந்தகவல் யானைமலைக்கு பசுமைநடைக்குழுவினரோடு செல்ல இயலவில்லையே என்ற வருத்தத்தைப் போக்கியது.

பசுமைநடை செல்ல முதல்நாளே திருமோகூரிலுள்ள எங்க சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டேன். மாலை நேரத்தில் திருமோகூரிலுள்ள கண்மாய் கரையிலிருந்து யானைமலையை பார்த்துக்கொண்டிருந்த போதுதான் கவனித்தேன். யானைமலையை முழுதாய் ஒரே பார்வையில் பார்க்க முடியவில்லை. புகைப்படக்கருவிக்குள்ளும் அடக்க முடியவில்லை. அவ்வளவு நீளம். அவ்வளவு அழகு.

அதிகாலை எழுந்து பனியினூடாக கிளம்பி நானும், சகோதரனும் ஒத்தக்கடை சென்றோம். திருமங்கலம் நண்பர்களை சந்தித்தேன். பசுமைநடை நண்பர்கள் எல்லோரும் வர நரசிங்கம் நோக்கி சென்றோம். நுழைவாயிலிலிருந்து கொஞ்சதூரம் பயணித்ததும் வலதுபுறம் வரும் சிறிய குன்றின் மேல் உள்ள சமணச்சிற்பங்களைக் காணச்சென்றோம். இம்முறை நடைக்கு நூற்றுக்கும் அதிகமானோர் வந்திருந்தனர். பசுமைநடை மூலம் அறிமுகமான நண்பர்களை சந்தித்தேன். ஆச்சர்யமாக என்னுடன் மாநகராட்சிப்பள்ளியில் படித்த நண்பனும் வந்திருந்தான். இதுபோன்ற இடங்களுக்கெல்லாம் தொடர்ந்து செல்வதாக கூறியபோது வியப்பும், பெருமதிப்பும் அவன்மீது ஏற்பட்டது.

எல்லோரும் குகைமுகப்பிலிருந்த பாறையில் அமர்ந்தோம். எழுத்தாளர். அ.முத்துக்கிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். இரண்டாண்டுகளுக்கு முன்பு பசுமைநடை யானைமலையில் தொடங்கிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். யானைமலையில் சமணம் குறித்த செய்திகளை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அய்யா கூறினார். இங்குள்ள சிற்பங்கள் அதன் பின்னாலுள்ள கதைகள் எல்லாவற்றையும் சொன்னார். ரயிலின் முதல் பெட்டியிலிருந்து வளைவில் திரும்பும் போது நீளமாக தெரியும் ரயில்போல அங்கிருந்து பார்த்தபோது யானைமலை தெரிந்தது. அருகில் சிறுகுன்றின் மேலிருந்த முருகன் கோயிலுக்கு செல்பவர்கள் பழமையான லாடன் கோயிலுக்கு செல்வதில்லை. இறங்கும்முன் பாறையில் தனித்திருந்த தீர்த்தங்கரர் சிலையையும் நிழற்படம் எடுத்துக்கொண்டேன். அதன்பின் அங்கிருந்து லாடன்கோயிலை நோக்கி சென்றோம்.

நரசிங்கப்பெருமாள் கோயிலிலுக்கு வலதுபுறம் உள்ள பாதையில் சென்று லாடன்கோயில் குடைவரையைக் கண்டோம். இந்தக்குடைவரை குறித்த தகவல்களை பேராசிரியர் கண்ணன் அவர்கள் விளக்கினார். எட்டாம் நூற்றாண்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இந்தக் குடைவரை இருக்கலாம். இந்தப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அருகில் இருந்த சிறுகுகை போன்ற பகுதி மீனாட்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதை இப்போது மூடிவிட்டது என அவன் ஒரு புதியகதையைச் சொன்னான்.  யானைமலையில் சமணம், குடைவரைகள் குறித்து தனியொரு பதிவு எழுத வேண்டும்.

பேராசிரியர் பெரியசாமிராஜா பசுமைநடை குறித்து பேசினார். பொதுவாக தமிழர்கள் திடீரென உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். பிறகு எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். கூடங்குளம் அணுஉலைக்கெதிரான தொடர் போராட்டம் போல பசுமைநடை இரண்டாண்டுகள் தொடர்ச்சியாக நடப்பது பெரியவிசயம். அதற்கு நாம் முத்துக்கிருஷ்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். அ.முத்துக்கிருஷ்ணன் உயிர்மை நூறாவது இதழில் எழுதிய நீண்ட கட்டுரை ‘கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்’ என்ற பெயரில் தனிப்புத்தகமாக மக்கள் பதிப்பாக வந்துள்ளது. அந்த புத்தகம் பசுமைநடையில் வேண்டியவர்களுக்கு விற்கப்பட்டது. அணுஉலையின் தீமைகள், அதற்கெதிரான போராட்டங்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம்.

லாடன் கோயிலிலிருந்து கிளம்பி நரசிங்கப்பெருமாள் கோயில் அருகிலுள்ள தாமரைக்குளத்திற்கு சென்றோம். மிக அருமையான இடம். எல்லோரும் சேர்ந்து அங்கு குழுவாகப்படமெடுத்துக்கொண்டோம். இந்தக் குளத்திற்குத்தான் திருமோகூர் காளமேகப்பெருமாள் கஜேந்திரமோட்சத்திற்கு வருவாராம். பின் யானைமலைக்கு பின்புறமுள்ள தெப்பத்தை நோக்கி சென்றோம். யானைமலை அழகாக காட்சி தந்தது. வழியில் உள்ள கிராமங்களும், இளம் வெயிலும், மிதமான காற்றும், இசைவாகக் கூட வரும் யானைமலையும் என எல்லாம் மனதிற்கு இதமாக இருந்தது.

அரும்பனூர் தாண்டி கொடிக்குளம் என்னும் கிராமத்திலுள்ள தெப்பக்குளத்திற்கு சென்றோம். கிராமதேவதைக்கான கோயில், மலைச்சாமி கோயில், வேதநாராயணப்பெருமாள் கோயில் என நிறைய கோயில்கள் இங்குள்ளன. யானைமலையின் பின்புறம் இந்த இடம் அமைந்துள்ளது. இங்கு வற்றாத குளம் ஒன்றுள்ளது. எல்லோருக்கும் உணவு வழங்கப்பட்டது. இம்முறை இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி என நாலு வகையான உணவு வழங்கப்பட்டது. நான்கில் விரும்பியதை பெற்று உண்ணலாம். மலையடிவாரத்தில், மரநிழலில் அமர்ந்து கூட்டமாக உண்பது வரம். வீட்டில் உள்ளவர்களே சேர்ந்து உண்பது அருகி வரும் வேளையில் புதிய நண்பர்களுடன் சேர்ந்து புதிய இடத்தில் உணவருந்துவது அதிக மகிழ்ச்சியைத் தருகிறது.

இங்குள்ள மலைச்சாமி கோயிலைப் போய் பார்த்தேன். யானை மலையையே தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிபடுகின்றனர். மேலும், தங்கள் குழந்தைகளுக்கும் மலைச்சாமி என்ற பெயரும் வைக்கின்றனர். அந்தக்கோயிலில் தொங்கிய மணியொன்றில் ‘மலையே துணை’ என்று பொறிக்கப்பட்டிருந்தது. தங்கள் இடத்திற்காகவும், பணத்திற்காகவும்தான் ‘யானைமலை பாதுகாப்பு இயக்கத்தை’ச் சேர்ந்தவர்கள் போராடுகிறார்கள் என அரசு கொச்சைப்படுத்த முனையலாம். அவர்கள் காசுக்காக போராடுபவர்கள் அல்ல. இயற்கைக்காக, யானைமலை தெய்வத்துக்காக போராடுகிறார்கள் என்பதற்கு இந்தக் கோயில் ஒரு சான்று. என்னுடைய நண்பர் இப்பகுதியில் நடைபெற்ற திருமணத்திற்கு புகைப்படம் எடுக்கச்சென்ற போது யானைமலையையும் சேர்த்து படம் எடுக்க வேண்டுமென கல்யாணவீட்டுக்காரர்கள் சொன்னார்களாம். யானைமலையை தங்கள் தெய்வமாக எண்ணும் இவர்களை புறந்தள்ளி கலைப்பார்வைக் குழுவினர் சிற்பநகரம் அமைக்க வேண்டுமா என்ன?.

 

இங்குள்ள தெப்பத்தில் பாண்டவர்களின் தேர் உள்ளே கிடக்கிறது என நம்புகிறார்கள். அந்த தடம்தான் மலையில் தெரிகிறது என அங்குள்ள பெரியவர் சொன்னார். மேலும், இங்கு உள்ள அம்மன் கோயிலில் உடல்நலம் சரியில்லாதவர்கள் வேண்டிக்கொண்டு நீர்கொண்டு சென்றால் விரைவில் குணமாகிவிடுமாம். அப்படி குணமானவர்கள் வந்து இங்கு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். நாங்கள் சென்ற போது கூட ஒரு குடும்பம் பொங்கல் வைத்துக்கொண்டிருந்தார்கள்.

மலையடிவாரத்தில் உள்ள கிணற்றில் நீர் எப்போதும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கிறது. இந்த நீர் அழகர்கோயில் சிலம்பாற்றுநீர் போல தித்திப்பாக இருக்குமாம். இந்த நீரைத்தான் இப்பகுதி மக்கள் குடிநீராக பயன்படுத்துகிறார்கள். இங்கு பழமையான பெருமாள் கோயிலும் ஒன்றுள்ளது. யானைமலை சைவம், வைணவம், சமணம், மற்றும் நாட்டுப்புறத்தெய்வங்கள் என எல்லாவற்றையும் கொண்டு சமய நல்லிணக்கத்திற்கு  சான்றாக அமைந்ததோடு தானும் தெய்வமாக விளங்கிவருகிறது.

என்னுடன் வந்த சகோதரனுக்கு முதலில் ஆர்வமில்லாவிட்டாலும் கிளம்பும்போது அடுத்தமுறை செல்லும் போது நானும் வருகிறேன் என்று சொல்லும் அளவு பசுமைநடைப் பயணம் அவனை ஈர்த்துவிட்டது. யானைமலை சிற்பநகர் குறித்த வழக்கை சிற்பி அரசு மீண்டும் நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் போது அதற்கெதிரான விழிப்புணர்வு பயணமாக பசுமைநடை அமைந்தது. இதை சிறப்பாக நடத்திவரும் பசுமைநடை நட்சத்திரங்களுக்கு நன்றி. மேலும், இந்தப்பயணத்தைப் பதிவு செய்த மதுரை பகுதியைச் சேர்ந்த தொலைக்காட்சி நண்பர்களுக்கும் நன்றி. வாசிக்கும் நண்பர்கள் உங்கள் பகுதியிலும் இதுபோன்று உள்ள இயற்கையான மற்றும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள இடங்களுக்கு குழுவாக பயணியுங்கள். நமக்கு அற்புத பயணமாகவும், அந்த இடங்களுக்கு நல்ல காவலாகவும் அமையும்.

பின்னூட்டங்கள்
 1. Cheena ( சீனா ) சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  பசுமைநடை நடசத்திரங்களூக்கு நல்வாழ்த்துகள் – சென்று பார்த்ட்ர்ஹு ரசித்து மகிழ்ந்த இடங்கள் அத்தனையிஅயும் படம் படித்து – அவற்றுடன் ஒரு அருமையான பதிவும் இட்டது பாராட்டத்தக்கது. நினைவாற்றல் அபாரம். கண்ணில் கண்ட – காதில் கேட்ட அத்தனை செய்திக்ளையும் நினைவில் வைத்து – விளக்கமாக பதிவினில் இட்டது நன்று. எத்தனை எத்தனை செய்திகள் – சிறு சிறு செய்திகளைக் கூட விட்டு விடாமல் எழுதியது நன்று. நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 2. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

 3. தனபாலன் சொல்கிறார்:

  படங்களும், உங்களின் எழுத்து நடையும் மிகவும் அருமை ! வாழ்த்துக்கள் நண்பரே ! நன்றி !

 4. anu-dev சொல்கிறார்:

  நான் உங்கள் சமீபத்திய சிந்தனைக்கு என் உண்மையான நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்

 5. Kaleeswaran சொல்கிறார்:

  Dear Sir, Can i able to join your team

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s