மதுரையில்தான் எத்தனை திருவிழாக்கள். சித்திரைத் திருவிழா, பிட்டுத்திருவிழா, தெப்பத்திருவிழா… ஆ, மாரியம்மன் தெப்பத்திருவிழா… வண்டியூர்த் தெப்பக் குளத்துக்கும் வைகை ஆற்றுக்கும் இடையே உள்ள தோப்புகளில் விரிப்புகளைப் பரத்தி அமர்ந்து குடும்பம் குடும்பமாய்க் கட்டுணா உண்பார்கள். சிறுவர்கள் துள்ளி ஓடுவர்; பெண்கள் வெற்றிலைச் சிவப்பு வாயால் அதட்டுவார்கள்… மாலையில் குளக்கரை உள்தட்டு நெடுகிலும் நெருக்கமாய் அகல் விளக்குகள் எரிய, எண்ணற்ற தங்க வேல்களால் குத்துண்டதுபோல தண்ணீர் குழம்பி மின்னும். மலர்ந்த பால் நிலவு தென்னை மரக் கொண்டைகளுக்கு மேலேறிக் குளிரொளித் தென்றல் பொழிந்து நிலத்தையும் மானிடரையும் மோகன மயக்கத்தில் ஆழ்த்தும் வேளையில் ‘தெப்பம்’ புறப்படும்….
– ப.சிங்காரம் (புயலிலே ஒரு தோணி)
பழந்தமிழரின் கலைத் திறனையும், நீர் மேலாண்மைத் திறனையும் தெளிவாகக் காட்டும் நகரம் மதுரை. 1000 அடி நீளம், 980 அடி அகலம் 20அடி ஆழம் உடைய மாரியம்மன் தெப்பக்குளத்தின் அலைகற்களோடு கூடிய கற்சுவர்களும், படிக்கட்டுகளும் தமிழர்களின் பொறியியல் நுண்ணறிவுக்கு அடையாளமாகும். அதன் சுற்றுச்சுவர்களும் சுவரில் அமைந்த சிலைகளும் மையமண்டபமும் தமிழர்களின் கலைத்திறனுக்குச் சான்றாகும்.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா பனிரெண்டு நாட்கள் பெருந்திருவிழாவாக வருடந்தோறும் தைமாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மீனாட்சியும் சொக்கநாதரும் சித்திரை மற்றும் மாசி வீதிகளில் வலம் வருவர். தெப்பத்திருவிழாவிற்கு முதல்நாள் மீனாட்சியம்மன் சிந்தாமணியில் வயலில் கதிரறுக்கச் செல்லும் கதிரறுப்புத் திருவிழா நடைபெறும். திருமலைநாயக்கர் பிறந்தநாளான தைப்பூசத்தன்று மூன்றுவேளை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் மீனாட்சி சொக்கநாதருடன் வலம் வந்த பிறகு குதிரை வாகனத்தில் அன்று கோயிலை சென்றடைவர்.
இந்தத் தெப்பக்குளம் திருமலைநாயக்கர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது. இங்கு அள்ளிய மணலைக் கொண்டு திருமலைநாயக்கர் அரண்மனையைக் கட்டினார். தெப்பக்குளத்திற்கு நடுவில் அழகான மைய மண்டபம் உள்ளது. இதிலிருந்து திருமலை நாயக்கர் மகாலுக்குச் செல்ல சுரங்கப்பாதை உள்ளது என கேள்விப்பட்டிருக்கிறேன். மையமண்டபத்தில் கம்பிவேலியிட்டு ஒரு பகுதி மூடப்பட்டிருப்பதை பார்த்திருக்கிறேன். மையமண்டபம் மரங்கள் சூழ அமைந்துள்ளது. தெப்பக்குளத்தில் நீரில்லாத போது இங்கு நிறைய பேர் வருவர். சிலுசிலுவென காற்றடிக்கும் மிக அருமையான இடம்.
தெப்பத்திருவிழா அன்று மாலை பணியை முடித்து வேகவேகமாகக் கிளம்பினேன். அண்ணாநகர் வழியாகச் சென்றேன். தொண்ணூறுகளில் நாங்கள் அங்கு இருந்தபோது பார்த்த அண்ணாநகருக்கும் இப்போது உள்ள அண்ணாநகருக்கும் தொண்ணூறு வித்தியாசங்களுக்கு மேலிருக்கும். நான் படித்த பள்ளிக்கூடம் வழி சென்றேன். சைக்கிளை தெப்பக்குளம் அருகிலுள்ள வாகனகாப்பகத்தில் நிறுத்திவிட்டு சென்றேன். மையமண்டபம் மின்னொளியில் மிதந்துகொண்டிருந்தது. சீனா அய்யாவையும் அவரது துணைவியாரையும் சந்தித்தேன். அவர்கள் எனக்கு முன்பே வந்து ஒருமுறை தெப்பக்குளத்தைச் சுற்றி வந்துவிட்டனர். அவர்களோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நான் தெப்பக்குளத்தை சுற்றக் கிளம்பினேன்.
தெப்பத்திருவிழாவிற்கு வந்தால் வாங்கித் தின்பதற்கென்றே தனியாகக் கொஞ்சம் பணம் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் சின்னப்பிள்ளைகளை கூட்டிவந்தால் சங்கடந்தான். அத்தனை விதவிதமான தின்பண்டங்கள் விற்கப்படுகின்றன. கரும்பு, தென்னங்குருத்து, பட்டாணி, சுண்டல், மாங்காய்கீத்து, கிழங்கு, கடலை, சவ்வு மிட்டாய், மிளகாய்பஜ்ஜி, அண்ணாச்சிப்பழம், பஞ்சுமிட்டாய், ஐஸ் என இன்னும் நிறைய தின்பண்டங்கள் விற்கப்பட்டன. மின்விளக்குகளில் அம்மன், மீனாட்சி திருக்கல்யாணம், பிள்ளையார் அம்மையப்பனுடன் அமர்ந்திருக்கும் காட்சி எல்லாம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
குடும்பத்துடன் வந்தவர்கள், நண்பர்களுடன் வந்தவர்கள், தனியாக சுற்றித்திரிபவர்கள், வெளிநாட்டவர்கள் என எல்லோரும் மகிழ்ச்சியாக சுற்றிக்கொண்டிருந்தனர். தெப்பக்குளத்தைச்சுற்றி சுட்டிகளில் விளக்கேற்றி வைத்திருந்தனர். மிகவும் அருமையாக இருந்தது. யானையில் குழந்தைகளை ஏற்றி பெற்றோர்கள் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். மிளகாய் பஜ்ஜியையே மாலை மாதிரி ஓரிடத்தில் தொங்க விட்டிருந்தார்கள். தென்னங்குருத்துகளை விற்பவர்கள் தென்னம்பூவை அலங்கரித்து வைத்திருந்தனர். சவ்வு மிட்டாய் விற்பவர்கள் காடாவிளக்குகளை பொருத்தி வைத்திருந்தனர். கம்பில் சவ்வுமிட்டாயை சுற்றி மேலே பொம்மை கைதட்டிக்கொண்டிருந்தது. சவ்வுமிட்டாய் வாங்குபவர்கள் அவர்களுக்கு வேண்டிய வடிவங்களில் செய்யச்சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்தனர். எல்லோரும் தெப்பக்குளத்தின் மையமண்டபத்தை நோக்கியே பார்த்துக்கொண்டிருந்தனர்.
முழுநிலவு தெப்பக்குளத்தில் மிதந்துகொண்டிருந்தது. பௌர்ணமியன்று விழாக்களை கொண்டாடிய நம் முன்னோர்களை எண்ணும் போது பெருமையாக இருக்கிறது. மையமண்டபத்தில் வண்ண விளக்குகளுக்கு மேலே நிலவு அழகாய் ஒளிர தெப்பக்குளமே ஒளிவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. இம்முறைத் தெப்பத்திருவிழாவிற்கு லேசர் விளக்குகளை வைத்து விதவிதமான உருவங்களை வரவைத்துக்கொண்டிருந்தனர். முக்தீஸ்வரர் கோயில்வாசலில் குதிரை வாகனம் காத்திருந்தது.
அனுப்பானடி செல்லும் சாலையோரத்திலும், தெப்பக்குளத்திற்கு வரும் பாலம் ஓரத்திலும் ஏராளமான கரும்புகள் விற்கப்பட்டன. தெப்பத்தேர் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தது. வெளிநாட்டவர்கள் தீந்தமிழ் வளர்த்த தியாகராயர் கல்லூரியின் மாடியில் இருந்து மையமண்டபத்தை பார்த்துக் கொண்டிருந்தனர். தைப்பூசம்தான் தமிழ்ப்புத்தாண்டு என்ற தொ.பரமசிவன் அய்யா பணியாற்றிய கல்லூரி. சுற்றிவந்து மீண்டும் சீனா அய்யாவை சந்தித்தேன். காவல்கோட்டம், தெப்பத்திருவிழா, புத்தகத்திருவிழா குறித்து பேசிக்கொண்டிருந்தோம். சீனா அய்யா காவல்கோட்டம் புத்தகவெளியீடன்றே சென்று அப்புத்தகத்தை வாங்கி வந்ததை சொன்னார். புத்தகவெளியீடன்று இந்நூல் குறித்து ஆளுமைகள் உரையாற்றியிருக்கிறார்கள். அப்போதைய மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் இந்நூல் குறித்து அருமையாக பேசியதை சீனா அய்யா குறிப்பிட்டார். தெப்பக்குளத்தின் மின்விளக்கு அலங்காரத்தை கண்டு அருகிலிருந்த இளைஞன் தீ’யா இருக்குன்னு சொன்னதை சீனா அய்யா சொன்னார். மதுரையில் ரொம்ப அழகா இருக்கு என்பதை தீயா இருக்குன்னு இளைஞர்கள் சொல்வது வழக்கம். வழக்கம்போல மின்தடை ஏற்பட்டது. எனவே, சுற்றிலும் இருளாக மையமண்டபம் மின்னொளியிலும், கரையோரம் விளக்கொளியிலும் அழகாக மிதந்து கொண்டிருந்தது. தெப்பம் சுற்றிவரும் முன்பே சீனாஅய்யாவிடம் விடைபெற்று கிளம்பினேன். அண்ணாநகர் – தெப்பக்குளம் பாலத்தில் மக்கள் தெப்பத்தேர் சுற்றுவதை பார்க்க வந்து கொண்டிருந்தனர். நல்ல கூட்டம். சைக்கிளில் குருவிக்காரன்சாலை பாலத்தைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றிருப்பேன். தெப்பக்குளத்திலிருந்து வாணவேடிக்கை தெரியத்தொடங்கியது. கொஞ்ச நேரம் இருந்திருந்தால் தெப்பம் சுற்றி வருவதைப் பார்த்திருக்கலாம். வாணவேடிக்கையைப் பார்த்து மக்கள் விரைவாக தெப்பக்குளத்தை நோக்கி குடும்பம் குடும்பமாகச் சென்று கொண்டிருந்தனர்.
வைகை கலங்கலாக ஓடிக்கொண்டிருந்தது. கலங்கின கண்கள் கலங்கிய வைகையைக் கண்டு. வையைப்புனலாய் பார்த்தது எல்லாம் கனவாய் பழங்கதையாய் போய்விடுமோ என்று வருத்தமாக இருக்கிறது. நீர் நிலைகளை நம் முன்னோர்கள் பாதுகாத்து விழா எடுத்துக் கொண்டாடியிருக்கிறார்கள். நாம் நீர்நிலைகளை எல்லாம் நாசமாக்கிக் கொண்டிருக்கிறோம். கூடல்அழகரும், அழகுமலையானும், தல்லாகுளம் பெருமாளும் தெப்பத்திருவிழாவிற்கு கரையைச் சுற்றிப் போய் கொண்டிருக்கிறார்கள். தெப்பத்திருவிழா கொண்டாடினால் மட்டும் போதாது. நீர்நிலைகளையும் காப்பாற்ற வேண்டும். சென்ற ஆண்டு தெப்பத்திருவிழாவை தருமி அய்யா மிக அருமையாக படங்களெடுத்து பதிவிட்டிருக்கிறார். சென்றமுறை திருப்பரங்குன்றத்திலும் தெப்பத்திருவிழா பார்க்க சென்றிருந்தேன். திருப்பரங்குன்றத்தெப்பம் இதைவிட மிகச்சிறியது. வேகமாக தெப்பம் சுற்றி வந்துவிட்டது. மதுரை மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய தெப்பக்குளம். தெப்பத்திருவிழா மதுரையின் தொன்மையை பறைசாற்றும் விழா.
அன்பின் சித்திர வீதிக்கார
பார்த்ததை அப்படியே எழுத்திலும் படம் பிடித்து, வரலாற்றுச் சான்றுகளுடன் வரைந்திருக்கும் தெப்பக்குளம், தெப்பத் தேர், தெப்பத் திருவிழா, மகிழ்ந்திருக்கும் மக்கள் கூட்டம், விளக்குகளால் விளங்குகின்ற தெப்பம், வானத்தில் வேடிக்கை காட்டும் வணண விளக்குகள், வான வேடிக்கைகள், வலம் வந்த மக்கள் கூட்டம் அனைத்தையும் அப்படியே வரைந்திருக்கும் அழகே அழகு.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய தெப்பக்குளம் பற்றிய வரலாற்றுச் சான்றுகளுடன் வரைந்திருப்பது சித்திர வீதிக்காரனின் கைவண்ணமே கைவண்ணம். சொல்லாமல் சொல்லலாம் பாராட்டு. தொடரட்டும் கருத்துகள். கருத்தோவியங்கள்.
நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
அன்பின் சித்திரவீதிக்கார
நேரமிருப்பின் படித்து மறு மொழி இடவும்
http://pattarivumpaadamum.blogspot.in/2008/02/blog-post.html
இது என் துணைவியார் எழுதியது.
நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா
miga arumaiyana mozhi nadaiyil azhaga theppathiruvizha….
மதுரைத திருவிழாக்கள் சித்திரவீதிக்காரனின் கைவண்ணத்தில் மிகச்சிறப்பாய்
மிளிர்கின்றன.எத்தனை ஆர்வத்துடன் எழுதுகிறீர்கள். ஊரிலேயே இருந்தாலும்
சென்று அனுபவிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு என்று சுட்டிக்காட்டும்உங்கள் பதிவு.போகாவிட்டாலும் எப்படியும் சித்திரையின் பதிவு வரும். பார்த்துக கொள்ளலாம் என்றும் தோன்ற வைக்கிறது உங்கள் பதிவு.
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் அயரா பணி.
அற்புதமான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
nalla pathivu… vaalththukkal
கூடல்அழகரும், அழகுமலையானும், தல்லாகுளம் பெருமாளும் தெப்பத்திருவிழாவிற்கு கரையைச் சுற்றிப் போய் கொண்டிருக்கிறார்கள் //
கூடல் அழகர் இம்முறையும் நீரில்லாத தெப்பத்தைத்தான் சுற்றியிருக்கிறார். அழகர்கோயில் பொய்கைகரைப்பட்டியில் பத்தாண்டுகளுக்கு பிறகு நீர் நிறைந்துள்ளதால் 8.3.12 அன்று தெப்பத்திருவிழா நடந்தது. அன்னவாகனத்தில் அழகுமலையான் தெப்பத்தை சுற்றி வந்தார். நானும் தெப்பத்திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அந்நிகழ்வை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன். மறுமொழியிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.
பௌர்ணமியன்று விழாக்களை கொண்டாடிய நம் முன்னோர்களை எண்ணும் போது பெருமையாக இருக்கிறது///
சித்திரமாய் தீட்டிய பகிர்வுகள். அருமை..
வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..!
[…] தெப்பத்திருவிழா […]