மதுரை விக்கிரமங்கலத்தில் பசுமைநடை

Posted: மார்ச் 5, 2012 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் சமணம்

இந்தக் குளத்தில் குளித்தெழுந்த சமணமுனிகள் எத்தனை எத்தனை பேர்? ஏன் எப்போதும் ஊர்களின் புறத்தே கற்குன்றுகளுக்குள் இன்னொரு கல்லாய் உறைந்திருந்தனர்? இன்னும் இன்னும் என்று இந்த உலகையே புலன்களால் துய்க்கத் துடிக்கும் மானுட இச்சையிலிருந்து விலகிய அவர்கள் தேட்டம்தான் என்ன? எவ்வழியே போனாலும் மனிதன் அழிந்துதான் போவான். அது மட்டும் நிச்சயம். பின் எது மிஞ்சும்? இந்தச்சிலைகளா? கதைகளா? எழுத்தா? அவையும் அழியும். வைகையின் புனலோடுபோய் அழிந்த ஏடுகள் எத்தனை? சிந்தையிலே அரும்பி எழுதாமலே கழுவேற்றத்தில் கருகிப்போயுமிருக்கலாம். எண்ணாயிரம் பேர் எண்ணிக்கையில் மிகை இருக்கலாம். எண்பது பேரே ஆனாலும் அது கடவுளின் பேரால் நடந்தது. ஆட்சி அதிகாரத்தின் மமதையால் நடந்தது. அந்த வன்கொலைக்குச் சாட்சியாய் இருந்த வைகை கண்ணீர் பெருக்கி ஓடியிருக்கும். அந்த வலியின் துயர் சுமந்த காற்று இந்த மண்ணின் மார்பெல்லாம் அறைந்து அறைந்து புலம்பியிருக்கும்.

– சு.வெங்கடேசன் (காவல்கோட்டம்)

 மதுரை செக்காணூரணிக்கு அருகில் விக்கிரமங்கலம் உள்ளது. இந்த மலையில் உள்ள சமணத்தின் சுவடுகளைக் காண பசுமைநடைப்பயணமாக 26.2.12 அன்று சென்றோம். விக்கிரமங்கலத்தில் பசுமைநடை என்றதும் சகோதரரிடம் அங்குள்ள உண்டாங்கட்டி மலையில் என்ன இருக்கிறது என்றுதான் அப்பகுதி நண்பர்கள் அவரிடம் கேட்டிருக்கிறார்கள். இம்மலையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமிக்கல்வெட்டுகள் காணப்படுகிறது.

பசுமைநடைக்கு நானும், சகோதரனும் அதிகாலை எழுந்து கிளம்பினோம். மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முன்பு அனைவரும் கூடினோம். அமணமலை, நாகமலை எல்லாம் பார்த்ததும் காவல்கோட்டம் ஞாபகம் வந்துவிட்டது. நண்பர் கார்த்திகைபாண்டியன் பசுமைநடைக்கு வந்திருந்தார். அவருடன் வாசிப்பு, வலசை, வம்சி புத்தகவெளியீடு பற்றி எல்லாம் பேசிக்கொண்டிருந்தேன். எல்லோரும் வந்ததும் விக்கிரமங்கலம் நோக்கி கிளம்பினோம்.

செக்காணூரணி தாண்டி விக்கிரமங்கலத்திற்கான தனிப்பிரிவு வழியாகச் சென்றோம். வழியில் இருந்த மக்களெல்லாம் எங்களை ஆச்சர்யமாக பார்த்தனர். விடியக்காலையில இத்தனை பேர் அவங்க ஊர் வழியாக வண்டியில் பயணிக்கும்போது பார்க்க மாட்டார்களா என்ன? எளிமையான மக்கள், அறுவடைக்கு காத்திருக்கும் பொன்னிறமான நெற்கதிர்களையெல்லாம் பார்த்துக்கொண்டே பயணித்தோம். அறுவடை இப்போதெல்லாம் இயந்திரத்தின் மூலம்தான் நடக்கிறது. கருதுக்கட்டை தூக்கிச்செல்பவர்கள், கதிரறுக்கும் கொத்துகள் எல்லாம் இப்போது அருகிப் போய்விட்டார்கள்.

விக்கிரமங்கலத்திற்கு சற்றுமுன்பே உண்டாங்கல் மலை உள்ளது. இம்மலையின் முன்உள்ள கண்மாய் மலைக்கு மேலும் அழகு சேர்க்கிறது. மலைக்கருகில் போய் வாகனங்களை நிறுத்தினோம். வழக்கம் போல இம்முறையும் நிறையப்பேர் வந்திருந்தார்கள். மலையை நோக்கி நடக்கத்தொடங்கினோம். மலை வெட்டப்பட்டு இருப்பதை பார்க்கும்போது சிறகிழந்த பறவையின் ஞாபகம் வந்தது.

சாந்தலிங்கம் அய்யாவுடன் சேர்ந்து குகையை நோக்கிச் சென்றோம். இயற்கையாக இரண்டு குகைகள் அமைந்துள்ளன. ஒரு குகையின் முகப்பில் தமிழ்பிராமிக் கல்வெட்டு காணப்படுகிறது. சாந்தலிங்கம் அய்யா அதில் ‘வேம்பத்தூர் பேராயம் செய்தவர்’ என்று செதுக்கப்பட்டுள்ளதை சொன்னார். ஒரு ஆள் படுக்கும் அளவு படுக்கை வெட்டப்பட்டுள்ளது. இன்னொரு குகையில் ஒரு ஆள் நிற்கலாம். அங்கிருந்து கீழே இறங்கலாம் என்றால் சரக்கடித்த புண்ணியவான்கள் குடித்துப் போட்ட கண்ணாடிபாட்டில்சில்லுகள் காலைப் பதம்பார்க்க காத்திருந்தது. பார்த்து இறங்கினோம். நிறையப் பேர் அவ்விடத்தில் ஒன்றாக இருக்க முடியாததென்பதால் கொஞ்சப்பேராக பார்த்து இறங்கினர்.

குகையிலிருந்து அருகிலுள்ள குளம், குட்டைகளை சுற்றி பஞ்சபாண்டவபடுக்கையைக் காணச் சென்றோம். வயலில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டிருந்தார்கள். அதை மிதிக்காமல் வாய்க்கால் ஓரம் நடந்துசென்றோம். நரந்தம்புல் அடர்ந்து வளர்ந்திருந்தது. பாறை மீதேறிச்சென்றோம். ஓரிடத்தில் மட்டும் ஏறிச்செல்வதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. பாறைகளிலேயே சில இடங்களில் இயற்கையாக குகைபோல குழிவான பகுதிகள் அமைந்திருந்தன.

மலைமேல் ஏறிப்பார்க்கும் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. திக்கெட்டும் வயல்வெளிகளும், நீர்நிலைகளும், தொலைவில் மலைகளுமாக காட்சி தந்தது. நகரம் தட்டுப்படவேயில்லை. அருகிலிருந்த மலையைப் பார்த்தால் யானை ஒன்று எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது. இங்கேயும் வந்துவிட்டாயா என்று பார்த்து சிரித்துக்கொண்டேன். அங்கிருந்த பெரிய குகை முகப்பில் தமிழ்பிராமிக்கல்வெட்டு செதுக்கப்பட்டிருந்தது. அதன் கீழே பத்திற்கும் மேற்பட்ட படுகைகள் வெட்டப்பட்டிருந்தன. ஒரு சிறுகுகைபோலிருந்த பாறையினுள் ஒரு கல்வெட்டு இருந்தது. 1978ல் அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் இதைக்கண்டுபிடித்தனர் என்று சாந்தலிங்கம் அய்யா சொன்னார். மற்ற கல்வெட்டுகள் எல்லாம் 1923லேயே பார்த்துவிட்டனராம். இன்னும் பார்க்கப்படாமல் எத்தனை கல்வெட்டுகளும், சிற்பங்களும் எவ்வளவு மலைகளில் ஒளிந்து உள்ளனவோ!

எல்லோரும் சிரமப்பட்டு மேலேறி வந்தனர். இதுபோல் அந்தக்காலத்தில் ஏறிவந்து இறங்க முடியாமல் படுக்கை அடித்து சமணர்கள் தங்கிவிட்டதாகவும், நாமும் இறங்க முடியாமல் வருங்கால சமணர்களாகப்போறோம் என்றும் நகைச்சுவையாக முத்துக்கிருஷ்ணன் சொல்லிக்கொண்டிருந்தார். எல்லோரும் வந்ததும் சாந்தலிங்கம் அய்யா இந்த இடத்தின் வரலாறு, சமணம் குறித்த தகவல்களை எல்லாம் கூறினார். முதலில் நாம் பார்த்த இருசிறு குகைகள் இருந்த இடத்தை இப்பகுதி மக்கள் இராக்காச்சிப்பொடவு என்கிறார்கள். அதில் ‘வேம்பத்தூர் பேராயம் செய்தவர்’ என்று செதுக்கப்பட்டுள்ளது. வேம்பத்தூர் என்று இப்பகுதியில் ஊர் ஏதும் இல்லை. திருப்புவனம் அருகிலுள்ள ஊராக இருக்கலாம். பேராயம் என்றால் நகரசபை. கல்வியிற் சிறந்தவர்கள் நிறைந்த சபை என்றும் சொல்லலாம். அவர்கள் செய்து கொடுத்த கற்படுக்கைதான் அங்குள்ளது.

நாமிருக்கும் இந்த மலையில் உள்ள தனிப்பாறையின் உள்அமைந்துள்ள கல்வெட்டில் ‘எராயில் அரிஇயதன் சேவித்ஓன்’ என்று காணப்படுகிறது. படுக்கைகள் வெட்டப்பட்டுள்ள பெரியகுகைத்தளத்தின் முகப்பில் காணப்படும் கல்வெட்டில் ‘எம்ஊர் சிழிவன் அதன்தியன்’ என்று காணப்படுகிறது. ஆதன், செழியன் என்ற பெயர்களாக இருக்கலாம். இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் செய்துகொடுத்த கற்படுக்கையிது. குகைத்தளத்தில் உள்ள கற்படுக்கையொன்றின் மேலே ‘அந்தைய் பிகன் மகன் ஆதன்’ என்று காணப்படுகிறது. அந்தைய் பிகன் என்பவருடைய மகன் ஆதன் என்பவர் செய்துகொடுத்த கற்படுக்கையிது. சிலபடுக்கைகளின் மேல் குவிராதன், குவியன் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. குவி என்ற வார்த்தை குபேரன் என்ற பொருளைத்தரும். மேலும், இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது. இங்குள்ள தமிழ்பிராமிக்கல்வெட்டுகள் எல்லாம் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.

பாண்டியநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடையேயான பாதையாக இந்தப் பகுதி அமைந்திருக்கலாம். மதுரை, அமணமலை, நாகமலை, கொங்கர்புளியங்குளம், விக்ரமங்கலம், சின்னமணூர், உத்தமபாளையம், கம்பம் வழியாக கேரளத்தில் உள்ள இடுக்கி வரையுள்ள ஊர்களில் பெரும்பாலான இடங்களில் கல்வெட்டுகளும், பழங்காலநாணயங்கள் கிடைத்துள்ளன. வணிகத்திற்கான பாதையாக இது இருந்திருக்க நிறைய வாய்ப்புள்ளது.

சமணர்கள் கழுவேற்றம் செய்யப்பட்டதைக் குறித்து சாந்தலிங்கம் அய்யா கூறும் போது எண்ணாயிரம் பேரைக் கழுவேற்றியிருக்க வாய்ப்பில்லை. கொஞ்சப்பேரை வேண்டுமானால் கொன்றிருக்கலாம். சமணர்களை பயமுறுத்துவதற்காகவும் இதைச் செய்திருக்கலாம். அச்சமயத்தில் மதுரைப்பகுதிகளிலிருந்த சமணர்கள் வடதமிழ்நாட்டிற்கு சென்றனர். இன்னும் ஆற்காடு, வந்தவாசி பகுதிகளில் எல்லாம் தமிழ்ச்சமணர்கள் வசிக்கிறார்கள். பாதிபேர் மதம் மாறினர். சமணர்களை கழுவேற்றியதற்கான சிற்பச்சான்று ஏதுமில்லை. ஆவுடையார் கோயிலில் ஓவியச்சான்று ஒன்றுள்ளது.

சாந்தலிங்கம் அய்யா பேசியபின் பசுமைநடை குறித்து நண்பர்கள் தங்களுடைய கருத்துகளைச் சொன்னார்கள். பசுமைநடையாக மதுரையில் உள்ள இடங்களோடு அருகிலுள்ள கழுகுமலை, சித்தன்னவாசல் போன்ற இடங்களுக்கும் செல்லலாமே என்றார் ஒருவர். மார்ச் மாதத்தில் பரிட்சைகள் முடிந்த பிறகு ஏப்ரல் மாதத்தில் செல்லலாம் என திட்டமிட்டிருக்கிறோம். பசுமைநடை பயணம் குறித்து மதுரையிலுள்ள நம்பர்1 சேனலில் ஞாயிற்றுக்கிழமைகளில் சுவடுகள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி விரைவில் வரப்போகிறது.

எல்லோரும் மெல்ல இறங்கினோம். ஒரு சிறிய குன்றின் மேலுள்ள ஆலமரத்தடியில் உணவு ஏற்பாடு செய்திருந்தனர். இட்லி ஒரு உன்னத உணவு என அப்பொழுதுதான் புரிந்தது. அந்தக் குன்றில் முருகன் சிலை ஒன்று உள்ளது. குகை போன்று உள்ள அந்தப் பகுதியை வெள்ளைப்பெயிண்ட் அடித்து விகாரமாக்கி உள்ளார்கள். வெயில் மெல்ல உச்சிக்கு வரும்முன் கிளம்பினோம். அற்புதமான நாளாக அமைந்தது. பசுமைநடை சென்ற அன்றே இதை அற்புதமாக பதிவு செய்த நண்பர் கார்த்திகைப்பாண்டியனின் பதிவைப் பார்க்கவும். கல்வெட்டுத் தகவல்கள் சாந்தலிங்கம் அய்யா சொன்னதையும், முன்பு வரிச்சூரில் வழங்கப்பட்ட கையடக்கப் பிரதியில் இருந்தும் எடுத்து எழுதப்பட்டு உள்ளது. அனைவருக்கும் நன்றிகள் பல.

பின்னூட்டங்கள்
 1. rathnavelnatarajan சொல்கிறார்:

  அருமையான பதிவு.
  இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துகள்.

 2. மதுரை சரவணன் சொல்கிறார்:

  arumaai.. udan vanthathu pola unarvu.. pukai padangkal arumai…vaalththukkal

 3. cheenakay சொல்கிறார்:

  அன்பின் சித்திர வீதிக்கார,

  பசுமைநடை உடலிற்கும் மனதிற்கும் மகிழ்ச்சியினைத் தருகிறது. மதுரையினைச் சுற்றி இருக்கும் மலைகளில் எல்லாம் ஏறி – அங்குள்ள அரிய கல்வெட்டுகளையும் – வரலாற்றுப் புத்தகங்களைப் படித்து அவற்றில் உள்ள தகவல்களின் உதவியுடன் – மலைகளில் பொறிக்கப்பட்டுள்ள பொன்னெழுத்துகளையும் கண்டு மகிழ்ந்து வருவது நன்று. ஆர்வமிக்க இளைஞர்கள் சீரிய தலைமையில் சென்று அய்ய்வு நட்த்துவது மகிழ்ச்சியினைத் தருகிறது.

  எத்தனை எத்தனை படங்கள் – எழுத்து வழக்கம் போல் மிளிர்கிறது.

  காவல்கோட்டத்தில் இருந்து வெங்கடேசனின் வரிகள் முன்னுரையாக வைத்துத் தரப்பட்ட இப்பதிவு நன்று. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் பதிக்கப் பட்ட கல்வெட்டுகளை ஆராய்ந்து ஆவணப்படுத்துவது நல்ல செயல். நண்பர் கா.பா வுடன் வலசை, வம்சி, வாசிப்பு எனத் தகவல் பரிமாற்றம் – கிடைத்த நேரத்தின் நடுவினில் செய்ததும் உன் வாசிக்கும் ஆர்வத்தினைக் காட்டுகிறது. வெட்டுப் பட்ட மலைகள் – சிறகிழந்த பறவைகள் – நல்லதொரு உவமை.

  திக்கெட்டும் வயல் வெளிகளும் நீர் நிலைகளும் தொலைவில் மலைகளும் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்து மகிழ்வினைத் தந்திருக்கும்.

  மலை ஏறியவர்கள் இறங்க இயலாமல் படுக்கைஅடித்துத் தங்கிய தகவல்களை எல்லாம் கண்டு மகிழ்ந்தது நன்று.

  சாந்தலிங்கம் அய்யாவின் தலைமையில் மலைகளில் சமணர் பற்றிய ஆய்வு செய்வதும் – விரைவினில் தொலைக் காட்சியில் விரிவாக வர இருப்பது குறித்தும் மகிழ்ச்சி .

  புதிய புதிய வரலாறு பற்றிய சான்றுகளை ஓய்வு நாளில் பொழுது போக்காமல் – இது போன்ற பயனுள்ள பசுமை நடை செல்லும் ஆர்வமும் – சென்று வந்த வுடன் பதிவாக – அழகிய தமிழில் ஆவணப் படுத்துவதுமான திறமைகள் பாராட்டுக்குரியவை.

  தொடர்க – வாழ்க வளமுடன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

 4. Radhakrishnan Duraisamy சொல்கிறார்:

  மிகவிரிவான விவரங்களுடன் அருமையான படங்களும் ஆக பதிவு மிக நன்றாக உள்ளது. பசுமைநடைப பயணம் சித்தன்னவாசல் வரை செல்லப போவது குறித்து
  மிக்க மகிழ்ச்சி. எங்களுக்கு நல்ல வேட்டைதான். வாழ்த்துக்கள்

 5. தனபாலன் சொல்கிறார்:

  சிறப்பான பதிவு ! நன்றி சார் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s