மாசிமாதம் பௌர்ணமியன்று இக்கோயிலில் தெப்பத்திருவிழா நடைபெறும். தெப்பத்திருவிழாவிற்கு முதல்நாள் ‘கஜேந்திரமோட்சம்’ எனும் யானைக்கு முக்தியளித்த திருவிழா நடைபெறும். இவ்விழாவும் தெப்பக்குளத்திலேயே முன்னர் நடைபெற்று வந்ததாம். தற்போது கோயில் முற்றத்திலுள்ள ஒரு கல்தொட்டியினையே ஒரு பொய்கையாகப் பாவித்து இறைவனை அதன்முன் எழுந்தருளச் செய்கின்றனர். கோயில் கொத்தனால் செய்யப்பட்ட முதலை, யானைப் பொம்மைகளை நீரில் நிறுத்தி இவ்விழாவினைக் கொண்டாடிவிடுகின்றனர். தெப்பத்திருவிழா நடைபெறும் தெப்பக்குளம் கோயிலுக்கு ஒரு மைல் தெற்கிலுள்ள பொய்கைக்கரைப்பட்டி கிராமத்திலுள்ளது. தெப்பத்தின் மீது சப்பரத்தில் இறைவன் தேவியரோடு அமர்ந்து பத்துமுறை சுற்றிவருகிறார்.
– தொ.பரமசிவன், அழகர்கோயில்.
பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யாவின் அழகர்கோயில் வாசித்ததிலிருந்து திருமாலிருஞ்சோலை அழகனின் மீதான காதலும், ஆர்வமும் அதிகரித்தது. சித்திரைத் திருவிழா என்றாலே இளமையிலிருந்தே கொண்டாட்டமான விசயம். மதுரை தன்னை பெருங்கிராமமாக மெய்ப்பிக்கும் திருவிழா. அழகர்கோயில் ஆடித்தேரோட்டமும் கிராமத்திருவிழா போலத்தான் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. பொய்கைகரைப்பட்டியில் தெப்பத்திருவிழா என்று மக்களின் நாளிதழ் தினத்தந்தியில் வாசித்த அன்றே குறித்து வைத்துக்கொண்டேன். குளத்தை சரியாகப்பராமரிக்காததால் கடந்த பத்து வருடங்களாக பொய்கைகரைப்பட்டியில் தெப்பத்திருவிழாவிற்கு வரும் அழகர் கரையைச் சுற்றி சென்றிருக்கிறார். இம்முறை தெப்பத்திற்கு நீர்வரும் பாதைகளை சீரமைத்து தெப்பத்தில் நீர் நிரப்பி உள்ளனர்.
தெப்பத்திருவிழா அன்று மாலை சீக்கிரங்கிளம்பி சைக்கிளை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் நிறுத்திவிட்டு பேருந்தில் ஏறி படியில் நின்று பராக்கு பார்த்துக்கொண்டே சென்றேன். பள்ளி முடிந்து வீடு திரும்பும் சமயமாதலால் மாணவர்கள் உற்சாகமாகக் கதைத்துக்கொண்டு வந்தனர். பொய்கைக்கரைப்பட்டியில் இறங்கி கிராமத்துத் தெருக்களின் வழியே அங்குள்ள மக்களிடம் வழிகேட்டு தெப்பக்குளம் நோக்கி நடந்தேன். ஓட்டுவீடுகளும், கூரைவீடுகளும் அதிகமாக இருந்தன. ஊரில் திருவிழா என்பதால் கிராமமே உற்சாகத்திலிருந்தது. மந்தையம்மன் கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தனர். கோயிலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த ஒருவர் ‘ஆத்தா! தீமையெல்லாம் அழியணும்’ என அடிக்கடி தனியே கத்திக்கொண்டிருந்தார். எனக்கும் அப்படிச் சிலசமயங்களில் கத்தணும் போலிருக்கும்.
தெப்பத்தை நோக்கி நடந்தேன். வண்ணமயமான தோரணங்கள் மந்தையில் உள்ள நாடகமேடை பகுதியில் நிறைய கட்டப்பட்டிருந்தது. ஊர்மக்கள் தெப்பத்தேர் பார்க்க மகிழ்ச்சியாக வந்துகொண்டிருந்தனர். கரையில் ஏறிய போது பெரிய கண்மாய் போலத் தெப்பக்குளம் எனக்குத்தோன்றியது. தெப்பத்திருவிழாவிற்கு அமைத்திருந்த தோரணவாயில் மிகவும் அழகாயிருந்தது. தெப்பக்குளத்தில் சிறுவர்கள் குளித்து கும்மாளமிட்டுக்கொண்டிருந்தனர். நிறைய தின்பண்டங்கள், பலூன், விளையாட்டுச்சாமான்கள், பச்சை குத்துபவர்கள், அரசியல்தலைவர்கள் மற்றும் திரைப்படநடிகர்களின் படம் விற்பவர், சர்பத் விற்பவர் என வழியெங்கும் திருவிழாக்கடைகள் வரவேற்றன.
பாக்குத்தட்டில் நெய்தீபம் விற்றனர். மக்கள் விளக்குகளை வாங்கி கரையிலும், தெப்பத்திலும் விட்டனர். ஒளிமயமாய் இருந்தது. அழகர்கோயிலுக்கு வழங்கப்பட்ட குட்டியானை அங்கே நின்று கொண்டிருந்தது. என் உயரம் கூட இருக்காது. பார்க்க அவ்வளவு அழகாயிருந்த்து. கொஞ்சநேரம் யானையையே பார்த்துக்கொண்டிருந்தேன். அருகிலிருந்த மண்டபத்தில் சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்தார்.
‘வாரணம் ஆயிரம் சூழ வலஞ்செய்து நாராணன் நம்பி நடக்கின்றான்’ என்ற ஆண்டாளின் நாச்சியார் திருமொழி ஞாபகம் வந்தது. ஒரு யானையே அவ்வளவு அழகு மற்றும் கம்பீரமாய் இருக்கும் போது ஆயிரம் யானைகள் போல நடந்து வரும் நாராயணன் எவ்வளவு அழகாய் இருப்பார். ஆண்டாளின் கற்பனை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.
அழகனைப்பார்த்துவிட்டு அழகர் ஏறிச்செல்லும் அன்னவாகனத்தை பார்க்கச்சென்றேன். பெரிய ஓடம் ஒன்றினை அன்னம் போல அழகாய் கட்டியிருக்கிறார்கள். மையமண்டபம் மிகவும் சிறியதுதான். தண்ணீர்பந்தலைப் பார்த்ததும் தாகம் எடுத்தது. அங்கு போய் தண்ணி குடித்தும் தாகம் அடங்கவில்லை. பிறகு ஜஸ் வாங்கித்தின்றேன். திருவிழாவில் ஜஸ் வாங்கித்தின்பது தனி சுகம். அழகர் கிளம்பும் முன் அங்கிருந்த ஊர்பெரியவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது.
மேளதாளத்துடன் அழகர் தெப்பக்குளம் நோக்கி கிளம்பினார். கரியநிழல் ஒன்று அருகில் வருவது போலத்தோன்ற என் பின்னாலிருந்த காவலர் என்னை இழுக்க அந்தக் குட்டியானை கடக்கவும் சரியாக இருந்தது. காவலருக்கு நன்றி. தெப்பத்தில் அழகர் ஏறியதும் அன்னம் கிளம்பியது. பெரிய மூங்கில்கழிகளைக் கொண்டு தள்ளியும், ஒரு குழு நீந்தியும் தெப்பத்தேரை இழுத்துச்செல்ல மாயோன் தெப்ப உலா கிளம்பினார். நான் அங்கிருந்து கிளம்பினேன். அழகருக்கு கோயில் பக்கம், நானோ செல்ல வேண்டிய தூரம் அதிகம். சித்திரைத்திருவிழாவில் பார்ப்போம் என்று சொல்லிட்டு கிளம்பினேன். அழகுமலையான் மக்களின் தெய்வம். அவனைத் தொழ “கோவிந்தா” என்ற எளிய மந்திரம் ஒன்று போதும். யானையைக் காக்க வந்ததைப்போல நம்மைக்காக்கவும் ஓடோடி வருவான் சுந்தரத்தோளுடையான்.
நல்ல பதிவு.
சிறப்பான பதிவு ! படங்கள் அருமை ! நன்றி நண்பரே !
ஈழத்துக் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவிதை நினைவுக்கு வருகின்றது.
நன்று, நன்றென
நாலுகோவில் திருவிழா
பார்த்தது
நின்று போனது.
அழகரின் தெப்பத்திருவிழா பற்றிய தகவல்கள் படங்களுடன் அருமை!
அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி.
அன்ன வாகனம் அமர்ந்து வந்தாய்
அய்யா எங்களுக் கருள வந்தாய்
குளம் நிறைய மழையைத் தந்தாய்
கொண்டாட்டமாய் சுற்றி வந்தாய்
[…] 2012ல் தெப்பத்திருவிழா பார்த்து முன்பு எழுதிய பதிவு அன்னவாகனத்தில் அழகுமலையான் […]